வெற்றிகளை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு, அவற்றை அடைவதற்குரிய வழிமுறைகளைப் பற்றி எந்தக்
கவலையும் இல்லாமல் செயல்படுவதை அறிவுடையவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
நடந்து முடிந்த தேர்தலில் வேட்பாளர் பலரும் வழிமுறைகளைப்
பற்றி யோசிக்காமல் எப்படியேனும் வெற்றியடைந்தால் சரி என்று செயல்பட்டிருப்பதை
கட்சிக்காரர்கள் வேண்டுமானால் மறுக்கலாம்; நடுநிலையாளர்கள் எவரும்
மறுக்கமாட்டார்கள்.
குறுக்கு வழிகளில்
பெற்ற வெற்றிகளை நினைத்து எப்படி மகிழ முடியும்? படிப்பறிவில்லாத,
படிப்பறிவிருந்தும் விழிப்புணர்வில்லாத மக்களை
ஏமாற்றி வெற்றியடைந்தவர்களின் நெஞ்சம் அவர்களைச் சுடாதா?
ஐந்நூறு
ஆயிரத்துக்குச் சோரம் போகிறவர்கள் தமிழர்கள் என்னும் அவப்பெயர் வந்து விட்டதே. இலவசங்களை
விரும்பும் இளித்தவாயர்கள் தமிழர்கள் என்னும் கூடுதல் அவப்பெயரும் வந்துவிட்டதே.
மனிதருக்கு மனிதர்
பணிவு காட்டுவதில் தவறில்லை. ஆனால் முதுகெலும்பில்லாத புழுக்களைப் போன்று கூனிக்குறுகி,
வளைந்து நெளிந்து பணிவைக் காட்டுவதில் தமிழர்க்கு நிகர் தமிழர்தாம் என்னும் களங்கமும்
வந்து சேர்ந்து விட்டதே.
யார் எதைச்
சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாதே; அதில் உள்ள உண்மைத் தன்மையை உணர்க என உரைத்த
வள்ளுவரின் குறளைக் காற்றில் பறக்கவிட்டு, பரப்புரையையும் பசப்புரையையும் நம்பி
ஏமாந்த ஏமாளித் தமிழர், கம்பத்தில் பறக்க
வேண்டிய கட்சிக் கொடிகளைக் கழுத்தில் சுற்றித்திரிந்த கோமாளித் தமிழர் என்றெல்லாம்
கேரளா, ஒடிசா, மேற்குவங்க மக்கள் பேசுகிறார்களே!
ஐயகோ! அவமானம்!
அவமானம்!