Tuesday, 31 December 2019

இனிய திருப்பாவையும் எளிய உரையும் பாடல் 6-10


ஆறாம் பாடல்
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
    
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
    
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
    
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
    
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.

   அருமைப் பெண்ணே! இன்னுமா நீ உறங்குகிறாய்? இது பறவைகள் கீச் கீச் என ஒலி எழுப்பும் விடியற்காலை நேரம். கருடனுக்குத் தலைவனான திருமாலின் கோவிலில் வருக வருக என அழைப்பதுபோல் வெண்சங்கை ஊதுகிறார்களே- அந்தப் பேரொலி உன் செவிகளில் விழவில்லையா?

Thursday, 26 December 2019

இனிய திருப்பாவையும் எளிய உரையும்: பாடல் 1-5


   எங்கள் இல்லத்தில் மார்கழி மாதம் முழுவதும் கொண்டாட்டம்தான். காலை நான்கு மணிக்கு எழுந்து நீராடி திருப்பாவை வழிபாட்டுக்கு ஆயத்தமாவோம்.

Thursday, 19 December 2019

அந்தோ மறைந்தார் அழகப்ப இராம்மோகன்


  காரைக்குடிக்கு அருகில் உள்ள கானாடுகாத்தான் என்னும் சிற்றூரில் 1939 ஆம் ஆண்டு பிறந்தவர் அழகப்ப இராம்மோகன். இயற்பியல் வல்லுநரான இவர் அமெரிக்கா சென்று பல பொறுப்புகளில் பணியாற்றினார். பணிநிறைவுக்குப் பின் தொடந்து அமெரிக்காவில் வசித்த இவர், இலினாய்ஸ் மாநிலத்தில் போலிங்ப்ரூக் என்னும் ஊரில் அமைந்துள்ள தன் வளமனையில் கடந்த 12.12.19 அன்று தன் எண்பதாம் வயதில் இயற்கை எய்தினார்.

Saturday, 23 November 2019

நாற்றுகள் சீரழிந்தால் நாடு உருப்படுமா?


    இன்று காலை நாளிதழைப் புரட்டியபோது என் கண்ணில் பட்ட ஒரு செய்தியால் என் மனம் பட்டப் பாடு எனக்குதான் தெரியும். மதிப்பெண் தொழிற்சாலைகளாக பள்ளிகள் மாறிவரும் இன்றைய சூழலில் மன அழுத்தம் காரணமாகப்  பள்ளி மாணவர்கள் போதைப் பொருள், புகைத்தல் என்னும் புதைகுழிகளில் விழுகின்றார்கள்; பாலியல் நெறி பிறழ்வுகளில் ஈடுபடுவோர்  பலராக உள்ளனர்.

Tuesday, 5 November 2019

கானுயிர் காக்கும் கால்நடை மருத்துவர்


 ஜெயமோகன் எழுதியுள்ள ‘யானை டாக்டர் என்னும் புகழ்பெற்ற சிறுகதையைப் பல ஆண்டுகளுக்கு முன் படித்தேன். அது கற்பனைக் கதையன்று. டாக்டர் கே என்றும் யானை டாக்டர் என்றும் அறியப்படும் கால்நடை மருத்துவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பற்றிய உண்மைக் கதை. கதைக் களமும் உண்மையே. முதுமலைக் காடுதான் அது. இதுவரை அந்தக் கதையைப் படிக்காதவர்கள் இனியாவது படிக்க வேண்டும். இப்படியும் ஒரு மனிதர் இருப்பாரா என எண்ணத் தோன்றும்.

Saturday, 2 November 2019

வள்ளுவர் கல்லூரியில் வலைப்பூக்கள்


   ஆர்வம் இருந்தால் அதிகமாய்க் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு வள்ளுவர் கல்லூரி தமிழ்த்துறை மாணவர்களே சான்று. வலைப்பூ உருவாக்கம் தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் முதல்வர் டாக்டர் த.சாலைபற்குணன் அவர்கள் ஓர் ஊக்கவுரை நிகழ்த்தித் தொடங்கிவைத்தார். பயிற்சி நிறைவில் கல்லூரித் தாளாளர் திரு க.செங்குட்டுவன் அவர்கள் ஓர் ஆக்கவுரை நிகழ்த்தியது முத்தாய்ப்பாக அமைந்தது.

