Saturday, 27 June 2015

வியத்தகு விடுதலைச் சிலை

    நியுயார்க்கிலிருந்து 30 கி.மீ தூரத்திலுள்ள நியுஜெர்சிக்கு காரில் பயணித்து, அங்குள்ள படகுத் துறையிலிருந்து ஓர் இயந்திரப் படகு மூலம் எல்லீஸ் தீவில் இறங்கினோம்.
அங்கு யவனர்கள் வருகை பற்றிய அருங்காட்சியகம் உள்ளது. ஒவ்வொரு காட்சிப் பொருளுக்கும் சுருக்கக் குறிப்புரை உள்ளது. அது பற்றிய விரிவான விவரங்களை அந்தந்த இடத்தில் உள்ள கணினி தொடுதிரையைத் தொட்டு அறிந்து கொள்ளலாம்.

   பார்த்து முடித்தபின், மற்றொரு படகு மூலம் சுதந்திர தேவி சிலைக்குச் சென்றோம். அருகில் செல்ல செல்ல சிலையின் பிரமாண்டத்தைக் கண்டு வாய்பிளந்து நின்றேன். அப்படி ஓர் அதிசய சிலை. வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் படமாகப் பார்த்ததை நேரில் பார்ப்பதற்கு எத்தனைப் பேருக்கு வாய்ப்புக் கிடைக்கும்?

     இந்த சுதந்திர தேவி சிலை யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாகும். மேலும் அமெரிக்க நாட்டின் நினைவுக் கட்டடமாகும். சிலைக்கான பீடம் மட்டும் 47 மீட்டர் உயரம் உடையது. மேலே செல்வதற்கு விசாலமான படிக்கட்டுகளும், மேலே செல்ல செல்ல குறுகிய படிக்கட்டுகளும் அமைந்துள்ளன. இயலாதவர்களுக்கு மின்தூக்கி வசதியும் உண்டு. பீடம் மட்டுமல்ல, பீடத்திற்குமேல் சிலையின் தலைவரை செல்லவும் படிவசதி உள்ளது. ஆனால் பீடத்திற்குமேல் செல்ல எல்லோருக்கும் அனுமதி இல்லை.அப்படியே கிடைத்தாலும் கட்டணம் மிக அதிகம். நாங்கள் சிலையின் அடிப்பகுதிவரை சென்றோம். 

    பீடத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வெளியே வந்து பார்க்கும் வகையில் சுற்றுத் தளம் அமைத்துள்ளார்கள். உள்ளே சிலை அமைப்பு குறித்த காட்சிப் பொருள்களை வைத்து எண்ணும் கொடுத்துள்ளார்கள். சிலைப் பீடத்தினுள் நுழையும்போதே ஒரு காதொலிக் கருவியைக் கொடுக்கிறார்கள். காட்சிப் பொருளுக்குரிய எண்ணை அழுத்தி, காதில் வைத்தால் அக் காட்சிப்பொருள் பற்றிய விரிவான விளக்கத்தை பெண்ணொருத்தி எளிய ஆங்கிலத்தில் சொல்லக் கேட்கலாம். ஆறு மொழிகளில் கேட்கலாம்., தமிழில் கேட்க வசதி இல்லை.
Statue of Liberty
பயனுள்ள காதொலிக் கருவி



    இந்தச் சிலையை ப்ரான்ஸ் நாட்டு பாரிஸ் நகர சிற்பி ஃபிரட்ரிக் அகஸ்டி பார்தோல்டி என்பவரால் செய்யப்பட்டு, அமெரிக்க நாட்டின் நூறாம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது ஃப்ரான்ஸ் நாட்டின் சார்பாக அன்பளிப்பாகத் தரப்பட்டது  என முகம் தெரியாத அந்தப் பெண் என் காதில் உரைத்தாள். இந்தச் சிலையை நிறுவிட மாபெரும் பீடத்தை அமைத்தவர்  Alexandre Gustave Eiffel  என்னும் கட்டுமானப் பொறியாளர் என்ற கூடுதல் தகவலையும் கூறினாள். பாரிஸ் நகரில் உள்ள ஈஃபில் டவரும் இவரால் உருவாக்கப்பட்டது, இவர் பெயரால் அமைந்தது என்பதும் நினைவுகூரத் தக்கது.
அடிமைத் தளை அறுந்தது


