Saturday, 25 April 2015

ஹலோ பெங்களூரு


   பெரிதினும் பெரிது கேள் என்பது பாரதியாரின் புதிய ஆத்திசூடி. இச் செய்தி என் மகளின் காதுகளுக்கு எட்டியிருக்குமோ?

   அதிரடியாக முடிவெடுத்து, பணித்துறப்புச் செய்தாள். IBM  நிறுவனத்தில் கை நிறைய சம்பாதித்தவள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் MBA படிக்க வாய்ப்புக் கிடைத்ததால் அப்பணியை உதறிவிட்டாள். அறையைக் காலிசெய்து பெட்டி படுக்கையோடு திரும்ப வேண்டியிருந்ததால், என் மகிழ்வுந்தில் பெங்களூரு சென்றிருந்தேன்.

   பணித்துறப்பு என்பதில் நூற்றி எட்டு நடைமுறைகள் இருக்குமே. விட்டு விடுதலையாகி வெளியில் வர மாலை நான்கு மணி ஆகும் என்றாள். பெங்களூரை உற்று நோக்க ஒரு வாய்ப்பு என எண்ணி சரி என்றேன்.

    வண்டியை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு, சுற்றிலும் நோட்டம் விட்டேன். IBM,DELL போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ள பகுதி அது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இடைவெளி இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தன. அடுத்த சில நிமிடங்களில் அவை ஆமை வேகத்தில் நகர்ந்தன. அடுத்த சில நிமிடங்களில் நகராமல் நின்றன. சற்று நேரத்தில் நகரத் தொடங்கின. இது பற்றி பிற்பகலில் என்னைச் சந்தித்த எழுத்தாளர், பெங்களூரில் வசிக்கும் எனது முன்னாள் மாணவர் வா. மணிகண்டனிடம் கேட்டேன். இதுதான் பெங்களூரின் சிறப்பம்சம் என்று நையாண்டியாகக் குறிப்பிட்டார். இதில் சிக்காமல் சந்து பொந்துகளில் புகுந்து அலுவலகம் சென்று வரும் நுட்பம் தனக்குத் தெரியும் என்று சொன்னார்.

    காலை 11.30 மணி இருக்கும். அருகில் இருந்த கணினி நிறுவனங்களின் இடைவேளை நேரமாக இருக்கவேண்டும். இளைஞர்களும் இளம்பெண்களும் வெளியில் வந்து மரத்து நிழலில் நின்றார்கள். நான் அதிர்ச்சி அடையும்படியான காட்சி அரங்கேறியது! ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் சிகரெட் பற்றவைத்துக் கொண்டு அரட்டையில் ஈடுபட்டார்கள். ஒருவன் கருப்பு நிற சிகரெட் புகைத்ததை முதல் முறையாகப் பார்த்தேன். அது வெளிநாட்டு சிகரெட் என்றும் ஒரு பாக்கெட் விலை 700 ரூபாய் என்றும் பின்னர் அறிந்தேன். கொடுமையடா சாமி என்று நினைத்தபடி காரில் அமர்ந்து, கொண்டு வந்திருந்த புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன்.
     மணி ஒன்று ஆனதும் மதிய உணவிற்காக ஓர் உணவகத்தை நாடிச் சென்றேன். எளிய சைவ சாப்பாடு போதும் என்றேன். Starter வேண்டுமா என்று கேட்டார். எனக்குத் தெரிந்த ஒரே starter மோட்டாரை இயக்கப் பயன்படும் starter தான். அப்படி எதுவும் வேண்டாம் என்றேன்.

   அருகில் இருந்த மேசைக்கு இளம் அரட்டைக் கும்பல் ஒன்று வந்தது. எல்லாம் பன்னாட்டுக் கம்பெனிகளில் வேலைசெய்யும் இளசுகள்தாம். அசைவ உணவுகளை கொரித்தபடி அரட்டைக் கச்சேரியை நடத்தினர். தாங்க முடியவில்லை. இரண்டு இளைஞர்களும் இரண்டு பெண்களும் உண்டு கழித்த உணவை குறைந்தது நான்கு பேர் சாப்பிடலாம். அத்தனையும் குப்பைத் தொட்டியின் தொப்பைக்குச் சென்றுவிடும். உணவை வீணாக்குவது ஒரு தேசியக் குற்றம் என்று கருதுபவன் நான்.

