Monday 28 September 2015

பெண் என்னும் பெருஞ்செல்வம்

    இன்று உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஈன்றெடுத்த பெருமை யாருக்கு உள்ளது? பெண்களுக்கல்லவா இப்பெருமை வாய்க்கப் பெற்றுள்ளது!. ஆக உலகத்தையே உருவாக்க வல்ல இப்பெண்களின் நிலை இப்போது எப்படி உள்ளது?


  பெரும்பாலான குடும்பங்களில் ஊதிய வாங்காத வேலைக்காரியாக உள்ளாள். ஆண் குழந்தையைப் பெற்றவள் போற்றப்படுகிறாள்., பெண் குழந்தையைப் பெற்றவள் தூற்றப்படுகிறாள் வயிற்றில் வளர்வது பெண்கரு எனத் தெரிந்தால் அதை அழிப்பதும், பிறந்தது பெண் எனத் தெரிந்தால் அதனைக் கொல்வதும் இன்றும் சமுதாயத்தில் நின்றபாடில்லை.பிறக்கும் மக்களில் ஆண் மக்களைப் படிக்க வைக்கிறார்கள்., பெண்மக்களுக்குக் கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

   பெண்மையின் அருமை தெரியாத ஆண்கள் கூட்டம், பெண்களே பெண்களைப் போற்றாத அறியாமை நம் தமிழ் நாட்டில் நிலவுகிறது.பெண்களே பெண்களை இழிவுபடுத்தும் மூடநிலை இன்றும் தொடர்கிறது. மாதர் தம் இனத்தையே இழிவு படுத்துகிறார்களே என்று நொந்து  மனம் வெந்து
 மாதர் தம்மை இழிவு செய்யும்
 மடமையைக் கொளுத்துவோம்

என்று நெருப்பைக் குழைத்து எழுதுகிறான்  பாரதி

   .அனைத்து நிலையிலும் சம உரிமை தராத துருப்பிடித்த அரசியலமைப்புச் சட்டங்கள்தாம் இன்னும் நடைமுறையில் இருக்கின்றன. இப்படிப் பலரும் பலவும் காரணமாகபெண்மை என்னும் பெருஞ்செல்வம் மெல்ல அழிந்து வருகிறதோ என்னும் அச்சம் ஏற்படுகிறது. நமது மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்த புள்ளி விவரங்கள் பெண்களின் எண்ணிக்கை சரிந்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறது.

தன்  மனைவி சாரதா தேவியைத் தெய்வ நிலைக்கு உயர்த்தி ஆராதனை செய்த மாமனிதர் இராமகிருஷ்ண பரமஹம்சர்  ஆவார். அவ்வளவு வேண்டாம். பெண்ணைப் பெண்ணாக மதிக்கும் கணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதே. அற்ப காரணங்களுக்காக மனைவியை விலக்கி வைக்கும் வீராப்புக்கார ஆண்களை இன்றும் பரவலாகக் காண முடிகிறது.   சினமேற்கொண்டு சீர்மிகு மனைவியரை அடித்துச் சீரழிக்கும் தாழ்நிலை மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். படித்தவர் படிக்காதவர் என வேறுபாடு இல்லாமல் ஆண்கள் குடும்ப வன்முறையில் ஈடுபடும் காட்சிகள் நாளும் அரங்கேறுகின்றன. இத்தகைய வன்முறைக்கு ஈடுகொடுக்க முடியாத பெண்கள் சிலர் தற்கொலைக்கும் துணிந்துவிடுகிறார்கள்.

    சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி இன்று திரும்பி வந்தால் சாதிகள் உள்ளதடி பாப்பா என்றுதான் பாடுவார். சாதிக் கொடுமையால் காதல் மொட்டுகள் கருகிப் போவது காலம் காலமாக இருக்கின்ற ஒன்றுதான் என்றாலும் இக் காலத்தில் மிகுதியாக உள்ளது. இச் சிக்கலில் மிகுதியும் பாதிக்கப்படுவோர் பெண்களே. கெளரவக் கொலை என்ற பெயரில் இளம்பெண்கள் கொல்லப்படுவதாக நாளும் செய்திகள் வருகின்றன.

    நிறத்தை அளவு கோலாகக் கொண்டு இவள் அழகி அவள் அழகியல்லள் என்று பாகுபடுத்திப் பார்க்கும் அவலநிலையும் உள்ளது.

      இப்போது  ஒரு கொடூரமான காட்சி உணவகங்களில் காணப்படுகிறது. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூதாட்டியர்  எச்சில் இலை எடுக்கிறார்கள். நம் அம்மாவைப் போல பாட்டியைப் போல உள்ளவர்கள் நாம் சாப்பிட்ட இலையை  எடுப்பதும் மேசையைத் துடைப்பதும் சகிக்க முடியாத காட்சியாக உள்ளது.   பெண்கள் என்ன இரண்டாம் தர குடிமக்களா?  

   இந்த அவலங்களுக்கெல்லாம் அடிப்படையானக் காரணம் என்ன? பெண்ணைப் பற்றியும், பெண்மையைப் பற்றியும் சமுதாயத்தில் சரியான புரிதல் இல்லை என்பதுதான்.

இவற்றுக்கெல்லாம் என்னதான் தீர்வு?

   பெண்கள் எதிர்கொள்ளும் எல்லா சிக்கல்களுக்கும் ஒரே மாமருந்து கல்விதான். மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் பள்ளிக்கல்வியை முடிக்க வேண்டும். தொடர்ந்து ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டயம் அல்லது பட்டம் பெற வேண்டும். இந்த இலக்கை அடையும் முன் காதல் அல்லது திருமணம் செய்வது அறவே கூடாது.

    கணவனால் கைவிடப்படல், பிள்ளைகளின் பாராமுகம் போன்ற அசாதாரண சூழல் ஏற்படும்போது பொருளாதார தற்சார்புடன் மானத்துடன் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு  தான் கற்ற கல்வி மட்டுமே உதவும்..

   முடிந்தவரை பெண்குழந்தைகளை பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் வரை பெற்றோர் தம்முடன் வைத்துப் படிக்க வைக்க வேண்டும். விடுதியில் விடுதல் சிறப்பன்று. வளரிளம் பருவத்தில் தாய் அன்றாடம் தரும் அன்பும் அரவணைப்பும் அவ்வப்போது தந்தை காட்டும் கனிவுடன் கூடிய கண்டிப்பும் பெண்ணுக்கு மிக முக்கியமாகும்..இந்தச் சமயத்தில் விருந்தோம்பல், கொடுத்து மகிழ்தல் போன்ற  நல்ல குடிமரபுகளும், கற்பொழுக்கம் நேர்மை போன்ற  குடிப்பெருமைகளும் பெண் குழந்தையிடத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.. மேலும் பார்த்துப் பழகல் என்ற முறையில் அம்மாவிடமிருந்து வீட்டுப் பராமரிப்பு, சமையல் போன்ற வாழ்வியல் திறன்களைக் கற்றுக் கொள்வதும் இக் காலக்கட்டத்தில்தான் நிகழும். உளவியலில் முதுஅறிவியல் பட்டம் பெற்ற உளவியல் ஆலோசகர் என்ற முறையில் இக் கருத்தை நான் வலியுறுத்துகிறேன்.

  ஆங்கிலக் கல்வி, வெளிநாட்டு வேலை போன்றவை காரணமாக நம் கலாச்சாரத்தில் உள்ள நல்ல மரபுகளைப் பெண்கள் மறந்து விடுதல் கூடாது. குறிப்பாக நம் உணவு மரபுகளை மீட்டெடுத்துக் கடைப்பிடித்தாலே உடல் உரம் பெற்று உற்சாகமாக வாழமுடியும். உடல் நலமிக்கப் பெண்கள்தாம் குடும்பத்தின் மிகநல்ல சொத்தாவார்.

   என்னதான் பணிச்சுமை இருந்தாலும் நல்ல நூல்களைத் தேடிப்பிடித்துப் படிக்க வேண்டும். குறிப்பாக, திரு.வி.கலியாண சுந்தரனார் எழுதியுள்ள பெண்ணின் பெருமை என்னும் நூலை பெண்கள் படிக்க வேண்டும்; ஆண்களும் படிக்க வேண்டும்.

  உடல் ஓம்பாமையால் வரும் பல நோய்கள் பெண்களைப் பாதிக்கின்றன. எனவே தவப் பயிற்சியும் உடற்பயிற்சியும் பெண்களின் அன்றாடப் பணிகளின் அங்கமாக அமைய வேண்டும்.