    ரோமானிய பெண் தெய்வமான அந்தச் சிலையின் உயரம் 46 மீட்டர் ஆகும். அமெரிக்காவின் அடிமைத்தளை நீங்கியதைக் குறிக்கும் வகையில் அவளுடைய கால்களைப் பிணைத்திருந்த பெரிய இரும்புச் சங்கிலி அறுந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  சுதந்திர தேவியின் இடது கையில் ஒரு புத்தகம் உள்ளது. அதன் மீது அமெரிக்கா சுதந்திரம் பெற்ற தேதியான  ஜூலை நான்கு 1776 என்பதை JULY IV MDCCLXXVI என ரோமானிய எண்ணில் செதுக்கப் பட்டுள்ளது. வலது கையை உயர்த்தி, ஒரு பெரிய சுதந்திர ஜோதியைப் பிடித்திருக்கிறாள். தலையின் மீது ஒரு கிரீடம் உள்ளது. கிரீடத்தைச் சுற்றி ஏழு நீள் வடிவ முக்கோண பட்டைகள் பொருந்தியுள்ளன. இவை உலகின் ஏழு கண்டங்களையும் ஏழு பெருங்கடல்களையும் குறிக்கின்றன.

      
இரும்பு, செம்பு உலோகங்கள் டன் கணக்கில் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இச் சிலை மணிக்கு ஐம்பது கி.மீ வேகத்தில் காற்று வீசும்போது சற்றே அசையுமாம்!

     2001 செப்டம்பர் 11 என்பது அமெரிக்க வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகும். நியுயார்க்கின் அடையாளமாகத் திகழ்ந்த உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரம் தீவிரவாதிகளால் விமானம் செலுத்தித் தகர்க்கப்பட்ட நாள் அது. அதன் பிறகு பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தச் சிலை மூடப்பட்டது. எட்டு ஆண்டுகள் கழித்து 2009 இல்தான் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.

    காலை பதினோரு மணிவாக்கில் உள்ளே நுழைந்த நாங்கள் பிற்பகல் மூன்று மணிக்குதான் வெளியில் வந்தோம். அங்கே இருந்த உணவகத்தில் மதிய உணவை உண்டோம். எங்களுக்காகக் காத்திருந்த Miss New Jercy என்ற படகில் ஏறி, சுதந்திர தேவியைப் பிரிய மனமின்றி, நியுஜெர்சி படகுத்துறையை அடைந்தோம்.

    அடுத்து, 102 மாடிகளைக் கொண்ட Empire State Building சென்று அதன் உச்சியில் நின்று நியுயார்க் நகரைக் காண்பதற்காக காரில் விரைந்தோம்.

   காரில் செல்லும்போதே இப்படி அமெரிக்க நாட்டின் புகழ் வாய்ந்த இடங்களைப் பார்ப்பது எப்படி சாத்தியமாயிற்று என்று யோசித்தேன். எனக்கொரு மகள் பிறப்பாள் அவள் இத்தகைய வாய்ப்பைத் தருவாள் என்பதெல்லாம் இறைவன் வகுத்தத் திட்டம் என்று திருவள்ளுவர் ஓடிவந்து சொன்னார்., சரியாகச் சொன்னார்:

  வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
  தொகுத்தார்க்கும்  துய்த்தல் அரிது

DR A GOVINDARAJU from New York, USA




6 comments:

  1. கட்டுரையைப் பார்த்தேன் ,படித்தேன், இரசித்தேன், மகிழ்ந்தேன். தங்களே நேரில் கூறியதைப் போன்ற உணர்வு. மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. கட்டுரையைப் பார்த்தேன் ,படித்தேன், இரசித்தேன், மகிழ்ந்தேன். தங்களே நேரில் கூறியதைப் போன்ற உணர்வு. மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. When we translate all the write ups in English and submit to USA government, no doubt they will award the highest award of of USA to you. Even a true American can not express it in such a beautiful and interesting way.

    ReplyDelete
    Replies
    1. Thank you Murali for your wonderful appreciations
      Please keep reading and share my Blog publications

      Delete
    2. Thank you Murali for your wonderful appreciations
      Please keep reading and share my Blog publications

      Delete
    3. Thank you Murali for your wonderful appreciations
      Please keep reading and share my Blog publications

      Delete