விடாது மழை பெய்தாலும் அடாது வெயிலடித்தாலும்
செயல்படுவது எனது வழக்கம். இங்கே அமெரிக்காவில் அப்படியெல்லாம் முடியாது.
வானிலை
அறிவிப்பைப் பார்த்துதான் காரியம் தொடங்க வேண்டும். இன்றைக்கு மழை இல்லை என்னும்
அறிவிப்பு வந்ததால், என் மகள் அருணா அவள் படிக்கும் ஆர்லிங்டன் டெக்சாஸ் பல்கலைக்
கழகத்திற்கு அழைத்துச் சென்றாள். கூடவே என் இளைய மகள் புவனாவும் ஒட்டிக் கொண்டாள்.
எனது மாருதி 800 காரில் பயணித்துப் பழகிய
எனக்கு, அவளது சொகுசு காரில் பயணித்தது புதிய அனுபவமாக இருந்தது. காரில் பயணம்
செய்யும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் போட்டுக் கொள்ள வேண்டும். இல்லையேல் 200
டாலர் தண்டக் கட்டணம் அழ வேண்டியிருக்கும்.
அவ்வளவு அழகாக முறையாக கார் ஓட்டினாள். நம்மூர்
மாதிரி சாலையில் இடது புறத்தில் ஒட்டக் கூடாது. வலது புறத்தில்தான் ஓட்ட வேண்டும்.Keep Right என்பதுதான் இங்குள்ள சாலை விதி. அதற்காக
காரின் இடது புறத்தில் அமர்ந்து ஓட்டும்படியாக கார்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.
நவீன தகவல் தொடர்பு சாதனம் பொருத்தப்பட்ட
கார் அது. புறப்படுமுன் எங்கு செல்லவேண்டும் என்பதை அதனிடம் தெரிவித்தால் போதும்.
எங்கே திரும்ப வேண்டும் இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது செல்லும் வழியில் வாகன
நெருக்கம் இருக்கிறதா போன்ற விவரங்களை உரிய நேரத்தில் சொல்லும். மோனிக்கா என்று
மெல்லிய குரலில் சொன்னாள். உடனே அவளுடன் பணியாற்றும் மோனிக்காவுடன் தொலைபேசித் தொடர்பு
கிடைத்தது. இன்னும் பத்து நிமிடங்களில் சந்திப்பதாகத் தெரிவித்தாள். முன் கூட்டியே
தகவல் தெரிவித்துதான் யாரையும் சந்திக்க வேண்டும் என்பது இங்கு மரபாக உள்ளது. செல்பேசியை
அத் தகவல் தொடர்பு சாதனத்துடன் இணைத்துவிட்டால் இப்படி காரை பாதுகாப்பாக
ஓட்டிக்கொண்டே பேசலாம். இதற்கு டெக்சாஸ் மாநிலத்தில் அனுமதி உண்டு. அமெரிக்காவின்
பல மாநிலங்களில் இப்படிப் பேச அனுமதி இல்லை.
தமிழ்த் திரைப்பாடலை இசைத்தபடி கார் 120 கிலோ
மீட்டர் வேகத்தில் சென்றது. அடுத்த பத்து நிமிடத்தில் அவள் படிக்கும் பணியாற்றும்
டெக்சாஸ் பல்கலைக் கழகத்தின் முன்னால் உரிய இடத்தில் உரிய முறையில் காரை
நிறுத்திவிட்டு இறங்கினாள். நாங்களும் இறங்கி நடந்தோம். முன்னதாக மோனிக்க
வந்தாள்., ஆய்வக சாவியைத் தந்தாள்.
120 நாடுகளைச் சேர்ந்த 48000 மாணவ மாணவியர்,
180 பாடப்பிரிவுகளில் கல்வி கற்கும் மிகப்பெரிய வளாகம். உலகப் புகழ் பெற்ற
பேராசிரியர்கள் நூற்றுக்கணக்கில் பணியாற்றும் நிறுவனம். நம் சென்னைப்
பல்கலைக்கழகம் மாதிரி ஊரின் பெயரால் அமைந்தது இந்த டெக்சாஸ் பல்கலைக்கழகம். இங்கே
என் மகள் பிஎச்.டி பட்டப் பேற்றுக்கான ஆய்வுப் படிப்பைத் தொடர்கின்றாள். மேலும்
இளம் அறிவியல் மாணவர்களுக்குக் கற்பிக்கவும் செய்கிறாள்.
பிரமாண்டமான கட்டடங்கள். அந்தக் கட்டடங்களில்
அகன்ற ஆளோடிகள். வியப்பில் கண்மண் தெரியவில்லை. என் மகள் முன்னே நடந்தாள். ஆனால்
என் நினைவு பின்னே நடந்தது.
