Wednesday 27 May 2015

பறப்பது சுகமே


    துபாயிலிருந்து டெல்லாஸ் செல்லும் விமானத்தில் பறந்தபடி இந்தப் பதிவை எழுதுகிறேன். இப்பொழுது இவ் விமானம் மணிக்கு 576 மைல் வேகத்தில் பறக்கிறது.
கடல்மட்டத்திலிருந்து  38000 அடி உயரத்தில் விமானம் பறக்கிறது. கனடா நாட்டுக்கு மேலே பறந்து கொண்டு இருக்கிறது. என் அருகில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் என் இளைய மகள் புவனா அந்நாட்டிற்குதான் படிக்கச் செல்கிறாள். எங்கள் இருக்கைக்கு எதிரில் உள்ள சின்னத்திரையில் கனடா நாடு தெரிகிறது. அதன் தலைநகர் ஒட்டாவா தெரிகிறது. அங்குள்ள உலகப்புகழ் பெற்ற கார்ல்டன்  பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிக்கத் தேர்வாகியுள்ளாள். திரையில் சுட்டிக்காட்டி புவியியல் தகவல்களை சொல்லிக்கொண்டே வருகிறாள்.

   விமானப்பணிப்பெண் ஒருத்தி ஒய்யாரமாக வந்து என்ன வேண்டும் எனக் கேட்கிறாள். அவள் எந்த நாட்டுப் பெண்ணோ ஆனால் ஒன்று உறுதி. அண்மையில் நடந்த உலக அழகிப் போட்டியில் அரை இறுதிச் சுற்று வரையிலும் சென்றவளாக இருக்க வேண்டும். அப்படி ஒரு அழகு. புவனா தேநீர் கிடைத்தால் நன்று என ஆங்கிலத்தில் குழைந்தாள்., அவ் அழகி புன்னகையோடு தேநீரைப் பரிமாறினாள். தேநீரைச் சுவைத்தபடி சாளரம் வழியே எட்டிப்பார்க்கிறோம். என்ன அழகு! என்ன அழகு! ஒரு கோடி மூட்டைகள் பிரிந்துபோய் அவற்றிலிருந்த வெண்பஞ்சு சிதறி விரிந்தால் எப்படியிருக்கும். அப்படி இருந்தன மேகக்கூட்டங்கள். சூரிய ஒளியில் சிறு சிறு வெள்ளிக் குவியல்களாகவும் தெரிகின்றன.

     உள்ளே இதமான குளிர் நிலவினாலும் விமானத்துக்கு வெளியே -50 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் இருப்பதாக எதிரில் உள்ள சின்னத்திரை காட்டுகிறது. இதமான குளிரும் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது என்பதால் போர்த்திக்கொள்ள தூய்மையான போர்வை ஒன்றும் தரப்படுகிறது.

     அட நம்மூர் சாலையில் ஓடும் பேருந்தைப்போல விமானம் ஆடுகிறது. திடீரென விமானத்தின் பறப்பு உயரத்தைக் கூட்டும்போதும், குறைக்கும்போதும், திருப்பும்போதும் இப்படிதான் குலுக்கல் இருக்குமாம். அந்த அழகிய பணிமொழியாள் பனிமொழியாள் சொன்னது சரியாகத்தன் இருக்கும்.

இன்னும் மூன்று மணிநேரம் பறந்தாக வேண்டும் டெல்லாஸ் விமான நிலையத்தை அடைவதற்கு. இடைவிடாத பதினாறு மணிநேர பறப்பில் பதிமூன்று மணிநேரம் பறந்து விட்டது. ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்திருப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்று என் தமையனார் பேராசிரியர் பெருமாள் சொல்லியிருந்தார். அவ்வப்போது எழுந்து நடைபயின்றேன். இ கே 212 என்று எண்ணிடப்பட்ட இந்த விமானம் 180 அடி நீளமுள்ளது. தரைத்தளம் மற்றும்  முதல் தளம் என இரண்டடுக்கு கொண்டது. ஒரு வரிசையில் இரு இடைவெளிகள். பத்து பேர்கள் அமரலாம். இப்படி அறுபது வரிசைகள். பெரிதினும் பெரிய விமானம். இருபத்து ஒன்பது நாடுகளைச்சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் பயணியர் பயணிப்பதாக குயில் போன்ற ஒரு பெண் பெருமையோடு அறிவித்தாள். அவள் குரல் மட்டுமே கேட்டது., கண்ணில் படவில்லை., அதனால்தான் குயில் என்று குறிப்பிட்டேன்
.

