Friday, 30 December 2016

ஒருத்தி இராணுவமாய் ஒரு தமிழ்ப்பெண்

   அன்பு மகள் அருணாவுக்கு,
       இன்று உன்னுடைய பிறந்தநாள். கணவன் மனைவி என்று இருந்த எங்களைப் பெற்றோர் என்னும் பெரும் பேற்றினை நீ பெறச் செய்த நாளும் இதுதான்! உனக்கு எங்கள் இதயம் நிறைந்த  பிறந்தநாள் வாழ்த்துகள்.

Saturday, 24 December 2016

அங்கே அப்படி! இங்கே இப்படி!

   ராம் மோகன ராவ் ஆந்திராக்காரர் என்பதால் பாரதியின் பாடல் வரியை அறிந்திருக்க வாய்ப்பில்லை,

Tuesday, 20 December 2016

குருவை மிஞ்சிய சீடன்

   பண்டைக் காலத்து குருகுல ஆசிரியர்கள் ஞானக் களஞ்சியமாகத் திகழ்ந்தவர்கள். தம்மிடத்தில் குருகுல வாசம் செய்த சீடர்களையும் ஞானவான்களாக மாற்றினார்கள். இது உ..வே.சாமிநாதய்யர் காலம்வரை தொடர்ந்தது. அன்றைய குரு சீடர் அதாவது ஆசிரியர் மாணவர் உறவு அவர்தம் இறுதி மூச்சுவரை தொடர்ந்தது.

Saturday, 10 December 2016

அணையா விளக்கு அணைந்தது

     குலோத்துங்கன் என்னும் அணையா விளக்கு இன்று அணைந்துவிட்டது. கரூரை மனத்தில் நினைத்தால் உடனிகழ்வாக அறிஞர் வா.செ.கு அவர்களைப் பற்றிய நினைவும் எழும். குலோத்துங்கன் என்னும் புனைபெயர் கொண்ட வா.செ.கு. அவர்கள் கரூரை அடுத்த வாங்கலாம்பாளையத்தைச் சேர்ந்தவர்.

     கரூர் நகர்மன்றப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர். அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிகரற்ற புலமை பெற்று, பின்னாளில் உலகப் பேரறிஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.

     மரபுக் கவிதை உலகில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி உலா வந்தவர். சங்கப் புலவர்க்கு இணையாகப் பா புனையும் வல்லமை உடையவர்.
பதச் சோறாக நான்கு வரிகள்:

இயலும் என்பவர்க் கெதுவும் அரிதல
எழுந்து நிற்பவர்க் கிமயம் தடையல
முயலும் மானிடன் முடிவு காணுவன்
முன்னர் தோற்பினும் பின்னர் வெல்லுவன்.

   “குலோத்துங்கனின் கவிதைகள் எளிமை, தெளிவு, செறிவு, இனிமை, ஆழம்,அழகு, நடைப்பொலிவு ஆகியவற்றைக்கொண்டு செவிநுகர் கனிகளாக உள்ளன.” என்று டாக்டர் கா.மீ. கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை குலோத்துங்கன் கவிதைகளைப் படித்தோர் உணர்வர்.

      கவிதைக் கலையில் கரைகண்ட வா.செ.கு அவர்கள் கட்டுரை எழுதுவதில் திருவள்ளுவருக்கு நிகரானவர். அவருடைய கட்டுரையில் ஒரு சொல்லை எடுக்கவும் முடியாது; மாற்றவும் முடியாது. வரும் கட்டுரைகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் பதிப்பிக்கும் தினமணி வா.செ.கு கட்டுரைகளை வாரந்தோறும் நடுப்பக்கத்தில் வெளியிட்டதே அவர்தம் எழுதும் திறனுக்குச் சான்றாகும்.

     தமிழ் செவ்வியல் மொழியாக அறிவிக்கக் காரணமாயிருந்தவர்களில் வா.செ.கு. அவர்கள் முக்கியமானவர் என்பது சிலருக்கே தெரியும். தமிழுக்கு உள்ள செவ்வியல் மொழிக்கான தகுதிப்பாடுகளை சான்றாதாரங்களுடன் நிறுவியவரே அவர்தான்.

    தமிழை இணையத் தமிழ் என்னும் அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகுத்தவரும் வா.செ.கு அவர்கள்தான்.

     வள்ளுவத்தில் ஆழங்காற்பட்டவர் வா.செ.கு என்பது அவர் எழுதிய வாழும் வள்ளுவம் என்னும் நூலைப் படித்தோருக்கு மட்டுமே தெரியும். The Immortal Kural என்று அவர் எழுதிய ஆங்கில நூல் குறளின் பெருமையை உலகுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்த நூலை எழுத்தெண்ணிப் படித்தவன் என்ற முறையில் இதை நான் உறுதியாகக் கூறமுடியும்.

    வா.செ.கு. அவர்களை நான் பதினேழு ஆண்டுகளாக அறிவேன். நான் முன்னர்த் தலைமையாசிரியராகப் பணியாற்றிய கோபி வைரவிழா மேனிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா 1998இல் நடந்தபோது அவரை முக்கிய விருந்தினராக அழைத்து வந்தேன். அதற்குப் பிறகு சென்னை செல்லும்போதெல்லம் நான் அவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். 2004 முதல் கரூரில் நடக்கும் வா.செ.கு அறக்கட்டளை நிகழ்த்தும் மாணவர்களுக்கானப் பாராட்டு விழாவில் பங்கேற்று டி.என்.பி.எல். பள்ளி முதல்வர் என்ற முறையில் அவரிடமிருந்து பரிசும் பாராட்டும் பெற்றதை இன்று கண்ணீர் மல்க நினைத்துப் பார்க்கிறேன்.

