Tuesday 31 August 2021

அமெரிக்கக் குகையில் அலிபாபாவாக நான்

    கி.பி.2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் நாள் மாலை 2.59 மணி.  இடம் Natural Bridge Caverns, டெக்சாஸ் மாநிலம், அமெரிக்கா.

  வழிகாட்டி ஒருவர் வழிகாட்ட நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம். மலைப்பாம்பு போல வளைந்து சென்ற பாதையில் கொஞ்ச தூரம் நடந்தபின் அகலத் திறந்திருந்த பெரிய குகையின் வாயினுள் நுழைந்தோம். வந்த வழிகாட்டி தான் வைத்திருந்த ஒலிபெருக்கி மூலம், குழுமி நின்ற பார்வையாளர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பதை ஆங்கிலத்தில் குழறினார். அவற்றை இளைய மகள் எங்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்னாள்.

   “180 அடிக்குக் கீழே உங்களை அழைத்துச் செல்கின்றேன். வெளிச்சம் குறைவாக இருக்கும் கூர்ந்து பார்க்க வேண்டும். சில இடங்களில் மேலே தண்ணீர் சொட்டுப் போடும். ஃபோட்டோ எடுக்கலாம் ஆனால் ஃபிளாஷ் அடிக்கக் கூடாது. குகை வாழ் உயிரிகளின் கண்கள் கூசுமல்லவா?” – இதுதான் அவர் சொன்னதன் சாறு என்று சொன்னாள்.

    “ஒரு காட்டுல ஒரு கொகை இருந்திச்சி. அதுல ஒரு கிழட்டுச் சிங்கம் தூங்கிக்கிட்டு இருந்திச்சி. அப்ப ஒரு எலி அங்க போச்சி...” என நான் சிறுபிள்ளையாக இருந்தபோது அம்மா சொன்ன கதையை என் மூளைக்கணினி நினைவுத் திரையில் காட்ட, அமெரிக்கக் குகைகளில் சிங்கம் இருக்காது என எனது ஆறாம் அறிவு அதே திரையின் மேல் மூலையில் ஒரு பெட்டிச் செய்தியைப் போடச் சத்தமில்லாமல் வழிகாட்டியின் பின்னால் நடந்தேன்.

 பன்னெடுங்காலத்துக்கு முன் நிகழ்ந்த நில நடுக்கத்தில் இயற்கை தானே அமைத்துக்கொண்ட ஒரு குகை இது.  U என்னும் ஆங்கில எழுத்தை விரித்தும் நெளித்தும் பிடித்தது போன்ற வடிவம் கொண்ட இந்தக் குகையின் அதிகப்படியான. ஆழம் 180 அடி. குகையின் வாயினுள் நுழைந்து அதன் வால் வழியே வெளியில் வரும்வரை உள்ள தூரம் 1.5 கிலோ மீட்டர்.

     1950களில் கூட இந்தக் குகை பற்றிய விவரம் யாருக்கும் தெரியாது. 1963ஆம் ஆண்டு சேன் ஆண்டோனியோ நகரில் உள்ள செயிண்ட் மேரீஸ் பல்கலைக்கழகத்தில் படித்த நான்கு மாணவர்கள்தாம் முதல் முதலில் இந்தக் குகையில் நுழைந்து கண்டறியாதன கண்டு அவற்றை வெளியில் சொன்னார்களாம். அதுவரை அந்தச் செய்தி குகை இருந்த நிலத்தின் உரிமையாளருக்கே தெரிந்திருக்கவில்லை. பிறகென்ன? எதையும் மாற்றி யோசித்துக் காசு பார்க்கத் தெரிந்த அந்த அமெரிக்கர் வீட்டுக் கூரையைப் பிய்த்துக்கொண்டு டாலர் மழை கொட்டுகிறது!

    நான் இந்த முறை கேமிரா, கைபேசி எதையும் உடன் எடுத்துச் செல்லவில்லை. மனத் திரையில் மட்டுமே படம் எடுத்தேன். நல்ல வேளையாக, என் இளைய மகள் தன் திறன்பேசி மூலம் சில படங்களை எடுத்துத் தந்தாள்.

   ஓர் இடத்தில் கண்ணில் பட்ட வாசகம் என் கருத்தைக் கவர்ந்தது. “படத்தை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்; வேறு எதையும் எடுத்துச் செல்லாதீர்.  உங்கள் கால் அடிச்சுவட்டை மட்டும் விட்டுச் செல்லுங்கள்; வேறு எதையும் விட்டுச் செல்லாதீர்” என்னும் பொருள்பட Take nothing but photos; Leave nothing but your footprints என எழுதி வைத்திருந்தார்கள்.

    குகையின் உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் ஈரேழு பதினான்கு உலகங்களில் ஒரு புதிய உலகத்தில் சஞ்சரிக்கும் உணர்வு ஏற்பட்டது. அண்ணாந்து மேலே பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் தலைமீது விழக்காத்திருக்கும் சிறிதும் பெரிதுமான சுண்ணாம்புக் கற்கள் தொங்கிக் கொண்டிருந்தன! ஆங்கிலத்தில் இவற்றை Flow stones என்று மிகச் சரியாகக் குறிப்பிடுகிறார்கள். அவற்றின் இடையே இருந்து ஊறிக் கொட்டிக்கொண்டிருந்த தோசை மாவு பதத்திலான சுண்ணாம்புக் குழம்பு அப்படியே உறைந்து போய் தொங்கும் தூண்களாக, கயிறுகளாக, பளபளவென காட்சியளிக்கின்றன! சில இடங்களில் பணக்காரர் வீட்டுக்கூடங்களில் தொங்கும் கொத்து விளக்குகளைப் போலத் தெரிகின்றன.

     ஓர் இடத்தில் அப்படிக் கொட்டிய சுண்ணாம்புக் குழம்பு குகையின் தரைப் பரப்பில் விழுந்து தெய்வச் சிலைகளைப் போல காட்சியளித்தன. ஒரு வேளை எனக்கு மட்டும்தான் அப்படித் தெரிகின்றனவோ என எண்ணியபோது ஒரு பதாகை இருந்ததைப் பார்த்தேன். அதில் Valley of Fallen Lords என எழுதி வைத்திருந்தார்கள்!

     மற்றோர் இடத்தில் பக்கவாட்டில் குனிந்து பார்த்தால் ஓர் அழகிய நீர்த் தடாகம்; அதில் வள்ளுவர் குறிப்பிடும்  மணிநீர் நிறைந்து இருந்தது. அதன் மேற்பரப்பில் விழும் சொட்டுநீர் காரணமாக மெல்ல வட்ட வடிவில் விரிந்து வளர்ந்த  நீர்க்கோலத்தின் அழகைக் கண்டு வியந்து நானும் இன்னொரு சுண்ணாம்புக் கல்லாய் உறைந்து நின்றேன்!

     கைப்பிடிகளுடன் கூடிய நடைபாதையை வழுக்காத வண்ணம் தாரும் குறுங்கப்பியும் கலந்து மிக நேர்த்தியாக உருவாக்கியுள்ளனர். பார்வையாளர் யாரும் இடையில் நின்றுவிடாதபடி கண்காணிக்கப் பின்னாலும் ஒரு வழிகாட்டி வருகிறார்.

      கிளைத்துச் சென்ற ஒரு வழி மூடப்பட்டிருந்தது. அங்கே கூட்டமாக வெளவால்கள் வசிக்குமாம். என் கண்களில் எந்த உயிரினமும் படவில்லையே என நினைத்தபோது என் மனைவி கைகாட்டிய இடத்தை நோக்கினேன்; கண்டேன் தவளையை!











     குகைப் பயணம் முடிந்ததும் வழிகாட்டியை அணுகிப் பாராட்டிப் பேசி நன்றி தெரிவித்தபோது, நான் அவரது காதில் போட்ட ஒரு செய்தியைக் கேட்டு வியப்பில் வாய் பிளந்தார். நான் சொன்ன செய்தி இதுதான்:

     “நாங்கள் இந்தியாவிலிருந்து வருகிறோம். எங்கள் நாட்டிலும் இது போன்ற அல்லது இதனினும் பெரிய அரிய குகை ஒன்று உள்ளது. ஆந்திராவில் விசாகப்பட்டினம் அருகே கிழக்குத் தொடர்ச்சி மலையில் குறிப்பாக அரக்குமலையில் போரா குகை என்னும் பெயரில் உள்ளது. கூகுள்சாமியிடம் விவரம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.”

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

 

11 comments:

  1. Crystal cave என அழைக்கின்றனர்.உங்கள் கட்டுரை யை படிக்கும்போது
    நேரில் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது
    இது போன்ற குகைகளை pensylvania மாகாணத்தில் கண்டோம்.

    ReplyDelete
  2. அந்தமானிலும் உள்ளது.லைம் ஸ்டோன் கேவ்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

    ReplyDelete
  3. Mr.D.Santhakumar through whatsapp
    இரவு வணக்கம் ஐயா. மிகவும் எளிமையாக இனிமையாக நகைச்சுவை ததும்பும் வார்த்தைகளால் விளையாடி இருக்கிறீர்கள். நானே நேரில் சென்று கண்ட உணர்வை ஏற்படுத்துகிறது.

    உதாரணம்: "அமெரிக்கக் குகைகளில் சிங்கம் இருக்காது என எனது ஆறாம் அறிவு அதே திரையின் மேல் மூலையில் ஒரு பெட்டிச் செய்தியைப் போடச் சத்தமில்லாமல் வழிகாட்டியின் பின்னால் நடந்தேன்".


    விசாகப்பட்டினத்தின் அருகில் உள்ள போரா குகைக்கு நான் இரண்டு முறை பயணித்திருக்கிறேன். அதுவும் இதே போன்ற சுண்ணாம்புக் கற்களால் ஆன குகை. மிகவும் சரியாகச் சொன்னீர்கள். சிறப்பு.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. சிறப்பான அணுபவப்பகிர்வு சார்.
    மேகாலயாவில் கூட இது மாதிரி ஒரு குகை பற்றி படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. Nice to read! I visited a cave like this in Uthrakand,but a small one,which has a few idols naturally formed,with some pilgrimage interest !

    ReplyDelete
  7. அருமை ஐயா
    நேரில் பார்த்த உணர்வு

    ReplyDelete
  8. உங்களுடன் வந்த உணர்வு ஏற்பட்டது. நம்மூர்ப் பெருமையினைப் பகிரும்போது கிடைக்கும் மகிழ்ச்சி தனிதான்.

    ReplyDelete