Friday 11 October 2024

கண்டறியாதன கண்டேன்

 நம் நாட்டில் சாலையின் இடப்பக்கத்தில்(Keep Left) வாகனம் செல்ல வேண்டும். கனடா நாட்டில் வலப்பக்கத்தில்(Keep Right) செல்ல வேண்டும்.

நம் நாட்டில் வாகனத்தின் வலப்பக்கத்தில் ஓட்டுநர் அமர்ந்து ஓட்டுவார். இங்கே இடப்பக்கத்தில்(Left Hand Drive) அமர்ந்து ஓட்டுவார்.

நம் நாட்டில் காரில் ஓட்டுநர் மட்டும் சீட் பெல்ட் போட்டால் போதும். இங்கே காரில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் போட வேண்டும்.

நம் நாட்டில் தெருவை அல்லது சாலையைக் கடக்க எண்ணும் பாதசாரிகள் நின்று சாலையில் செல்லும் வாகனங்களுக்கு வழிவிடுவர். இங்கே காரில் செல்வோர் நின்று பாதசாரிகளுக்கு வழிவிட வேண்டும்.

நம் நாட்டில் நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட வேகத்திற்கு அதிகமாக  கார் ஓட்டினால் 500 ரூபாய் அபராதம். இங்கே 500000 ரூபாய் அபராதம்!

இங்கே குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு காரில் பயணம் செய்ய அனுமதியில்லை. பெரியவர் அருகில் உட்காரவும் அனுமதியில்லை. குழந்தைகளுக்கான சிறப்பு இருக்கை காரின் பின் சீட்டில் பொருத்தப்பட்டு, அதில் குழந்தை உட்கார வேண்டும். குழந்தைக்கும் கண்டிப்பாக சீட் பெல்ட் போட வேண்டும். மருத்துவ மனையில் பிறந்த குழந்தையை மறுநாள் வீட்டிற்கு அழைத்து வரும்போதும் தனி இருக்கையில்தான் குழந்தை படுக்க வைக்கப்பட வேண்டும்! இந்தச் சிறப்பு இருக்கையை ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கையிலும் பொருத்துதல் கூடாது என்பது விதி.

நம் நாட்டில் பள்ளிகளை ஒட்டியுள்ள சாலைகளில் வேகமாக வாகனம் ஓட்டினாலும் காவலர் கண்டுகொள்வதில்லை. இங்கே அப்படி ஓட்ட நேர்ந்தால் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம்; மேலும் ஓட்டுநர் உரிமம் செல்லாது என அறிவித்து விடுவர்.

நம் நாட்டில் குழந்தைகளை ஏற்றிவிட இறக்கிவிட பள்ளி வாகனங்கள் சாலை ஓரத்தில் நிற்கும்போது அவற்றை மற்ற வாகனங்கள் முந்திச் செல்வது குற்றமன்று. இங்கே அப்படி முந்திச் செல்லக் கூடாது. பள்ளி வாகனத்திற்குப் பின்னால் பத்து மீட்டர் இடைவெளிவிட்டு வாகனத்தை நிறுத்த வேண்டும். பள்ளி வாகனம் புறப்பட்ட பிறகு பின்னால் நிற்கும் வாகனம் நகர வேண்டும்.

நம் நாட்டில் பள்ளி வாகனங்களுக்கு அதிகமானோர் ஆண் ஓட்டுநர்களே. இங்கே பெண் ஓட்டுநர்களே மிகுதியாக உள்ளனர்.

நம் நாட்டில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும்போது வாகனத்தின் எஞ்சினை ஓட விடுதல் கூடாது. இங்கே அப்படியில்லை; தொடர்ந்து இயங்கலாம்.

நம் நாட்டில் எரிபொருளை நிரப்பியபின் பணம் தருவோம். இங்கே முதலில் பணம் செலுத்திவிட்டுப் பிறகு எரிபொருள் நிரப்ப வேண்டும்.

நம் நாட்டில் எரிபொருளை நாமாக நிரப்பிக்கொள்ள வசதியில்லை. இங்கே எல்லாம் ஆளில்லா எரிபொருள் நிலையங்கள். அங்கே உள்ள ஸ்வைப்பிங் மெஷினில் கிரடிட் கார்டை ஸ்வைப் செய்துவிட்டு நாமே எரிபொருளை நிரப்பிக்கொள்ள வேண்டும்.

இரவு பத்து மணிக்குமேல் பெட்ரோல் பிடித்தால் குறிப்பிட்ட விழுக்காடு தள்ளுபடி உண்டு.