    அவர் வாழ்த்தொப்பம் இட்டுத் தந்த அவருடைய நூல்களை என் இல்ல நூலகத்தில் வைத்துப் பொன்னேபோல் போற்றிவருகிறேன்.

     கரூரின் இலக்கிய அடையாளமாகத் திகழும் வா.செ.கு அவர்களுடைய புகழ் திருக்குறள் போல் இந்த உலகில் என்றும் நிலைத்து நிற்கும்.

Saturday, 3 December 2016

பூங்காவில் பூக்கும் குறள் பூக்கள்

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை தியாகராய நகரில் வசித்த என்  சம்பந்தி இல்லத்திற்குச் சென்றிருந்தேன். காலை தேநீர் அருந்தியதும் சம்பந்தி இருவரும் நடைப் பயிற்சிக்குப் புறப்பட்டனர்; நானும் அவர்களோடு நடந்தேன்.

   அந் நகரின் ஒரு பகுதியில் இருந்த நடேசன் பூங்காவிற்குச் சென்றோம். இரண்டு மூன்று சுற்றுகள் நடந்தபின் பூங்காவின் ஓர் இடத்தில் இருந்த சிறு குடிலுக்கு அழைத்துச் சென்றார்கள். ஓடுகள் வேயப்பட்ட அந்த அழகான குடிலில் ஒரு தரைவிரிப்பில் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தனர். என் சம்பந்தியரை உற்சாகம் பொங்க ஒருவர் வரவேற்றார்; நானும் அறிமுகமானேன்; அமர்ந்தோம். என்ன நடக்கிறது என்பதை ஆவலோடு கவனித்தேன்.

    ஒருவர் பேட்டரியில் இயங்கும் ஒலிபெருக்கியை அமைத்து ஒலிவாங்கியில் பேசி ஒலியளவைச் சரிபார்த்தார். அங்கே மற்றொருவர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் பெயர் தொலைபேசி விவரத்தை எழுதி வாங்கினார். சற்று நேரத்தில் மேலும் ஏழெட்டுப் பேர் வந்து சேர்ந்தனர். எங்களை வரவேற்ற மனிதர் எழுந்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நொடிக்கு ஒரு குறளை மேற்கோள் காட்டிப் பேசியது வியப்பாக இருந்தது. சுருக்கமாகப் பேசிவிட்டு ஒவ்வொருவராகப் பேச அழைத்தார். அவரவர் சொல்ல விரும்பியதைச் சொன்னார்கள். சிலர் ஆற்றொழுக்காகப் பேச, சிலர் தயங்கித் தயங்கிப் பேசினார்கள். ஒருவர் பேசி அமர்ந்தால், அந்த மனிதர் எழுந்து பேசியவரைப் பாராட்டி, கூடுதல் விளக்கமும் தந்தார். என்னையும் அழைத்தார்; பேசினேன்.  

   இப்படி அங்கே வந்திருந்த அனைவரையும் அவர் பேச வைத்து அழகு பார்த்தார். ஏராளமான பயனுள்ள தகவல்கள் கிடைத்தன. இப்படியாக ஒவ்வொரு ஞாயிறன்றும் இக் கூட்டத்தை நடத்துகிறார். ஒரு மாதமன்று; ஒரு வருடமன்று; கடந்த பதினான்கு ஆண்டுகளாக   நடத்திவருகிறார். இதில் பேசிப் பழகிய பலரும் இன்று பட்டிமன்றங்களில் பேசுகிறார்கள்! இவர் நடத்தும் இந்த அமைப்புக்குப் பெயர் திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம்.

    சென்றவாரம் ஒரு வேலையாக சென்னைக்குச் சென்றிருந்தேன். கீழ்ப்பாக்கத்தில் என் சகலை இல்லத்தில் தங்கினேன். ஞாயிற்றுக் கிழமை காலை தேநீருக்குப் பிறகு நடைப்பயிற்சியைத் தொடங்கினேன். நான் எந்த ஊருக்குச் சென்றாலும் எந்த நாட்டிற்குச் சென்றாலும் காலை நடைப்பயிற்சியைத் தவறாமல் செய்வேன். அந்த வகையில் அன்று ஓட்டேரி மூலிகைப் பூங்காவிற்குச் சென்றேன். அங்கேயும் ஒரு குடில்; ஒரு ஒலிபெருக்கி; ஒரு தரை விரிப்பு. அப்போது மணி காலை 7.25. இருவர் மட்டுமே வந்திருந்தனர். நான் மூன்றாவது ஆள். ஒரு நோட்டுப்புத்தகத்தில் பெயர் எழுதி கையொப்பம் இட்டேன்.

    சரியாக 7.30 மணிக்கு திரு.வேலுசாமி என்பார் எங்களை வரவேற்றுப் படு உற்சாகமாகப் பேசினார். பேச்சின் நடுவே குறட்பாக்கள் வந்து உதிர்ந்தன. சிறிது நேரத்தில் ஐவர், பிறகு எழுவர் என வந்த வண்ணம் இருந்தனர். ஒவ்வொருவராக பேச அழைக்கப்பட்ட்னர். ஒருவர் குறள் விளக்கம் தந்தார்; இன்னொருவர் இயற்கை உணவு குறித்துப் பேசினார். மற்றொருவர் உணவு வீணாவது குறித்து விளக்கினார். மகழ்ச்சியாக வாழ்வதற்குச் சில உளவியல் வழிமுறைகள் குறித்து நான் பேசினேன். குறித்த நேரத்தில் கூட்டம் முடிந்தது.

