Sunday, 28 June 2015

விண்ணை முட்டும் கட்டடங்கள்

    நியுஜெர்சி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட  அடுத்த ஒரு மணி நேரத்தில் நியுயார்க் மன்ஹட்டன் பகுதியில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் காருக்கு ஓய்வு கொடுத்தார் என் மாப்பிள்ளை சிவகணேஷ். வெளியில் வந்து ஒரு கட்டடத்தை அண்ணாந்து பார்த்தேன்., என் தலை மேலிருந்த தொப்பி கீழே விழுந்தது.


   அதுதான் Empire State Building என்றார்கள். முன்னரே இணையம் மூலம் நுழைவுச் சீட்டு பெற்றதால் நீண்ட வரிசையில் நிற்காமல் நேரே நுழைவு வாயிலை அடைந்தோம். ஒருவருக்கு 57 டாலர்(ரூ 3600) கட்டணம். ஆனால் எனக்கு மட்டும் 42 டாலர்தான், மூத்த இளைஞர் என்பதால். அங்கும் பன்னாட்டுச் சுற்றுலா பயணியர் வரிசையில் நகர்ந்தனர்.

    1929 இல் தொடங்கி 1931 இல் கட்டி முடிக்கப்பட்ட இக் கட்டடத்தை இதுவரை 110 கோடி பேர் பார்த்துள்ளனர். 1250 அடி(331மீ) உயரமுடைய இந்தக் கட்டடத்தில் 102 தளங்கள் உள்ளன.   73 மின் தூக்கிகள் ஓய்ச்சல் ஒழிவின்றி இயங்குகின்றன.

   சில ஆண்டுகளுக்கு முன்னால் 86 ஆவது மாடியில் ஒருவர் ஏழு பேரை சுட்டுக் கொன்ற காரணத்தால், விமான நிலையத்தில் இருப்பது போன்ற பாதுகாப்புக் கெடுபிடிகள் இருந்தன. செல்போன், பெல்ட், ஷூ, கடிகாரம், தொப்பி என அனைத்தையும் ஸ்கேன் செய்து ஓகே சொன்னார்கள்.

Empire State Building
     எங்களுக்கு ஒதுக்கப்பட்ட மின்ததூக்கி இறங்கி வரும்வரை காத்திருந்தோம். 1983க்கு முன்னால் உலகிலேயே சென்னையிலுள்ள 14 மாடி எல்.ஐ.சி கட்டடம்தான் உயர்ந்தது என எண்ணியிருந்தேன். 1983 இல் புது தில்லி சென்று 20 மாடி ஹோட்டலில் தங்க நேர்ந்தபோது அதுதான் உயரமான கட்டடம் என எண்ணினேன். பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்றதாம்.

  இன்றைய தேதியில் துபாயில் உள்ள 828 மீட்டர் உயரமுள்ள Burj Khalifa என்னும் கட்ட்டம் தான் உலகிலேயே உயர்ந்த கட்டடமாகும். இதை ஓரங்கட்டும் வகையில் அரபு நாட்டின் ஜெட்டா நகரில் ஒரு கிலோ மீட்டர் உயரமுள்ள கிங்டம் டவர் உருவாகி வருகிறதாம்!

 உலகில் உயரமாக உள்ள முதல் நூறு கட்டடங்களில் இந்த ESB  கட்டடம் 28 ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்க நாட்டில் நான்காவது இடத்தில் உள்ளது. இவற்றில் ஒன்றுகூட இந்தியாவில் இல்லையே என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், மும்பை நகரில் 700 மீட்டர் உயரமுள்ள இண்டியா டவர் என்னும் கட்டடத்தின் பணிகள்  அடுத்த ஆண்டு நிறைவடையும் என்பது உவகை தருவதாயும் உள்ளது.

    இப்படி எதை எதையோ நினைத்துக் கொண்டிருக்கும்போதே மின்தூக்கி இறங்கிவந்து இரு கைகள் போன்ற கதவுகள் விரிந்து வாருங்கள் என வரவேற்றது. எட்டு பேர்களை ஏந்திக்கொண்டு விரைந்தது. எப்படியும் இருபது நிமிடம் ஆகும் என நினைத்தேன். ஆனால் ஒன்றரை நிமிடத்தில் உச்சியை அடைந்தோம்.

    அங்கிருந்து 360 டிகிரியில் நியுயார்க்கை பார்க்கலாம். குனிந்து பார்த்தால் பக்கம் பக்கமாக வெவ்வேறு உயரங்களில் தீப்பெட்டிகளை அடிக்கி வைத்த மாதிரி கட்டடங்கள் தெரிந்தன. பெரிய ஏரிகள் குட்டைகள் போலவும், ஆறுகள் ஓடைகளைப் போலவும் தெரிந்தன.

     ஒரு கட்டடம் மட்டும் இதைவிடவும் உயரமானதாக இருந்தது. 541 மீட்டர் உயரமுடைய ONE WORLD TRADE CENTER என அருகிலிருந்தவர் கூறினார்.

  
A bird's eye view

atop ESB

in the background of Hudson River

கைக்கடிகாரம் 8.30 மணி எனக் காட்டியது. சூரியன் மறையும் காட்சிகளை என் காமிராவில் ஏற்றிக்கொண்டு கீழ்த் தளத்திற்கு விரைந்தோம்.

   அங்கிருந்து டைம் ஸ்கொயர் என்னும் இடத்திற்கு விரைந்தோம். அது இரவு நேர தேவ லோகம் போல இருந்தது. ஆயிரக்கணக்கானோர் வண்ண வண்ண உடைகளில் நின்று ஆரவாரம் செய்தனர்.

   
we too on the big screen

Ever busy Time Square
எதிரில் இருந்த பெரிய திரையில் அங்கு நின்றவர்களை அவ்வப்போது போட்டோ எடுத்துத் திரையில் காட்டியது அட்டகாசமாய் இருந்தது. தேவலோக ஊர்வசிகளையும் மேனகைகளையும் காமிராவில் மட்டும் ஏற்றிக்கொண்டு, அங்கேயே இரவு உணவை முடித்துக்கொண்டு இல்லம் திரும்பிய போது மணி 11.30.

  மீண்டும் இரண்டு மணியளவில் அதே 102 மாடி கட்டடத்தின் உச்சியில் நான் மட்டும் காமிராவும் கையுமாக நின்றேன்.


ஆம். கனவில்.

8 comments:

  1. அருமையான பயண நிகழ்வுகள் ஐயா

    ReplyDelete
  2. எம்பயர் கட்டடத்தின் பிரமாண்டத்தை அழகுறப் பிறநாட்டுக் கட்டடக் கலையுடன் ஒப்பிட்ட பாங்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  3. எம்பயர் கட்டடத்தின் பிரமாண்டத்தை அழகுறப் பிறநாட்டுக் கட்டடக் கலையுடன் ஒப்பிட்ட பாங்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  4. என்ன ஐயா இப்படி முடித்து விட்டீர்கள்...!

    இன்று முதல் உங்கள் தளத்தை reader-ல் இணைத்து விட்டேன்... தொடர்கிறேன் ஐயா...

    ReplyDelete
  5. கோடை மழையாய் வந்தது உங்கள் பின்னூட்டம்
    நன்றி

    ReplyDelete
  6. What an excellent finishing touch!

    ReplyDelete