நம் நாட்டில் ஓட்டுநர் உரிமம் எடுப்பது எளிது. இங்கே கெடுபிடிகள் அதிகம். மூன்று நான்கு முறைகள் கூட வாகனம் ஓட்டுவது சரியில்லை எனத் திருப்பி அனுப்பிவிடுவார்கள். மேலும் சாலைப் போக்குவரத்து விதிகளுக்கு எழுத்துத் தேர்வும் உண்டு.

  நம் நாட்டில் டோல் கேட்டில் வாகனம் நின்று, தடுப்பான் தூக்கியபின் செல்ல வேண்டும். இங்கே நூறு கி.மீட்டர் வேகத்தில் கடக்கும்போதே கட்டணத்தை எடுத்துக்கொள்ளும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

   நம் நாட்டில் இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கையில் அதிகம். இங்கே உள்ள சாலையில் ஒருமணி நேரத்திற்கு ஓர் இருசக்கர வாகனம் செல்வதே அரிது.

    நம் நாட்டில் பெரியவர்கள் அதிகம் சைக்கிள் ஓட்டுவதில்லை. இங்கே வீட்டுக்கு வீடு சைக்கிள் இருக்கும். பெரியவர்கள் பெண்கள் அதிகம்பேர் சைக்கிள் ஓட்டுவதைப் பார்க்கலாம். சாலைகளில் சைக்கிள் செல்ல தனிப்பாதை உண்டு.

நம் நாட்டில் அரசுப் பேருந்துகளில் சைக்கிளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. இங்கே பேருந்துகளில் சைக்கிளை எடுத்துச் செல்ல முடியும். பேருந்தின் முன்புறத்தில் சைக்கிளை வைப்பதற்கு கேரியர் உண்டு.

    நம் நாட்டில் வாகன ஓட்டிகள் சிக்னலை மதிக்கும் பாங்கு சற்றுக் குறைவு. இங்கே நள்ளிரவிலும் எந்த வாகனமும் கண்ணில் படாத நிலையிலும் நின்று, பச்சை விளக்கு ஒளிர்ந்தால்தான் செல்கின்றனர்.

   நம் நாட்டில் வாகன ஓட்டிகள் அதிகமாக ஹாரன் ஒலி எழுப்புகின்றனர். இங்கே அதை யாரும் பயன்படுத்துவதே இல்லை!

  நம் நாட்டில் போலீசார் வாகனத்தை நிறுத்தி விசாரிக்கும்போது, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி ஓட்டுநர் விடையளித்தால் கதை கந்தலாகி விடும். வண்டியை ஓரங்கட்டி இறங்கிப் பணிவாக நிற்க வேண்டும். இங்கே ஓட்டுநர் தன் இருக்கையைவிட்டு இறங்கினால் குற்றம். ஓட்டுநரின் இரு கைகளும் ஸ்டீயரிங் வீலை பிடித்தவாறு கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்!

  மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டுவது இங்கே கொலைக் குற்றத்திற்குச் சமம்!

   நம் நாட்டில் கண்ட இடங்களில் வாகனத்தை நிறுத்துவதுபோல், இங்கே நிறுத்தினால் மாபெரும் குற்றம்; தண்டத்தொகை குறைந்தது ஐம்பதாயிரம் ரூபாய்! வாகனம் நிறுத்தும் இடங்களிலும் முறையாக நிறுத்தாவிட்டால் குற்றம்!

    நம் ஊரில் இருப்பதுபோல் இங்கே பொதுப் பேருந்துகளில் யாரும் இலவசமாகப் பயணம் செய்ய முடியாது. ஆனால் மாணவர்களும் முதியவர்களும் கட்டணச் சலுகையுடன் பயணம் செய்யலாம். ஒரே ஒரு நாள் அனைவரும் இலவசமாகப் பயணம் செய்யலாம்; கனடா நாட்டின் சுதந்திரத் திருநாளான ஜூலை முதல் நாளில் மட்டும்.

   உடல் ஊனமுடையோர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே பேருந்தினுள் ஏறும் வகையில் பேருந்து நுழை வாயிலில் சிறப்பு ஏற்பாடு உண்டு. இவர்களுக்கென தனிப் பேருந்துகளும் உண்டு; வீட்டு வாசலுக்கு வந்து அழைத்துச் செல்லும்.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

 

   

1 comment:

  1. தி.முருகையன்11 October 2024 at 20:25

    நமது நாட்டிலும் கடுமையான தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிக்கப்பட்டால் விபத்துகள் குறையும்.

    ReplyDelete