    அங்கே குடிலுக்கு வெளியே தொங்க விடப்பட்டிருந்த பதாகையைப் பார்த்ததும் எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. நடேசன் பூங்காவில் பார்த்த அந்த மாமனிதரின் பெயர் அதில் இருந்தது. அவர் நிறுவிய  திரு.வி.க. பயிலரங்கம் இன்று பதினேழு கிளைகளைப் பரப்பி நிற்கின்றது.
     ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் நாள் திரு.வி.க.வின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். விழாவின்போது தமிழ் ஆர்வலர் ஒருவருக்குத் தமிழ்ப்பெரியார் திரு.வி.க.விருது என அளிக்கிறார்கள். 

 “சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்’ என்னும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப நூற்றுக் கணக்கானவர்களுக்குப் பேச வாய்ப்பளித்து, பயத்தை நீக்கி, பயனுள்ளவற்றைப் பேசவைக்கும் முயற்சியில் பெரிய வெற்றி கண்டுள்ள அவரை மனதார வாழ்த்துகிறேன்.

 அந்த மாமனிதரின் பெயர்  முனைவர் திருக்குறள் பா.தாமோதரன். இவர் ஒரு வழக்கறிஞர். இவருக்கு 1330 குறட்பாக்களும் மனப்பாடம். வள்ளுவர் சொல்லும் உள்ளூரில் உள்ள பயன்தரு மரமாக, ஊர் நடுவே உள்ள ஊருணியாக வாழ்வாங்கு வாழ்கிறார்.

   ஒன்றுமட்டும் உண்மை. விருதுகளை எதிர்பார்க்காமல் விழுதுகளைப் பரப்பிவருகிறார்.

    

Thursday, 24 November 2016

பாடி விளையாடு பாப்பா

  சற்றேறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்னால் என் முதல் கவிதை நூலின் வெளியீட்டு விழாவில் என் இனிய நண்பர் ஹைக்கூ திலகம் இரா.இரவி அவர்கள் பங்கேற்று வாழ்த்தினார். அடுத்த நாளே நூல் மதிப்புரை எழுதி அனுப்பி வைத்தார். அந்த மதிப்புரையை இப்போது எனது வலைப்பூவில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Tuesday, 22 November 2016

வண்ணத்துப் பூச்சிகள் வாழ்க

 
 உறவினர் வீட்டுக் குழந்தையின் காது குத்து விழாவிற்குச்சென்றிருந்த நாங்கள் அருகிலிருந்த வண்ணத்துப் பூச்சிப் பூங்காவிற்கும் சென்றோம். ஒரு வேலையாகச் செல்லும்போது இன்னொரு வேலையையும் சேர்த்து முடித்து விடுவது என்பதில் நான் குறியாக இருப்பேன்.

Sunday, 13 November 2016

கரணம் தப்பினால்

  பருவகால மாற்றம் என்பது நாம் வாழும் பூமிக்கு மட்டும் நிகழ்வதில்லை. பிறந்து பன்னிரண்டு வயது ஆனவுடன் ஒவ்வொரு ஆண், பெண் குழந்தையிடத்தும் பருவ கால மாற்றம் நிகழ்கிறது. எதிர் பாலரைப் பார்க்கும்போது ஓர்  இனம்புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது.

Wednesday, 9 November 2016

ஆயிரம் ரூபாய் ஹைக்கூ


(9.11.16 அன்று 500, 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என நடுவண் அரசு அறிவித்ததை ஒட்டி எழுதப் பெற்றது)

பிச்சை
ஐந்நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தால் நாசமா போச்சு என்றான்
நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்ததும் வாழ்க என்றான்
விவரம் தெரிந்த பிச்சைக்காரன்!

Monday, 31 October 2016

பெரிய கடவுள் காக்க வேண்டும்

                                                          31.10.2016
அன்பிற்கினிய அருமை மகள் புவனாவுக்கு,

   இன்று உன் பிறந்தநாள். வாழ்க வளமுடன் என நானும் அம்மாவும் நெஞ்சார வாழ்த்துகிறோம். இந்த ஆண்டும் மின்னஞ்சல் மூலமாகவே உனக்கு வாழ்த்தினைச் சொல்ல வேண்டிய நிலை.

Friday, 21 October 2016

கற்க கசடுற

    விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது ஒரு பொருள் நிறைந்த பொன்மொழியாகும். இன்றைக்குப் பள்ளிகளில் படிக்கும் சிறுவர் சிறுமியர் பலரும் தடம் மாறிப் போவதைப் பார்க்கும்போது நெஞ்சு நெக்குருகிப் போகிறேன்.

Monday, 17 October 2016

சோத்துக்குள்ள இருக்குதடா சொக்கலிங்கம்

   அரைச் சாண் வயித்துக்காகதான் பாடா படுகிறோம் என்று உழைக்கும் மக்கள் உரக்கச் சொல்வது நம் செவிகளில் விழத்தான் செய்கிறது. நம் நாட்டில் பத்தில் மூன்று பேர் இரவு உணவு இல்லாமல் உறங்கச் செல்கின்றனர் என்பது கசப்பான உண்மையாகும்.

Saturday, 15 October 2016

மாமனிதர் ஓ.கு.தி.மறைந்தார்

    இன்று(14.10.16) புலரும் பொழுதில் வந்த தொலைபேசிச் செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனேன். கோபிசெட்டிபாளையத்தில் இயங்கிவரும் புகழ் வாய்ந்த வைரவிழா மேனிலைப்பள்ளியின் மேனாள் தலைமையாசிரியர் ஓ.கு.தியாகராசன் அவர்கள் காலமாகிவிட்டதாக  ஓர் உறுதிப்படுத்தப்படாத  செய்தி காதில் விழுந்தது என இந்நாள் தலைமையாசிரியர்  பி.கந்தசாமி தெரிவித்தார்.

