Friday, 26 July 2019

நாவடக்கம் இல்லா நெல்லை கண்ணன்


   மனிதர்களின் நிறைகளை மட்டும் எடுத்துக்கொண்டு எழுதுவதும் பேசுவதும் என் வழக்கம். அதே சமயம் சிலர் எல்லைமீறி இதழ்களில் எழுதும்போதும் மேடையில் பேசும்போதும் அவர்தம் சிறுமை கண்டு நான் பொங்குவதும் உண்டு.

   ஒளவையார், வள்ளுவர், பாரதியார், ஆண்டாள் போன்ற ஆளுமைகளை வைரமுத்து அவர்கள் எதிர்மறை விமர்சனம் செய்து எழுதியபோது “வம்புக்கு இழுக்கும் வைரமுத்து” என்னும் தலைப்பில் என் எதிர்ப்பைப் பதிவு செய்தேன்.

   இப்போது என் பேனா முனை நெல்லை கண்ணனுக்கு எதிராகத் திரும்புகிறது.

   கரூரில் இப்போது புத்தகத் திருவிழா மிகச் சிறப்பாக நடக்கிறது. அதன் துணை நிகழ்வாக நேற்று நெல்லை கண்ணன் அவர்கள் “பாரதி தமிழன்” என்னும் தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார்.

      அவர் அரங்குக்கு வந்தபோது பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடந்துகொண்டிருந்தன. அவற்றைப் பார்த்தமாத்திரத்தில் அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. சற்று நேரத்தில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதற்காக மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மேடையில் தோன்றினார். நெல்லை கண்ணனும் உடன் அமர்ந்தார். பரிசுக்குரிய மாணவர்கள் அழைக்கப்பட்டு, சில மாணவர்கள் மேடைக்கும் வந்துவிட்டனர். “என்னை மேடைக்கு அழைத்துவிட்டு இதெல்லாம் என்ன கூத்து?” என்று சினங்கொண்டு சீறினார் நெல்லை கண்ணன். கோபத்துடன் அவர் மேடையிலிருந்து இறங்க,  விழா ஏற்பாட்டளரகள் கெஞ்சிக் கூத்தாடி மீண்டும் அழைத்துவர, பரிசளிப்பு நிகழ்வு பாதியில் நிற்க, மேடைக்கு வந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல, மேடையில் என்னதான் நடக்கிறது என்று புரியாமல் பார்வையாளர்கள் குழம்பி நிற்க, நெல்லை கண்ணன் மைக்கைப் பிடித்தார்.

   அவையோருக்கு ஒரு வணக்கம் கூட கூறவில்லை. மேடையில் இருந்த சிறப்பு விருந்தினரை விளிக்கவும் இல்லை. “ரெளத்திரம் பழகு” என பாரதி சொன்னான் எனத் தொடங்கி, தன் கோபத்தை நியாயப்படுத்தி, மாணாக்கச் செல்வங்களை மேடைக்கு அழைத்த விழா ஏற்பாட்டாளர்களைத் திட்டித் தீர்த்து தன் உரையைத் தொடங்கினார். முன்னதாக மைக்கை சரிசெய்த நண்பரையும் அவர் சாடினார் என்பதை அவையோர் அருவருப்புடன் பார்த்தனர் என்பதை அவர் பார்க்கவில்லை.

    தொடர்ந்து பேசும்போது, நா காக்கத் தவறிய இவர் “யாகாவாராயினும் நாகாக்க” என்று வள்ளுவரைக் குறிப்பிட்டுப்  பேசியது நல்ல முரண்நகையாக அமைந்தது. சற்று நேரம் பொறுமைகாத்த காவல் துறைக் கண்காணிப்பாளர் மேடையிலிருந்து இறங்கிச் செல்ல, அடுத்த ஒருமணி நேரத்தில் செத்துப்போன ஜெயலிலிதா அம்மையார் முதல் இப்போது உயிருடன் இருக்கும்  சட்டமன்ற உறுப்பினர் வரை அனைவரையும் வம்புக்கு இழுத்தார். இடையிடையே பலரையும் நாய் எனக்குறிப்பிட்டுக் கோபம் கொப்பளிக்கப் பேசியபோது கேட்டோர் முகம் சுளித்தனர். நான் எண்ணிய வகையில் பார்த்தால் முப்பத்து ஆறு முறை நாய் நாய் என்று குறிப்பிட்டு மனிதர்களை விமர்சித்தார்.

