Tuesday 9 January 2018

வைரத்தைக் கொச்சைப் படுத்தும் வைரமுத்து

  திரைப்படங்களுக்குப் பாட்டெழுதும் வைரமுத்து அவர்கள் இன்று(8.1.18) தினமணியில் தமிழை ஆண்டாள் என்னும் தலைப்பில் ஒரு நெடுங்கட்டுரையை (கொடுங்கட்டுரையை) எழுதியுள்ளார். வழக்கம்போல் சொற்சிலம்பம் ஆடியுள்ளார்.
  ஐந்தாம் வகுப்பு மாணவன் பசுமாடு பற்றிய கட்டுரை எழுதிய கதையாக அமைந்து படிப்போரைப் பரவசப்படுத்துகிறது. (தமிழாசிரியர் பசுமாட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொல்ல, தென்னை மரத்தைப்பற்றி விரிவாக எழுதிவிட்டு, அந்தத் தென்னை மரத்தில் பசுமாடு கட்டப்பட்டிருந்தது  என முடிவுரை எழுதினானாம்!)

 வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதுவது என்பது பெருமையா? கட்டுரையைப் படித்தபோது கண்ணில் பட்ட பிறமொழிச் சொற்கள் பல; அவற்றுள் சில: மனோகரமானது, யக்ஞம், வாத்சல்யம், செளலப்பியம், வர்க்க பேதம், புருஷார்த்தங்கள், ரூபம், ஜீவர், பாஞ்ச சன்யம், அர்ச்சாவதாரம், விக்கிரகம், ஸ்ரீதனம்.

   “குலசேகரப் பெருமாள் தமது புத்ரி சோழவல்லி.....” என்று எழுதுகிறார். மகள் என்னும் சொல்லைப் பயன்படுத்தினால் என்ன குறைந்துவிடும்? இதைப் படிக்கும்போது தமிழுக்கு எதிரி தமிழர்தாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

இது ஒருபக்கம் இருக்கட்டும்.

    “எட்டாதன எட்டுவதற்கும் கிட்டாதன கிட்டுவதற்கும் மனிதகுலத்தின் முதல் மூலதனம் நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கைதான்”  என்னும் செய்தியை ஆண்டாள் விட்டுச் சென்றதாக கட்டுரையின் முடிவுரையில் குறிப்பிடும் வைரமுத்து,  ஆண்டாள் தன் கனவில் கண்ணனுடன் கலவியில் ஈடுபட்டதாக கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார். இதற்கும் ஒரு படி மேலாக, “பெருமாளுக்காக முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்” என்று கொச்சையாக விமர்சிக்கிறார். “கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?” என்று ஆராய்கிறார். இதற்காக அவருக்கு ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கினால் நல்லது.

    ஆண்டாள் தன் பாடல்களில் கொங்கை போன்ற சொற்களைப் பயன்படுத்தியதன் மூலம் பாலியல் விடுதலைக்காகப் பாடிய பெண் என்று பாராட்டுகின்றார். இந்தக் கண்டுபிடிப்புக்காக யாராவது அவருக்கு மதிப்புறு முதுமுனைவர் பட்டத்தை வழங்கலாம்.

    ஆண்டாளின் பிறப்புக் குறித்த செய்தி அதாவது அவளது சாதி குறித்தச் செய்தி கிடைக்காதது குறித்து மிகவும் வருந்துகிறார் வைரமுத்து.

   எட்டாம் நூற்றாண்டில் பிறந்து, பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக உயர்ந்து வாழ்ந்தவளுடைய சாதி குறித்து ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு வினா எழுப்புகிறார் இவர். அவளை எடுத்து வளர்த்த பெரியாழ்வார் கூட அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் வைரமுத்து ஏன் கவலைப்படுகிறார் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

  வாழ்ந்து முடிந்த அல்லது வாழுகின்ற ஒருவரின் பிறப்பு, சாதி குறித்து மூக்கை நீட்டித் துழாவுவது தேவையற்றது; அநாகரிகமானதும் கூட.

    போகிற போக்கில், ஆண்டாள் திருவரங்கத்தில் வாழ்ந்த தேவதாசி என்று ஆதாரத்துடன்(?) திருவாய் மலர்ந்துள்ளார். தமிழை ஆண்டாள் என்னும் தலைப்புக்கும் இதற்கும் என்னதான் பொருத்தம் இருக்கிறது?

