Friday 21 October 2016

கற்க கசடுற

    விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது ஒரு பொருள் நிறைந்த பொன்மொழியாகும். இன்றைக்குப் பள்ளிகளில் படிக்கும் சிறுவர் சிறுமியர் பலரும் தடம் மாறிப் போவதைப் பார்க்கும்போது நெஞ்சு நெக்குருகிப் போகிறேன்.


   அண்மையில் மதுரையில் நான் சந்தித்த காவல்துறை நண்பர் ஒருவர் தெரிவித்த செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனேன். பல்வேறு பள்ளிச் சீருடைகளில் இருந்த மாணவர் பலரை ஏற்றிக் கொண்டு வந்த போலீஸ் வேன் அது. ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்த குளக்கரை மரநிழலில் இந்த மாணவர்கள் பள்ளி வேலை நேரத்தில் கஞ்சாவைக் கசக்கிக் கொண்டிருந்தார்களாம். அப்படியே அவர்களை மடக்கி வேனில் அள்ளிப் போட்டுக் கொண்டு அவர்கள் படிக்கும் பள்ளிக்குச் சென்று, தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்து அறிவுரை சொல்லிவிட்டு வந்தார்களாம் காவல்துறையினர்.

    நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த செய்தி இன்னும் மோசம். திருப்பூர் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் புகைத்துக் கொண்டிருந்தார்களாம். வேறு சிலர் மது அருந்திக் கொண்டிருந்தார்களாம். ஆசிரியர் சிலர் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று தலைமையாசிரியர் முன் நிறுத்த, அவர் தலையில் அடித்துக்கொண்டு பெற்றோரை அழைத்துவரச் சொன்னாராம். சொல்லிவைத்தாற்போல் மறுநாள் ஒரு மாணவன்கூட பெற்றோரை அழைத்துவரவில்லையாம். ஒருவாரம் இடைநீக்கம் செய்வதாகச் சொன்னதும் நன்றி சொல்லிவிட்டு மகிழ்ச்சியாகப் போய்விட்டார்களாம். ஒரு வாரம் கழித்து அவர்கள் வந்ததும் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு வகுப்புக்கு அனுப்பிவிட்டு, அவற்றைப் படிக்கும்போதே தலைமை ஆசிரியருக்கு மயக்கம் வந்ததாம்!

    “இனிமேல் நான் பீடி குடிக்க மாட்டேன்” என்று ஒருவன் எழுத, மற்றொருவன், ”இனிமேல் பள்ளி வளாகத்தில் மது குடிக்க மாட்டேன்” என்று எழுதியிருந்தானாம்!

    “பள்ளி ஆண்டுவிழாவின் போது மூத்த மாணவர்களைச் சமாளிக்க முடியவில்லை. நூற்றுக்கு ஐம்பது பேர் மது அருந்தி வருகிறார்கள்” என்று ஒரு மெட்ரிக் பள்ளி முதல்வர் என்னிடம் மனம் வருந்திக் கூறினார். “இப்போதெல்லாம் நாங்கள் ஆண்டு விழாவைக் கொண்டாடுவதே இல்லை” என்று மற்றொரு முதல்வர் குறிப்பிட்டார்.

   பணக்கார வீட்டு மாணவர்கள் எப்படியோ போகட்டும். ஆனால் ஏழை, நடுத்தர பெற்றோரின் குழந்தைகள் கெட்டுப் போவதுதான் கொடுமையாக இருக்கிறது. மேய்கிற மாட்டை நக்குகிற மாடு கெடுத்ததாம் என்னும் பழமொழிக்கொப்ப பணக்கார மாணவர்கள் ஏழை மாணவர்களைக் கெடுத்து விடுகிறார்கள்.

   பள்ளிப் பருவத்தில் தடம்புரண்டவர்கள் கல்லூரிக்குச் சென்றால், அங்கும் அவர்களுடைய படுத்தல் தொடர்கிறது. கல்லூரிப் படிப்புக்குப் பின்னும் அடாவடித்தனம் அதிகமாகிறது. 

