இரண்டு நாள்களாகவே மனத்தில் ஓர் இனம் புரியாத பரபரப்பு. 1983 ஆம் ஆண்டு பொம்மலாட்டப் பயிற்சிக்காக நம் நாட்டின் தலைநகர்
புதுதில்லிக்கு நான் சென்றபோது இருந்த பரபரப்பைவிட இது அதிகம். அமெரிக்கத் தலைநகர்
வாஷிங்டனுக்குச் செல்கிறோம் என்பதால் ஏற்பட்ட கூடுதல் பரபரப்பு.
சா விஸ்வநாதன்(சாவி) எழுதிய வாஷிங்டனில் திருமணம்
என்னும் நகைச்சுவை நாவலில் அவர் வருணித்த இடங்களை
நேரில் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பில் இருந்ததால் ஒவ்வொரு நிமிடமும் ஒரு
யுகமாய்க் கழிந்தது.
புறப்பட வேண்டிய நாளும் புலர்ந்தது. காலை பத்து
மணிக்கு விமானம். உறவினர் கார்த்தி அவர்கள்
தன் மகிழுந்தில் எங்களை விமான நிலையத்திற்கு
அழைத்துவந்து அன்புடன் அனுப்பிவைத்தார்.
டேலஸ் விமான நிலையத்தில் பாதுகாப்புக் கெடுபிடிகள்
அதிகமாக இருந்தன. மோதிரம், கழுத்துச் சங்கிலி, தாலி, ஷூ, பெல்ட், வாட்ச், மொபைல் போன் என எல்லாவற்றையும் எக்ஸ்ரே எடுத்து திருப்பிக்
கொடுக்கிறார்கள்.
என் மனைவியின் மேல் அவர்களுக்கு ஏதோ சந்தேகம் வந்ததால், இரண்டு கைகளையும் விரிக்கச்சொல்லி உள்ளங்கைகளில் வெண்ணெய் போன்றதைத் தடவி, ஒரு ஸ்கேனர் மேல் காட்டச்சொன்னார்கள்.
அவர்கள் ஆங்கிலத்தில் சொன்னதை என் மகள் அருணா தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
கடைசியில் சாரி தேங்க்யு என்று கூறி அனுப்பினார்கள். இவ்வளவு நடந்தது., ஆனால் ஒன்றுமே
நடக்காததுபோல், ஒரு பதற்றமும் இல்லாமல் ஒய்யாரமாக நடந்தாள் தயாராக நின்றுகொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ்
விமானத்தை நோக்கி. வியப்புடன் நான் பின் தொடர்ந்தேன். பெரிய மகளும் மாப்பிள்ளையும்
முன்னே சென்றுகொண்டிருந்தார்கள். என் இளைய மகள் புவனா வி.ஐ.பி எஸ்கார்ட் போல எனக்குப்
பின்னால் குறிப்பிட்ட இடைவெளியில் வந்து கொண்டிருந்தாள்.
எனக்கும் என் மனைவிக்கு மட்டும்
அருகருகே இடம் கிடைத்தது, அதுவும் ஜன்னலை ஒட்டி. அவளிடம்,”திருமணம் ஆகி முப்பது ஆண்டுகள்
கழித்து இரண்டாவது ஹனிமூனுக்கு வாஷிங்க்டன் செல்லுகிறோம்” என்று கூற, நான் அசடு வழிவதைப்
புரிந்துகொண்டு தலையாட்டிவைத்தாள்.
விமானம் மூன்று மணி நேரம் பறந்து சென்றது. பிற்பகல்
1.30 மணியளவில் வாஷிங்டன் விமான தளத்தில் எங்கள் கால்கள் தரையிறங்கின. மின்தூக்கி,
சிறிய ட்ரெய்ன் என மாறி மாறி ஏறி இறங்கி ஒருவழியாக இல்லையில்லை பலவழியாக வெளியே வந்தோம்.
எங்களை யாராவது ஒரு எழுத்தாளர் பார்த்திருந்தால், சிவ கணேஷ் ஒரு பொம்மலாட்டக்காரர்போல்
இயக்க, மற்றவர் எல்லாம் பொம்மைகளைப்போல பின்னாலே ஓடிக்கொண்டிருந்தார்கள் என எழுதியிருப்பார்.
எதிர்பார்த்த வேன் வரவும் எனது எனது கற்பனைச்
சிறகுகள் பறப்பதை நிறுத்தின.
வேன் உரிய இடத்தை அடைந்ததும் இறங்கினோம். மாப்பிள்ளை
முன்னதாக முன்பதிவு செய்திருந்த பெரிய வெள்ளை நிறக்காரை ஓட்டிவந்து நிறுத்தினார். பெட்டி
படுக்கைகளை எல்லாம் அதன் அடிவயிற்றில் போட்டுவிட்டு வசதியாக அமர்ந்து ஆபிரஹாம் லிங்க்கன்
நினைவகத்தை நோக்கி விரைந்தோம்.
அமெரிக்காவின் பதினாறாவது அதிபரும்,அடிமை விலங்கை
உடைத்தெறிந்தவருமான அந்த மாமனிதருக்கு ஒரு
மகத்தான, மலைப்பான, மதிப்பான நினைவாலயத்தை நகரின் மையப் பகுதியில் அமைத்துள்ளார்கள்.
1922 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. நாற்பது முறை தோல்விகண்டு விடாமுயற்சியால் அடுத்தடுத்து
வாழ்வில் வெற்றிகண்டவர் அவர் என்று படித்திருக்கிறேன். அதை உணர்த்துவதைப் போல ஏராளமான
படிகளில் ஏறி, உள்ளே சிம்மாசனத்தில் கன கம்பீரமாக அமர்ந்துள்ள லிங்க்கனை பார்க்கும்
வண்ணம் அமைத்துள்ளார்கள்.
Lincoln Memorial
நிறவெறியை ஒழித்துக்கட்டிய ஒப்பற்ற மனிதரை தரிசனம்
செய்த நிறைவோடு, போர் நினைவகத்திற்குச் சென்றோம். டெல்லியில் உள்ள இண்டியா கேட்டைபோன்றது
இது. பல்வேறு போர்களில் இன்னுயிர் ஈந்த வீரர்களை நினைவு கூரும் வகையில் பத்து ஏக்கர்
பரப்பளவில் மனதுக்கு இதம்தரும் மரச் சூழலில் அமைந்துள்ளது. முகம் தெரியாத அவர்களுக்கு
மானசீகமாக அஞ்சலி செலுத்திவிட்டு, வெள்ளை மாளிகையை நோக்கி நடந்தோம். நடக்கப் பயந்தவர்கள்
இந்த ஊருக்கு வரக்கூடாது. நம்மூர் மாதிரி காரில் சென்று அங்கங்கே இறங்கி ஏற முடியாது.
One of the War Memorial statues
வெள்ளை மாளிகையைச் சுற்றி போலீஸ் கெடுபடி மிக
அதிகம். கண் கொத்திப் பாம்பாக பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தார்கள். ஜூம் போட்டு
சில போட்டோக்களை எடுத்துக்கொண்டு நல்லபிள்ளைகளாக அந்த இடத்தைவிட்டு அகன்றோம். மணி மாலை
8.30. இன்னும் இரவு முழுமையாக எட்டிப்பார்க்கவில்லை. கோடைக் காலத்தில் இங்கு இப்படிதானாம்.
by the side of White House
அடுத்து, அருகில் உள்ள Washington Monument
என்னும் 555 அடி உயரமுள்ள கற்கோபுரத்தைப் பார்த்தோம்.
அமெரிக்காவின் முதலாவது அதிபர் ஜியார்ஜ் வாஷிங்க்டன் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்
பெற்றது.
Washington Monument
வழியில்
இரவு உணவுக்காக ஒரு பெரிய மாலுக்குள் நுழைந்தோம். சூடான விதவிதமான உணவு பதார்த்தங்களை
கண்ணாடிப் பேழையில் அழகுற வைத்திருந்தார்கள். ஒரு பிளாஸ்டிக் தட்டை எடுத்து , விரும்பியதை
வேண்டும் அளவில் எடுத்துப்போட்டு, நாமே எடைபோட்டு, உரிய தொகைக்கு கிரடிட் கார்டை உரசிவிட்டு,
சாப்பிட வேண்டும். உண்பவை எல்லாம் இயற்கை வேளாண்முறையில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆதலால்
விலை அதிகம்.
இரவு 11.30 அளவில் ஒரு ஹோட்டலை அடைந்து முன்னரே
பதிவு செய்யப்பட்டிருந்த பத்தாவது மாடி அறையில் தங்கினோம். அது அறை இல்லை., வீடு. சமையலறை,
வரவேற்பறை, படுக்கை அறை என விசாலமாக இருந்தது.
புதிய இடமாவது ஒன்றாவது., நன்றாக உறங்கி காலையில்
நானும் கதிரவனும் ஒன்றாகவே எழுந்தோம்.
Dr A Govindaraju from Washington D.C, USA
வாஸிங்டன் பற்றிய விபரங்களை நன்றாகத் தெரிவித்துள்ளீர்கள்.
ReplyDeleteவாஸிங்டன் பற்றிய விபரங்களை நன்றாகத் தெரிவித்துள்ளீர்கள்.
ReplyDelete