Wednesday, 30 October 2019

மனத்தைப் பிசைந்த மரண வணிகம்


    நம் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணறு சார்ந்த விபத்துகள் சர்வ சாதாரணம் என்பதை ஒரு திரைப்படத்தில் காட்டியிருந்தது என் நினைவுக்கு வருகிறது. காண்க.

   ஆழ்துளைக் கிணறு தொடர்பான நீதிமன்ற வழிகாட்டுதல்கள் தெளிவாக இருந்தும் அவற்றைச் செயல்படுத்தாத  ஆட்சிப்பணி அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் ஒரு குழந்தை பலியாகியுள்ளது. இப்போதும் வருமுன் காப்பதற்கான வழிகளை நாம் ஆராயவில்லை. சமூகப் பொறுப்பில்லாத குடிமக்கள் மிகுதியாய் வாழும் நம் நாட்டில் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

     சிறுவன் சுஜித் வில்சன் மீட்புப் பணிகளும் அவனது மரணமும் வணிகச் சரக்காக மாறிய கொடுமை இன்னும்  என் நெஞ்சில் வலியைத் தருகிறது. ஊடகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு நடுக்காட்டுப்பட்டி சோகத்தை நம் நடு வீட்டில் தவணை முறையில் சேர்த்து, ஒரு கட்டத்தில் எல்லோரையும் தொலைக்காட்சிப் பெட்டிமுன் பழியாய்க் கிடக்கும்படிச் செய்தன. சோக நிகழ்வுக்கிடையில் குதியாட்டம் போடும் விளம்பரங்களைக் காட்டி தம் வருமானத்துக்கு வழி தேடிக்கொண்டன. மக்களை முட்டாள்களாக்கி உணர்வு நிலையில் நான்கு நாள்கள் வைத்துக் கொண்ட நம்மூர் காட்சி ஊடகங்களை எந்த வகையில் சேர்ப்பது?

       தூத்துக்குடி திரேஸ்புரத்தில், ஒட்டு மொத்தக் குடும்பமும் தொலைக்காட்சியில் மீட்புப் பணிகளைப் பார்த்துக்கொண்டிருக்க இரண்டு வயது பெண்குழந்தை குளியலறையிலிருந்த பெரிய வாளி நீரில் மூழ்கி இறந்ததை யாரும் கவனிக்கவில்லை என்ற செய்தி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாய் அமைந்தது.


    சுஜித் வில்சனின் மீட்புப் பணிகளைச் சாக்காக வைத்து அரசியல்வாதிகளும் நடிகர்களும் சுய விளம்பரம் தேடிக்கொண்ட அவலமும் அரங்கேறியுள்ளது. விளம்பரம் தேட இதுவா நேரம்?

    மீட்புப் பணிகளில் ஏற்பட்ட குளறுபடிகள் நமக்கும் திட்டமிடலுக்கும் வெகுதூரம் என்பதைப் பறைசாற்றின. குழந்தை மூச்சு விடுகிறதா என்பது பற்றி கடைசிவரையில்  யாரும் மூச்சுவிடவில்லை.  துளை போடும் காட்சிகளை மட்டும் காட்டி மக்களைப் பைத்தியக்காரர்களாக ஆக்கிவிட்டார்கள். நான்காவது நாளில் துர்நாற்றம் வந்தது என்றால் முதல்நாளே அக்குழந்தை இறந்திருக்க வேண்டும். என்பது சராசரி மனிதருக்கும் புரியும். ஆனால் ஆட்சிப்பணி அதிகாரிகளுக்குத் தெரியவில்லையே. ஆங்கிலத்தில் Operation success but patient died என்று ஒரு சொலவடை உண்டு. சுஜித் விஷயத்தில் அது மெய்யாகிவிட்டது.
   
