ஒரு நாள் முழுவதும் அடர்ந்த காட்டில்
திரிந்தால் எப்படியிருக்கும்? காட்டு விலங்குகளைத் தொட்டுத் தழுவிக் கொஞ்சினால்
எப்படியிருக்கும்? பையில் உள்ள நொறுக்குத் தீனியை
கையில் எடுத்து நீட்ட, வரிக்குதிரை வந்து வாயை வைத்து உண்டால்
எப்படியிருக்கும்?
“
பக்தா! அப்படியே ஆகட்டும்!” என்று கதையில் வேண்டுமானால் கடவுள் தோன்றி வரம்
தரலாம். அல்லது கனவில் கை கூடலாம். நனவில் நடக்குமா? நடந்தது என்றால் நம்புவீர்களா?
“அப்படியே ஆகட்டும்” என்ற வார்த்தைகள்
அசரீரியாக என் செவியில் விழுந்தன. வார்த்தைகள் வந்த திசையை நோக்கினால் அங்கே
கடவுள் நின்றார். அதுவும் சிவா. ஆம். என் மாப்பிள்ளை சிவாதான் நின்றார். சொன்னதோடு
நிற்கவில்லை., செயலிலும் இறங்கினார். அதற்காக ஒரு நாளைக் குறித்தார். அது
6.6.2015.
இரவெல்லாம் மானுடன் பேசுவதாகவும்,
வரிக்குதிரை மேல் ஏறி கொடைக்கானல் ஏரியைச் சுற்றிவருவதாகவும், பிறகு அய்யப்பன்
கணக்கில் புலி மீது அமர்ந்து புன்னகை செய்வது போலவும் கனவுகள். அதிகாலையில் முதல்
ஆளாக எழுந்து தயாரானேன்.
எங்கள் பெட்ஃபோர்ட் இல்லத்திலிருந்து புலி
பூச்சாண்டிகளுக்கு அஞ்சாத என் மனைவி சாந்தி, புதியன காண்பதில் ஆர்வம் கொண்ட சிவா-அருணா,
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற நினைப்போடு இளைய மகள் புவனா என புடை சூழ காலை
ஒன்பது மணிக்குப் புறப்பட்டேன். மகிழ்வுந்து மருமகனின் கைவண்ணத்தில் சீறிப்
பாய்ந்து விரைந்தது.
என் மனமோ வேறு திசையில் பயணித்தது.
சத்தியமங்கலம்,பண்ணாரி, திம்பம் மலைப்பகுதிகளில், கதிரவன் கரங்கள் நுழைய முடியாத
அடர்காடுகளில், மாணவர்களை உடன் அழைத்துக் கொண்டு, துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை
வீரர் இருவர் உடன் வர ஒரு நாள் முழுவதும் சுற்றித் திரிந்த அனுபவம் அது. அப்போது
நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
கொடைக்கானல் பேரிஜம் காடு, அந்தியூர் ஈரட்டி
மின்தாங்கி காடு, ஊட்டி பைக்காரா காடு, பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள், திருக்குற்றால
மலைக்காடு- இவற்றில் நடந்து சலித்தவன் நான். வகுப்பில் நடத்திய பாடத்தைவிட என் மாணவர்களுக்கு
காடுகளில் மலைகளில் நடத்திய பாடங்களே அதிகம். அவர்கள் இன்று இயற்கை ஆர்வலர்களாக
வலம் வருகிறார்கள் என்பதில் எனக்குக் கொஞ்சம் செருக்கும் உண்டு.
என் மனைவி குழந்தைளைப் பார்த்துக் கொள்ள,
நான் காடாறு மாதம், நாடாறு மாதம் என வாழ்ந்த இளமைக்காலம். அப்பப்பா! அது ஒரு கனாக்
காலம்!
கார் குலுங்கி நின்றதில், நினவுச் சங்கிலி
அறுபட்டு, வெளியில் எட்டிப் பார்த்தேன். FOSSIL RIM WILDLIFE CENTER என்னும் பதாகை பார்வையில் பட்டது. முன்னதாக வந்து காத்துக் கொண்டிருந்த
உறவினர்களைச் சந்தித்தோம். அவர்களுடைய இரண்டு வயது பெண்குழந்தை மானைப் போல தாவித்
தாவி ஒடிக் கொண்டிருந்தாள். மான்வி என்பது அவள் பெயர்!
1400 ஏக்கர் பரப்பளவுள்ள காடுகளையும், 20 கிலோமீட்டர் நீளமுள்ள
வனச்சாலைகளையும் கொண்டது இம் மையம். மறைந்த, மறையும் தருவாயில் உள்ள உயிரினங்கள்
பற்றிய கல்விக்கூடமாக, எவ்வித இலாப நோக்கமும் இல்லாமல் இம்மையம் செயல்படுகிறது
.
விலங்குகளின் வீட்டில் நுழைய
மனிதர்கள் நுழைவுச் சீட்டு தந்தார்கள். ஒருவருக்குக் கட்டணம் 15 டாலர் அதாவது 1000
ரூபாய். எனக்கு மட்டும் 850 ரூபாய். முதியவர்களையும் குழந்தைகளையும் அமெரிக்கர்கள்
கொண்டாடுகிறார்கள். எங்கு சென்றாலும் ஏகப்பட்ட சலுகைகள்.
காட்டுக்குள் கார்களில் மட்டுமே
பயணிக்க வேண்டும். அல்லது இம் மையம் இயக்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட
வாகனங்களில் பயணிக்க வேண்டும்.
ஆர்வம் மிகுதியாகி காரைவிட்டு
இறங்கினால் 200 டாலர் தண்டக்கட்டணம். மணிக்கு 15 மைல் வேகத்திற்குமேல்
செல்லக்கூடாது. வழி விலகச் சொல்லி ஒலி எழுப்பக் கூடாது.
நுழைவுச் சீட்டு வாங்கும்போதே
விலங்குகளுக்கான நொறுக்குத் தீனியும் வாங்கியிருந்தார் சிவா. காரை நிறுத்தினால்
போதும். மான்கள் வந்து காருக்குள் கழுத்தை நீட்டும். கொடுக்கும் தீனியை- பட்டாணி
அளவில் உள்ள உருண்டைகளை- ஆசை ஆசையாய்த் தின்னும்.
வரையாடுகள், வரிக்குதிரைகள்,
ஒட்டகச் சிவிங்கிகள் எல்லாம் ஓடிவந்து கார்களைச் சூழ்ந்து கொள்கின்றன. கைகளில்
உள்ள தீனி உருண்டைகளை மட்டும் இயல்பாக உண்கின்றன. கடித்துவிடுமோ என்னும் பயம்
தேவையில்லை.
வனச் சாலைகள் வளைந்தும் நெளிந்தும்
உயர்ந்தும் தாழ்ந்தும் செல்கின்றன. இவற்றில் கார் ஓட்டுவதற்குத் தனித்திறன்
வேண்டும். பாதி வழி கடந்ததும் காரைவிட்டு இறங்கி இளைப்பாறலாம். அங்கே உணவகம் ஒன்று
உள்ளது. நாம் எடுத்துச் செல்லும் கட்டுச் சோற்றை உண்பதற்கு வசதியாக மரங்களுக்கு
இடையே மர இருக்கைகளை அமைத்திருக்கிறார்கள்.
மதிய உணவுக்குப் பிறகு petting zoo என்ற பகுதிக்குச் சென்றோம். அங்கே உள்ள விலங்குகளைத் தொடலாம்.,
தடவிக்கொடுக்கலாம்., சொறிந்து விடலாம்.
மீண்டும் காரில் ஏறி பயணத்தைத்
தொடர்ந்தோம். ஆங்காங்கே குறுக்கிட்ட விலங்கினங்களுக்குத் தீனி அளித்தோம். ஒரு
குட்டி மான் காருக்குள் எட்டிப்பார்த்தது. “உன்னைப் போனதடவை பார்த்தேனே” என்று
வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தார் என் மாப்பிள்ளை. அவர் ஆறாவது தடவையாக வருகிறாராம்.
இந்தியாவிலிருந்து உறவினர் நண்பர்கள் வரும்போதெல்லாம் உற்சாகமாக அழைத்து வருவது
அவர்தான்.
ஓர் இடத்தில் தூரத்தில் நான்கு
ஐந்து சிறுத்தைப் புலிகள் மரநிழலில் ஓய்வாகப் படுத்துக் கிடந்தன. அவ்வப்போது
தலையைத் தூக்கிச் சுற்றும் முற்றும் பார்த்தன. மற்ற எல்லா விலங்குகளும் சும்மா
சுற்றித்திரிகின்றன. ஆனால் சிறுத்தைகளுக்கு மட்டும் உயர்ந்த கம்பி வேலிகளை அமைத்திருக்கின்றார்கள்.
பெரிய பெரிய காட்டெருமைகளும்,
ஒற்றைக் கொம்பன்களும் திரிந்தன. சில எருமைகள் ஓங்கி வளர்ந்துள்ள புற்களின் நடுவே
படுத்துக்கிடந்தன. மற்றும் சில குட்டைகளில் வெயிலுக்கு இதமாக
நீந்திக்கொண்டிருந்தன.
மாலை ஐந்து மணி அளவில் வனப்பயணம்
நிறைவு பெற்றது. எங்களை முதலில் வரவேற்ற நெருப்புக் கோழியிடம், “மீண்டும் வருவோம்”
எனச் சொல்லிக்கொண்டு விடைபெற்றோம்.
காக்கை குருவிகள் எங்கள் ஜாதி- நீள்
காடும் மலையும் எங்கள் கூட்டம்
என்று உயிரினங்களிடத்தில் உறவு முறை கொண்டாடிய பாரதியை நினைவு கூர்ந்தபடி
காரில் ஏறி அமர்ந்து இருக்கைப் பட்டையைப் பொருத்தினேன்.
நான் நாட்டு நலப்பணித்திட்ட மாணாக்கணாய் கால் நூற்றாண்டுக்கு முன் தங்களோடு நீலகிரி காடுகளில் தங்கியது ...பொம்மலாட்டம் நடத்தியது.....நினைவாடுகிறது.
ReplyDeleteஇயற்கை...பசுமை மீதான ஆர்வத்தை என்னுள் தூண்டியவர்கள் நீவிரே.
தங்கள் கட்டுரை பயணம் படங்கள் வெகு சிறப்பு. தொடரட்டும் சார்.
very much interested to read.
ReplyDeleteI thank god for given me an opportunity to meet you dear Bhuvana at Chennai Airport on yr departure to USA
ReplyDeleteI always love your style of writing sir. Very fantastic and marvelous. Keep on it sir. Lets make it a book. Best Wishes sir.
ReplyDeleteநிழற்படங்கள் வாயிலாக எங்களையும் விலங்குகள் சரணாலயத்திற்கு அழைத்துச் சென்ற பெருமை உங்களையே சாரும்.
ReplyDeleteநிழற்படங்கள் வாயிலாக எங்களையும் விலங்குகள் சரணாலயத்திற்கு அழைத்துச் சென்ற பெருமை உங்களையே சாரும்.
ReplyDelete