   வைரமுத்து ஆண்டாளைப் போற்றுகிறாரா? புழுதி வாரிப் போட்டுத் தூற்றுகிறாரா? ஒன்றும் புரியவில்லை. 

   ஆண்டாள் பாடல்கள் நாயகன் நாயகி பாவத்தில் அமைந்தவை என்பது காலம் காலமாக இருந்துவரும் கருத்து. அடியார்கள் தம்மை நாயகியராய்க் கருதி, இறைவனை நாயகனாய் எண்ணி, காதலால் கசிந்துருகிப் பாடுவது என்பது வழிபாட்டிலக்கிய மரபு. வைரமுத்துவுக்கும் இது தெரியும். தெரிந்தும் ஏன் இப்படிக் குழப்புகிறார்?

  இன்றும் இளம்பெண்கள், இல்லத்தரசியர் மார்கழி மாதத்துக் காலைவேளையில் திருப்பாவையை இறை மணம் கமழ ஓதுகிறார்கள். இனி இவை பாலியல் சாயம் பூசப்பட்ட திரைப்பட பாடல்கள் போன்றவை என்று எண்ணிப் பார்க்கத் தொடங்கிவிடுவார்களோ என்பதுதான் என் கவலை.

வைரமுத்துவின்கட்டுரைhttp://webpcache.epapr.in/index.php?in=http://cache.epapr.in/1496595/f1f99e6f-e7d1-492c-b639-d09dac8d3142/1400x2120-700x706/2x3.png
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
முனைவர் அ. கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து

    

12 comments:

  1. Vairamuthu's writeup about Andal is unnecessary.Andal devoted her entire life in prayer.Someone thinks they are wiser and can write whatever they want

    ReplyDelete
  2. ஆண்டாள் பாடல்கள் நாயகன் நாயகி பாவத்தில் அமைந்தவை என்பது காலம் காலமாக இருந்துவரும் கருத்து. அடியார்கள் தம்மை நாயகியராய்க் கருதி, இறைவனை நாயகனாய் எண்ணி, காதலால் கசிந்துருகிப் பாடுவது என்பது வழிபாட்டிலக்கிய மரபு. வைரமுத்துவுக்கும் இது தெரியும். தெரிந்தும் ஏன் இப்படிக் குழப்புகிறார்?//

    ஐயா வை மு எப்பவுமே இப்படித்தான் தான் ஏதோ அறிவு பூர்வமாகச் சொல்லுவது போல் ஆனால் அர்த்தமற்ற எழுத்துகளை எழுதுவார். எப்படி இதை வெளியிடுகிறார்கள் என்பதும்...வியப்புதான்...அவ்வளவுதான் நம் ஊடகத் துறையின் தரம் என்றுதான் தோன்றுகிறது...

    உங்கள் கட்டுரை மிக மிக அருமை....ரசித்துப் படித்தேன்.

    கீதா

    ReplyDelete
  3. கண்ணதாசன் "ஆண்டாள் தமிழை ஆண்டாள்' என்ற ஒரு பக்கக் கட்டுரையை குமுதம் இதழில் எழுதினார். பலருடைய ஏகோபித்த ஆதரவு பெற்றது இக்கட்டுரை. அவர் கவியரசர். இவரோ கவிப்பேரரசு!!!. ஆண்டாளைப்பற்றி கொச்சையாக எழுதியுள்ளார். அறிஞர் அண்ணா கம்பரசம் எழுதியது போலதான் இதுவும். மக்கள் இவரைப்புறந்தள்ளி விடுவார்கள்.

    ReplyDelete
  4. தினமணியில் வெளியான நாளன்று கட்டுரையினைப் படித்தபோது முந்திவிரிக்க என்ற சொல்லைப் படித்து அதிர்ந்துபோனேன். உங்களுடைய இந்தப் பதிவு பலவற்றைத் தெளிவாக்கியுள்ளது.

    ReplyDelete
  5. மிகச் சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள். ஏற்கனவே வைரமுத்துவின் கட்டுரைக்கு எதிர்வினை நிகழ்வுகள் தொடங்கி விட்டன. நான் பெரும்பாலும் இவரது எழுத்தினைப் படிப்பதில்லை.

