Friday, 12 June 2015

அமெரிக்காவின் மறுபக்கம்

  உலகில் பிறந்தவர் யாரும் பசியால் வாடுதல் கூடாது. உணவு, உடை, உறையுள் என்பவை மனிதனின் பொதுவான அடிப்படைத் தேவைகள் என்றாலும், உணவுதான் மிக மிக அடிப்படையான அவசியமான தேவையாகும்.


   பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்றாள் ஒளவை. பசி வந்தால் பாத்திரத்தில் கருகி அடிப்பிடித்த சோறும் வாய்க்குள் சென்றுவிடும் என்பது ஒரு பொருள். பசி வந்தால் மானம், நேர்மை, நியாயம், உண்மை, ஒழுக்கம் போன்ற பத்து விதமான நல்ல குணங்கள் அவனை விட்டு விலகும் என்பது மற்றொரு பொருள்.

   பசியை நோய் எனவும், பசியைப் போக்க உதவுபவன் பசிப்பிணி மருத்துவன் என்றும் சங்க இலக்கியம் கூறுகிறது.

   பசிக்கான காரணங்கள் பல., அவை கிடக்கட்டும். இன்று உலக அளவில் 795 மில்லியன் ஏழை எளிய மக்கள் தினம்தோறும் பசியோடு படுக்கைக்குச் செல்கிறார்கள். அவர்களுள் 2.6 மில்லியன் பேர் பசியால் இறந்துவிடுகிறார்கள் என்பது  நம்மில் பலரும் அறியாத அதிர்ச்சித் தகவலாகும்.

     இன்று காலையில் வழக்கமான நடைப் பயிற்சியின்போது அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். காசு கொடுத்தால் கூட பேசமாட்டார்போல் தெரிந்தார். இதற்கே அவர்தான் எனக்கு முதலில் குட்மார்னிங் சொன்னார். ஏகப்பட்ட எக்ஸ்யூஸ்மீ போட்டு எப்படியோ ஐந்து நிமிடம் பேசினேன். இரண்டு ஆசிரியர் சேர்ந்தால் என்ன பேசுவோம்- பாடத்திட்டம், தேர்வுமுறை, மதிய உணவு போன்றவை குறித்துப் பேசினோம்.

    அமெரிக்காவில் ஏறக்குறைய இருபது மில்லியன் எழைக் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத்  திட்டத்தில் சேர்ந்து சாப்பிடுகிறார்களாம். அவர்களுள் பதினாறு மில்லியன் குழந்தைகள் காலை உணவைக் கூட பள்ளியில்தான் சாப்பிடுகிறார்களாம். இரவு உணவு என்பது அவர்களுக்குக் கேள்விக் குறிதானாம்.

     ஒருபுறம் பார்த்தால் வளமனையில் வாழ்கிறார்கள். ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால் நான்கு சொகுசு கார்கள் இருக்கின்றன. மறுபுறம் அடுத்த வேளைக்குச் சோறில்லாத ஏழை மக்களும் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். அதுவும் ஆறு அமெரிக்கர்களை வரிசையில் நிறுத்தினால் அவர்களில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறாராம். ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், அமெரிக்க அரசும் சமுதாயமும் ஒன்று சேர்ந்து பல்வேறு நல்லத் திட்டங்கள் (நலத் திட்டங்கள் அல்ல) மூலமாக ஏழை மக்கள் எண்ணிக்கையை ஆண்டுக்காண்டு  குறைத்து வருகிறது.

   ஏழை மக்களை வாட்டி வதைக்கும் பசியைப்போக்க பல சமுதாய அமைப்புகள் ஊர்தோறும் இங்கு இயங்கி வருகின்றன. Soup Kitchen  என்பது  அவற்றுள் ஒன்று. இது நம் ஊர் அம்மா உணவகம் போன்றது. இங்கு மலிவு விலையில் அல்லது விலையில்லாத உணவுகள் வழங்கப்படுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய Soup Kitchen இந்தியாவில் அமிர்தசரஸ் பொற்கோவிலில் இயங்கி வருவதை ஓர் ஆய்வறிக்கைச் சுட்டிக் காட்டுகிறது. அங்கு ஒருபோதும் சமையல் அடுப்பு அணைந்ததில்லை. ஒரு நாளில் குறைந்தது பத்தாயிரம் பேர் மூன்று வேளையும் வயிறார உண்டு செல்கிறார்கள்.

   அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் நமது சீக்கிய சகோதரர்கள் நடத்தும் சமையற்கூடங்கள் ஏழைகளின் பசி நீக்கும் பணியைச் செய்து வருவது பாராட்டத் தக்கதாகும்.

  Food Bank என்னும் உணவு வங்கிகள் உடையவர்களிடமிருந்து உணவு வகைகளைப் பெற்று இல்லாதவர்களுக்குக் கொடுக்கின்றன. Bread for the World என்னும் அமைப்பினர் நன்கொடைகளப் பெற்று நலிந்தவர்க்கு உணவளிக்கும் உன்னதப் பணியைச் செய்கிறார்கள்.

   இது போன்ற ஓர் அமைப்பு கரூரில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைக் குறிப்பிடுவது பொருத்தமாயிருக்கும் எனக் கருதுகிறேன். ஞானாலயா வள்ளலார் கோட்டம் என்பது பெயர். பசியால் வாடும் நூறு முதியவர்களை இனங்கண்டு பட்டியலிட்டுள்ளார்கள். அவர்களுக்கு வருடம் 366 நாள்களிலும் சுடச் சுடச் சமைத்து, சுவையான மதிய உணவை அம் முதியவர்களின் இருப்பிடத்திற்குச் சென்று தருகிறார்கள். நூறு பேர்களுக்கு ஒரு வேளை உணவளிக்க ஆயிரம் ரூபய் செலவாகிறதாம். நானும் என் மாணவர்களும், ஆசிரியர்களும், நண்பர்களும் பலமுறை பல ஆயிரங்களைக் கொடுத்து மகிழ்ந்தோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். இதை அந்த ஆசிரிய நண்பரிடம் சொன்னபோது வாவ் வாவ் என்று பாராட்டினார்.

Wipout Hunger Foundation என்னும் அமைப்பினர் பசிப்போக்கும் பணியைப் பாராட்டும் வண்ணம் செய்து வருகின்றனர்.  ஒரு டாலர், ஒரு ஆளுக்கு, ஒரு குடும்பத்திற்கு, ஒரு ஆண்டுக்கு என்னும் நன்கொடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி பசிப்பிணிக்கு எதிராகப் போராடுகிறார்கள். பசியைப் போக்காவிட்டால் நாட்டில் குற்றங்கள் பெருகிவிடும் என்பது இந்த அமைப்பினரின் வாதம்.Hunger people are Angry என்று தமது இணைய தளத்தில் முகப்பு வாசகமாய் எழுதியுள்ளார்கள்!
   பெரிய மால்களில் wipeout hunger என அச்சிடப்பட்ட பிரட் பாக்கெட்களை ஒரு டாலர் விலையில் விற்கிறார்கள். நாம் பொருள்கள் வாங்கும்போது விரும்பினால் ஓரிரு பாக்கெட்டுகளுக்குச் சேர்த்து பில் போடச் சொல்லலாம். நம் சார்பில் ஒவ்வொரு நாளும் ஏழை எளியவருக்கு அவர்களே வழங்கிவிடுவார்கள்.

 “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்- இச்
 சகத்தினை அழித்திடுவோம்


என்று பாரதியாரிடத்தில் கொப்பளித்த கோபம் நியாயமானதுதான். வாழ்வில் ஒரு முறையாவது பசிக் கொடுமையை அனுபவித்தவருக்கு மட்டுமே இது புரியும்.,

 எனக்குப் புரிகிறது.

2 comments:

  1. அமெரிக்கர்கள் அனைவரும் மேட்டுக்குடி வாசிகள் என்ற நினைப்பை மாற்றிக்காட்டி இல்லை இல்லை, நம் ஊர் மக்களைப் போன்று பசியால் வாடுபவர்கள் தான் எனக் குறிப்பிட்டு பசிப்பிணியை அந்நாட்டு அரசு போக்கும் விதத்தை நமது கரூரோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அமெரிக்கர்கள் அனைவரும் மேட்டுக்குடி வாசிகள் என்ற நினைப்பை மாற்றிக்காட்டி இல்லை இல்லை, நம் ஊர் மக்களைப் போன்று பசியால் வாடுபவர்கள் தான் எனக் குறிப்பிட்டு பசிப்பிணியை அந்நாட்டு அரசு போக்கும் விதத்தை நமது கரூரோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete