Monday, 25 May 2015

சிறகை விரிக்கும் செல்லப்பெண்ணே

   அம்மாவும் நானும் உன்னை அழைத்துச் சென்று மதுரை தியாகராஜர் பொறியியல்கல்லூரி விடுதியில் விட்டுவிட்டு வந்தது நேற்று நடந்ததுபோல் இருக்கிறது.
உன்னைப் பிரிய முடியாமல் அம்மா பிழிய பிழிய அழுததும் என் நினைவுக்கு வருகிறது.

    இன்று(25.5.15) சிறகு கட்டிக்கொண்டு கனடா நாட்டுக்குப் பறக்கிறாய். அந் நாட்டின் தலை நகர் ஒட்டாவா. அங்கு அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற கார்ல்டன் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ படிக்கப் போகிறாய். ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும் மறுபுறம் இதயம் கனக்கவே செய்கிறது.

   ஒருபுறம் பெருமை மறுபுறம் வெறுமை. பக்கத்திலா உள்ளது ஒரு எட்டு வந்துவிட்டுப்போ என்று சொல்வதற்கு. அம்மாவைத் தேற்றுவதற்கு ஆறு மாதமாவது ஆகும். அவளுக்கு ஸ்கைப், வாட்ஸேப் போன்றவை கொஞ்சம் உதவலாம்.

  இனி இந்தியக் குடிமகள் என்பது போய் உலகக் குடிமகள் ஆகிறாய். உன்னுடைய அறிவும் ஆற்றலும் உலகத்திற்கே சொந்தமாகிறது.

  உலகம் தழுவியது ஒட்பம்(அறிவு) என்று வள்ளுவர் சொல்கிறார். அதை எண்ணி எண்ணி வியந்து போகிறேன்.

    இது நீயே விரும்பித் தேர்ந்தெடுத்தப் படிப்பு. அதில் புலமையும் வல்லமையும் பெற வேண்டும். அத் துறையின் உச்சியைத் தொடவேண்டும். அவ்வப்போது வரும் தடைகளுக்கு விடை கொடுத்து முன்னேற வேண்டும். பேராசிரியர்களிடம் பணிவோடு இருந்து கற்றுக்கொள்.

  உடையவர்களிடத்தில் இல்லாதார் எப்படிப் பணிவோடு இருந்து யாசிப்பார்களோ அப்படி பணிவாக இருந்து பேராசிரியர்களிடம் கற்க வேண்டும். இதை நான் சொல்லவில்லை. திருவள்ளுவர் சொல்கிறார்:

 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
 கடையரே கல்லா தவர்

     பட்டம் பெறுவதை நோக்கமாகக் கொள்ளாதே., திறனை வளர்த்துக் கொள்வதை நோக்கமாகக் கொள். திறன் உடையவர்களை மட்டுமே இந்த உலகம் அங்கீகரிக்கும்.

நீ செல்வழி நன்று., வெல்வது உறுதி.


2 comments:

  1. Sir, Pls Convey my best wishes to Bhuvana sister for her Higher studies in canada...

    ReplyDelete
  2. Sir, Pls Convey my best wishes to Bhuvana sister for her Higher studies in canada...

    ReplyDelete