   பதினாறு இருசக்கர வாகனங்களைத் திருடி தன் வீட்டின் கொல்லைப்புறத்தில் நிறுத்தி வைத்திருந்த பொறியியல் பட்டதாரி இளைஞன் பற்றிய செய்தி தினமணியில் வந்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு நண்பர்களுக்கு மது விருந்து வைப்பதற்காகத் திருடினானாம். ஏதோ ஒரு திரைப்படத்தில் தலைமையாசிரியரின் பைக்கை திருடியதை ஒருவன் பெருமையாகப் பாடுவான்! கதை எப்படி எப்படியோ போகிறது.

    பள்ளிகள் என்பன சமுதாயத்தின் நாற்றங்கால்கள் போன்றவை. இந்த நாற்றங்கால்கள் பழுதுபட்டால் என்ன நடக்கும்? பழுதுபட்ட நாற்றுகள் நாளை சமுதாயத்தில் நடப்பெறும்போது விளைச்சல் எப்படி இருக்கும்? நாற்றங்கால்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு யார் யாரிடம் உள்ளது?

  ஆசிரியர், பெற்றோர், அரசினர், காவல்துறையினர், ஊடகத் துறையினர், பொதுமக்கள் என அனைவரும் பொறுப்புடனும் விழிப்புடனும் நடந்து கொண்டால்தான் பள்ளிச் சிறுவர்களைப் பக்குவமாக வளர்த்தெடுக்க முடியும்.

   மதிப்பெண் வாங்கினால் போதும் என நினைக்கும் பெற்றோர், சிறுமை கண்டு ஒதுங்கி நிற்கும் பொதுமக்கள், அடுத்தத் தேர்தலைக் குறிவைத்துக் காயை நகர்த்தும் அரசினர், கைகள் கட்டப்பட்ட ஆசிரியர்கள், இயந்திர கதியில் இயங்கும் காவல்துறையினர், பணம் பார்ப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்ட ஊடகத்துறையினர் ஆகியோரை வைத்துக்கொண்டு எப்படி இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியும்? இவர்களுள் நக்கீரத் துணிச்சலுடையவர் சிலரின் முயற்சியால் தடம் மாறிப் போவோரில் ஓரிருவர் தடுத்தாட்கொள்ளப்படுகிறார்கள். பலர் யாரும் மெனக்கடாமலேயே  நல்லவராக உருவாகித் துறை தோறும் பணியாற்றுவதால்தான் நம்நாட்டின் பெருமை இன்றும் காக்கப் படுகின்றது.

   நீதிபோதனை வகுப்புகளை என்று ஓரங்கட்டினோமோ அன்றிலிருந்து நம் குழந்தைச் செல்வங்கள் தடம் மாறத் தொடங்கிவிட்டன.

  ஆற்றுக்குக் குளிக்கப் போனவன் சேற்றைப் பூசிக்கொண்டு வந்தானாம்! இதுதான் இன்று நிலவும் கல்வி முறையின் அவலநிலை.

  கற்க கசடு அற என்பதற்கு மாறாக கற்க கசடு உற என்றல்லவா ஆகிவிட்டது?


எப்போது நாம் விழித்துக்கொள்ளப் போகிறோம்?