Monday, 10 October 2016

திருக்குறளில் தடம்பதித்த சான்றோர் தி.சு.அவினாசிலிங்கம்

   ஆராய்ச்சிக்கு உரிய  நூலாக மட்டுமே இருந்த திருக்குறளை, அறிஞர்களுக்கு மட்டுமே எட்டும் வகையில் பரண் மீது கிடந்த திருக்குறளை மீட்டெடுத்து அனைவரும் படிக்க வேண்டிய நூல் என அறிமுகம் செய்த பெருமை திரு.தி.சு. அவினாசிலிங்கம் அவர்களையே சாரும்.

Wednesday, 5 October 2016

கூத்தாடிக் கூத்தாடி


நந்த வனத்த்தில் ஓர் ஆண்டி-அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி-மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!

Monday, 26 September 2016

நம்மாலும் முடியும்

நூல் மதிப்புரை
(முனைவர் .கோவிந்தராஜூ)

   முனைவர் செ.சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் அவர்கள் எழுதி, கோவை விஜயா பதிப்பகம் அண்மையில் வெளியிட்டுள்ள நம்மாலும் முடியும் என்னும் நூல் தமிழ் கூறும் நல் உலகிற்கு ஒரு புது வரவாகும்.

Wednesday, 21 September 2016

மறதியை வென்று மகிழ்வாய் வாழ்வோம்

இன்று(21 செப்டம்பர்)  உலக அல்சீமர்ஸ் தினம்

    மனிதர்களுக்கு வரும் உடல் சார்ந்த  நோய்களைவிட மனம் சார்ந்த நோய்கள் கொடுமையானவை.

Saturday, 17 September 2016

செக்கு மாடாய் இருப்பதிலும் சுகம்

   போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்றொரு புரியாத பழமொழியை அவ்வப்போது சொல்லி நம் முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடும் சிலரைச் சந்திக்கிறோம். அவ்வளவு ஏன்? நாமும் இந்தப் பழமொழியைச் சொல்லி நம் குழந்தைகளின் முயற்சியைக் கூட முடமாக்கி விடுகிறோம்.

Monday, 12 September 2016

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?

    பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றுவரும் மாற்றுத் திறனாளர்களுக்கான ஒலிம்பிக் போட்டி அவ்வளவாகப் பேசப்படாத நிலையில் ஒட்டு மொத்த இந்தியாவையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்கச் செய்தார் பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர்.

Saturday, 10 September 2016

வெள்ளத்தால் விளைந்த நன்மை

 வெள்ளத்தால் நன்மை விளையுமா? விளைந்துள்ளதே. 7.8.2016 அன்று அடையாறு முத்தமிழ்ப் பேரவை என்னும் குளிரூட்டப்பட்ட அரங்கில், சென்ற ஆண்டு சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளம் தொடர்பாக நீதிபதி மூ.புகழேந்தி அவர்கள்  எழுதியுள்ள வெள்ளத் தாண்டவம் வரலாற்று மகா காவியம்  நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது.

Monday, 5 September 2016

ஆசிரியர் இனி ஆலோசகராகவும் இருக்க வேண்டும்


 
 பாலியல் வன்முறை, கொலை, குடி, களவு இவற்றில் ஈடுபடும் இளைஞர்கள் தொடர்பான செய்திகள் நாளும் நமது கவனத்தை ஈர்க்கின்றன. கவலை கொள்ளச் செய்கின்றன. இக் குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களாக அல்லது படித்தவர்களாக இருக்கிறார்கள்.

Tuesday, 30 August 2016

பிழை மலிந்த மொழியினாய் போ போ போ

  நாற்பதாண்டு கால ஆசிரியப் பணியில் ஒரு முப்பதாயிரம் விடைத் தாள்களையாவது திருத்தியிருப்பேன். விடைத்தாள் திருத்தும்போது முதலில் மாணவர் செய்த பிழைகள்தாம் கண்ணில் படும். இப்போதும் நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் பிழைகளே என் கண்ணில் படுகின்றன. படிக்கும் நாளிதழ், பார்க்கும் தொலைக் காட்சி என அனைத்திலும் பிழைகளே முதலில் தெரிகின்றன.

Monday, 22 August 2016

சரிந்துவரும் சர்க்கஸ் கலை


      கால வெள்ளத்தில் பல நல்ல விஷயங்கள் காணாமல் போய்விடுகின்றன. அம்மியும் ஆட்டாங்கல்லும் போன இடம் தெரியவில்லை. அஞ்சாங்காய், பல்லாங்குழி விளையாட இப்போது யாருக்குத் தெரியும்? இந்தக் காலத்துச் சிறுவர்களுக்கு சைக்கிள் டயர், பனங்காய்கள் பயன்படுத்தி வண்டிகள் செய்து ஓட்டி விளையாடத் தெரியுமா?

Sunday, 14 August 2016

மறக்கப்பட்ட மாமனிதரும் மருத்துவர் ஜீவானந்தமும்

   நாட்டின் சுதந்திரதின விழாவை முன்னிட்டு தொடர்புடைய நூல் எதையாவது படிக்க வேண்டும் என்ற உந்துதலால் என் இல்ல நூலகத்தை அலசினேன். கண்ணில் பட்ட ஒருநூலை எடுத்து இரண்டு நாள்களில் படித்து முடித்தேன். இந்த மறு வாசிப்பு சுதந்திரப் போராட்டம் குறித்த கூடுதல் புரிதலை என்னுள் ஏற்படுத்தியது.

Tuesday, 9 August 2016

ஆயிரங்காலத்துப் பயிரில் அவசரம் காட்டலாமா?

     திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்னும் சொல் வழக்கு நம் கிராமங்களில் உண்டு. திருமண வாழ்க்கையின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த திருவள்ளுவர் இல்லறவியலில் இருநூறு குறட்பாக்களை அமைத்து மிக விரிவாகப் பேசுகிறார். மணமகன் மணமகள் பொருத்தப்பாடு குறித்துத் தொல்காப்பியர் தனி நூற்பாவை அமைத்துள்ளார்.

