Wednesday, 13 December 2017

பாரதியார் குறிப்பிடும் பெரிய கடவுள் யார்?

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினபொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியில் பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்

   மேற்காண் பாடலில் பெரிய கடவுள் என்று பாரதியார் எந்தக் கடவுளைக் குறிப்பிடுகிறார்?

   ஓர் இணையமகன் ஓர் இணைய குழுமத்தில் தொடுத்த வினா இது. பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவு செய்தார்கள். ஒருவர் பெரிய கடவுள் என பாரதியார் குறிப்பிடுவது சிவபெருமான் என்று ஒரே போடாகப் போட்டார்.

   இது ஏதோ பாரதியாரை வம்புக்கு இழுப்பதுபோல் தோன்றினாலும் ஒருவகையில் என்னைச் சிந்திக்கத் தூண்டியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு.

    இலக்கணிகள் அடைமொழியை இனமுள்ள அடைமொழி, இனமில்லா அடைமொழி என வகைப்படுத்துவர். அந்தப் பகுதிக்கு நாம் இப்போது செல்ல வேண்டியதில்லை.

   பொதுவாக, ஒரு பெயர்ச் சொல்லின் முன் இரு வகைகளில் அடைமொழிகளைச் சேர்க்கலாம். அவற்றை அளவுசார் அடைமொழி(quantitative attributive), தரம்சார் அடைமொழி(qualitative attributive) எனலாம்.

பெருமை என்னும் அடைமொழியை இவ்விரு வகைகளில் பயன்படுத்தலாம்.

பெருமரம்=பெருமை+மரம் பெரிய மரம். இங்கே பெருமை என்பது அளவுசார் அடைமொழி.

பெருங்கடவுள்=பெருமை+கடவுள் பெரிய கடவுள். இங்கே பெருமை என்பது தரம்சார் அடைமொழி.

  எனவே பாரதியார் குறிப்பிடும் பெரிய கடவுள் என்னும் தொடரில் பெரிய என்பது தரம்சார் அடைமொழியாகும். அதை அளவுசார் அடைமொழியாக நினைத்துக்கொண்டு பெரிய கடவுள், சிறிய கடவுள் எனப் பாகுபடுத்தல் சிறப்பாகாது. பெருமை சால் கடவுள் என்னும் பொருளில் பெரிய கடவுள் எனக் குறிப்பிட்டிருப்பார் என்பது என் கருத்து.

   இன்னொரு கோணத்திலும் இதுகுறித்துச் சிந்திக்கலாம். பெண் விடுதலையை எந்தக் கடவுளும் வந்து காத்திட முடியாது. ஆடவர், பெண்டிர், அரசினர் என அனைவரும் காத்திட வேண்டும். அவ்வாறு பெண் விடுதலையைக் காத்திட உறுதியேற்று முன்வந்து செயல்படும் ஒவ்வொருவரையும் பெரிய கடவுள் எனக் குறிப்பிடுகிறார் என்றும் கொள்ளலாம். சிலசமயம், “ நீ கடவுளாய் வந்து என்னைக் காப்பாற்றினாய். நன்றி” என்று உதவிய மனிதரிடம் உர்ச்சி பொங்கச் சொல்கிறோமே!

  மேலும்  அப் பாட்டில் மோனைத் தொடைக்கு முதலிடம் கொடுத்துள்ளார் என்பதைக் கூர்ந்து பார்த்தால் தெரியும். மோனைத் தொடை இல்லாமல் எந்த இரு அடிகளையும் அவர் அமைக்கவில்லை. அந்த வகையில் பெண் விடுதலை- பெரிய கடவுள் என அடி மோனைக்காக அமைத்த அழகானத் தொடரே அது என்று இந்த விவாதத்தை விட்டுவிடலாம் என்பது என் கருத்து.

உங்கள் கருத்து என்னவோ?
.........................................
முனைவர் அ. கோவிந்தராஜூ,
அமெரிக்காவிலிருந்து.
6 comments:

 1. ஐயா, நீங்கள் ஒன்றைக் கூறினால் அதை மறுக்கும் கருத்துக்கள் எவரிடமும் இருக்க வாய்ப்பில்லை என்பது எனது கருத்து. ஏனெனில் ஒவ்வொரு கருத்துக்களையும் ஆராய்ச்சி செய்யாமல் நீங்கள் பதிவிட்டதில்லை. அவர் சிவபெருமானைக் குறிப்பிடக்காரணம் சிவபெருமான் தன்னில் பாதியாக பார்வதியை பாவித்ததால் என்றே நான் நினைக்கிறேன் ஐயா. சிவனை மிஞ்சும் சக்தி இவ்வுலகில் இல்லை எனவும் கொள்ளலாம். அனைத்துமதங்களின் வழிபாட்டிலும் சிவ என்ற உச்சரிப்பு உள்ளது என்பது என் சிற்றறிவுக்கு எட்டியது.

