உடம்பால் அழியின் உயிரால் அழிவர்
என்பது திருமூலரின் திருவாக்கு. மரபியல்(Hereditary) சார்ந்த, வாழ்வியல்(Life style) சார்ந்த
நோய்கள்தாம் எத்தனை எத்தனை! இடும்பைக்கே கொள்கலம் உடம்பு என்பார்
திருவள்ளுவர்.(குறள் 1029)
உயிரைக் குடிக்கும்
நோய்கள் சில மருத்துவ உலகிற்குச் சவாலாக உள்ளன. அவற்றுள் ஒன்று சிறு நீரகக்
கோளாறு. அந்தச் சவாலை ஏற்று வெற்றி கண்ட சாதனையாளர் டாக்டர் சங்கர பாண்டியன்
என்னும் இந்தியர்., தமிழர். சிறுநீரகம் சார்ந்த மருத்துவத் துறையில்(Nephrology) கரை கண்டவர். Tarrant Nephrology Associates என்னும் நிறுவனத்தை உருவாக்கி அதன் முதன்மை
நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றுகின்றார். பதினேழு டயாலிசஸ் மையங்கள், இருபதுக்கும்
மேற்பட்ட முதுநிலை மருத்துவர்கள், நூற்றுக்கணக்கில் ஊழியர்கள் என ஆலமரம்போல்
பல்கிப் பெருகி அமெரிக்கர்களே வியக்கும் வண்ணம் வளர்ந்து நிற்கும் நிறுவனம் அது. அந் நிறுவனத்தின் ஒரு டயாலிசஸ் மையத்தைக் காணும்
வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.
காரில்
செல்லும்போதே மருத்துவரைத் தொடர்பு கொண்டு நான் மையத்தைக் காணவரும் செய்தியைச்
சொல்லியிருந்ததால், அம் மையத்தின் முதன்மை மருத்துவர் வாயில் அருகே நின்று வரவேற்றார்.
டாக்டர் சங்கர பாண்டியன் அவர்களும் டாக்டர் பங்கஜம் சங்கர பாண்டியன் அவர்களும்
என்னை ஓர் எழுத்தாளர், ஆசிரியர் எனச் சொல்லி அவருக்கு அறிமுகப் படுத்தினர். அந்தப்
பெண்மருத்துவர் நம் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். அழகான ஆங்கிலத்தில் பேசினார்.
photo courtesy: Google |
ஒவ்வொரு
படுக்கைக்கு அருகிலும் ஒரு குருதி சுத்திகரிப்பு இயந்திரம் தன் பணியை ஒழுங்காக
ஓசையின்றி செய்துகொண்டிருந்தது. நோயாளியின் உடம்பிலிருந்து ஒரு தந்துகிக் குழாய்
மூலம் அசுத்த இரத்தம் அந்த இயந்திரத்திற்குள் செல்கிறது. இயந்திரத்திலிருந்து
தூய்மையாக்கப்பட்ட இரத்தம் இன்னொரு குழாய் மூலம் நோயாளியின் உடம்புக்குள் சீரான
வேகத்தில் பாய்கிறது. எல்லாம் சீராக
இயங்குகிறதா என செவிலியர் பார்த்துக் கொள்கிறார்கள்., இத் துறை சார்ந்த அனுபவமிக்க
மருத்துவர்கள் மேற்பார்வையில் நோயாளிகள் அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள்.
இரு சிறு
நீரகங்களும் பழுதுபட்ட நிலையை Renal Failure என்று குறிப்பிடுகிறார்கள்.