    தாய் கமலா மேரி மகனின் ஈமச் சடங்கின்போது  சுதந்திரமாகப் புலம்பி அழக்கூட முடியாமல் வீடியோ கேமிராக்காரர்கள் சூழ்ந்து நின்றது கொடுமையிலும் கொடுமை. கூடியிருந்த பொதுமக்கள் தம் மொபைல்களில் படம்பிடித்தவாறு நின்றது மேலும் எரிச்சல் ஊட்டியது. தனிப்பட்ட ஒரு சோக நிகழ்வை இப்படிப் பொதுவெளியில் மணிக்கணக்கில் போடுவது எனக்குச் சரியாகப் படவில்லை.
    
       
     கூட்டிக் கழித்துப் பார்த்தால் மரண வணிகம் அமோகமாக நடந்து முடிந்துள்ளது.

குறிப்பு: வாசகர்கள் இது தொடர்பாகப் படிக்க வேண்டிய ஒரு பதிவு என் மாணவர் வா. மணிகண்டன் எழுதியுள்ள குழிகள் என்னும் தலைப்பில் அமைந்தது.
Thursday, 24 October 2019

முயற்சியால் கிடைத்த முனைவர் பட்டம்


   டாக்டர்  பட்டங்களில் மூன்று வகை உண்டு.
   முதல் வகை: ஒரு முழுநேர அல்லது பகுதிநேர ஆய்வு மாணவர் ஒரு  குறிப்பிட்ட தலைப்பில் ஆண்டுக்கணக்கில் ஆய்வு செய்து உருவாக்கிய ஆய்வேட்டை மூன்று புறத் தேர்வர்கள் மதிப்பீடு செய்து, பொது வாய்மொழித்தேர்வு நடத்திப் பல்கலைக்கழகத்தால் அளிக்கப்படும் டாக்டர் பட்டம்.

Monday, 14 October 2019

இணையற்ற இணையப் பயிற்சி முகாம்


   புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கம் நடத்திய இரண்டு நாள் இணையப் பயிற்சி முகாம் இரண்டு மணி நேரத்தில் முடிந்தது போல் தோன்றியது. ஒருங்கிணைப்பாளர் குழுத் தலைவர்(?) திரு.நா.முத்துநிலவன் ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்காமல் பயிற்சி வகுப்பைக் கட்டுக்கோப்புடன் நடத்திய பாங்கு பாராட்டுக்குரியது. அமைப்பில்லாத அமைப்பைக்கொண்டு இந்தப் போடு போடுகிறார். ஆனால் அமைப்புச் சார்ந்த பல அமைப்புகள், வங்கிக் கணக்கில் பல இலட்சங்கள் இருந்தும் செயல்படாமல் இருப்பதையும், அப்படியே செய்தாலும் ஒரு சடங்காகச் செய்வதையும் பாக்கிறோம். தூங்கி வழியும் அமைப்புகளைத் தூசிதட்டிச் செயல்பட வைக்க இவர்கள் ஒரு பயிற்சி முகாமை நடத்தினால் நன்றாக இருக்கும்.

Monday, 7 October 2019

பெரியாருக்குப் பெருமை சேர்ப்போம்


    பெரியாரின் கோட்பாடுகளில் பல எனக்குப் பிடிக்கும்; சில பிடிக்காது. பெண்ணடிமையைப் போக்க பெரும்பாடு பட்டவர், மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தோரை விழிப்புணர்வு கொள்ளச் செய்தவர் என்ற முறையில் அவரைப் புகழ்ந்து மேடைகளில் பேசுவது எனது வழக்கமும் கூட.

Friday, 27 September 2019

கவிஞர் இரா.இரவியின் கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள்


      கவிஞர் இரா.இரவி அவர்கள் இன்றைய மரபுசாராக் கவிதை உலகில், குறிப்பாக ஹைக்கூ கவிதை உலகில் இன்றியமையாத ஒருவர் ஆவார். “உணர்வு இலக்கியம் படைக்கும் உயரிய மனிதர்” என இவரைப் பாராட்டுவார் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள்.