    ReplyDelete
  6. திரு.வைரமுத்து அவர்கள் “புலனம்” வாயிலாக தனது கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்குத் தங்களைப் போன்று பலரும் விமர்சனம் செய்துள்ளனர். ஒரு சில செய்திகள் நன்கு அறிந்திருந்தால் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதிலும் அகச்சான்றுகள் இன்றியமையாதது. ஏற்கனவே பாரதியார் பிறந்த தினக் கட்டுரையில் அவரைச் சிறுமைப்படுத்தும் விதமாகப் பல செய்திகளை வைரமுத்துப் பதிவிட்டுள்ளார். வைரமுத்து அவர்கள் திரையிசைப்பாடல் போன்று எதை வேண்டுமானாலும் எழுதலாம் என நினைத்திருப்பார் போலும்.
    திரு.வைரமுத்து அவர்களுக்குச் சரியான குட்டு வைத்துள்ளீர்கள்.
    பேராசிரியர் ரா.லட்சுமணசிங்
    கரூர்

    ReplyDelete
  7. திராவிட இயக்கத்தினர் கொச்சைப்படுத்துவதற்காக நுனிப்புல் மேய்பவர்கள்.. முற்றப் படித்தவர்கள் ஒருநாளும் இவ்வாறு சொல்வதில்லை. இடது சாரி கருத்துக்களோடு, இவர்களாக உருவகித்துக்கொண்ட திராவிட சிந்தனையெனும் சேற்றைப் பூசிக்கொண்டு, பாரத, தமிழ் தேசியத்தை வேரோடு கட்டறுத்து, தொன்மையான நம் மரபுகளைச் சிதைக்கும் நச்சுக் கருத்துக்களைப் பரப்பி வருங்கால சந்ததியினரின் ஒட்டுமொத்த கலாச்சார நம்பிக்கைகளை குலைக்கும் நாசகாரர்கள் இவர்கள்.. தமிழ் நாட்டில் ஆத்திகக் கட்சி, நாத்திகக் கட்சி என்ற இரண்டு மட்டுமிருக்குமானால், ஓட்டெடுப்பிலே மிகவும் பரிதாபமாக 1 சதவீதத்திற்கு குறைவாக வாங்கித் தோற்றுப்போகக்கூடியவர்கள்... என்ன, இவர்கள் ஊடகங்களையும், வாய்கிழியப் பேசுபவர்களையும், இவர்களைக்கொண்டு தங்கள் காரியங்களைச் சாதித்துக்கொள்ளும் பணக்கார சுயநலவாதிகளின் பின் பலத்தையும், அரசையும் திசை திருப்பிய இனம், மொழி உணர்வுகளைத் தூண்டி கைப்பற்றிக் கொண்டிருப்பவர்கள்.. அதனாலேயே அநாகரீக அரசியலையும், பேச்சுக்களையும் எந்த வித கட்டுப்பாடுமின்றி, கண்ணியமின்றி செய்கிறார்கள்.

    ReplyDelete
  8. இன்னும் பலமான எதிர்ப்பு வேண்டும் ஐயா

    ReplyDelete
  9. பக்குவமான எடுத்துக்காட்டுகளுடன் சாடியுள்ளீர்கள். யானைக்கும் அடிச்சறுக்கும் என்பதுதான் வைரமுத்துக்கதை.நீதிபதி மூ. புகழேந்தி

    ReplyDelete
  10. Vairamuthuvukku paithiyam mutripoivittadhu.

    ReplyDelete
  11. ஐயா, இவர் பல நாடுகளுக்குச் சென்று பணம் பண்ணும் வித்தையைக் கற்றுக் கொண்டார். எனவே அதை வெளிப்படுத்தி பணம் பண்ணப் பார்த்தார். அது இயலவில்லை. உலகில் உள்ள மதங்கள் தோன்றியதற்கு முன்பே பிறந்த மதம் இந்து மதம். இதை மதம் என்பதை விட அறிவியல் என்பதே சாலச் சிறந்தது. மதவாதம் பேசும் திருடர்கள் இந்துக் கடவுளை மட்டுமே விமர்சனம் செய்வது வியப்பாகவே உள்ளது. திராவிடம் பேசும் வீரமணி போன்ற திருடர்கள், அல்லாவை, ஏசுவை விமர்சனம் செய்யாமல் மதவாதம் என்று இந்து மதத்தை மட்டுமே விமர்சனம் செய்கிறார்கள். அயல் நாட்டு சதிகாரர்களிடம் பிச்சை எடுக்கும் திராவிட வாதிகள் மற்றும் வைரமுத்து போன்றோர் தமிழினத்தையும் தமிழையும் அழிக்கும் நச்சுச் செடிகள். அவர்களை களை எடுக்கும் தருணம் வந்துவிட்டது.

    ReplyDelete