ஒரு மாமாங்கத்திற்கு முன்னால் அவளை திருச்சி
பாரதிதாசன் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அவள் விரும்பிய படிப்பில்(B.Tech Bio Technology) சேர்த்துவிட்டு வந்தேன். பின்னர், அகில இந்திய
அளவில் நடந்த போட்டித் தேர்வில் வென்று, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில்
முதுநிலைப் படிப்பில்(M.Sc Genomics) சேர்ந்தாள். பின்னர்
மிசிசிப்பி பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பில் அடி வைத்தாள். திருமணத்திற்குப்
பிறகு, தன் கணவர் பணியாற்றும் டெல்லாஸ் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்
கழகத்தில் சேர்ந்து ஆய்வைத் தொடர்கிறாள். காரியம் யாவினும் கைகொடுக்கும் மனைவியைப்
பற்றிக் குறிப்பிடுவார் பாரதியார். என் மகளுக்குக் காரியம் யாவினும் கைகொடுக்கும்
கணவர் வாய்த்தார். சில சமயங்களில் இரவுப் பொழுதிலும் ஆய்வகத்தில் பணியாற்ற
வேண்டியிருக்குமாம். அப்பொழுதெல்லாம் என் மாப்பிள்ளை தானே சமைத்த அறுசுவை உணவை
ஆய்வகத்திற்கு கொண்டு சென்று மனைவிக்கு அன்புடன் கொடுப்பாராம். ஒரு பெண்ணுக்குக் கணவர்
அமைவதும் இறைவன் கொடுக்கும் வரமல்லவா?
“ அப்பா! இதுதான் என் பயாலஜி லேப்” என்று மகள்
சொன்னபோதுதான் நிகழ்காலத்திற்குத் திரும்பினேன். ஒவ்வொன்றாக விவரித்தாள்.
புரிந்தது சில., புரியாதவை பல. அனைத்தும் உலகத் தரத்தில் அமைந்தவை. திசு
வளர்க்கும் ஒரு இயந்திரம் மட்டும் பல லட்சம் டாலர் மதிப்புடையது.
அவள் மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது நான் தலைமையாசிரியராகப் பணியாற்றிய கோபி வைரவிழா மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு மாலைப்பொழுதில் வந்தபோது, என் இருக்கையில் ஓடி அமர்ந்துகொண்டு, “நான்தான் ஹெட்மாஸ்டர்” என்று சிரித்துக்கொண்டே சொன்னது என் நினைவுத்திரையில் மின்னி மறைந்தது.
வியப்புக் குன்றின் உச்சிக்குச் சென்று
சறுக்கி விழுந்தேன் அவளுடைய அலுவலகத்தில். கதவுக்கு அருகில் இருந்த பெயர்ப்பலகை
கண்ணில் பட்டது. Aruna
Govindaraju என்று
பொறிக்கப்பட்டிருந்தது. பூவோடு சேர்ந்து நாறும் மணம் வீசுவது போல என் மகள்
எனக்களித்த பெருமையாகக் கருதினேன். உள்ளே நுழைந்து ஒரு நோட்டம் விட்டேன்.
A place for everything and everything in its place என்னும் பொன்மொழிக்கு ஏற்றபடி ஒழுங்குற
வைத்திருந்தாள்.
இருக்கைக்கு முன்னால் சிலவற்றைக்
கண்ணில்படும்படி வைத்திருந்தாள். என் மனைவி அருணா சிறு குழந்தையாக இருந்தபோது
தூக்கிக் கொஞ்சியபோது எடுத்த போட்டோ. புவனா, ரக்ட்சு, தியா வரைந்த ஓவியங்கள். நடுநாயகமாக நான் பல ஆண்டுகளுக்கு முன்னால்
எழுதி அனுப்பியிருந்த ஆங்கிலக் கவிதையை அச்சிட்டு ஒட்டியுள்ளாள். அக்
கவிதையிலிருந்து இரண்டு வரிகள்.
It’s sure
that you will get
Proportionally to your sweat
நம் பூட்டாதி பூட்டன் திருவள்ளுவர் சொன்ன
‘மெய்வருத்தக் கூலி தரும்’ என்பதன் மொழிபெயர்ப்புதான் அது.
நிறைவாக, ஒரு கல்விக்
கோபுரத்தைத் தரிசனம் செய்த உணர்வோடு காரில் ஏறி அமர்ந்து சீட் பெல்ட்டைப்
பொருத்தினேன்.
Nice article sir!
ReplyDeleteThank you for your compliments
Deleteஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மக(ளை)னைச் சான்றோன் எனக் கேட்ட தாய். “இவ(ள்)ன் தந்தை இவ(ளை)னை மக(ளா)னாகப் பெற என்ன தவம் செய்தானோ” என்ற வள்ளுவப் பெருந்தகையின் நோக்கு தங்களுக்காகக் கூறப்பட்டதாக எண்ணி மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மக(ளை)னைச் சான்றோன் எனக் கேட்ட தாய். “இவ(ள்)ன் தந்தை இவ(ளை)னை மக(ளா)னாகப் பெற என்ன தவம் செய்தானோ” என்ற வள்ளுவப் பெருந்தகையின் நோக்கு தங்களுக்காகக் கூறப்பட்டதாக எண்ணி மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்.
ReplyDelete