Saturday, 21 September 2019

உலக மறதி விழிப்புணர்வு நாள் செப்டம்பர் 21


   கூட்டிக் கழித்துப் பார்த்தால் மனிதருக்கு வரும் இன்பங்களைவிட துன்பங்களே அதிகம் எனத் தோன்றுகிறது. அவற்றிலும் விதிவசத்தால் வரும் துன்பங்களைவிட வரவழைத்துக்கொள்ளும் துன்பங்களே அதிகம்.

Monday, 16 September 2019

வேர்களும் விழுதுகளும் விருதுகளும்


    கோபிசெட்டிப்பாளையம் வைரவிழாப் பள்ளி பல பழம்பெருமைகளைக் கொண்ட பள்ளியாகும். 1884 ஆம் ஆண்டு கொடை உள்ளம் கொண்ட எஸ்.கே.கிருஷ்ண சாஸ்திரியார், சீனிவாச ஐயங்கார் ஆகியோரின் நிதி உதவியுடன் ஒரு நடுநிலைப் பள்ளியாகத் தொடங்கப்பட்டது.

Tuesday, 27 August 2019

அமேசான் காடும் அணையாத் தீயும்


    இயற்கையில், இயற்கையின் செயல்பாடுகளில் எப்பொழுதும் ஓர் ஒழுங்கும் ஒத்திசைவும்  இருக்கும். சென்ற நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் அந்த ஒழுங்கைக் கண்டு இரசித்தார்கள். அந்த ஒழுங்குக்கு ஊனம் நேராத வண்ணம் வாழ்ந்து மறைந்தார்கள்.
   சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லிவிடுகிறேன்.

Tuesday, 20 August 2019

உலக ஒளிப்பட நாள் 2019   காலையில் நடைப்பயிற்சி என்றாலும் தோளில் கேமரா தொங்கியபடிதான் நடப்பேன். ஆங்காங்கே நின்று சுற்றிலும் கண்ணில் படும் அரிய காட்சிகளைப் படம் பிடிப்பேன். சில படங்கள் என்னைப் பொறுத்தவரையில் கவிதைகளே. எழுத்தில் வடிக்காமல் ஒளித் தூரிகையால் வடிக்கப்பட்ட அந்த அழகிய கவிதைகள் சொல்லும் செய்திகள் எத்தனை! எத்தனை!

Friday, 2 August 2019

தமிழில் பேசிய தருண் விஜய்


   உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் அவர்கள் தன் ஆங்கிலப் பேச்சின் நடுநடுவே தமிழில் பேசி கல்லூரி மாணவர்களின் கைதட்டலைப் பெற்றார். அம்மா செய்யும் பாயாசத்தில் உடைத்த முந்திரி பருப்புகள் வாய்க்கு வாய்த் தட்டுப்படுவது போல, அவரது பேச்சின் இடையே உச்சரித்த திருவள்ளுவர், திருக்குறள், ஆண்டாள், வேலுநாச்சியார், சுப்ரமணிய பாரதிபோன்ற  தமிழ்ச் சொற்கள் உண்மையில் செவிக்கு இன்பம் தருவதாகவே அமைந்தன.

Friday, 26 July 2019

நாவடக்கம் இல்லா நெல்லை கண்ணன்


   மனிதர்களின் நிறைகளை மட்டும் எடுத்துக்கொண்டு எழுதுவதும் பேசுவதும் என் வழக்கம். அதே சமயம் சிலர் எல்லைமீறி இதழ்களில் எழுதும்போதும் மேடையில் பேசும்போதும் அவர்தம் சிறுமை கண்டு நான் பொங்குவதும் உண்டு.

Thursday, 18 July 2019

ஆங்கில நாவலாசிரியர் ஆர்.கே. நாராயண்


     2006 ஆம் ஆண்டு ஆர்.கே.நாராயண் அவர்களின் பிறந்த நூற்றாண்டாக நாடெங்கும் கொண்டாடப்பட்டது. அப்போது நான் புகழூர் டி.என்.பி.எல் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றினேன். அந்த ஆண்டில் அப் பள்ளியில் தொடங்கப்பெற்ற ஆங்கில இலக்கிய மன்றத்திற்கு “ஆர்.கே.நாராயண் ஆங்கில இலக்கிய மன்றம்என்று பெயர் சூட்டினேன். ஆங்கிலக் கட்டுரை எழுதும் போட்டியில் வென்றவர்களுக்கு அவர் எழுதிய நாவல்களைப் பரிசாக வழங்கினேன். ஆர்.கே.நாராயண் குறித்து அப்போது தொடங்கிய எனது தேடல் இன்றுவரை நின்றபாடில்லை.

