Saturday, 4 July 2015

ஊர் எங்கும் உல்லாசம்

  
இன்று அமெரிக்க நாட்டின் 239 ஆவது சுதந்திர தின விழா. ஒபாமா உள்ளிட்ட அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல் வாழ்த்துகள்.

   அமெரிக்க நாட்டில் வசிப்பவர்களுக்குக் கொண்டாட்டம் மிகுந்த நாள் இது.. சாதி, இனம், மொழி, நிற வேறுபாடு இன்றி உற்சாகத்தோடு ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஒப்பற்ற நாள்.


அனைத்து அரசு தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை. வழக்கமான ஊதியத்துடன் விடுமுறை ஊதியமும் உண்டு.
கொள்ளை அழகு

அழகுக்கு அழகு


பள்ளிகளில் கொடி ஏற்றுதல் இங்கு வழக்கமில்லை. நேற்றே குழந்தை குட்டிகளோடு பெற்றோர் தாம் விரும்பிய வெளியிடங்களுக்குச் சென்று, சுதந்திர தின கோழி விருந்தில்(Family barbecue)  மகிழ்ந்திருக்கும் சூழலில் குழந்தைகள் எப்படி பள்ளிக்குச் செல்ல முடியும்?

    அவ்வாறு வெளியூர் செல்லாதவர்களும் வண்ண உடையணிந்து, உடையில் கொடி குத்திக் கொண்டு விதவிதமான உணவு வகைகளை உண்டாடி மகிழ்கிறார்கள். முக்கியமாக வீட்டின் பின்புறத்தில் உள்ள கிரில் அடுப்புகளில் இளங்கோழிகளின் தொடைப் பகுதிகளை பக்குவமாக வேக வைத்துச் சேர்ந்து உண்கின்றார்கள்.

    பெண்களும் குழந்தைகளும் தம் கைவிரல் நகங்களில் ஃபிங்கர் பெய்ண்ட் மூலம் தேசியக் கொடியை வரைந்துள்ளார்கள். ஒருவருக்கு ஒருவர் முகத்திலும் கொடியை வரைந்து கொள்கிறார்கள். இவர்கள் வீட்டு நாய்களுக்கும் பூனைகளுக்கும் கூட குஷால்தான்! மாலை என்ன! மரியாதை என்ன!

    பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து அமெரிக்க நாடு 1776 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. All men are created equal என்ற கோட்பாட்டை முன்வைத்து அரசு அமைத்தனர். ஜியார்ஜ் வாஷிங்டன் முதல் அதிபரானார்.

    சுதந்திரம் பெற்ற அடுத்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி தமக்கென ஒரு தேசியக்கொடியை உருவாக்கினார்கள். அன்று முதல் ஜூன் நான்காம் தேதி கொடி நாளாகக் கொண்டாடப் படுகிறது.

    13 வெள்ளை  நிற நட்சத்திரங்களும், 13  சிவப்பு மற்றும் வெள்ளை நிற பட்டைகளும் கொண்டதாக அமைந்தது. 13 பட்டைகள் 13 காலனிகளைக் குறிக்கும். 13 நட்சத்திரங்கள் அப்போதிருந்த 13 மாநிலங்களைக் குறித்தன. அதற்குப் பிறகு மாநிலங்கள் பெருகப் பெருக நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் கூடின. இப்படி 27 முறைகள் கொடியின் உள்ளடக்கம் மாற்றப்பட்டு, இன்றைய தேதியில் 50 நட்சத்திரங்களைக் கொண்ட கொடியாக பட்டொளி வீசி பறக்கின்றது.
மிசிசிப்பி :   வானுயர் வளைவு



  
கண்ணைக் கவரும் வாண வேடிக்கை
அமெரிக்கர்களுக்கு நாட்டுப்பற்று மிகவும் அதிகம். அமெரிக்க தேசியக் கொடியை
gift pack செய்து விற்பனை செய்கின்றனர். அதை வாங்கி நண்பர்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறார்கள். வீடுகளில், புல் வெளிகளில், வாகனங்களில் எங்கு பார்த்தாலும் தேசியக் கொடிகள் பறக்கின்றன. பொது இடங்களில் கொடிக்குமுன் கூடிநின்று Old glory எனத் தொடங்கும் கொடிப்பாடலை இசையுடன் பாடுகின்றனர். The Stars and stripes for ever  என நீளும் நாட்டுப்பற்று மிக்கப் பாடலைப் நாவாரப் பாடுவர். ஒவ்வொரு நிகழ்வும் The star spangled banner என்று தொடங்கும் நாட்டுப் பண்ணைப் பாடி நிறைவு செய்கிறார்கள்.

    என் மனைவி சாந்தியை அழைத்து, “இன்று அமெரிக்க விடுதலை நாள். ஏதாவது இனிப்பு செய்து கொடேன்” என்று சொன்னேன். “நாம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தியா திரும்புகிறோம். ஆகஸ்ட் 15 அன்று  செய்து தருகிறேன்” என்றாள். என்னே அவளது நாட்டுப்பற்று!

   நம் புதுதில்லியில் உள்ள இண்டியா கேட் போல மிசிசிப்பி ஆற்றங்கரையில் ஒரு பிரமாண்டமான வளைவை அமைத்துள்ளார்கள். அங்கே சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன.

    வாஷிங்டன் வொயிட் ஹவுசில் சின்னக் குழந்தைகள் வண்ணக் கொடிகளை ஏந்திச் சென்று ஒபாமாவை சந்தித்து வாழ்த்துக் கூறுகின்றனர். அங்கே உள்ள தர்பாரில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளை, ஒபாமாவும் அவர் துணைவியாரும் அவ்வப்போது எழுந்து நின்று (Standing ovation) கைதட்டி ரசித்து மகிழ்கின்றனர். முன்னதாக படை வீரர்களின் அணிவகுப்பைக் கண்டு களித்திருக்கிறார்கள்.

     இன்று முன் இரவில் நாடு முழுவதும் வானம் நிறைந்த வாண வேடிக்கை நடைபெறுமாம். இன்னும் சில மாதங்களில் அவரது அதிபர் பதவி நிறைவுக்கு வரும் நிலையில் அவர் நேற்று மாலை விடுத்துள்ள அறிக்கையை என்னைத் தவிர யாரும் பாராட்டமட்டார்கள்.

அவர் சொல்கிறார்:

 “சுதந்திர தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் வீட்டுக்கு வீடு பின்வாசலில் கிரில்லிங் செய்வதையும் வாண வேடிக்கை நடத்துவதையும் உடனே நிறுத்துங்கள். இவற்றால் காற்று மாசுபடுகிறது., ஓசோன் படலத்தின் ஓட்டை பெரிதாகிறது.”

ஒபாமாவுக்கு ஓர் ஓ போடலாமா?

    சிவகாசியில் குழந்தைகளின் கைவிரல்களே பட்டாசுகளாக மாறுகின்றன எனத் தெரிந்தும் கட்டுக் கட்டாக வாங்கிக் கொளுத்தி வாண வேடிக்கை நடத்தும் நமக்கு ஒபாமாவுக்கு ஓ போட எந்தத் தகுதியும் இல்லை.

DR A GOVINDARAJU from Bedford, Dallas, Texas State, US




4 comments:

  1. சிவகாசியில் குழந்தைகளின் கைவிரல்களே பட்டாசுகளாக மாறுகின்றன எனத் தெரிந்தும் கட்டுக் கட்டாக வாங்கிக் கொளுத்தி வாண வேடிக்கை நடத்தும் நமக்கு ஒபாமாவுக்கு ஓ போட எந்தத் தகுதியும் இல்லை.
    உண்மைதான் ஐயா

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
  3. நுனிக்கொம்பேறி அடிமரத்தை வெட்டியதைப் போன்றது நம் நாட்டின் நிலைமை. எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல எதுவுமில்லை. ஆனால் ஒபாமா மக்களை எச்சரிக்கிறார் என்றே சொல்லலாம்.

    ReplyDelete
  4. நுனிக்கொம்பேறி அடிமரத்தை வெட்டியதைப் போன்றது நம் நாட்டின் நிலைமை. எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல எதுவுமில்லை. ஆனால் ஒபாமா மக்களை எச்சரிக்கிறார் என்றே சொல்லலாம்.

    ReplyDelete