    பார்வையாளரில் பலர் நெல்லையார் முன்னர் அரைத்த மாவையே அரைத்தது கண்டு உள்ளுக்குள் சிரித்ததை அவர்தம் முகக்குறிப்பு காட்டியது. நண்பர் ஒருவர் “அடுத்தது இந்த ஜோக்கைச் சொல்வார் பாருங்கள்” என்றார். அவர் கணிப்புச் சரியாக இருந்தது!   

    தன் சொந்தக்கதைகளை, தற்பெருமைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது நடு நடுவே  தலைப்பைத் தொட்டார் என்பது அவையோரின் கணிப்பு. சிலசமயம் தன் மனப்பாடத் திறனைக் காட்ட, நீண்ட பாடல்வரிகளை புயல்வேகத்தில் சொல்ல, பார்வையாளருக்கு எதுவும் புரியவில்லை என்பது அவருக்குப்புரியவில்லை.

    கூட்டிக் கழித்துப் பார்த்தால் எடுத்துச் செல்ல அவர் உரையில் எதுவுமில்லை. புத்தகத் திருவிழாவில் பேசிய அவர் புத்தக வாசிப்பின் அருமை குறித்து ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை! மேலும் அரசியல் கலந்து பேசியதால் அவர் பேச்சு எடுபடவில்லை. “இதே தலைப்பில் நம் அரசுப் பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவியை அழைத்துப் பேசவிட்டிருந்தால் தலைப்பையொட்டி அருமையாகப் பேசியிருப்பாள்” என்று என் அருகிலிருந்த பெரியவர் சொன்னதை நானும் வழிமொழிந்தேன்.

    நெல்லையார் தன் பேச்சை முடித்த விதம்தான் மிக அருமை!

“விழா ஏற்பாட்டாளர்கள் கொடுத்த பணத்திற்கு இவ்வளவு போதும். இதற்குமேல் பேசமுடியாது” என்று முடித்தபோது, “நெல்லைக் கண்ணனுக்கு என்ன ஆயிற்று? எப்படியிருந்தவர் இப்படியானார்!” என்று என்று அவையோர் கழிவிரக்கத்துடன் பார்த்தனர். நன்றியுரைக்காக, நாட்டுப்பண்ணுக்காகக் காத்திருக்காமல் எழுந்து சென்றது அவை நாகரிகமற்றச் செயலே யாகும்.

    காசு கொடுத்துத் தேள்கடி கொண்ட கதையாக, ஒரு பெருந்தொகையும் தந்து தாம் அவமானப்பட்டதையும் பொறுத்துக்கொண்ட விழா ஏற்பாட்டாளர்கள் அவருடைய உரையைப் புகழ்ந்துபேசி அன்புடன் வழியனுப்பிவைத்தனர். அது அவர்களுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது.

      ஆனால் கூட்டம் முடிந்தும் அவையோர் அங்காங்கே கூடிநின்று நெல்லைக் கண்ணனைக் கிழித்துப் போட்டதைக் கூர்ந்து பார்த்ததன் விளைவுதான் இந்தப் பதிவு.

    அடிக்கடி வள்ளுவத்தை மேற்கோள் காட்டும் நெல்லையாருக்கு,
                            “ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையார்
             செத்தாருள் வைக்கப் படும்
என்னும் குறளைக் குறளகன் அவர்களை அழைத்துப் பாடம் நடத்தச் சொல்லவேண்டும்.

    “ரெளத்திரம் பழகு” என்பதை மட்டும் எடுத்துக்கொண்ட நெல்லையார் “யாவரையும் மதித்து வாழ்” என்னும் பாரதியின் மற்றொரு மகத்தான வரியை மறந்துவிட்டாரே என்பதுதான் என் வருத்தம்.

     சமூகக் கொடுமைகளுக்கு எதிராகத்தான் ரெளத்திரம் பழகச்சொன்னார் பாரதியார். தனிமனிதனுக்கு அவமானம் நேரும்போது ரெளத்திரம் கொள்வது அறிவுடையச் செயல் ஆகாது. பொறுமையாக இருந்து நா காப்பது அறிவார்ந்த செயலாகும்.

