Sunday, 10 May 2015

பிறன்மனை நயத்தல் பெரும்பாவம்


இருபதும் பதினெட்டும் - கூட்டினால் மனக்கணக்கு
இருபது பதினெட்டைக் கூட்டிச்சென்றால் காதல் கணக்கு


       இது முப்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு கவியரங்கத்தில் கலைஞர் கருணாநிதி சொன்ன நகைச்சுவைக் கவிதை.

   இப்போது அந்த நகைச்சுவைக் கவிதையைச் சொல்ல நேர்ந்தால் அவர் மூன்றாவது வரியை இப்படிச் சேர்த்திருப்பார்.

இருபதும் பதினெட்டும் - கூட்டினால் மனக்கணக்கு
இருபது பதினெட்டைக் கூட்டிச்சென்றால் காதல் கணக்கு
இருபது மற்றவனது பதினெட்டைக் கூட்டிச்சென்றால் தப்புக்கணக்கு

   ஒருமுறை கொடைக்கானலுக்குச் சென்றுவிட்டுப் பொதுப் பேருந்தில் பயணம் செய்தபோது எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் ஓர் இணையர் கொஞ்சிப் பேசியும், கட்டிப்பிடித்தும், மகிழ்ந்து குலாவியபடி மயக்கத்தில் இருந்தனர். அவளுடைய கழுத்தில் கிடந்த தாலி அவர்கள் கணவன் மனைவி என்பதைப் பறைசாற்றியது. கூட்டுக் குடும்பத்தில் தனிமையில் சந்திப்பதற்கு வாய்ப்பில்லாத இணையர் அரிதில் கிடைக்கும் இத்தகைய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது இயல்புதானே என்று நினைத்தபடி பயணம் செய்தேன். அவர்கள் இருவரும் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இறங்கியதும் பை பை என சொல்லிக்கொண்டு அவசர அவசரமாக வெவ்வேறு பக்கம் பிரிந்து சென்றனர். அவர்கள் இறங்குமுன் அவன் பேசியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்
.
    “டார்லிங்! கொடைக்கானலில் ரெண்டு நாள் போனதே தெரியல. உன் ஹஸ்பெண்ட் ஒருவாரம் டெல்லிக்கு ட்ரெய்னிங் போனதும் என் ஒய்ஃப் பத்து நாள் அவ அம்மா வீட்டுக்குப் போனதும் எவ்வளவு நல்லதாப்போச்சு பாத்தியா?”

  நன்றல்லதை அன்றே மறக்க வேண்டும் என்று வள்ளுவர் சொன்னாலும் அந்தக் கயவன் சொன்னதை, அவனுடைய இழிசெயலை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை.

   தினமணியில் வந்த ஒரு செய்தி நம் தமிழ்ச் சமுதாயம் தரம் தாழ்ந்து போனதற்குச் சான்றாகும். ஓர் இளம்பெண் தன் கணவனுடன் ஏற்பட்ட சிறு கருத்து  வேறுபாடு காரணமாக ஒரு வயது குழந்தையுடன் தனியே வாழ்கிறாள். திருமணமாகி குழந்தையும் உள்ள ஒருவன் அந்தப் பெண்ணை எப்படி ஆசை வார்த்தைகள் பேசி மயக்கினானோ தெரியவில்லை. குழந்தையை பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு அவனுடன் சென்றாள். ஆளரவமில்லாத ஓர்  இடத்தில்  தகாத முறையில் நடந்து கொண்டான். செல்பேசி மூலம் தன் நண்பர்களையும் அழைத்தான். அவர்களும் அவளிடத்தில் தாறுமாறாக நடந்துள்ளனர். மயக்கம் தெளிந்து தட்டுத் தடுமாறி எழுந்து அருகிலிருந்த அரசு மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றாள். அக் காமுகர்கள் விசாரணைக் கைதிகளாக கம்பி எண்ணுகிறார்கள்.

   இவர்களெல்லாம் மனிதர்களா? அல்லது விலங்குகளா? விலங்குகள் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளுமா என்பது சந்தேகமே. வேறு ஒருவனின் மனைவியை விரும்புவது கொலைக் குற்றத்தைவிட கொடியதாகும். பிறன் மனைவியைக் காமுறுவது ஒருவன் தன் மனைவிக்குச் செய்யும் நம்பிக்கைத் துரோகமாகும். அவர்கள் தெருநாய்களைவிட கீழானவர்கள் என்றே சொல்வேன்.

  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இவ் இழிசெயலைக் கண்டித்து பிறனில் விழையாமை என்னும் அதிகாரத்தை வள்ளுவர் அமைத்து எழுதியதை எண்ணி வியந்து நிற்கிறேன்
.
   இவளை அடைவது எளிது என்று எண்ணி பிறன் மனைவியை விரும்புகிறவன் எப்பொழுதும் நீங்காத குடிப்பழியை அடைவான் என்று வள்ளுவர் கூறுவதை உணர வேண்டும். இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டும்.(குறள் 145)

மதிப்பெண்கள் பெற வைப்பதில் காட்டும் முனைப்பை மதிப்பீடுகளை(values) பெற வைப்பதில் நாம் காட்டுவதில்லை. அதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு என்பேன்.

   திருமண உறவு என்பது எவ்வளவு புனிதமானது! எவ்வளவு பரிசுத்தமானது! கணவன் தன் மனைவிக்கு நேர்மையாகவும், மனைவி தன் கணவனுக்கு நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும். இதை ஆங்கிலத்தில் nuptial loyalty என்பார்கள். ஒவ்வொரு இளைஞனும் இளம்பெண்ணும் பாரதிதாசனின் குடும்பவிளக்கில் முதியோர் காதல் என்னும் பகுதியைப் படிக்க வேண்டும்.

   பிறன்மனை விழைவது பெருங்குற்றம். இது குறித்து நான் எழுதிய கவிதை வரிகள்:

      ஒருத்தியின் கணவனை மற்றவன் விரும்பின்
    உருத்து வந்து அழிக்கும் உறுபெருந்தீயாய்
மாக்கள் இனத்தில் இதுமுறையாகும்
மக்கள் இனத்தில் இது முறையலவே

  பிறன்மனை நயத்தல் பெரும்பழி யாகும்
     பிறன்மனை நயத்தல் அறக்கொலை யாகும்
    பிறன்மனை நயப்போன் பிறவியில் ஈனன்
                  பிறன்மனை விருப்பு பேய்சார் குணமே

    

No comments:

Post a Comment