Sunday, 31 July 2016

படித்தவன் பாவம் பண்ணினால். . . . . . . .


   கிருஷ்ணகிரி பக்கம் ஒரு குக்கிராமத்துக் குடும்பம் தொடர்பான  வழக்கு இது.  படித்தவன் பாவம் பண்ணினால் ஐயோ என்று போவான்  என்று சாபம் இடுவார் பாரதியார். முதல் தலைமுறை பட்டதாரி இளைஞன் செய்த மாபாதகம் தொடர்பான வழக்கு இது.

       உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
       கல்லார் அறிவிலா தார்

என்பது குறள்.  சான்றோர் கூறும் வழியில் நடக்காத அறிவிலி எத்தனை பட்டம் பெற்றும் என்ன பயன் என்பது இக் குறளின் பொருள். வள்ளுவர் குறிப்பிடும்  படித்த அறிவிலி ஒருவன் தொடர்பான வழக்கு இது.

           வழக்கு இதுதான்.

     "என் மகளுக்கு வயது பதினெட்டு. என்  தம்பி மகனும் அவளும் ஊருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக அறிகிறேன். அவள் கருவுற்றிருப்பதாகவும்  ஒரு செய்தி நிலவுகிறது. இந்தக் கொடுமையைச் சகிக்க முடியாமல் எட்டாம் வகுப்பில் படித்த என் ஒரே மகன் தூக்கில் தொங்கிவிட்டான். என்  பெண் இப்போது எங்கே இருக்கிறாள்  என்றே தெரியவில்லை. அவளை  நீதி மன்றத்திற்கு வரச் செய்து விசாரிக்க  வேண்டும்" என்பது அவர் கொடுத்த ஆள்கொணர்வு மனுவின்  சாரம்.

         அவளையும் அந்த அறிவு கெட்ட மடையனையும் போலீசார் கொண்டுவந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் நிறுத்தினர்.  நான் மட்டும் ஒரு நாள்  நீதிபதியாக  இருந்திருந்தால் பின்வருமாறூ தீர்ப்பு வழங்கியிருப்பேன்.

        "தடை செய்யப்பட்ட உறவு முறைகளில் திருமணம் செய்யக் கூடாது என்பது  நம் இந்திய  மரபில் உள்ள எழுதாச் சட்டமாகும். சகோதரன் சகோதரி உறவுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ள  இத் திருமணம் சமுதாய ஒழுங்கிற்கு எதிரானது என்பதாலும், எதிர்காலத்தில் இது ஒரு தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும் என்பதாலும்  மேற்படி திருமணம் செல்லாது என அறிவிக்கிறேன்; அத் திருமணம் இரத்து செய்யப்படுகிறது.

         கருவில் வளரும் குழந்தையை அவள் பெற்றுக்கொள்ள வேண்டும் . பரந்த மனம் கொண்ட ஒருவன் அவளைத் திருமணம் செய்து கொள்ள  வரும் வரை அவள் தந்தை, தாயின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்.

           திருமணம் தொடர்பான சட்டங்கள், விலக்கப்பட்டத்  திருமண உறவுகள் எவையெவை என்பன குறித்தப் பாடங்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

        மனுதாரரின் குடும்பத்தினருக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி, மனுதாரரின் மகன் சாவுக்கும் காரணமாக இருந்த எதிர் மனுதாரருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன். மேலும் அவர் பெற்றப் பட்டங்களை இரத்து செய்யுமாறு தொடர்புடைய பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவிடுகிறேன்."

      உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா?
"மனுதாரரின் பெண் மேஜர் என்பதால் அவள் தன் கணவனோடு வாழலாமா அல்லது பெற்றோர் வீட்டிற்குச் சென்று விடலாமா என்பதை அவளே முடிவு செய்து கொள்ளலாம்"

     ஆக ஒன்றுமட்டும் தெளிவாகத்  தெரிகிறது. நம்  பிள்ளைகள் மதிப்பெண்கள் பெறுகிறார்களா என்பதில் காட்டும் ஆர்வத்தில் பாதி அளவு கூட மதிப்பீடுகளைப்(Values) பெற்றுள்ளார்களா என்பதில் காட்டுவதில்லை.

           பின்னாளில் ஏற்படும் எதிர் விளைவுகளைக் கண்டு வருந்துவதால் என்ன பயன்?

