Thursday, 25 June 2015

எப்படி நம் நாடு உருப்படும்?

     ஒரு வித்தியாசமான வழக்கம் என்னிடத்தில் உண்டு. இரவில் எத்தனை மணிக்குப் படுத்தாலும் காலை ஆறு மணிக்கு முன்னர் எழுந்து விடுவது என்பதுதான் அது. நாடு விட்டு நாடு வந்தும் இவ் வழக்கம் மாறவில்லை. அமெரிக்காவில் இது கோடை காலத்தின் தொடக்கம்.
காலை நான்கு மணிக்கே பொழுது விடிகிறது. மாலையில் ஒன்பது மணிக்குதான் பொழுது சாய்கிறது. இரவில்தான் இரவு உணவு உண்பது என்பதெல்லாம் இங்கு இல்லை. மாலை ஐந்து அல்லது ஆறு மணிக்கு இரவு உணவை முடித்துக் கொள்கிறார்கள்.

     நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் அங்கு தங்கும் விருந்தினருக்கு விலையில்லா காலை உணவை அளிப்பார்கள். முதல் ஆளாக பந்திக்கு முந்திக் கொண்டேன். அனைவரும் தயாராகி ஒன்பது மணிக்கெல்லாம் வண்டியைக் கிளப்பிவிட்டோம்.

     முதலில் உலகப் புகழ்பெற்ற America State Capitol  என்னும் கட்டடத்தைப் பார்த்தோம். இப் பழமையான கட்டடத்திற்கு மூலைக்கல்(Corner Stone) நாட்டியவர் அமெரிக்காவின் முதலாம் அதிபரான ஜியார்ஜ் வாஷிங்டன். இது நிகழ்ந்தது 1793 ஆம் ஆண்டு. இப்பொழுது அக் கட்டடத்தின் மேல் அமைந்துள்ள அரைக்கோள வடிவ அமைப்பைப் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. பிரமிப்பூட்டும் இந்த கட்டடத்தைப் பார்க்க பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
state capitol

under renovation


   அடுத்து, அமெரிக்க தேசிய நூலகத்திற்குச் சென்றோம். Library of Congress என்று அழைக்கப் படுகிறது. நான்கு தளங்களக் கொண்ட பழங்காலக் கட்டடமாகும். இன்றைய தேதியில் இது உலகின் மிகபெரிய நூலகமாகும். 23,892,068 நூல்கள் உள்ளன. இவற்றுள் 5711 நூல்கள் கி.பி 1500க்கு முந்தைய நூல்களாகும்.

 guide explains


       3224 ஊழியர்கள் பணியாற்றுகிறர்கள். குழு குழுவாக அழைத்துச் சென்று காட்டுவதோடு நன்கு விளக்கிச் சொல்கிறார்கள். உலகில் உள்ள  எல்லா பழமையான நூல்களும் அங்கு பதுகாக்கப்படுவதாகச்  சொன்னார்கள். எங்கள் காந்தி பற்றிய நூல் இருக்கிறதா என்று என் மனைவி கேட்க, இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார் அந்த வழிகாட்டி.

                        இங்குள்ள நூல்களை வெளியில் எடுத்துச் செல்லமுடியாது. வந்து பார்த்து, படித்து, குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம்.  இந் நூலகம் ஓர் சிறந்த அருங்காட்சியமாகவும் திகழ்கிறது.

     அடுத்ததாக, தேசிய தாவரவியல் பூங்காவிற்குள் நுழைந்தோம். எல்லா செடி, கொடி, மரங்களும் வளமாக, நலமாக இருந்தன. உலகில் உள்ள முக்கியத் தாவரங்கள் அனைத்தையும் போற்றிப் பாதுகாக்கிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால் உலகில் உள்ள தாவர இனங்கள் அழிந்தாலும் மீண்டும் இங்கிருந்து பெருக்கிக் கொள்ளும் நோக்கில் பாதுகாக்கிறார்கள். இவற்றுள் நம்மூர் வாழை, தென்னை, மா, முருங்கை மற்றும் பல மூலிகைச் செடிகளும் அடங்கும். மரங்களின் மேல்பகுதியை பறவைகள்தாம் பார்க்கும். ஆனால் இங்கே நாம் பார்க்கும் வகையில் நாற்பது அடி உயரத்தில் Canopy Walk என்னும் படிகளுடன் கூடிய நடைமேடையை அமைத்திருக்கிறார்கள். இயலாதவர்கள் மின்தூக்கி மூலமாகவும் மேலே சென்று பார்க்கலாம். அழிந்த, அழியும் நிலையில் உள்ள தாவரங்களையும் தனிக்கூடத்தில் வைத்துள்ளார்கள். மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் தாவர உணர்வை ஏற்படுத்தும் வகையில் இங்கே பயிற்சி வகுப்புகளை நடத்துவது குறிப்பிடத் தக்கதாகும். அதனால்தான் இந்நாட்டு மக்கள் தாவரங்களை வளர்ப்பதில் பேரார்வம் காட்டுகிறார்கள்.

a little girl watches our banana

canopy of mango tree

nurturing the young ones


    வீடுகள், சாலைகள் அனைத்தும் மரங்களுக்கும் புல்வெளிகளுக்கும் இடையேதான் அமைந்துள்ளன. வாஷிங்டனிலிருந்து 600 கி.மீ தூரமுள்ள நியுயார்க் நகருக்கு  காரில் பயணித்தோம். அப்போது இரு புறமும் அடர்ந்த மரங்கள் இல்லாத சாலைகளை எங்கும் காணமுடியவில்லை. எல்லாமே பச்சை மலைகள். குளங்களையும் ஆறுகளையும் தூய்மையாகப் பராமரிக்கிறார்கள். இதற்குக் காரணம் அரசு மட்டுமல்ல., ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்புந்தான்.

    உறவினர் ஒருவரை என் மகள் விருந்துக்கு அழைத்திருந்தாள். அவர் வரும்போது அன்போடு வாங்கிவந்தது ஒரு ரோஜா செடி! வியந்து போனேன். இனி நாமும் இவ்வாறு செய்யலாமே.

     கரூரில் எங்கள் வீட்டின் முன்புறம் தெரு ஓரத்தில் இரண்டு வேப்ப மரக்கன்றுகளை நட்டேன். மறு நாள் விடிந்ததும் பார்த்தால் காணவில்லை. எதிரில் இருந்த நிலத்தின் உரிமையாளர் அவற்றைப் பிடுங்கி வீசிவிட்டார். அவர் நிலத்தில் நிழல் விழும் விளைச்சல் பாதிக்கும் என ஒரு சப்பைக் காரணத்தைச் சொன்னார்.
எப்படி நம் நாடு உருப்படும்?

DR A GOVINDARAJU
from Washington D.C USA
   

       

2 comments:

  1. நூல்கள் அறிவின் விருட்சம், மனிதனின் சுவாச உறுப்புகள் அதைப் பேண வேண்டும். அமெரிக்கா சென்றாலும் எதிரில் உள்ள நில உரிமையாளர் தங்கள் நினவில் உள்ளார். தவறு செய்தவரைத் தண்டிக்கவில்லை, இவரைப் போன்றவர்களால் நாடென்ன வீடும் உருப்படாது. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. நூல்கள் அறிவின் விருட்சம், மனிதனின் சுவாச உறுப்புகள் அதைப் பேண வேண்டும். அமெரிக்கா சென்றாலும் எதிரில் உள்ள நில உரிமையாளர் தங்கள் நினவில் உள்ளார். தவறு செய்தவரைத் தண்டிக்கவில்லை, இவரைப் போன்றவர்களால் நாடென்ன வீடும் உருப்படாது. வாழ்க வளமுடன்.

    ReplyDelete