   பிறந்த ஊரைப் பிரிந்து, பெற்றோரைப் பிரிந்து, புகுந்த வீட்டில் பதியம் போடப்படும் அந்த இளஞ்செடியை புகுந்த வீட்டில் உள்ள அனைவரும் போற்றி வளர்க்க வேண்டும்.
.
    பெண் என்பவள் தூய இன்ப ஊற்று! அன்பின் வற்றா இருப்பு! முதலில் மழலை பேசி மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறாள். பின்னர் கல்வியில் சிறந்து களிப்படையச் செய்கிறாள். மனைவி என்னும் பொறுப்பேற்று மணிவிளக்காய்த் திகழ்கிறாள். தாய் என்னும் நிலையில் தியாகத் திருவுருவாய் விளங்குகிறாள். பின்னர் வயது முதிர்ந்த பாட்டியாகி, வணங்குவோரையெல்லாம் வாழ்த்துகிறாள்! குடும்பத்தின் பாரம்பரியம் மற்றும்  அனுபவப் புதையலாய்த் திகழ்கிறாள்.

   செலவைக் குறைத்துச் சிறுகச் சிறுகச் சேமித்து வைப்பதில் பெண்கள் வல்லவர்கள். இன்றைக்கும் பல குடும்பங்களில் புயலில் சிக்கிய கப்பல்போல குடும்பம் தடுமாறும்போது நங்கூரமாக இருந்து கரை சேர்ப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

  எனவே, பெண் என்பவள் வீட்டின் சொத்து ; நாட்டின் சொத்து ; குடும்பத்தின் ஆணிவேர் அவளே. அத்தகைய பெண் என்னும் பெருஞ்செல்வத்தைப் போற்றிப் பாதுகாப்போம்.

கட்டுரை ஆக்கம்: முனைவர் அ.கோவிந்தராஜூ
---------------------------------------------------------------------------------------------------------------------------------

 உறுதி மொழி
1. பெண் என்னும் பெருஞ்செல்வம் என்ற தலைப்பில் அமைந்த இக் கட்டுரை எனது சொந்தப் படைப்பாகும்
          2. இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 மற்றும் தமிழ்  
            இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின்தமிழ்  இலக்கியப்      
            போட்டிகள் 2015  (வகை 3 பெண்கள் முன்னேற்றம்) க்காகவே எழுதப்பட்டது.

          3. இது இதற்குமுன் வெளியான படைப்பன்று.,முடிவு
            வெளியாகும் முன் வேறு இதழ்களுக்கு அனுப்ப்ப்பட
            மாட்டாது. 
4. முன்னரே வருகைப் பதிவையும் படத்தையும் அனுப்பியுள்ளேன்.       


3 comments:

  1. பெண் என்னும் பெருஞ்செல்வத்தைப் போற்றிப் பாதுகாப்போம்.
    உண்மை ஐயா உண்மை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. மரியாதைக்குரிய ஆசிரியப்பெருந்தகையீர்,
    வணக்கம்,தங்கள் முன்னாள் மாணவன் பரமேஸ்வரன் அன்புடன் எழுதுவது.புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்வையொட்டி தங்களது தொடர்பு கிடைத்தது கிடைத்தது மிக்க மகிழ்ச்சிங்க.தமிழ்ச்சான்றோராகிய தங்களை வெல்ல என்னால் இயலாது என்பதை அறிவேன்.அன்றைய நிகழ்வுகளான,தங்களது தலைமையில் இயங்கிய நாட்டு நலப்பணித் திட்டம்,காந்தியம் பயில்வோர் வட்டம் ஆகிய சேவைப் பணிகளில் பங்கேற்று நாகர்பாளையத்தில் முகாமிட்டது,பாரியூர் அம்மன் கோவில் திருவிழாவின்போது மக்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டது ஆகிய சேவைப்பணிகள் நினைவுக்கு வருகின்றன.தாங்கள் வெற்றி பெற என் பள்ளிப்பருவ கால சக மாணவர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.
    (வைரவிழா மேல்நிலைப் பள்ளி - கோபிசெட்டிபாளையம்,ஆண்டு 1977முதல் 1981 வரை)
    என அன்புடன்,
    C.பரமேஸ்வரன்,9585600733
    paramesdriver@gmail.com
    http://konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்-638402

    ReplyDelete
  3. நீங்கள் கூறுவது உண்மையே...யார் பெண்களைக்கொண்டாடுகின்றார்களோ அவர்கள் மேலும் உயர்வார்கள்...வெற்றி பெற வாழ்த்துகள் அய்யா..

    ReplyDelete