Tuesday, 19 July 2016

திருக்குறள் இனிய(ன்) வெண்பா


கல்லென  கல்லார் கிடப்பர்; உலர்ந்திட்ட
புல்லென  தள்ளுமே  இவ்வுலகு- ஆதலால்
கற்க கசடற கற்பவைக்  கற்றபின்
நிற்க  அதற்குத்  தக.இருமுறை  எச்செயலும்  எண்ணுக;  இன்றேல்
வரும்பல துன்பங்கள் வாழ்வினிலே-  ஆதலால்
எண்ணித் துணிகக் கருமம்  துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்குநெல்லையார் கொட்டினும்  அள்ளலாம்; கொட்டிய
சொல்லையார் அள்ளிட  லாகும்?- அதனாலே
யாகாவா ராயினும்  நாகாக்க  காவாக்கால்
சோகாப்பர்  சொல்லிழுக்குப்  பட்டு.சிறுதுரும்பும் பல்குத்த லாகுமே; சான்றோர்
தருஞ்சொல்லில் ஒன்றானும் நன்றாகும்-  ஆக
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற  பெருமை தரும்.பொய்யும் புறமும்  சுவர்ப்பட்ட பந்தினைப்போல்
எய்யும் மனிதரைச் சேருமே-  ஆதலால்
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற்  பயனிலாச்  சொல்.தீம்பால் தயிராகக்  காத்திருக்க; சூல்தாங்கும்
தேன்மொழி வலிஎன்றால் காத்திருக்க லாகாதே
தூங்குக தூங்கிச்  செயற்பால  தூங்கற்க
தூங்காது செய்யும்  வினை.நோக்கின் பிறன்மனை  பேர்கெடும்;  தன்மனை
நோக்கான் எனினும்  பெயர் கெடும்-  ஆதலால்
செய்தக்க அல்ல செயக்கெடும்  செய்தக்க
செய்யாமை  யானுன்  கெடும்.பணத்தைப் பெருக்கென பாரதி  சொன்னான்
திரவியம் தேடென்றாள்  ஒளவையும்-  ஆதலால்
செய்கப் பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எகதனிற்  கூரிய  தில்.நன்றுசெய்ய எண்ணிடின் என்றுசெய்ய?  நன்றியை
இன்றுசெய்க; நாளைக்  கியலுமோ  யாரறிவார்?
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க  மற்றது
பொன்றுங்கால் பொன்றாத்  துணை.உடலால்  உழைப்பின் உயர்தல் உறுதி
உடலால் வியர்வை  விளைபயன்  பற்பல
தெய்வத்தான்  ஆகா  தெனினும்  முயற்சிதன்
மெய்வருத்தக்  கூலி  தரும்.

Friday, 8 July 2016

அட பெருமாளே!

   இது தலையங்கத்தின் தலைப்பு. (பார்க்க 15.1.2015 தேதியிட்ட தினமணி.) பேராசிரியர் பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவல் தொடர்பாக எழுந்த சர்ச்சையை விரிவாக அலசியது அந்தத் தலையங்கம். நாவல் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆன போதிலும் யாரும் அந்த  நாவல் குறித்து வாய் திறக்கவில்லை.

Saturday, 2 July 2016

வளர்ந்து வரும் வன்புணர்வுக் கலாச்சாரம்

 More  என்னும் வெளிநாட்டுப் பத்திரிகை Is India the capital of sexual abuses? என்னும் தலைப்பிட்டு ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. இது நமக்கு எவ்வளவு பெரிய தலைக் குனிவு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

Tuesday, 21 June 2016

தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா

   நிலையாமை குறித்துப் பாடிய திருவள்ளுவரின் திருக்குறள் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நிலைத்து நிற்கிறது. ஆனால் அவர் நினைவாக  எழுப்பப்பட்ட சென்னை வள்ளுவர் கோட்டம் இன்னும் பத்தாண்டுகள் நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே.

Monday, 13 June 2016

1098 இது என்ன எண்?

     கடந்த இரண்டு மூன்று நாள்களாக ஊடகங்கள் குழந்தைகளைப் பற்றி எழுதியும் பேசியும் வருகின்றன. காரணம் ஜூன் 12 ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் தினமாகக் கடைப்பிடிக்கப்படுவதுதான்.

Friday, 10 June 2016

இதைக் காணாத கண் என்ன கண்ணோ!

  எங்காவது ஒரு நீண்ட தூர கார்ப் பயணம் அதுவும் நானே காரோட்டும் பயணம் வாய்த்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன்.  வயது கூடிக்கொண்டே போகிறது. வழக்கமாக செய்யும் சில செயல்களைத் தொடர்ந்து செய்ய முடியுமா என நான் தற்சோதனை செய்து கொள்வதுண்டு. வயது காரணமாக ஒன்று இயலாது அல்லது கூடாது எனத் தோன்றினால் அதை விட்டுவிடுவேன்.

Sunday, 5 June 2016

உலக சுற்றுச் சூழல் தின சிந்தனை

   எழுபதுகளின் தொடக்கத்தில்தான் சுற்றுச் சூழல் குறித்த சிந்தனை எழுந்தது. பன்னாட்டு மன்றத்தின் (United Nations Organisation) கவனமும் சுற்றுச் சூழல் பற்றியதாக இருந்தது.

Tuesday, 31 May 2016

சூர்யாவின் இன்னொரு முகம்

    சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குப் பஞ்சமா என்ன? ஒரு மேம்பாலத்தில் சாரை சாரையாக வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற கார் கிரீச் சத்தத்துடன் நிற்கிறது. 

Friday, 27 May 2016

தேசம்மாள் என்னும் தெய்வம்

   


  அன்பு மகள் அருணாவுக்கு,
    அம்மாவும் நானும் நலம். தங்கை புவனா கனடாவில் நலமுடன் நன்றாகப் படிக்கிறாள். சென்றவாரம் தொலைப்பேசியில் பேசியபோது ஹூஸ்டனில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கப் போவதாகச் சொன்னாய். பிறகு எதை எதையோ பேச, கடைசியில் உன் பாட்டியைப் பற்றிய பேச்சும் வந்தது. பேச்சின் நிறைவில் உன் பாட்டி குறித்து விரிவாக ஒரு கடிதம் எழுதுமாறு வேண்டினாய். உன் வேண்டுகோளை ஏற்று இக் கடிதத்தை எழுதுகிறேன்.

Wednesday, 25 May 2016

புதுமைப் பெண் கிரண் பேடி

     ஐ.பி.எஸ் என்று சொல்லப்படும் இந்திய காவல் பணி என்பது ஆண்களுக்கே உரியது என்ற போக்கை மாற்றிக் காட்டிய முதல் பெண்மணி கிரண் பேடி ஆவார். இந்தப் பெண் என்ன செய்யப் போகிறாள்  எனப் பலரும் தம் புருவங்களை உயர்த்தியபோது, மூக்கின்மேல் விரல் வைக்கும்படியாய் வீரதீர செயல்களைச் செய்தார் பேடி.

