Monday 10 October 2016

திருக்குறளில் தடம்பதித்த சான்றோர் தி.சு.அவினாசிலிங்கம்

   ஆராய்ச்சிக்கு உரிய  நூலாக மட்டுமே இருந்த திருக்குறளை, அறிஞர்களுக்கு மட்டுமே எட்டும் வகையில் பரண் மீது கிடந்த திருக்குறளை மீட்டெடுத்து அனைவரும் படிக்க வேண்டிய நூல் என அறிமுகம் செய்த பெருமை திரு.தி.சு. அவினாசிலிங்கம் அவர்களையே சாரும்.

  திருப்பூர் சுப்பிரமணிய அவினாசிலிங்கம் என அறியப்படுகிற தி.சு.அவினாசிலிங்கம் அவர்கள் பழைய கோவை மாவட்டம் திருப்பூரில் 1903ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் சுப்பிரமணியம்; தாயார் பெயர் பழனியம்மாள் செல்வச் செழிப்பு மிக்க வணிகக் குடும்பத்தில் பிறந்தாலும் அவர் ஒருபோதும் ஆடம்பரத்தை விரும்பியதில்லை. பின்னாளில் அவர் ஐயா என்றே அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.
  திருப்பூர் நகராட்சிப் பள்ளியிலும், கோவை இலண்டன் மிஷன் பள்ளியிலும் பள்ளிப் படிப்பைப் படித்து முடித்தார். பட்டப் படிப்பை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சட்டப் படிப்பை சென்னை சட்டக் கல்லூரியிலும் முடித்தார். தன் இருபத்து மூன்றாம் வயதில் வழக்கறிஞராகப் பதிவுசெய்து கொண்டு, தன் தாய் மாமாவான  புகழ் பெற்ற வழக்கறிஞர் இராமலிங்கம் செட்டியாரிடத்தில் உதவியாளராகச் சேர்ந்து தொழில்  பழகினார்.

   கல்லூரி மாணவராக இருந்தபோதே மகாத்மா காந்தியின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்பட்டவர்.  சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1930இல் ஒரு முறையும் 1930இல் ஒருமுறையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். நாற்பதுகளில்  வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று இருமுறை சிறை சென்றார்.

    1934இல் தாழ்த்தப்பட்டோர் நல நிதிக்காகத் தமிழகம் வந்த காந்தியடிகளுக்கு அவினாசிலிங்கம் அவர்கள் பெருந்துணை புரிந்தார். அடிகளின் சுற்றுலாச் செலவு முழுவதையும் தன் சொந்தப் பொறுப்பில் ஏற்றுக் கொண்டதோடு, இரண்டரை இலட்சம் ரூபாய் நிதியையும் சேகரித்துக் கொடுத்தார்.

   தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு, அன்றைய சென்னை மாகாண  மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 முதல் 1949 முடிய மூன்று ஆண்டுகள் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள்   முதலமைச்சராக இருந்த காலக்கட்டம் அது.

     தமிழகத்துப் பள்ளிகளில் முதன் முதலில் தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்தார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தை உருவாக்கினார். தான் பதவியேற்றதும் நடைமுறையில் இருந்த பள்ளிப் பாடநூல்களை ஆய்வு செய்தார். தமிழ்ப் பாடநூல்களில் திருக்குறள் இல்லாததைக் கண்டு மனம் பதறினார்.  உடனே கல்வித்துறை உயர் அதிகாரிகளை அழைத்து ஆறாம் வகுப்பு முதல் திருக்குறளைப் பாடத்திட்டத்திலும் பாடநூலிலும் சேர்க்க ஆவன செய்யுமாறு அறிவுறுத்தினார். உடனே திருக்குறள் அச்சடிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் பள்ளிகளில் திருவள்ளுவர் விழா கொண்டாடுவதற்கும் சுற்றறிக்கை அனுப்பினார். இது நடந்தது 1946ஆம் ஆண்டு. ஆக முதல் முதல் தி.சு. அவினாசிலிங்கம் அவர்களின் முயற்சியால்  பள்ளிப் பாடத்திட்டத்தில் பைந்தமிழ்க் குறட்பாக்கள் இடம்பெற்றன என்பது தமிழக வரலாற்றின் பொன்னேடுகளில் பதிவானது.

     விடுதலைப் போரில் ஈடுபட்டு நான்கு முறைகள் சிறைவாசம் செய்ய நேர்ந்தபோது திருக்குறளை ஆழ்ந்து நுணுகிப் படித்தார். திருக்குறள் உலக நீதி நூல்கள் அனைத்திலும் சிறப்புடையது. தினசரி வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது என்று அடிக்கடி கூறுவார் ஐயா அவர்கள். திருக்குறளுக்குப் பல உரைகள் இருப்பினும் ஓர் ஆராய்ச்சி உரை எழுதப்பட வேண்டும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தார். பேராசிரியர்கள் அறிஞர்கள் பலரையும் சந்தித்துப் பேசினார்.

   இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
   அதனை அவன்கண் விடல்

என்னும் குறளுக்கு ஏற்ப அந்தப் பெரும் பணிக்குக் கலைமகள் இதழின் ஆசிரியராக இருந்த  திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்களைத் தேர்ந்தெடுத்தார். திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்புத் திட்டம் எனப் பெயரிட்டார். அப்போது நம் நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த மேதகு டாக்டர் இராஜேந்திர பிரசாத் மேற்காண் பதிப்புத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இது நடந்தது 1953ஆம் ஆண்டு. திரு.கி.வா.ஜ அவர்கள் கடுமையான உழைப்புக்குப் பெயர் பெற்றவர். உழைப்பின் வாரா உறுதிகள் உண்டோ? ஒரு பத்தாண்டு  உழைப்பிற்குப்பின் ஆராய்ச்சிப் பதிப்பின் பணி இனிதே  நிறைவடைந்தது. 1963ஆம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த மேதகு டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் பழைய கல்கி தீபாவளி மலர் அளவில் 1020 பக்கங்கள் கொண்ட திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பை வெளியிட்டார்.

     பல்வேறு உரைகளை ஒப்பிட்டு, பொருத்தமான இலக்கிய மேற்கோள்களைத் தந்து, பின் இணைப்பாக பொருள் குறிப்பு அகராதியையும் சேர்த்து, பாயாசத்தில் சுவை சேர்க்கும் முழு முந்திரிப் பருப்பைப் போல அறிஞர்தம் ஆய்வுக் கட்டுரைகளையும் இணைத்து ஒப்பில்லாத ஆராய்ச்சிப் பதிப்பை வெளிக்கொணர்ந்த ஐயா அவர்களையும் கி.வா.ஜ அவர்களையும் கோயில் கட்டிக் கும்பிடலாம்.

 ஆங்கிலத்திலுள்ள பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் போல தமிழிலும் உருவாக்க வேண்டும் என ஐயா எண்ணினார். மா.ப.பெரியசாமி தூரன் அவர்களின் துணையோடு 1948இல் தமிழ்க் கலைக்களஞ்சியப் பணியைத் தொடங்கிப் பத்துத் தொகுதிகளை வெளியிட்டு அப் பெரும்பணியை 1968இல் செவ்வனே செய்து முடித்தார். இப்பெரும்பணியில் டாக்டர் ஏ.எல்.முதலியார், பாரத ரத்னா சி.சுப்பிரமணியம், டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், ரா.பி.சேதுபிள்ளை, டாக்டர் மு.வரதராசனார் ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது என ஐயா அவர்கள் தம் சுயவரலாற்று நூலில் பதிவு செய்துள்ளார்.

   அதனைத் தொடர்ந்து மீண்டும் பெரியசாமி தூரன் ஒருங்கிணைப்பில் ஓர் அறிஞர் குழுவை அமைத்துத் தானே முன்னின்று குழந்தைகள் கலைக் களஞ்சியத்தை உருவாக்கிப் பத்து தொகுதிகளாக வெளியிட்டார்.

   ஐயா அவர்கள் குறள் நெறியில் வாழ்ந்து காட்டியவர். அறத்தான் வருவதே இன்பம் என்னும் கொள்கைப் பிடிப்போடு இருந்தார். குறள் நெறியைப் பரப்புவதில் குறியாக இருந்தார். அவரது வசிப்பிடத்திற்கு அருகில்  இருந்த வித்யாலயா உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் குறட்பாக்களைச் சொல்லச் சொல்லி ஆர்வமுடன் கேட்பார்; பரிசு வழங்கிப் பரவசப்படுவார்.

   இடுக்கண் வருங்கால் நகுக, அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், உள்ளத்தனையது உயர்வு, அஞ்சுவது அஞ்சாமை பேதமை, தவம் செய்வார் தன் கருமம் செய்வார் ஆகிய திருக்குறள் தொடர்களை ஐயா அவர்கள் தம் பேச்சிலும் எழுத்திலும் மேற்கோள்களாகக் காட்டுவார். அவற்றைத் தன் சொந்த வாழ்வில் செயல்படுத்திக்  காட்டினார்.

   கல்லூரி மாணவர்களுக்கு மாலை நேர திருக்குறள் வகுப்புகள் நடத்த ஆவன செய்தார். நான் படித்த கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் இயங்கி வரும் இராமகிருஷ்ண மிஷன் கலைக் கல்லூரியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மாலையில் திருக்குறள் வகுப்பு நடக்கும். தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் சொ.அரியநாயகம் அவர்கள் அந்த மாலை நேர வகுப்புகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் திருக்குறளைக் கற்பித்தார்.