    600 பேர் பயணம் செய்கிறார்கள். ஆனால் பேச்சரவமே இல்லை. அதற்குக் காரணம் இரண்டு. முதல் காரணம்  ஒருவருக்கு மற்றவர் பேசும் மொழி புரியாது.  எல்லா நாட்டுக்காரர்களும் முடிந்த வரையில் ஆங்கிலத்தைக் கெடுத்து வைத்திருப்பதால் ஒருவர் பேசும் ஆங்கிலம் மற்றவருக்குப் புரியாது. இரண்டாவது காரணம் அனைவரும் சின்னத்திரையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். நாற்பது மொழிகளில் ஐந்நூறு படங்கள் அரிசி அளவில் அடங்கிக்கிடக்கின்றன. அவற்றில் வேலையில்லா பட்டதாரி உட்பட தமிழ்ப்படங்களும் அடக்கம். நானும் என் பங்குக்கு திருடன் போலீஸ் படத்தைப் பார்த்தேன். அப்பன் இருக்கும் போது அவருடைய சிறப்பை உணராத மகன் அவர் இறந்தபிறகு மதித்துப் போற்றுவதாக படம் செல்கிறது., சொல்கிறது. நல்ல படம்.

       பத்து மணிநேரம் பயணித்தப்பிறகு பக்கத்தில் பயணித்தவரிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினேன். விகாத்  என்பது தன் பெயர், பிறந்தது ஈரான், வசிப்பது அமெரிக்கா என அழகான ஆங்கிலத்தில் சொன்னார். பிறகு எங்கள் பேச்சு கல்வி, கலாச்சாரம், குடும்பம் என வளர்ந்தது.

  இப்பொழுது பத்தாயிரம் அடி குறைந்து நாற்பதாயிரம் அடி உயரத்தில் விமானம் பறக்கிறது. 559 மைல் வேகம். துபாயிலிருந்து 6770 மைல் தூரத்தைக் கடந்துவிட்டோம். இன்னும் 1156 மைல்கள். இரண்டு மணி நேரம் ஆகலாம் என  சின்னத்திரை தெரிவிக்கிறது.

         மடிக்கணினிக்குச் சற்று ஓய்வு கொடுத்துவிட்டு, கழிப்பறைக்குச் செல்கிறேன். கதவில் சிவப்பு ஒளிக்கீற்று தெரிகிறது. அப்படி என்றால் உள்ளே ஒருவர் இருக்கிறார் என்று அறியலாம். காத்திருந்து உள்ளே சென்றால் மருந்துக்குக் கூட தண்ணீர் இல்லை. ஒரு பொத்தானை அழுத்தினால் 100 கி.மீ வேகத்தில் காற்று பீச்சியடிக்கப்பட்டு எல்லாம் அடித்துச் செல்லப்படுகிறது. அங்கு தொங்கும் காகிதத்தைப் பிய்த்துத் துடைத்தபின் உரிய இடத்தில் போடவேண்டும். அந்த அறையின் அளவே இரண்டடிக்கு இரண்டடிதான்!

   ஒருவழியாக இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கையில்அமர்ந்ததும் அந்த பனிமொழியாள் தின்பதற்குத் தந்தாள். பிட்டுப்பார்த்தால் பழைய உளுந்து வடையைப் பிட்டால் நூல் வருமே அப்படி வந்தது., சூடாகவும் இருந்தது., சுவையாகவும் இருந்தது. புவனா சொன்னாள் அது பீட்சா என்று. வாழ்க்கையில் முதல்முறையாக அதைச் சுவைக்கும் வாய்ப்பு விமானத்தில் வாய்த்தது.

    விமானம் நாங்கள் செல்ல வேண்டிய டெல்லாசை நெருங்குகிறது. சீட் பெல்ட்டை இருக்குங்கள் என்று அறிவிக்கிறார்கள். நான்கு மாத நீண்ட இடைவெளிக்குப் பிறகு அன்பு மனையாளைச் சந்திக்கப்போகிறோம், ஓராண்டு இடைவெளிக்குப்பிறகு பெரிய மகள் அருணாவைச் சந்திக்கப் போகிறோம், நான்காண்டு இடைவெளிக்குப்பிறகு மருமகனைச் சந்திக்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் விமானம் தரையிறங்கும் அந்தக் கணத்திற்காகக் காத்திருந்தேன்.

       விமானம் தரையிறங்கி ஓடுதளத்தில் ஓடுகிறது.
    

4 comments:

  1. பயண பதிவு அருமை அழகு. இனிய பயணம் தொடரட்டும். ....

    ReplyDelete
  2. பயண பதிவு அருமை அழகு. இனிய பயணம் தொடரட்டும். ....

    ReplyDelete
  3. Excellent feel u have given in words sir...

    ReplyDelete
  4. I always astonish about your art of writing. As a lover of tamizh writings I have never come across such a fantastic words from even any leading writers. Your are gifted by God. Keep on it. Thanks

    ReplyDelete