Friday, 17 January 2025

நல்ல நோக்கத்திற்காக ஒரு நடைப்பயணம்

    ஈரோட்டில் ‘முனை’ என்னும் தன்னார்வத் தொண்டு அமைப்பு பாராட்டுக்குரிய வகையில் செயல்படுகின்றது. இதில் கல்லூரியில் படிக்கின்ற, படித்து முடித்த இளைஞர்களும் இளம்பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.

    பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துகின்றனர். அண்மையில் அம்மாபாளையம் என்னும் ஊரில் ‘ஒரு நாள் நேர்மை’ என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி, எழுத்தாளர் ஜெயமோகன் போன்ற பேராளுமைகளைத் தம் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளனர்.

   ஒவ்வொரு வீடாகச் சென்று, “ஐயா, நாளை ஒரு நாள் முழுவதும் நேர்மையாக இருங்கள். உங்கள் நினைப்பில், சொல்லில், செயலில் நேர்மை வெளிப்படட்டும்.” என்று வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட ஊர்மக்கள் முழு ஒத்துழைப்பைத் தந்தனர்!

    இந்த நிகழ்வின் வெற்றியைத் தொடர்ந்து 400 கி.மீ, நடைப்பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டனர். ஒரு சுற்றுப்பயணத்தின் போது காந்தியடிகள் தங்கியிருந்த ஊர் கோவையில் உள்ள போத்தனூர். காந்தியடிகளின் வேண்டுகோளையேற்று இராஜாஜி அவர்கள் வேதாரண்யம் கடற்கரையில் உப்பெடுக்கும் போராட்டம் நடத்தினார். இவர்களுடைய நடைப்பயணம் போத்தனூரில் தொடங்கி மூன்று நாள்கள் ஆகின்றன. இம்மாதம் முப்பதாம் நாள் –காந்தி மறைந்த நாளன்று –வேதாரண்யத்தை அடைகின்றனர்.

      முற்றிலும் சிற்றூர் வழியே செல்லும் வகையில் பயணப்பாதையை வகுத்துள்ளனர். சிற்றூர் மக்களைச் சந்தித்து, தேர்தலின்போது வாக்குகளைப் பணத்திற்கு விற்கக் கூடாது என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நடைப்பயணத்தின் நோக்கம் என இக்குழுவை ஒருங்கிணைக்கும் இளைஞர் கூறுகின்றார். சிபி என்பது இவருடைய பெயர்.

    இந்தச் செய்தி அமெரிக்காவில் இருக்கும் எங்களுக்கும் எட்டியது. சிபியைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தோம். ரூபாய் ஐந்தாயிரம் நன்கொடை தருவதாய்ச் சொன்னபோது பணிவுடன் ஏற்க மறுத்துவிட்டார்! ‘வேண்டாமை' என்னும் விழுச்செல்வம் இயல்பாகவே இவரிடத்தில் அமைந்துள்ளமை பாராட்டத்தக்கது.



     இந்த நடைப்பயணக் குழுவில் பெண்களே மிகுதியாக உள்ளனர். பெண்களை weaker sex என முத்திரை குத்துவது தவறு என்பதைத் தம் செயலால் நிரூபித்துள்ளனர். அவர்களுக்குப் பாராட்டுகள்.

 தேடிச் சோறு நிதம் தின்றுபல

     சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம்

வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்

   வாடப் பல செயலகள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்

   கூற்றுக்கு இரையெனப்பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போலே – நான்

   வீழ்வேன் என்று நினைத்தாயோ?

 

என்று பாரதி கேட்டானே! இதே கேள்வியை இந்தக் குழுவில் உள்ளவர்கள் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளனர்.

 எதிர்காலம் குறித்த நம்பிக்கை வெளிச்சம் தெரிகின்றது.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

 

5 comments:

  1. அருமை மிகு இயற்கை அன்னை மடியமர்ந்து சேவையாற்றுமிந்த -முனை- யருக்கு இனியரின் இயல் வழி ஊக்கம் புவனமுள்ளவரைப் போற்றும்

    ReplyDelete
  2. தி.முருகையன்17 January 2025 at 21:14

    முனை - முயற்சி திருவினையாக்கும். இவர்களின் எண்ணம் ஈடேறும் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. போற்றுதலுக்கு உரியவர்கள்

    ReplyDelete
  4. ஐயா,
    வணங்கி வாழ்த்துவதோடு வரவேற்கிறோம்.
    இவண்,
    செயலாளர்,
    சத்தியமங்கலம் முத்தமிழ்ச் சங்கம்.
    ஈரோடு மாவட்டம்.

    ReplyDelete
  5. ஐயா,
    வணங்கி வாழ்த்துவதோடு வரவேற்கிறோம்.
    இவண்,
    செயலாளர்,
    சத்தியமங்கலம் முத்தமிழ்ச் சங்கம்.
    ஈரோடு மாவட்டம்.

    ReplyDelete