ஹீமோ டயாலிசஸ் எனப்படும் குருதித் தூய்மை சிகிச்சையை எடுத்துக் கொண்டால்தான்
தொடர்ந்து உயிர் வாழ முடியும். உடல் எடை, உண்ணும் உணவு, செய்யும் பணி, வயது
முதலியவற்றைப் பொருத்து வாரத்தில் இருமுறை அல்லது தினம் ஒருமுறை குருதித் தூய்மை
செய்யவேண்டியிருக்கும். ஒவ்வொரு முறையும் மூன்று முதல் நான்கு மணிநேரம் மருத்துவ
மனையில் இருக்க வேண்டும். பெரும் பணக்காரர்கள் தம் வீட்டில் கூட இந்த வசதியை
ஏற்படுத்திக்கொள்ள முடியும். இறுதி மூச்சுவரை இச் சிகிச்சை தொடர வேண்டும்.,
சிகிச்சையை நிறுத்தினால் மூச்சு நின்றுவிடும்.
இது மகா செலவுப் பிடித்த வைத்தியம்
என்பதால் பணக்காரர்களுக்கே சாத்தியமாக இருந்தது இப்போது ஏழை எளியவருக்கும்
சாத்தியமாகி உள்ளது. எப்படி? ஒபாமா கேர்(Obama Care) என்னும் திட்டத்தை
நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி ஏழை எளியவருக்கு ஆகும் மருத்துவச் செலவை அரசே
ஏற்றுக் கொள்ளும் என அறிவித்துவிட்டார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
ஒரு
நோயாளி மட்டும் அங்கே ஒரு தனி கண்ணாடி அறையில் படுத்திருந்தார். எச்.ஐ.வி, ஹெப்படைட்
பி போன்ற கிருமி நோயால் பாதிக்கப்பட்டோர் அப்படித் தனி அறையில் படுக்க வைத்துச்
சிகிச்சை அளிக்கப்படுவார்களாம்.
அடுத்து
அந்த மருத்துவ மையத்தின் இதயப் பகுதியாக விளங்கிய தண்ணீர் சுத்திகரிப்புக்
கூடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே எங்களை வரவேற்றார் தொழில் நுட்ப வல்லுநர். நகராட்சி வழங்கும் நீரை குருதி சுத்திகரிப்பு
இயந்திரத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற, தகுதியுள்ள நீராக எப்படி தூய்மை
செய்யப்படுகிறது என்பதைத் தெளிவாக விளக்கினார்.
பத்துக்கும் மேற்பட்ட படிநிலைகளில் நீர்
தூய்மை செய்யப் படுகிறது. இச் செயல்பாடுகளின்போது ஐம்பது விழுக்காடு நீர் அசுத்த
நீராக வெளியேற்றப்படுகிறது. தூய்மையாக்கப்பட்ட நீருடன் சில மருந்துகள்
கலக்கப்பட்டு டயலிசேட்(Dialysate) எனப்படும் கலவை
தயாராகிறது. அக் கலவை சிறு சிறு குழாய்கள் மூலம் நோயாளியின் படுக்கைக்கு அருகில்
உள்ள டையலிசஸ் இயந்திரத்திற்குள் செல்கிறது.
டயலைசர்
எனப்படும் செயற்கைச் சிறுநீரகத்தில் அசுத்தக் குருதி பாய, அதனை எதிர்த்து
மேற்சொன்ன தூயநீர்க் கலவை மோதுகிறது., பிக்பாக்கெட்காரன் நம் மீது மோதிய வேகத்தில்
நமது பர்ஸ் அவனிடம் செல்வது போல,டயலிசேட் மோதிய வேகத்தில் அசுத்தங்களை அது அபகரித்துக்கொள்ள,
நல்ல இரத்தம் உடம்பினுள் செல்கிறது., அசுத்தமெல்லாம் சிறுநீராக மாறி அவ்
இயந்திரத்தின் ஒருபகுதியில் சேர்கிறது.
செயற்கைச் சிறுநீரகமாகச் செயல்படும் அந்த டயலைசரைப் பார்க்க முடியுமா எனக் கேட்டேன். அடுத்த நிமிடம் அதைக் கொண்டுவந்து காட்டி விளக்கினார்.
