Saturday, 4 July 2015

துப்பாக்கி தேசம்

   பொதுவாக மதிய உணவுக்குப் பிறகு பகல் தூக்கத்தைத் தவிர்ப்பதற்காக கொஞ்ச நேரம் டி.வி. பார்ப்பதுண்டு. ஆனால் இன்று பொழுது சரியாக விடிவதற்குள் தொலைக்காட்சியைப் பார்த்துத் தொலைத்தேன். HBO சேணலில் ஒளிபரப்பான ஒரு ஆவணப் படம் (Documentary film) என்னை சோபாவின் விளிம்பில் உட்கார வைத்துவிட்டது.


      படத்தின் தொடக்கமே சரியில்லை. யாரோ என் மனத்தைத் தனியே எடுத்து தட்டில் வைத்து இரண்டு கைகளாலும் போட்டு பிசைவதுபோல் இருந்தது. திரும்பிப்பார்த்தேன். என் இல்லத்தரசி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். வீட்டில் இருந்த அனைவரும் வெளியூர் சென்றிருந்தார்கள்.

      ஆங்கில subtitle ஓடிக்கொண்டிருந்ததால் புரிந்து கொள்ள எளிதாக இருந்தது. செய்திப் படத்தின் தலைப்பே பயங்கரமாக இருந்தது.

Dead and Lovely

       அமெரிக்காவில் ஒவ்வொரு நாளிலும் 88 பேர் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகிறார்கள் என்பதுதான் தலைப்புச் செய்தி. உடனே எனது அலைப்பேசியை எடுத்துக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். ஆண்டுக்கு 32000 மனித உயிர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியாகின்றன என்பதை நினைத்தபோது நெஞ்சு பட படத்தது. சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகளில் இறந்தவர்களைவிட துப்பாக்கியால் இறந்தவர்கள் அதிகம் என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

  இரும்பைக் கையில் எடுத்தவன் சும்மா இருக்க மாட்டான் என்பது நம் நாட்டுப் பழமொழி. இங்கே அமெரிக்காவில் துப்பாக்கியை எடுத்தவன் சும்மா இருக்கமாட்டான் என்பதுதான் பழமொழி என நினைக்கிறேன்.

    இன்றைய தேதியில் 310 மில்லியன் கைத் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருக்கின்றனவாம்! நம் ஊர் தேநீர் கடையில் போண்டா வாங்குவது போல இங்கே திரும்பிய பக்கமெல்லாம் கண்ணில்படும் gun store கடைகளில் துப்பாக்கிகளை வாங்கிவிட முடியும்.

     சென்றவாரம் ஒருநாள் விடியலில் வீட்டருகே உள்ள பூங்காவில் நடந்தபோது ஓர் இருக்கையின் மேல் ஒரு கைத்துப்பாக்கி கிடந்தது. திரும்பி வந்து மனைவியிடம் சொன்னபோது அது விளையாட்டுத்  துப்பாக்கியாக இருக்கும் என்று சொன்னாள். ஆனால் அது முதல் நாள் யாரோ மறந்து விட்டுச் சென்ற நிஜ துப்பாக்கியாக இருக்க வேண்டும் என இப்போது நினைக்கத் தோன்றுகிறது. அது பொம்மைத் துப்பாக்கியா என்று எடுத்து எதையாவது அழுத்திப் பார்க்காமல் இருந்தது நல்லதாய்ப் போயிற்று.


   அமெரிக்காவில் மிகவும் ஆபத்தான பதவி அதிபர் பதவி என்று ரீடர்ஸ் டைஜஸ்ட் என்னும் மாத இதழ் கூறுகிறது. நாற்பத்து நான்கு அதிபர்களில் இதுவரை நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.(Abraham Lincoln, James A Garfield, William McKinley and John F Kennedy) இருவர் துப்பாக்கிச் சூட்டில் காயங்களுடன் தப்பியிருக்கிறார்கள்.(Theodore  Roosevelt  and Ronald Reagan)

   அமெரிக்கர்களில்   துப்பாக்கி வைத்திருப்போர் 89%. அவர்களுள் பெண்கள் 13%. தற்காப்புக்காக அரசு அனுமதியுடன் இவற்றை வைத்திருக்கிறார்கள். இதன் காரணமாக குற்றங்கள் குறைந்திருக்கின்றன் என்பது போலீசாரின் வாக்கு மூலம். More Guns less Crimes என்று ஓர் ஆய்வேடு ஒரு புதுப் பொன்மொழியை உருவாக்கியுள்ளது.
    