தாளாற்றித் தந்த செல்வமெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

என்னும் குறளுக்கேற்ப, தன் முயற்சியால் ஈட்டிய பெருஞ்செல்வத்தையும் தந்தையார் வழிவந்த செல்வத்தையும் ஒன்று சேர்த்து ஒரு  கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். கோவையில் ஒரு சிறார்ப் பள்ளியை 1930இல் தொடங்கினார். அது பின்னர் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் வித்யாலயமாக பல்கிப் பெருகியது. 1955இல் கோவையில் அவரால் தொடங்கப்பட்ட பெண்கள் பள்ளி இன்று அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் என்னும் பெயரில் உலக  அளவில் புகழ் பெற்று விளங்குகிறது.

    1952 முதல் 1964 வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய ஐயா அவர்கள் மகாத்மா காந்தியடிகள் தொடங்கி, நேரு, இந்திரா காந்தி என மாபெரும் ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகும் பேறு பெற்றவராக இருந்தார்.

   ஐயா அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைப் பெற்றிருந்தார். இரு மொழியிலும் பல நூல்களை எழுதியுள்ளார். நான் கண்ட மகாத்மா, The Sacred Touch ஆகியன குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.

   எடுத்துக் கொண்ட வேலையை மிகச் சரியாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் கருத்தாக இருப்பார். உடன் பணியாற்றுவோர் வேலையைச் சரியாகச் செய்யாதபோது கோபம் கொள்வார். அது பழிவாங்கும் கோபமாக இருக்காது; பண்படுத்தும் கோபமாக இருக்கும்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

என்னும் குறளுக்கேற்ப அந்தக் கோபம் ஒரு கணம் கூட நீடிக்காது

   குடும்பப் பொறுப்பில் சிக்கினால் முழுமையாக சுதந்திரப் போரில் பங்கேற்க முடியாமல் போய்விடும்  என எண்ணிய ஐயா அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. தாம் கண்ட கனவுத் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றி, நிறைவாழ்வு வாழ்ந்து 1991ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி, தன் எண்பத்தெட்டாம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.

   அவர் வாழுங்காலத்திலேயே அவர்தம் மகத்தானப் பணிகளுக்கு அங்கீகாரமாக பல விருதுகள் வந்து குவிந்தன. அவற்றுள் அவர் பெற்ற நாட்டின் உயரிய விருதான பத்மபூஷன் விருதும் ஜம்னாலால் பஜாஜ் விருதும் குறிப்பிடத் தகுந்தவை.

     குறள் நெறியில் வாழ்ந்தவரும், திருக்குறளைப் பாடத் திட்டத்தில் சேர்த்தவரும், அறிஞர் போற்றும் செம்பதிப்பாக திருக்குறள் ஆராய்ச்சி உரையை வெளியிட்டவருமான தி.சு.அவினாசிலிங்கம் ஐயா அவர்கள் திருக்குறளில் தடம்பதித்தச் சான்றோர் எனத் தமிழ் கூறும் நல் உலகம் ஏற்றுக் கொள்ளும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
      Article written by Dr.A.Govindaraju
      Input courtesy: Prof.A.Perumal Formerly Professor of Maths, SRMV Arts College.

கட்டுரை ஆசிரியர் கல்வியாளரும் உளவியலாளரும் ஆவார். டாக்டர் கலாம் அவர்களால் தேசிய விருது வழங்கப் பெற்றவர். நாற்பது ஆண்டுகள் ஆசிரியப்பணி அனுபவம்  உடையவர். தற்போது  கரூர் வள்ளுவர் கல்லூரியில் மனநல ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.

4 comments:

  1. திருக்குறளில் தடம் பதித்த சான்றோர் தி.சு.அவினாசிலிங்கம் அவர்களைப் பற்றிய அரிய தகவகளை இக்கட்டுரையின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். திருக்குறளை அனைவரும் படித்து இன்புறவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ்நாட்டுப்பாடநூல் பாடத்திட்டத்தில் சேர்கக வழிவகை செய்ததால் அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிய பணியினால் அனைவரின் மனத்திலும் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளார் அய்யா அவர்கள். தமிழுக்குத் தொண்டு செய்தவன் சாவதில்லை என்பதற்கு அய்யா தி.சு.அவினாசிலிங்கம் அவ்ர்களே சான்று. வாழ்க தமிழ்த்தொண்டு.

    ReplyDelete
    Replies
    1. தமிழுக்குத் தொண்டு செய்தவன் சாவதில்லை
      ஆம். மிகச் சரியாக சொன்னீர்கள். நன்றி

      Delete
  2. போற்றுதலுக்கு உரிய மாமனிதர்

    ReplyDelete
  3. அரிய மனிதரைப் பற்றிய புதிய செய்திகளை அறிந்தேன். நன்றி.

    ReplyDelete