இறைவன்
படைப்பில் உடம்பு என்பது ஓர் அதிநவீன நுட்பங்கள் நிறைந்த இயந்திரம் ஆகும் என்பதைச்
சற்றே நினைத்துப் பார்த்தேன். மூச்சுக் காற்றும் உணவும் ஒரே சமயத்தில் உள்ளே செல்ல
முடியாதபடி ஒரு சமயத்தில் ஒன்றுதான் என வழிவிட தொண்டையில் ஒரு வால்வு, விந்தும்
சிறுநீறும் ஒரே சமயத்தில் வெளியே வரமுடியாதபடி ஒரு சமயத்தில் ஒன்றுதான் என வழிவிட
இன்னொரு சூப்பர் வால்வு, அசுத்த இரத்தமும் தூய இரத்தமும் கலக்காதபடிப் பார்த்துக்
கொள்ளும் இதய வால்வுகள். வால்வு போனால் வாழ்வு போய்விடும். இந்த வால்வுகளால்தான்
வாழ்கிறோம் என்பதை உணர்ந்தவர்கள் எத்தனைப் பேர்?
இந்த
வரிசையில் நுட்பங்கள் நிறைந்த சிறு நீரகம் விந்தையானது. அது செயலிழந்தால் ஒன்று
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அல்லது வாழ்நாள் முழுதும் டயலிசஸ்
செய்ய வேண்டும். தற்போது நடைபெற்றுவரும் ஸ்டெம் செல் ஆய்வின் மூலம் ஆய்வகத்தில்
இயற்கையான சிறுநீரகத்தை உருவாக்க முடியும். குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியைத்
தூக்கி எறிதல் கூடாது. அதை உயிரி தொழில் நுட்பத்தின்
மூலம் ஆண்டுக் கணக்கில் பாதுகாக்கலாம். சிறு நீரகம் பழுதானால் ஸ்டெம் செல்
வங்கியில் பாதுகாக்கப்பட்டு வரும் நோயாளியின் தொப்புள்கொடி செல்லிலிருந்து
அவருக்கே உரிய சிறுநீரகத்தை உருவாக்கிப் பொருத்தமுடியும். அதுவரை உயிர் காக்கும்
உன்னதப் பணியை இத்தகைய டயலிசஸ் மையங்கள்தாம் செய்ய இயலும்.
“என்ன
யோசிக்கிறீர்கள்? இதை நீங்கள் எடுத்துச் செல்லலாம். உங்கள் மாணவர்களுக்குக் காட்டுங்கள்”
எனச் சொல்லி அந்த டயலைசரை என்னிடம் கொடுத்தார்.
நான்
புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையைப் பார்த்து வியந்திருக்கிறேன். இன்று இங்கும்
அதே வியப்பு மேலிட அனைவரிடமும் விடைபெற்று வெளியில் வந்தேன்
ஒரு கோவிலுக்குள் சென்று வந்த உணர்வோடு.
Dr A Govindaraju from USA
விளக்கங்களுக்கு நன்றி ஐயா...
ReplyDeleteதன்னலமற்ற மருத்துவர்களால் நடத்தப் பெறும்
ReplyDeleteமருத்துவ மனைகளை
ஆலயங்களைவிடப் புனிதமானது
நன்றிஐயா
தாய் பிறந்த வீட்டில் பாட்டி வைத்தியம் பார்க்க குழந்தைகள் பிறந்தன. ஆகவே, குழந்தைகள் விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டிற்குச் சென்று வந்தனர். ஆனால், இன்றய நாளில் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நல்ல நாளில் நல்ல நேரத்தில் குழந்தையை அறுவைச் சிகிட்சை வாயிலாகப் பிரித்தெடுக்கின்றனர். ஆகவே, பிரித்தெடுத்த குழந்தைகள் மருத்துவமனையின் ஆதரவோடு வாழவேண்டிய சூழல் உள்ளது. இருப்பினும் மருத்துவமனைகள் உயிர்காக்கும் உன்னதப் பணியினைச் செய்வது பாராட்டுக்குரியது. இந்தியரான டாக்டர் சங்கர பாண்டியன் அவர்களுக்கும் அவரது துணைவியார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDelete