Sunday 14 July 2024

இருமல் இனிது

 இருமல் இனிது, தும்மல் இனிது, தலை வலி இனிது. இப்படியெல்லாம் எனக்கு எழுதத் தோன்றுகிறது என்றால் அதற்குக் காரணம் பாரதியார்தான். நீர் இனிது, காற்று இனிது என எழுதிச் சென்றவர், தொடர்ந்து தீ இனிது, மின்னல் இனிது, இடி இனிது என எழுதினார்!

   இங்கே கனடாவில்  நாங்கள் வசிக்கும் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெய்யிலும் மழையும் மாறி மாறி அடிக்கிறது. அதனால்தானோ என்னவோ இந்த இருமலின் ஆதிக்கம் எனக்கு அதிகமாய் உள்ளது. இவ்வூர் ஆங்கில மருந்துக்கும் இது பணியவில்லை.

    நடு இரவு ஒரு மணி. இருமல் தொல்லையால் எழுந்து உட்கார்ந்தேன். துண்டின் ஒரு முனையால் வாயை அழுத்தி மூடிக்கொண்டு இருமினேன். காரணம், வீடு முற்றிலும் மரத்தால் ஆனது என்பதால் இருமல் ஒலி மற்ற அறைகளில் தூங்குவோரையும் எழுப்பிவிடும்.

   தலைணைக்குப் பக்கத்தில் இருந்த நெகிழிப் பையிலிருந்து ஒரு  கிராம்பு, இரு மிளகு ஆகியவற்றை எடுத்து வாயில் போட்டு மெல்ல மென்றேன். இருமல் கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது.

    நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது, எங்கள் சிற்றூரில் ஆண்டில் ஆறு மாதங்கள் மழை அடைத்துக்கொண்டு பெய்யும். மழையில் குதியாட்டம் போட்டால் பரிசாக சளியும் இருமலும் வரும். இப்படி இரவிலே இருமினால், என் தாயார் எழுந்து, ‘ஒருவி பண்டிக்கோ, தக்கு தக்கவக்கா உண்டுஎன்று என் தாய் மொழிகளில் ஒன்றான தெலுங்கில் சொல்வார். ஒருக்களித்துப் படுத்தால் இருமல் குறையும் என்பது அதன் பொருள். அது நினைவுக்கு வரவே அப்படிப் படுத்தேன்.

    ஒற்றை இருமலாய் சற்றே இடைவெளிவிட்டு வந்தது. இசை அரங்கில் மிருதங்க கலைஞர் முதலில் லொட்டு லொட்டு என்று தட்டுவார். ஒரு கட்டத்தில் தனி ஆவர்த்தனம் செய்யத் தயாராகிறார் என்று பொருள். சற்று நேரத்தில் இருமல் தொடர் இருமலாக மாறித் தன் தனி ஆவர்த்தன கச்சேரியைத் தொடங்கியதும் அதற்கு வாய்ப்புத் தராமல் எழுந்து என் மடிக்கணினியை உசுப்பிவிட்டு தட்டச்சு செய்யத் தொடங்கினேன். நான் எதையும் தாளில் எழுதுவதில்லை.

   இந்த இருமல் தொல்லை சங்க காலத்தில் வாழ்ந்த மனிதர்க்கு இருந்திருக்குமா என்று சிந்தித்தேன், இப்போது கவனம் வேறு வேலையில் சென்றதால் இருமல் இல்லை. சங்க இலக்கியத்தில் இருமல்என்னும் சொல் எத்தனை இடங்களில், எந்தெந்தப் பாடல்களில் வருகின்றன என்று கணினியிடம் கேட்டேன். அடுத்த விநாடியில் ஒரே இடத்தில்தான் வருகிறது என்ற தகவலை திரையில் என் கண்முன் காட்டியது. இந்த நேரத்தில் மதுரையில் வாழும் கணிதப் பேராசிரியர் பாண்டியராஜா அவர்களை நன்றியுடன் நினைத்துப் பார்த்தேன். அவர் உருவாக்கியுள்ள www.tamilconcordance.in என்னும் இணையதளத்தில் எந்த இலக்கியத்திலும் எந்தச் சொல்லையும் ஒரு நொடியில் தேடிப் பிடிக்கலாம்.

      இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருமிக்கொண்டே தளர் நடை நடந்த ஒரு முதியவரைப் படம்பிடித்துக் காட்டும் சங்கப்பாடல் ஒன்று கணினித் திரையில் கண்முன் விரிந்தது. அந்தப் புகழ்மிக்கப் பாடலை எழுதியவரின் பெயர் கால வெள்ளத்தில் கரைந்து போய்விட்டது. இப் பாடலில் வரும் ஒரு தொடரால் இவர் குறிக்கப்படுகிறார். அவர்தான் தொடித்தலை விழுத்தண்டினார்

   அவர் தமது இளமைப் பருவத்தில் நடத்திய ஒரு குறும்பு விளையாட்டைத் தம் தள்ளாத கிழப் பருவத்தில் நினைத்துப் பார்க்கும் இரங்கற்பாட்டு இது. கையறுநிலைத் துறையில் அமைந்தது.

இப்போது அதை நினைத்து என்ன ஆகப் போகிறது? நான் பத்து வயது சிறுவனாக இருந்தபோது இதே குளத்தில் குளிப்பதுண்டு. அங்கே சிறுமியரும் குளிக்க வருவர். அவர்களுடன் சேர்ந்து மண்ணால் பாவை செய்து அதன் மேல் மலர்களைத் தூவி மகிழ்வோம். அந்தச் சிறுமியரோடு மனத்தில் கள்ளமில்லாமல் கைகளைக் கோத்தவாறு நீராடி மகிழ்ந்தேன்.

   அதோ தெரிகிறதே மருத மரம், அந்த மரத்தின் உச்சிக்கிளையில் ஏறி, துடும் எனக் குளத்து நீரில் பாய்ந்து, குளத்தின் அடிப்பகுதிக்குச் சென்று  கை நிறைய  மண்ணை அள்ளிக்கொண்டு, மேலே வந்து, அந்தச் சிறுமியரிடம் வெற்றிப் பெருமிதத்துடன் என் கையை உயர்த்திக் காட்டுவதுண்டு.

ஆனால் இப்போது உடல் தளர்ந்து, கிழப்பருவம் எய்தி, நடை தடுமாறி, கையில் வளைந்த கோல் பிடித்து ஊன்றி, தொடர்ந்து வரும் இருமலுக்கிடையே சிலவாகிய சொல் பேசும் எனக்கு, கழிந்துபோன அந்தப் பயமறியாத இளமைப் பருவம் மீண்டும் வருமோ?”

இதோ அந்தப் பாடல்: 

இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்

செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,

தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,

தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,

மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு

உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,

நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,

கரையவர் மருளத், திரையகம் பிதிர,

நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,

குளித்துமணற் கொண்ட கல்லா இளமை

அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ

தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,

இருமிடை மிடைந்த சிலசொல்

பெருமூ தாளரோம்  ஆகிய எமக்கே?

                                புறம்:243

பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார்

 

இயற்றியது ஒரே பாடல் என்றாலும், இந்த ஒரே பாடலுக்காக காலந்தோறும் மனத்துக்குப் பிடித்த மாமனிதராய்த் திகழ்கிறார் இந்த சங்கப் புலவர் தொடித்தலை விழுத்தண்டினார்.

   எனக்கு நள்ளிரவில் இருமல் வந்து எழுந்து உட்கார்ந்து சங்க இலக்கியத்தில் இருமல் என்னும் சொல்லைத் தேடப் புகுந்தேன். அதனால் இப் புலவர்தம் பாடல் கிடைத்தது. அதை உங்களுடன் பகிரவேண்டி இந்தப் பதிவையும் எழுதினேன்.

இப்போது சொல்லுங்கள். ‘இருமல் இனிது’ என நான் சொன்னது சரிதானே?

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

 

 

7 comments:

  1. தி.முருகையன்14 July 2024 at 09:36

    இனிது என மனது நினைத்துவிட்டால் எல்லாம் இனிது தான் ஐயா.
    வயோதிகத்தில் இளமை இனிது.
    கோடையில் வசந்தம் இனிது.

    ReplyDelete
  2. சுமார் இரண்டு ஆண்டுகளாக என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (முதலில் தமிழில், தொடர்ந்து ஆங்கிலத்தில்) நூல் பணி காரணமாக வலைப்பூ பக்கம் வர இயலா நிலையில் இருந்தேன். தமிழ்ப்பதிப்பு வெளிவந்துவிட்டது. ஆங்கிலம் இம்மாத இறுதிக்குள் வரவுள்ளது. இனி வலைப்பூவில் நண்பர்களின் பதிவுகளைப் பார்ப்பேன் என எண்ணுகிறேன்....

    ReplyDelete
  3. இருமல் இனிது பதிவைப் பார்த்ததும் நான் கும்பகோணம் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது நடந்த நிகழ்வு நினைவிற்கு வந்தது. கும்பகோணத்தில் சிறிய மலர் துவக்கப்பள்ளிக்கு ஒரு நிகழ்வின்போது, தேர்ந்தெடுத்த சில மாணவர்களை அழைத்துக்கொண்டு எங்கள் ஆசிரியர் சென்றார். அந்த மாணவர்களில் நானும் ஒருவன். ஒரு விவாதத்தின்போது அப்போது அவர் மழைக்காலம் நன்று என்றார். எங்கள் யாருக்கும் புரியவில்லை. தொடர்ந்து மழைக்கு ஆலம் நன்று என்று விளக்கம் தந்தார்.

    ReplyDelete
  4. சாதாரணமாக வாசிக்க ஆரம்பித்த பதிவு சங்க காலம் வரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாலிப பருவத்தை எட்டிப் பார்க்க வைத்து ஆதியப்பறவை ஏக்கம் மனதில் இரு மலாய் தொற்றிக் கொண்டு நிற்கிறது. நன்றி ஐயா

    ReplyDelete
  5. சந்தேகமே இல்லை இருமல் இனிதேதான் அதனால்தான் உங்களுக்கு சங்கப்புலவர் தொடித்தலை விழுத்தண்டினார் அவரை நீங்கள் தெரிந்து கொண்டு எங்களுக்கும் அறிமுகமாக்கித் தந்தீர்கள்!

    தும்மல் வரும் போது நுனி மூக்கை விரலால் அமுக்கினால் தும்மலை வராமல் அடக்கிவிடலாம் என்பது போல் இருமலை ஒருக்களித்துப் படுத்தால் அடக்கலாம் என்று முன்னோர் சொன்னதை எங்களுக்கும் சொன்னது ஒரு நல்ல டிப்ஸ்

    துளசிதரன்

    ReplyDelete
  6. இருமலை இப்படி சங்ககாலப் பாடலோடுதொடர்பு படுத்திச் சொல்லி இனிதாக்கிவிட்டீர்கள் ஐயா.

    கீதா

    ReplyDelete