    தில்லி திகார் சிறை என்பது சிறைத் துறை அதிகாரிகளுக்கு திகில் தரும் சிறையாகவே   இருந்தது. அங்கு உயர் அதிகாரியாக பொறுப்பேற்ற கிரண் பேடி அதிரடி மாற்றங்களைப் புகுத்தி, ஆறே மாதங்களில் திகார் சிறையைச் சீரமைத்ததால், ஓர் ஐந்தாம் வகுப்புக் குழந்தைக்குக்கூட அவர் பெயர் அறிமுகம் ஆகிவிட்டது. விடுதலையான சிறைவாசியர் எல்லாம் மனம்திருந்தி சீர்மிகு வாழ்வை மேற்கொள்ள பல திட்டங்களை அறிமுகப்படுத்தி அவர்களுடைய நன்றிக்கு உரியவரானார்.

      பிறரைச் சார்ந்து நிற்காமல் தன் காலில் நிற்க வேண்டும் என்னும் கோட்பாட்டை  இளமையிலேயே கடைப்பிடிக்கத் தொடங்கினார். சிக்கல்களைச் சந்தித்தபோது அதன் பின்விளைவுகளுக்குத் தானே பொறுப்பேற்றார். வெற்றி என்றால் தான் காரணம் என்றும், தோல்வி என்றால் தன் கீழ் பணியாற்றுவோர் காரணம் என்றும் கூறும் அதிகாரத் தோரணை அவரிடம் எள்ளளவும் இருந்ததில்லை.

       ஒரு கரும யோகியைப் போல ஏற்றுக் கொண்டப் பணியைச் செவ்வனே செய்தாரே தவிர, பதவி வெறி கொண்டவராய் ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. அதனால்தான் ஒரு கட்டத்தில் தான் வகித்த உயர் பதவியைத் துச்சமென தூக்கி எறிந்துவிட்டுப் பொது வாழ்வுக்கு வந்தார்.

       நாட்டுப்பற்றும் சமூக சிந்தனையும் உடையவர் கிரண் பேடி. நம் நாட்டில் பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது படித்தவர்களுக்கே கூட தெரிவதில்லை. வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் சந்திக்கும்போது எப்படிப் பழக வேண்டும் எப்படிப் பேச  வேண்டும் என்பதுகூட தெரியவில்லை. உலகம் முழுவதும் படிக்கவும் பணியாற்றவும் செல்லும் நமது நாட்டு இளைஞர்கள் இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டால்தான் நம் நாட்டின் மதிப்பு உயரும் எனக் கருதிய கிரண் பேடி ஓர் ஆங்கில  நூலை எழுதி வெளியிட்டார். வெளியான சில மாதங்களில் பல்லாயிரக் கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்னும் பொருள்பட BROOM AND GROOM என்ற ஆங்கிலத் தொடரை நூலின் தலைப்பாக வைத்தார். என்னே அவரது நுண்மாண் நுழை புலன்! பத்து நூல்களை வாங்கினேன்; அவ்வப்போது திருமணப் பரிசாக அளித்தேன்; ஒரு நூல் இன்றும் என் இல்ல நூலகத்தின் இணையற்ற நூல்களுள் ஒன்றாய்த் திகழ்கிறது.  இந் நூலை மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட அனுமதி கேட்டு அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    இப்போது அவர்  புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.      நியமனம் பற்றிய செய்தி வெளிவந்ததும் நிருபர்கள் அவரைச் சந்தித்தனர். “உங்களுடைய பங்களிப்பு அங்கு எவ்வாறு இருக்கும்?” என்று ஒருவர் கேட்டார்.  “ஒரு குக்கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர், நெரிசல் மிகுந்த நாற்சந்தியில் கால்கடுக்க நின்று தன் பணியைச் செய்யும் போலீஸ்காரர் ஆகியோரைச் சந்தித்து அன்புடன் அளவளாவி, அவர்கள் சமுதாயத்தில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணரச் செய்வேன்.” என்று விடையளித்தார். புதுச்சேரி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    அறுபத்து ஏழு வயதாகும் இவர் 1972-ஆம் ஆண்டு இந்திய காவல் பணித் தொகுதியில் சேர்ந்தவர். கைசுத்தம் மிகுந்த துணிச்சல் மிகுந்த அதிகாரி என்னும் புகழுக்கு உரியவர். எப்பொழுதும் இல்லாத அளவில் இப்போது கையூட்டுக் கலாச்சாரம் பரவலாகக் காணப்படும் புதுவைக்கு இவருடைய சேவை தேவை என ஓர் ஆங்கில நாளேடு எழுதியுள்ளது.

      புதுதில்லியில் பணியாற்றியபோது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நிறுத்தப்பட்டவை அமைச்சர்களின் கார்கள் என அறிந்தும் இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் போடச்செய்தவர். இதன் காரணமாக அவருக்கு கிரேன் பேடி(Crane Bedi) என்னும் பட்டப்பெயரும் ஏற்பட்டது!

      விருதுகளையும் பதவிகளையும் இவர் ஒருபோதும் தேடிப்போனதில்லை. ஆனால் அவை இவரைத் தேடிவந்து அணி சேர்க்கின்றன. அவர் பெற்ற விருதுகளில் ராமன் மக்ஸஸாய் விருது, ஐக்கிய நாடுகள் சபை விருது ஆகியன குறிப்பிடத் தகுந்தவையாகும்.