4 comments:

  1. முதலில் ஆசிரியரின் கரங்கள் விடுதலைபெற வேண்டுமய்யா
    தேர்ச்சி விழுக்காடு என்னும் மாயையில் இருந்து மீள வேண்டும் ஐயா

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை. மாணவப் பருவம் பல சவால்களைக் கொண்டது. அதில் எந்தவிதமான சபலத்திற்கும் ஆளாகாமல் தன் நாடு, தன் வீடு, தன் முற்சி என என்ணுபவனால் மட்டுமே எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கமுடியும். மதுரை தியாகராசர் மாடல் மேல்நிலைப் பள்ளியில் நான் படித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறேன். அங்கு பணியாற்றிய ஒவ்வொரு ஆசிரியரும் மிகவும் கண்டிப்பானவர்கள். அதிலும் இராஜமாணிக்கம் என்ற பெயர் கொண்ட ஆசிரியரைக் கண்டால் அவ்வளவு பயம். காரணம் அவரது பாடத்தில் நூற்றுக்கு 95 மதிப்பெண்கள் பெற்றாலும் வகுப்பிற்கு வெளியில் அமரவைத்து பிரம்பால் அடிப்பார். இதன் காரணமாகவே அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர முடிந்தது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பழைய திரைப்பட நடிகர் எஸ்.வி.ரங்காராவை நினைவுபடுத்துவார். நல்ல உயரம். உயரத்திற்கு ஏற்ற உடல் வாகு. குரலில் அப்படியொரு கம்பீரம். காலை ஒன்பது மணிக்கு இறைவணக்கக்கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். தவறுபவர்களுக்குப் பள்ளிக்குள் நுழைய அனுமதியில்லை அனைத்து பெரிய கதவுகளும் அடைக்கப்பட்டுவிடும். அதன் பிறகு ஒற்றையடிப் பாதை போன்ற கதவு திறக்கப்படும். அதில் நுழைந்தால் நேராக தலைமையாசிரியரிடம் அவ்வழி கொண்டு சேர்க்கும். அதன் பிறகு அர்ச்சனை, ஆராதனை மற்றும் அபிஷேகம் எல்லாம் உண்டு. ஒருமுறை அனுபவித்தவர்கள் காலம் தவறமாட்டார்கள் அல்லது பள்ளிக்கே வரமாட்டார்கள். அத்தகைய கல்வியைப் போதித்த கல்வி நிறுவனம் அது. அது தான் வளமான நிலம். அங்கு விதைக்கப் பட்டு பயிரானவ்ர்கள் யாரும் பதர் ஆகவில்லை என்பது உண்மை. ஆனால் இன்று விதி 56 இன்படி ஆசிரியரின் கண்கள், கைகள் அனைத்தும் இறுகக் கட்டப்பட்டுள்ளது. அன்றைய கல்வியாளர்கள் நல்ல அறிவுரைகளை அரசுக்கு வழங்கினர். ஒரு பள்ளிக்கூடம் கட்டினால் நூறு சிறைச்சாலைகளை மூடலாம் என்க் கூறினர். அறிவை வளர்க்கும் நாற்றாங்காலாக கல்வி நிறுவனங்கள் விளங்கியது. இன்று கல்வி போய் கலவி, மது, புகை என் அனைத்தும் கற்கும் களி கூடமாகத் திகழ்கிறது. என்று இந்நிலை மாறுமோ தெரியவில்லை. டாக்டர்.ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்
    அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி)
    கரூர் - 05

    ReplyDelete
  3. Dear Sir, Its sorry state of affairs that some of the students nowadays do not mind about morality. They do whatever they like. As a result society gets ruined. Teachers like you alone could turm them to right path.
    By Judge M.Pughazhendi

    ReplyDelete
  4. ஐயா,
    இன்றைய இளைய தலைமுறை தடம்புரண்டு செல்வதற்கு முழுமுதற்காரணம் இன்றைய பெற்றோர்களே. குழந்தைகள் நல்ல மனிதர்களாக வரவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இன்றி எப்படியாவது பணம் சம்பாதிக்கும் மனிதனாக வரவேண்டும் என்றே தங்கள் குழந்தையை வளர்க்கிறார்கள். இன்றைய தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் ஊடகங்கள் கலாச்சார சீர்கேட்டை உருவாக்கியதுமே குழந்தைகள் தடம் மாறும் போக்குக்கு காரணம் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளீர்கள்.

    ReplyDelete