    பிற்பகல் மூன்று மணி வாக்கில் காப்பி அருந்தலாம் என்று நினைத்தேன். சற்று தூரத்தில் காப்பி டே(Coffee Day) கடை தென்பட்டது. இது போன்ற கடைகளில் விலை அதிகம் என்று முன்னரே தெரியும். தெரிந்தும் உள்ளே சென்றேன். A lot can happen over  coffee என்று பெரிய எழுத்துகளில் எழுதி வைத்திருந்தனர். ஒரு நேபாளி இளம்பெண் நின்றாள்., காப்பி நூறு ரூபாய் என்றாள்., கொடுத்தேன். கணினியை இயக்கினாள்., அது துப்பிய சீட்டை என்னிடம் கொடுத்தாள். அவள் காட்டிய இடத்தில் அமர்ந்தேன். அது வண்ணக்குடையுடன் கூடிய மேசை. ஒரு பக்கத்தில்  நடுத்தர வயது வெளி நாட்டு ஆணும் பெண்ணும் புகைத்தபடி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் இரு ஆடவர் கன்னடத்தில் உரக்கப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களும் தமக்குத்தாமே கொள்ளி வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஆக எனக்கு இருபக்கமும் ஒரே புகை மயம்., குமட்டிக் கொண்டு வந்தது. அவர்களைப் பார்க்க சகிக்காமல் குனிந்து தரையைப் பார்த்தேன். பிளாஸ்டிக் தம்ளர்களும் சிகரெட் துண்டுகளும் அழகு சேர்த்தன. குடைமேல் விழுந்த நீர்த் துளிகள் எனது சட்டை மீது பட்டன. அந்தக் கட்டடத்தின் மேலே பொருத்தப்பட்டிருந்த ஏ.சி இயந்திரம் கழித்த சிறுநீர்தான் அப்படி சொட்டியது. தூய்மை இந்தியா என்பது மோதியின் கனவுத் திட்டம். அவருடைய கனவு நனவாகுமா? அல்லது கனவிலே கண்ட பணம் போல பயன் தராது போகுமா? அது நம் செயல்பாட்டைப் பொருத்தது.

    இருபது நிமிடம் கழித்து அந்தப்பெண் காப்பி கொண்டு வந்தாள். கால் லிட்டருக்கு மேலே இருக்கும். பெரிய காகிதத் தம்ளர் நிறைய நுரை பொங்க இருந்தது. மொடாக்குடியன் என்று நினைத்து விட்டாளோ? அதில் சூடும் இல்லை., சுவையும் இல்லை., சப்பென்று இருந்தது. மேசையில் இருந்த சர்க்கரைத் தூளைக் கொஞ்சம் போட்டு அங்கிருந்த பிளாஸ்டிக் குச்சியால் கலக்கிக் குடித்தேன். நம் ஊர் இரயில் நிலையத்தில் இயந்திரத்தில் பிடித்துக் கொடுப்பானே அதே காப்பி அதே சுவை. அங்கே ஐந்து ரூபாய்., இங்கே நூறு ரூபாய்.

   A lot can happen over  coffee என்ற வாசகம் என் மனக்கண்ணில் தோன்றியது. உண்மையைத்தான் எழுதிப் போட்டிருக்கிறார்கள். இங்கு காப்பி குடித்தால் வாந்தி வரும்., மற்றவர் வெளிவிடும் சிகரெட் புகையினால் புற்று நோய் வரும்., அடிக்கடி இங்கு வந்து காப்பி குடித்தால் கடன் வாங்க வேண்டி வரும். அதனால் வீட்டில் சண்டை வரும். இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டே குடித்து முடித்தேன். காலி தம்ளரை நானே எடுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் போட்டேன். அது ஒரு கேவலமான தொட்டி., அதுவும் விளிம்புவரை நிறைந்து கிடந்தது.

   காப்பி தந்த பெண்ணை அருகில் அழைத்தேன். உங்கள் கடை பற்றிய எனது கருத்தைப் பதிவு செய்ய பதிவேடு ஏதேனும் உள்ளதா என்று கேட்டேன். பதிலுக்குப் புன்னகையை உதிர்த்தாள். உங்கள் காப்பியும் சரியில்லை., சுற்றுச்சூழலும் சரியில்லை என்று ஆங்கிலத்தில் சொன்னேன்., அதற்கும் அதே புன்னகை.

   அவளுடைய புன்னகை மட்டும்தான் நன்றாக இருந்தது.



1 comment:

  1. This is quite shocking to me. Since when did certain things that we considered as shame has become socially acceptable? And since when standards are lowered this much?

    ReplyDelete