      அணுகுவதற்கு எளியவரான அந்த ஆளுநரை நம் மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் அழைத்து வந்து, பட்டமளிப்பு விழா உரையினை நிகழ்த்தச் செய்து, தமிழக இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் ஒரு புதிய எழுச்சியைத் தரலாம்.Saturday, 21 May 2016

அரும்புகள் எழுதிய குறும்பா (ஹைக்கூ)

    ஆசிரியர் எவரேனும் விடுப்பில் இருந்தால் என்னை அழையுங்கள் என்று மாணவர்களிடம் சொல்லியிருந்தேன். அப்படி கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி ஹைக்கூ கவிதைகளை எழுதுவது குறித்து ஒரு வகுப்பு எடுத்தேன்.

    மூன்று வரிக்கவிதை. இரண்டு வரிகள் இயல்பாய் இருக்கும். மூன்றாம் வரியில் ஒரு குத்து இருக்கும். அதாவது ஒரு பன்ச் இருக்கும். குடும்பம், காதல், நாடு, சமூகச் சிக்கல் என எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்று உசுப்பி விட்டேன்.

     மறுநாள் கவிதைகள் வந்து குவிந்தன. கருவிலே திருவுடையார் மட்டுமே கவிதை எழுத முடியும் என்ற கருத்தை அடித்து நொறுக்கிவிட்டார்கள். முயன்றால் எவரும் எழுதலாம் என நிரூபித்து விட்டார்கள் எனது மாணவர்கள். இங்கே பதச் சோறாக சில குறும்பாக்கள்.

      படியில் நின்றபடி பயணம் செய்து தம் வாழ்க்கைப் பயணத்தைப் பாதியில் முடித்துக் கொள்ளும் இளைஞர்களைப் பற்றி எழுதுகிறார்கள்.

குடிமகன் பேருந்தில் ஏறினார்
படியில் நின்றார்
ஆம்புலன்சில் சென்றார்

என்பது எம்.எஸ்.கே.சரண்குமாரின் பதிவு.

பேருந்தில் சென்றான்
படியில் நின்றான்
நொடியில் மறைந்தான்

என்பது எஸ்.ஹரிஹரன் என்னும் மாணவனின் மனக் குமுறல்.

    அம்மா தெருக் குழாயில் தண்ணீர் அடிக்கிறாள். அப்பாவுந்தான் ஆனால் வேறு இடத்தில்.. போதையினால் பாதை மாறும் குடும்பத்தை அங்கதச் சுவையோடு படம்பிடித்துக் காட்டுகிறான் ஏ.எஸ்.தனுஷ் ஆதித்யா 

கஷ்டப்பட்டு அம்மா
இஷ்டப்பட்டு அப்பா
தண்ணி அடிக்கிறார்கள்.


டி.பிரதீபாவுக்கு தன் கணித  ஆசிரியருடன் ஏற்பட்ட அனுபவத்தை,

உனக்கு இன்று தீபாவளி
எனக்கு நாளை தீபாவளி
கணக்காசிரியர் பிரம்புடன் வருவார்

என்னும் ஹைக்கூவாக பதிவு செய்கிறாள்.

இன்று வாழ்வே ஒரு போராட்டமாக இருக்கிறது என்பதை நச்சென்று சொல்கிறான்  ச.வேத ஞானகுரு.

சுதந்திரம் வாங்குவதற்கு
முன்பும் போராட்டம்
பின்பும் போராட்டம்.

ம.காவ்யா எழுதியுள்ள ஒரு கவிதை நம் சமூகத்தின் மீது விழும் சாட்டை அடியாகவே உள்ளது.

மாடு பெண்கன்று ஈன்றால் மகிழ்ச்சி
ஆடு பெண்கன்று ஈன்றால் மகிழ்ச்சி
அகிலா பெண்ணைப் பெற்றால் இகழ்ச்சி!

Child is the father of men  என்பது ஆங்கிலப் பொன்மொழி. இதை அப்படியே ஒரு ஹைக்கூ வாகப் படைக்கிறாள் ஜி.மயூரி.

அம்மாவிடம் அன்பைப் பார்த்தேன்
அப்பாவிடம் கோபத்தைப் பார்த்தேன்
என்னிடம் அவர்களைப் பார்த்தேன்.

   போலீஸ்காரர் இலஞ்சம் வாங்குவதை எத்தனையோ திரைப் படங்களில் விதவிதமாகக் காட்டுகிறார்கள். ஆனால் கா.ஸ்ரீநிகா என்னும் மாணவி எழுதியுள்ள ஒரு ஹைக்கூ நம்மைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறது.

பிச்சைக்காரரும் போலீஸ்காரரும்
கடைக்காரரிடம் கேட்டார்கள்
ஒருவர் பணிவாக மற்றவர் மிடுக்காக.

    தம் சகவயது மாணவ மாணவியர் பலரும் பள்ளியில் படிக்க முடியாத அவலநிலையில் இருப்பதை தம் கவிதைகளில் சுட்டிக் காட்டுகிறார்கள்; இல்லை இல்லை குட்டிக் காட்டுகிறார்கள்.

புத்தகப் பையை
சுமக்கும் வயதில்
குப்பைப் பையை சுமக்கிறது.
                 -சு.மெ.ஜூமர் நித்திஷ்

பதினைந்து வயதில் அவனுக்கு
அரசாங்க அலுவலகத்தில் வேலை
தேநீர் விற்கிறான்.
                  -ம.காவ்யா

அம்மா நோயில்
அப்பா போதையில்
நான் வேலையில்
                   -த.பிரதீபா

பெற்றக் குழந்தையை
வேலைக்கு அனுப்புவது
ஒரு புதுவிதமான பிச்சை!
                    -கா.ஸ்ரீநிகா

    இவர்களெல்லாம் வருங்காலத்தில் சிறுமை கண்டு பொங்கி எழும் நக்கீரத் துணிச்சல் மிகுந்த கவிஞர்களாகவும் கவிதாயினிகளாகவும் உருவெடுப்பார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு நிறையவே உள்ளது.