  ReplyDelete
 2. நல்ல விளக்கம் ஐயா! நாங்களும் அறிந்து கொண்டோம்.

  ReplyDelete
 3. தங்கள் கருத்துச் சரியாகத்தான் இருக்கும் ஐயா
  நன்றி

  ReplyDelete
 4. அய்யா, வணக்கம். அறிவைத் தூண்டும்படி எழுப்பப்பட்ட வினாவாகக் கருதுகிறேன். கவிஞர்கள் எதை வேண்டுமானாலும் பிதற்றிவிடமாட்டார்கள். அதனுள் நுட்பமான ஒரு கருத்தைப் பதிவிடுவர். அது அவர்களுக்கே உரித்தான ஒரு செய்கை, அது இயல்பாக அவர்களுக்கு வசப்படும். பாரதியார் மட்டுமன்றி திருவள்ளுவரும் நுட்பமான சொற்களைப் பதிவிட்டுள்ளார். தாங்கள் இலக்கண விதிகளைச் சுட்டி இவ்வாறு தான் இருக்கவேண்டும் என விளக்கியுள்ளீர்கள். தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற பொதுப்பார்வையில் பாரதியார் பதிவிட்டிருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது. இந்த இடத்தில் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன். பாரதி யார்? என்ற வினாவுடன் வகுப்பில் பெயர்க்காரணம் கேட்பேன். அப்பொழுதுதான் அவரது இயற்பெயர் சி.சுப்பிரமணியம் எனக் குறிப்பிடுவர். அடுத்து பாரதி என்ற பட்டத்தை எட்டயபுர சமஸ்தானத்தில் பல புலவர்கள் மத்தியில் சிறுவனான சுப்பிரமணியம் சிறந்த கருத்துக்கள் அடங்கிய கவிதைகளைப் புனைந்ததால் அப்புலவர்கள் வழங்கிய பட்டம் பாரதி எனக்கூறுவேன். பாரதி என்பதற்கு கலைமகள் என்ற பொருளும் உண்டு. பாரதியார் தனக்காக இக்கவிதை வரிகளில் எதையும் கேட்கவில்லை மாறாக உலக மக்கள் அனைவரின் ஒட்டு மொத்த விருப்பமாக கருத்துத் தெரிவிக்கிறார். இதனை ”இருண்மைப் பண்பு” என ஆய்வாளர்கள் கருத்துக் கூறுவர். ’பூடகம்’ என்ற சொல்லையும் கூறலாம். கவிஞர் தான் கூற வந்ததைப் பூடகமாக அல்லது மறைபொருளாக அவருக்கு (கவிஞருக்கு) மட்டுமே மனதினுள் வைத்துக் கூறுவதாகக் கருதலாம். இந்த கவிதையில் குறிப்பிடப்படும் “பெரிய கடவுள்” என்ற இரு சொற்கள் கண்டிப்பாக இறைவன் என்ற பதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. வாழும் மக்களுக்கு வழிகாட்டியாய், ஒளிகாட்டியாய் எவர் ஒருவர் பாரதியாரின் விருப்பதை நிறைவேற்றுவார்களோ, அவரே பெரிய கடவுள் ஆவார். அவரே மனிதரில் தெய்வமாவார். எனவே, தங்களது வினாவிற்கு விடையாக எனது கருத்தைக் கூறுகிறேன். மேலும், தங்களது சிந்தனையும் சரியானதாகத் தோன்றுகிறது. ”ஆடவர், பெண்டிர், அரசினர் என அனைவரும் இவ்வுலக மக்களைக் காத்திட வேண்டும். அவ்வாறு பெண் விடுதலையைக் காத்திட உறுதியேற்று முன்வந்து செயல்படும் ஒவ்வொருவரையும் பெரிய கடவுள் எனக் குறிப்பிடுகிறார் என்றும் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளது சரியே.
  முனைவர் ரா.லட்சுமணசிங்
  பேராசிரியர்
  தமிழாய்வுத்துறை
  அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
  கரூர் - 639 005

  ReplyDelete
 5. பாரதியார் கருதிய "பெரிய கடவுள்" இங்கு ஞாயப்படுத்தப்பட்டுள்ளார் நன்றி.

  ReplyDelete