Wednesday, 10 July 2019

கரூரில் வாழ்ந்த கர்நாடக இசைக் கலைஞர்கள்


    சென்ற நூற்றாண்டில் கரூரில் கொடிகட்டிப் பறந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் பலராக இருந்தனர். கரூர் சின்னசாமி ஐயர் என்பவர் புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஆவார். 1882 ஆம் ஆண்டில் பிறந்த இவர் இளமையிலேயே இசையில் நாட்டமுடையவராக விளங்கினார். முதலில் தன் தந்தையாரிடமும், பின்னர் தன் தமையனார் தேவுடு ஐயரிடமும் வயலின் வாசிக்கக் கற்றார்.

Friday, 5 July 2019

தினம்தோறும் மரம்நடும் திம்மக்கா


   சென்றமாதம் சென்னை சென்றிருந்தபோது என் சகலை வீட்டில் பவன்ஸ் ஜேர்னல் ஆங்கில இதழில் இருந்த அட்டைப் படத்தைப் பார்த்து வியந்தேன். இன்றும் நோய் நொடியின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் 107 வயது பெண்மணியின் படம்தான் அது.
திம்மக்கா: பத்மஸ்ரீ விருதாளர்
   உள்ளேயிருந்த அவர் பற்றிய கட்டுரை எனக்கு மேலும் வியப்பூட்டியது.
   கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் குபி என்னும் சிற்றூரில் 1912 ஆம் வருடம் ஜனவரி முதலாம் நாள்  ஏழைப் பெற்றோருக்கு எழில்சேர் மகளாகப் பிறந்தார். வளர்ந்தார்; மழைக்குக் கூட பள்ளிக்கூடத்துக் கூரையின்கீழ் ஒதுங்கியதில்லை.ஆடு மாடு மேய்த்தார்; உரிய பருவத்தில் திருமணம் நடந்தது; மகப்பேறு வாய்க்கவில்லை எனினும் மனம் சோர்ந்துவிடவில்லை. மரக்கன்றுகளை குழந்தைகளாக எண்ணி வளர்க்க முடிவு செய்தனர் கணவரும் மனைவியும். இப்படித் தொடங்கி அவர்கள் வாழும் பகுதியில் சாலையோரங்களில், ஏரிக்கரைகளில் நூற்றுக் கணக்கில் மரம் வளர்த்தார்கள். அவர்களைப் பொருத்தவரை மரக்கன்று நடாத நாள் மகிழ்ச்ச்சியற்ற நாள்.

    அவர்கள் நட்ட ஒவ்வொரு ஆலமரத்தின் கீழும் இன்று ஆயிரம் பேர்கள் அமரலாம்! கணவர் இறந்த பின்னரும் அம்மையார் மரம் வளர்க்கும் பணியைத் தொடர்ந்தார்; தொண்டர்களின் உதவியுடன் தொடர்கிறார். ஒரு பனையோலைக் குடிசையில் மிக எளிமையாக வாழ்கிறார். கர்நாடக அரசு மாதந்தோறும் வழங்கும் ரூபாய் ஐந்நூறுதான் அவருக்கு வாழ்வாதாரம்!

   இந்த ஆண்டு  ‘பத்மஸ்ரீ’ விருதினை அவருக்களித்து நாடு பெருமை தேடிக்கொண்டது. இன்று உலகமே அவரைக் கொண்டாடுகிறது. திம்மக்கா என்னும் ஒற்றைச் சொல்லைத் தந்து கூகுளில் தேடினால் ஓராயிரம் படங்களும் செய்திகளும் வந்து குவிகின்றன. தோன்றின் புகழோடு தோன்றுக என்னும் குறளுக்குச் சான்றாகத் திகழ்கிறார்.