முனைவர் .கோவிந்தராஜூ,
தேசிய விருதாளர், கரூர்
   

8 comments:

  1. இதை அறிந்தவர்கள், இனி மறந்தும் கூட அவரை எங்கும் அழைக்க மாட்டார்கள்...

    ReplyDelete
  2. அவர் ஏன் அப்படி
    ஏ(சி பே)சினார்
    என வருத்தம் ஏற்பட்டது.

    அவரது புகைப்படம் இணைக்கலாமே?

    ReplyDelete
  3. நீங்களும் அண்ணியாரும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என தவறாகக் கணக்குப் போட்டுவிட்டேன். என் உள்ளத்து உணர்வை அப்படியே வெளிப்படுத்தினீர்கள்.
    அதுசரி.... நெல்லையாரைக் கூட இவ்வளவு close up ல் காட்டாமல் உங்களை மட்டும் காட்டிய பின்புலம் என்ன?
    அப்படியே இந்த close up க்கான தமிழ்ச்சொல் யாராவது சொன்னால் மகிழ்வேன்!

    ReplyDelete
  4. நெல்லைக் கண்ணணா இப்படி?

    ReplyDelete
  5. மிகவும் அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள். அவை நாகரிகம் கருதியாவது அவர் நடந்திருக்கலாம்.

    ReplyDelete
  6. “பாரதி தமிழன்” நல்ல தலைப்பு. நான் கேட்கிறேன் விழா ஏற்பாட்டாளருக்கு நெல்லைக்கண்ணனை விட்டால் வேறு நல்ல பேச்சாளரா இங்கில்லை. பெருந்தொகை தேவையில்லை. சிறு தொகை கொடுத்தால் கூட மிக அழகாக நிதானத்தைக் கடைபிடித்து பேசும் பேச்சாளர்கள் உண்டு. நெல்லைக்கண்ணன் பேச்சை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அதிலும் கவியரசு கண்ணதாசன் அவர்களைப் பற்றி ஒருமையிலும், சில இடங்களில் கொச்சையான சொற்களைப் பயன்படுத்தி தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அவரின் வாரிசுகளைச் சுட்டிக்காட்டிப்பேசுவார். ஒரு தனி மனிதனின் வாழ்வை விமரிசிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. சமுதாயத்தின் பார்வையில் தவறாக இருப்பின் தவறுதான். அதற்காகப் பொதுமேடையில் எடுத்து உரைப்பது நாகரிகமில்லை. மாணவர்களின் தனித்திறனுக்காக வழங்கப்படும் பரிசளிப்பும், பாராட்டும் கண்டு இரசிக்க வேண்டாமா? இவரும் ஒரு தந்தை, தாத்தா என்ற நிலையை அடைந்தவர் தானே. போகட்டும் இனியாவது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சமுதாயத்தின் அறிமுக முகத்தை விடுத்து, புதிய முகங்களை அரங்கில் பேச வைக்கட்டும். என்ன பேசவேண்டும் என அறியாத அரிதாரம் பூசியவர்களை ஒரு சாரார் விரும்புவர். அது போல அரைத்த மாவை அரைக்கும் நாகரிகமற்ற பேச்சாளர்களை ஒரு சாரார் விரும்புவர். அப்படிப்பட்ட நெல்லைக் கண்ணன் போன்றவர்களுக்கு ஓய்வு கொடுங்கள்; இல்லையென்றால் ஏற்பாட்டாளர்கள் வசைமொழியை வாங்கிக்கொண்டு; வாய் இழித்து அவரைப் புகழ்ந்து பாராட்டி; பணமுடிப்பும் தந்து வழியனுப்புவதைக் கண்டு சமுதாயம் எள்ளி நகையாடும். சகமனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தும் அரிதாரம் பூசியவர்களையும், சமுதாயத்தை மதிக்காத நட்சத்திரப் பேச்சாளர்கள் என உருவாக்கப்பட்டவர்களையும் புறந்தள்ளவேண்டும்.
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்
    கரூர்

    ReplyDelete
  7. Some of his speeches have been below his dignity.

    ReplyDelete
  8. முனைவர் அ.கோவிந்தராஜூ29 July 2019 at 23:12

    பின்னூட்டம் தந்த அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete