உழைப்பால் உயர்ந்தவர்கள் அமெரிக்கர்கள் என்பதைப்
பல சமயங்களில் நான் கண்கூடாகப் பார்த்தேன். ஆண் பெண் வேறுபாடு இன்றி அனைவரும்
அர்ப்பணிப்பு உணர்வோடு உழைக்கிறார்கள்.
ஒரு நாள் காலை நடைப்பயிற்சியின்போது கண்ட
காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. வயதான முதியவர் அவர்., குறைந்தது எண்பது வயது
இருக்கலாம்.,
பளிச்சென்று பேண்ட்டும் டீ ஷர்ட்டும் அணிந்து கம்பீரமாகக்
காட்சியளித்தார். ஒரு மார்பளவு உயரமுள்ள இயந்திரத்தை முன்னும் பின்னும் நகர்த்திக்
கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு முன்னால் நின்ற ஒரு பட்டுப்போன மரம் தரை மட்டத்திற்குமேல்
மூன்று இஞ்ச் விட்டு அறுத்து அப்புறப் படுத்தியிருந்தார்கள். அந்த அடி மரத்தை
இயந்திரத்தின் உதவியால் தேய்த்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது குனிந்து ஒரு லீவரை
மேலும் கீழும் நகர்த்த, இயந்திரத்தின் வேகம் கூடியும் குறைந்தும் வெவ்வேறு விதமான
ஒலியை எழுப்பியது. அதை மெல்ல நகர்த்திவிட்டு, குனிந்து மரத்துகள்களை
அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் இயக்கினார். அவருடைய நெற்றியில் வேர்வை
வழிந்தோடியது.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டே அருகில் நான்
செல்லவும், அவர் நிமிர்ந்து ஹாய் சொல்லவும் சரியாக இருந்தது. “டோன்ட் யூ ஃபீல்
டயர்ட்” என்று கேட்டேன். “நாட் அட்டால், ராதர் ஐ எஞ்சாய்” என்று சொன்னதோடு
குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி விடை பெற்று நடையைக்
கட்டினேன்.
அடுத்தத் தெருவில்
திரும்பி நடந்தபோது இன்னொரு பெரியவர்- வயது தொண்ணூறு இருக்கும். தன் இல்லத்தின்
முன்னுள்ள புல்தரையை ஒரு சிறு இயந்திரத்தின் உதவியால் சமன் செய்துக்
கொண்டிருந்தார். சாலையைக் கடந்து செல்ல வேண்டியிருந்ததால் தூரத்திலிருந்தே ஒரு
படம் எடுத்தேன். அவரும் மகிழ்ச்சியோடு கையசைத்தார். உழைப்புக்கு மரியாதை
கொடுக்கும் அவருக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு நடந்தேன்.
இன்று காலையில் நடைப் பயிற்சியின் போதும் உழைப்பாளர்களைக்
கண்டேன். ஊரே உறங்கிக் கொண்டிருந்த காலை நேரத்தில் இவர்கள் கருமமே கண்ணாக
உழைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருவர் சாலையோரம்
உள்ள அழகுச் செடிகளை ஒரு இயந்திரத்தைக்கொண்டு அழகுற வெட்டிக்கொண்டிருந்தார்.
அவருடைய ஆர்வம் என்னையும் தொற்றிக் கொள்ள, என் வேண்டுகோளை ஏற்று, அந்த இயந்திரத்தை
என்னிடம் கொடுத்து இயக்கவும் சொல்லிக்கொடுத்தார். அவருக்கு நன்றி சொல்லி, ஒரு
படமும் எடுத்துக்கொண்டு நடையைத் தொடர்ந்தேன்.
அரை மணி நேரம் நடந்திருப்பேன். தனி ஒருவராக
சாலை ஓரத்தில் பழுதடைந்திருந்த குடிநீர்க் குழாயைச் சரி செய்து கொண்டிருந்தார்.
கால் மணி நேரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் தன் வேலையில் கண்ணும்
கருத்துமாக இருந்தார்., என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. காத்திருந்து, அவர்
வேலையை முடித்து எழுந்தபோது ஹாய் சொன்னேன். குழாய் உடைந்து குடிநீர் ஏதும்
வழியவில்லை. ஒரு சிறு ஹேர்லைன் க்ரேக் இருந்ததை சென்சார் காட்டியதாம்., உடனே
சரிசெய்ய வந்துவிட்டாராம். இங்கே எல்லாவற்றுக்கும் சென்சார்தான். அது பற்றியும்
ஒரு தனிக்கட்டுரை எழுதலாம். அவரையும் ஒரு க்ளிக் செய்துகொண்டு, கைகுலுக்கியபோது
செல்போன் ஒலித்தது. தொடர்ந்து சாமான் சட்டுமுட்டுகளை அடுக்கி எடுத்துக்கொண்டு அவருடைய ஜீப்பை நோக்கி நடந்தாரே தவிர செல்போனை எடுத்து நேரத்தை வீணடிக்கவில்லை.
அலைப்பேசியை அடக்கு என்று நான் எழுதிய இளைஞர் ஆத்திசூடி நினைவில் வந்தது.
அலைப்பேசியை அடக்கு என்று நான் எழுதிய இளைஞர் ஆத்திசூடி நினைவில் வந்தது.
Dr.A.Govindaraju from Dallas, USA
உண்மை, உழைப்பு, உயர்வு. இன்றைய இளைஞர்களுக்கு நேற்றைய மனிதர்கள் உதாரணம். அவர்களைப் பார்த்து அதிகாலைத் துயிலெழுந்து உழைக்கட்டும் இன்றைய இளைஞர்கள்.
ReplyDeleteஉண்மை, உழைப்பு, உயர்வு. இன்றைய இளைஞர்களுக்கு நேற்றைய மனிதர்கள் உதாரணம். அவர்களைப் பார்த்து அதிகாலைத் துயிலெழுந்து உழைக்கட்டும் இன்றைய இளைஞர்கள்.
ReplyDelete