  மரம் நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய கென்யா நாட்டு வாங்கரி மாத்தாய் என்ற பெண்மணி நோபல் பரிசு வழங்கப்பெற்றார். நம் நாட்டு திம்மக்காவுக்கும் அத்தகைய நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்பது என் ஆசை.

     சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் இவர் ஏற்படுத்திய மரம் நடும் ஆர்வம் இன்று பலரையும் தொற்றிக்கொண்டது.

  ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எண்பதுகளில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் என்ற முறையில் மாணவர்களை அழைத்துச் சென்று கொடைக்கானல் பெருமாள்மலையில் முகாமிட்டு ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டோம்.

  நான் முதல்வராகப் பணியாற்றிய டி.என்.பி.எல் பள்ளியில் பல்மரப் பூங்காவை (Arboretum) உருவாக்கினோம்.

 நிசப்தம் அறக்கட்டளையினர் ஈரோடு மாவட்டம் கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் புறம்போக்கு நிலத்தில் ஓர் அடர்வனத்தை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளார்கள். இருபத்தைந்து செண்ட் நிலத்தில் 1500 பலவகை மரக்கன்றுகளை நட்டு வளர்க்கிறார்கள். சென்றமாதம்  அவ் வனத்தின்  ஓராண்டு நிறைவு விழாவையும் கொண்டாடினார்கள்.
கோட்டுப்புள்ளாம்பாளையம் அடர்வனம்
   சேந்தங்குடி ‘மரம் தங்கசாமி’ என்பவர்தான் முதல்முதலில் மரக்கன்றுகளைத் திருமணத் தாம்பூலமாக வழங்குவதை அறிமுகப்படுத்தினார். இது பரவலாகி நடைபெற்று வரும் நிலையில் இப்போது விதைப்பந்துகளைத் திருமணத் தாம்பூலமகத் தரும் வழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது.

   என் சம்பந்தியை நேற்றுச் சந்தித்தபோது அவர் ஒரு திருமணத்தில் பெற்றுவந்த விதைப்பந்துகளைத் தந்தார். மணமக்களின் படம், நம்மாழ்வார் படம் மற்றும் விதைப்பந்து குறித்த விவரம் அழகுத் தமிழில் அச்சிடப்பட்ட அட்டைப் பெட்டியில் வைத்துக் கொடுத்துள்ளார்கள்.


  சந்தனம், தேக்கு, அத்தி, வேம்பு போன்ற நாட்டுமர விதைகளை செம்மண்ணின் நடுவில் வைத்து நெல்லிக்காய் அளவில்  உருண்டைகளாக உருட்டிக் கொளுத்தும் வெயிலில் காயவைத்து எடுக்கப்படுவதே விதைப்பந்துகளாகும்.

   இவற்றை ஆற்றங்கரைகளில், மலைச் சரிவுகளில், புறம்போக்கு நிலங்களில், சாலை ஓரங்களில் வீசி எறிய வேண்டும். அவ்வளவுதான் நம் வேலை. அவை அப்படியே கிடந்து மழை பெய்யும்போது முளைத்துச் செடியாகி மரமாகின்றன.

    சரி இந்த விதைப்பந்துகள் எங்கே கிடைக்கும் என்றுதானே கேட்கிறீர்கள்?

www.seedballs.in  என்னும் இணைய தளத்தில் அனைத்து விவரங்களும் கிடைக்கின்றன. 9500914545 என்னும் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, 12 June 2019

தமிழாகவே வாழ்ந்த தமிழ்த் தேனீ


 'தமிழ்த் தேனீ' என எல்லோராலும் அறியப்பெற்ற மதுரைப் பேராசிரியர் டாக்டர் இரா.மோகன் அவர்கள் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் தீவிர மாரடைப்பின் காரணமாக அமரரானார் என்னும் செய்தியை என்னால் கொஞ்சம்கூட நம்ப இயலவில்லை.

Tuesday, 28 May 2019

கருத்தைக் கவர்ந்த கருவூர் கலை விழா


  “கருவூர் கலை விழா நடக்கிறது. மாநில அளவில் ஓவியப் போட்டி நடத்துகிறோம். பரிசளித்துப் பாராட்டிப் பேச வேண்டும். வர இயலுமா?” என்று எனக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் தொலைப்பேசி மூலம் கேட்டார். நையாண்டி நறுக்காண்டி என்று அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டு குறித்த நாளில் குறித்த நேரத்தில் சென்றேன். சாக்குப் போக்குச் சொல்லி வாய்ப்பை மறுத்திருந்தால் ஒரு சிறப்பு மிக்க ஓவியத்தைக் காணும் வாய்ப்பு கிட்டாமல் போயிருக்கும் என இப்போது உணர்ந்தேன்.

Sunday, 19 May 2019

பாங்குடன் விளங்கும் பூங்கா


    பூங்கா சிறியதோ பெரியதோ அதைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கும் பாங்கினை அமெரிக்காவிலும் கனடாவிலும் பார்த்து வியந்துள்ளேன். இந்தியாவிலும் அத்தகைய பூங்கா ஒன்றினைக் காணும் வாய்ப்பு எனக்குச் சென்றமாதம் கிடைத்தது.

Wednesday, 1 May 2019

உழுதுண்டு வாழ்வாரே வீழ்வார்


    குஜராத் உயர்நீதிமன்ற வாயிலில், அம் மாநிலத்தைச் சேர்ந்த  குறுநில விவசாயிகள் ஒன்பது பேர்கள் தங்கள் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடாக தனக்கு வழங்க வேண்டும் என வழக்குத் தொடுத்துள்ளது பெப்சி என்னும் பன்னாட்டு நிறுவனம்.

Wednesday, 17 April 2019

எழுத்துத் திருட்டு என்றும் வேண்டா


   அண்மைக் காலத்தில் தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தமிழ்ப்புலத்தில் வழங்கும் எம்.ஃபில், பிஎச்.டி பட்டங்கள் நம்பகத் தன்மையை இழந்துவிட்டன. ஒரு காலத்தில் அறிவு மேம்பாட்டுக்காக செய்யப்பட்ட ஆய்வுகள், பின்னர் வேலை வாய்ப்புக்காகவும், ஊக்க ஊதியத்திற்காகவும், பதவி உயர்வுக்காகவும் செய்யப்பட்டன. இதனால் ஆர்வமில்லாதவர்கள், ஆற்றல் இல்லாதவர்கள் கூட ஆய்வுப் படிப்பில் சேர்ந்தனர். இத்தகையோரின் இயலாமையைக் காசாக்கும் வகையில் சிலர் பணம் வாங்கிக்கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை எழுத முன்வந்தனர். இவர்களை ghost writers என ஆங்கிலத்தில் சொல்கிறோம்.

Sunday, 7 April 2019

சிலம்பொலி சென்றது விண்


சிலம்பொலி செல்லப்பனார்
இன்று(6.4.2019) காலமானதையொட்டி
இயற்றப்பட்ட இரங்கற் பா

புலன்கள் அனைத்தும் பொழியும் தமிழில்
நலன்கள் அனைத்தும் நனிமிகத் தோன்றும்
நலம்சேர் பனுவல் நயம்பட யாத்த
சிலம்பொலி சென்றது விண்.

சிலம்பின் சிறப்பைச் சிறப்புடன் சொல்லி
உலக அளவில் உயர்த்திப் பிடித்தார்;
வலம்புரிச் சங்கென வாழ்ந்து மறைந்தார்
சிலம்பொலி சென்றது விண்.

அணியாய்ப் பணிவை அணிந்தவர் வாழ்ந்தார்
துணிவை விரும்பித் துணையெனக் கொண்டார்
இலமென என்றும் இயம்பினார் அல்லர்
சிலம்பொலி சென்றது விண்.

செல்லப்பன் எம்முடை இல்லப்பன் என்றுதான்
சொல்லப் படுவார்;ஓர்  நல்லப்பன் என்றே
உலகுளார் ஏற்பர்; உறுபுகழ் பெற்ற
சிலம்பொலி சென்றது விண்.

