Friday, 26 June 2015

கண்ணைக் கவரும் கடற்கரைகள்

    ஒரு வழியாக வாஷிங்டன் நகரிடம் விடை பெற்றுக்கொண்டு நியுயார்க் நகருக்கு இரவு பத்து மணி அளவில் வந்து சேர்ந்தோம்.
வழக்கமாக காரில் பயணித்தால் நன்றாக தூங்கிவிடுவேன். ஆனால் இந்தப் பயணத்தில் அப்படியில்லை  ஆறு மணிநேர பயணத்தில் அரை மணி நேரம் கண் அசந்திருக்கலாம்.
  
    ஒரு தேர்ந்த விமான ஓட்டியைப் போல காரை ஓட்டினார் என் மருமகன் சிவகணேஷ். மணிக்கு 120 கி.மீ. என்பதெல்லாம் இங்கு சாதாரண வேகம். வாடகைக்கு எடுத்த கார் என்றாலும் நல்ல பராமரிப்பில் இருந்ததால்  இது சாத்தியமாயிற்று.

     வழி நெடுகிலும் கணக்கற்ற ஆறுகளும், பாலங்களும் குறுக்கிட்டன. ஒரே சமயத்தில் பக்கம் பக்கமாக எட்டு பெரிய வாகனங்கள் செல்லும் வகையில் அகன்ற சாலைகள்  விமான ஓடு தளங்கள் போல அமைந்துள்ளன. சாலையின் இரு மருங்கிலும் வித விதமான மரங்கள் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன.
greenish highway

  பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா- உன்றன்
  பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

என்னும் பாரதியின் பாடல் வரிகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தேன்.

    நியுயார்க் ஓல்ட் ஜெரிக்கோ பகுதியில் என் சகலை மகள்  பொறியாளர் ஆனந்தி இல்லத்தில் விருந்தினர்களாக தங்கினோம். அவளுடைய கணவர் பூவேந்திரன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவர்., மூத்த மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றுகிறார். Made for each other  என்று சொல்வார்களே- அப்படிப்பட்ட இணையர். அவர்களுக்கு தியா, ரோகன் என்னும் இரு குட்டிச் செல்லங்கள்., கட்டி வெல்லங்கள்.

playful Rohan
   ஒரு நாள் மாலை மயங்கும் நேரத்தில் உலகப் புகழ் பெற்ற ஜோன்ஸ் கடற்கரைக்கு எங்களை அழைத்துச் சென்றனர்.  அட்லான்டிக் மகாசமுத்திரத்தின் கடற்கரையாகும். பத்து கிலோ மீட்டர் நீளம் உள்ளது. வருடத்தில் எண்பது இலட்சம் சுற்றுலாப் பயணியர் வந்து  பார்த்து மகிழும் இடமாகும். உலகிலேயே மிகத் தூய்மையான கடற்கரை என்னும் பெருமை உடையது. இங்கு அமைந்துள்ள மிகப்பெரிய திறந்தவெளி கலையரங்கத்தில் வார இறுதிகளில் பயனுள்ள நிகழ்ச்சிகள் நடைபெறும். 200 அடி உயரமுள்ள 12,60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரமாண்டமான தண்ணீர் கோபுரம்(Jones Beach Water Tower) அழகாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது.
water tower


beautiful seagulls

happy moment

together we stand


   
with naughty kids
நுரை பொங்கும் கடல் அலைகள் நம் கால்களைத் தழுவும்படி நிற்பது மகிழ்ச்சியான அனுபவமே ஆகும். கடற்காகங்கள்(seagull) அருகில் பறந்து வந்து அழகு சேர்க்கின்றன. இவற்றைப் பார்த்ததும் எப்போதோ நான் படித்த,
Richard David Bach என்னும் அமெரிக்க நாவலாசிரியர் எழுதிய   Jonathan Livingstone Seagull என்னும் நாவல் எனது நினைவில் நிழலாடியது. ஒரு சந்திப்பில் வெ.இறையன்பு அவர்கள் இந்நாவல் குறித்து என்னிடம் பேசினார். முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனும் இளம்பெண்ணும் இந்த நாவலைப் படிக்க வேண்டும்.சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக கடற்கரைப் படையினர் (Jones Beach Lifeguard Corps)மணலிலும் விரைந்து செல்லும் விசேட வாகனங்களில் கண்காணித்த வண்ணம் உள்ளனர்.

   மறு நாள் பேவில்(Bay ville) கடற்கரைக்குச் சென்றோம். அது மிகச் சிறிய வண்ண வண்ண கிளிஞ்சல்களும் சிறிய கூழாங்கற்களும் நிரம்பிய கடற்கரையாகும். அங்கு யாரோ ஒரு புண்ணியவான் தன் மறைந்த குழந்தையின் நினைவாக குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்காவை அழகுற அமைத்துள்ளார்.

      அலைகளின் ஆரவாரம் இல்லாத கடற்கரை என்பதால் குழந்தைகள் கடல் நீரில் குதியாட்டம் போடுகின்றனர். சிறுவர்கள் ஒரு சிறிய பிளாஸ்டிக் மிதவையின் மீது நின்றும் விழுந்தும் எழுந்தும் விளையாடுகிறார்கள்.
குதியாட்டம் போடும் குழந்தைகள்

எப்படி இந்த தெப்பம்?

பெயர் சொன்னால் போதும்
தரம் எளிதில் விளங்கும்


  
இந்  தியா
ஆடவரும் பெண்டிரும் மேலாடை எதுவுமின்றி (நல்லவேளையாக உள்ளாடை அணிந்திருந்தனர்) சாய்வு இருக்கைகளில் சாய்ந்து வெயில்காய்ந்து கொண்டிருந்தார்கள். இது ஒன்றுதான் எனக்குப் பிடிக்காத விஷயமாக இருந்தது. சரி சரி அது அவர்கள் கலாச்சாரம்.

    கடற்கரையின்  அருகிலும் அருகாமையிலும் வளமனைகளில் வாழ்வோர் தம் சொந்தப் படகுகளைக் காரின் பின்புறம் கட்டி இழுத்துவந்து கடலில் செலுத்தி மகிழ்கின்றனர்.

    கடற்காற்று மனத்துக்கும் உடலுக்கும் இதமாக வீசியது. திருவல்லிக்கேணியில் வாழ்ந்த பாரதி மெரினா கடற்கரயில் உலாவியபடி பாடிய வசன கவிதையை அந்த அழகான கடற்கரையில் நின்று நினைத்துப் பார்த்தேன்.

   காற்றே வா
   நீரலைகள் மீது உராய்ந்து வா
   எமது உயிர் நெருப்பை
   நீடித்து நின்று நல்லொளி தருமாறு
   நன்றாக வீசு

இவை நினைத்தாலே இனிக்கும் கவிதை வரிகள்.

    கடல்நீர் கால்களை நனைக்க, மனம் பாரதியை நினைக்க
அப்பப்பா! என்ன சுகம்! என்ன சுகம்!

Dr A Govindaraju  from New York, USA


4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கடல் தாண்டியும் பாரதியின் கனவுகள்கள் தங்கள் மனதில் நினைவலைகளாக மலர்வது மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. கடல் தாண்டியும் பாரதியின் கனவுகள் தங்கள் மனதில் நினைவலைகளாக மலர்வது மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. கடல் தாண்டியும் பாரதியின் கனவுகள் தங்கள் மனதில் நினைவலைகளாக மலர்வது மகிழ்ச்சி.

    ReplyDelete