    அடுத்து கைத் துப்பாக்கியைக் கையில் எடுப்பதற்கான காரணங்களை அந்த ஆவணப் படத்தில் அலசினார்கள். போலீஸ் என்கவுண்ட்டர், பாலியல் பலவந்தம், கடன் பிரச்சனை, உட்பகை, வெறுப்பு, தற்காப்பு, தற்செயல் எனப் பட்டியல் நீள்கிறது. எந்தக் காரணமும் இல்லாமல் பள்ளியில், வழிபாட்டுத் தலங்களில் புகுந்து சுட்டுத் தள்ளும் மன நோயாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்  என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்தார்கள்.

     போலீஸ் தரப்பு தரும் புள்ளி விவரம் அதிசயமாக உள்ளது. சென்ற ஆண்டில் போலிசார் நடத்திய என்கவுண்ட்டரில் 606 குற்றவாளிகளும், குடிமக்களின் கைத்துப்பாக்கிகளுக்கு 1527 குற்றவாளிகளும் பலியானதாக அந்த அறிக்கை கூறுகிறது.

நான் பார்த்த செய்திப் படத்தில் துப்பாக்கியால் செத்துப் போனவர்களின் படங்களை- அதாவது அவர்கள் பலியாவதற்கு முன் முகநூலில் வெளியான சந்தோஷ தருணத்தில் எடுத்தப் படங்களைக் காட்டி எனது வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார்கள். காதலர்கள் முத்தமிடும் படம், கணவன் மனைவி கட்டிப் பிடிக்கும் படம், அப்பா தன் மகளை முதுகில் உப்புக்கட்டி விளையாடும் படம், பள்ளிச் சீருடையில் குழந்தைகள் தம் பவள வாயில் புன்னகை சிந்தும் படம், வீட்டு நாயுடன் விளையாடி மகிழும் சுட்டிக் குழந்தைகளின் படம், முதுமையிலும் அருகருகே அமர்ந்து கொஞ்சி மகிழும் தாத்தா பாட்டி படம்- இவற்றைப் பார்க்க பார்க்க எனது கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

   அந்தப் படங்களுக்கு உறவும் நட்பும் முகநூலில் போட்டிருந்த comments இன்னும் கொடுமை! Dad I love you more than anything என்று தந்தையர் நாளின் முதல் நாள் இரவில் அன்பு மகள் முகநூலில் போட்ட வாழ்த்துச் செய்தியைப் பார்க்காமலேயே அவர் மறுநாள் தந்தையர் நாளன்று ஒரு சர்ச்சில் துப்பாக்கி ரவைக்குப் பலியான கொடுமையும், தப்பிப் பிழைத்த மகள் அந்த பழைய உப்புக்கட்டி விளையாடும் படத்தை 
Dear Dad I miss you  எனக் குறிப்பிட்டு முகநூலில் வெளியிடும் அவலமும்- அப்பப்பா! என்னால் உண்மையில் தாங்க முடியவில்லை.

      “சென்ற மாதம் முழுமதி நாளன்று எம் தந்தையார் எங்களுடன் இருந்தார்., இன்று முழுமதி நாள் ஆனால் தந்தையார் எங்களுடன் இல்லை” என்று கூறியவாறு போரில் தம் தந்தையை இழந்த மகள்- பறம்புமலை பாரியின் மகள் அழுது நின்ற காட்சியும் உடன் நிகழ்வாக எனது உள்ளத்தில் தோன்றி என்னவோ செய்தது.
   
படம் முடிந்து The End என்று போட்டார்கள்.

   துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு The End  என்று எப்போது போடப்போகிறார்கள்?


DR A GOVINDARAJU from Bedford, Texas State, USA



5 comments:

  1. அமெரிக்கா வல்லரசு நாடாக இருந்து என்ன பயன்

    ReplyDelete
  2. என்ன தான் சொன்னாலும் இது கொடுமை ஐயா...

    ReplyDelete
  3. அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம் உங்களை வெகுவாகப் பாதித்து விட்டது. என்ன இருந்தாலும் மனித உயிர்கள் பலியாவதை யாரால் பார்க்க இயலும். துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானவர்களை எண்ணி வருந்துகிறேன்.

    ReplyDelete
  4. அச்சுருத்தும் விடயம். கூடவே இதனையும் சற்று சிந்திக்கவேண்டும். நம் நாடட்டின் சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை... 238,562 (653 per day)

    https://en.wikipedia.org/wiki/List_of_countries_by_traffic-related_death_rate

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்கா 34,064 (93 per day)

      Delete