சிக்கலே இல்லாத சிந்தனைப் பேச்சாளர்
எக்காலும் சோரா எழுத்தாளர் – மக்கள்
புலம்பொலி தோற்கும் புயலொலி முன்னே
சிலம்பொலி சென்றது விண்.
 6.4.2019            -கவிஞர் இனியன், கரூர்
Thursday, 4 April 2019

எனக்கு எட்டியபுரமான எட்டையபுரம்

   பாரதி பிறந்து 137 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் தன் இளைமைப் பருவத்தில் ஓடி விளையாடித் திரிந்த அந்த எட்டயபுரத்து மண்ணைப் பார்க்க வேண்டும் என்பது என் நீண்டகால கனவாக இருந்தது. ஒரு தமிழாசிரியர் என்ற முறையில்  என் பணிக்காலத்தில்  ‘இளசை நாடு’ எனப்படும் எட்டையபுரத்துக்குச் செல்லவில்லையே சென்று பார்த்து மாணவர்க்குச் சொல்லவில்லையே என்ற குற்ற உணர்வும் எனக்கு உண்டு.

Thursday, 28 March 2019

திருவள்ளுவர் வாக்கு யாருக்கு?

                  நூலைப் போல சேலை விதையைப் போல விளைச்சல் என்பன காலங்காலமாக வழங்கிவரும் சொலவடைகளாகும்.  இந்தப் பொன்மொழிகள் நாம் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும். 

Tuesday, 19 March 2019

செட்டியாரும் செயற்கை நுண்ணறிவும்


    நான் மளிகைப் பொருள்கள் வாங்கச் செல்லும்போது சென்னிமலைச் செட்டியாரைக் கண்டு வியந்து நிற்பேன். அவரது நெற்றி நாமத்தைக் கண்டா அல்லது  நாள் முழுவதும் உட்கார்ந்தே கிடந்ததால் உண்டான அவரது தொப்பையைக் கண்டா இல்லை இல்லை அவரது நுண்ணறிவைக் கண்டு. எவ்வளவு பெரிய பெருக்கல் வகுத்தலாக இருந்தாலும் மனக்கணக்காகச் சொல்லுவார்; நொடிப்பொழுதில் சொல்லுவார்.

Friday, 8 March 2019

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ

   உலக மகளிர் தினத்தில் உலகறிந்த பெருமைசால் பெண்மணிகள் குறித்து எழுதிக் கொண்டிருந்த நான் இவ்வாண்டு அவ்வளவாக அறிமுகம் இல்லாத அதே சமயம் சாதித்துக்காட்டிய ஒரு பெண்மணியைப் பற்றி எழுத விரும்பினேன்.

Monday, 4 February 2019

திருடாதே பாப்பா திருடாதே


  சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு மாலை நேரத்தில் ஓய்வாக நடந்து சென்றபோது ஒரு பேரங்காடி கண்ணில் பட்டது. ,மோர் ஸ்டோர் நமது ஸ்டோர், என எழுதப்பட்ட ஒரு பதாகை தொங்கியது.

Wednesday, 23 January 2019

மாறுபட்ட கோணத்தில் ஓர் மகத்தான நூல்


   என் இளைய மகளின் திருமண ஏற்பாடுகளில் மூழ்கியுள்ள  நான் கடந்த சில வாரங்களில் எந்த நூலையும் வாசிக்கவில்லை. ஆயினும் இருநாள்களுக்கு முன் கரூர் வள்ளுவர் கல்லூரியின் செயலர் திருமதி ஹேமலதா செங்குட்டுவன் கொடுத்தனுப்பிய நூலை இரண்டே நாள்களில் படித்து முடித்துவிட்டேன்.

Wednesday, 9 January 2019

அயலக இந்தியர் தினம்

   இன்று (ஜனவரி 9) அயலக இந்தியர் தினமாகும். மகாத்மா காந்தி 1915ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் நாள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டார். இந்த நாளின் சிறப்பைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி ஒன்பதாம் நாள் அயலக இந்தியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.