Monday 5 February 2018

பார்த்தேன் பத்மாவதியை

   சஞ்சய் லீலா பன்சாலி.

 இவர் யாரென்று யாருக்கும் தெரியாது. ஆனால் இவர் தயாரித்துள்ள  பத்மாவதி என்னும் இந்தித் திரைப்பட வெளியீட்டிற்குத் தடைகேட்டு ஒரு  வழக்கு உச்ச நீதி மன்றத்துக்கு வரவும் இந்தப் பெயர் இந்தியாவில் வீட்டுக்கு வீடு உச்சரிக்கும் பெயராகிவிட்டது. இந்தியா என்ன, கடந்த எட்டு மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் வசிக்கும் எனக்கே அந்தப் பெயர் அத்துபடி ஆகிவிட்டது.

   அந்தப் படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஆகிவிடும் என குஜராத், இராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா ஆகிய நான்கு மாநிலங்களும் கூட்டணி சேர்ந்து, படத்தைத் தடை செய்யக் கோரி உச்சநீதி மன்றத்தின் உயர்ந்த கதவுகளை உரக்கத் தட்டின. படத்தைப் பார்த்த நீதிபதிகள் படத்தை வெளியிடலாம் என இரட்டைச் சொற்களில் சொல்லி கதவை மூடி விட்டார்கள்.

    இரண்டு மாத காலமாக தடைக் கோரி ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, கார் உடைப்பு என ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த ராஜ்புட் கர்ணி சேனா என்னும் அமைப்பினர் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம் என அறிக்கை விடுவார்கள் என்னும் எதிர்பார்ப்போடு தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்தால் கதை வேறு மாதிரி போகிறது. பத்மாவதி படத்தில் இராணி பத்மாவதியாக நடிக்கும் தீபிகா படுகோனே என்ற நடிகையின் மூக்கை அறுத்து வந்தால் ரூபாய் ஐந்து கோடி பரிசு தரப்படும் என்று அறிவிக்கிறார்கள்.

    தீர்ப்பினை அடுத்து உலகெங்கும் படம் வெளியானது. இங்கே அமெரிக்க நாட்டின் டெல்லாஸ் நகரில் அப்படத்தைக் காணும் வாய்ப்பை  டாக்டர் பொ.சங்கரபாண்டியன் அவர்கள் ஏற்படுத்தித் தந்தார்.

   இந்தி வசனங்களை ஆங்கிலத் தொடர்களில் போட்டதால் கதையோடு ஒன்றிப் பயணிக்க முடிந்தது.

    அது ஒரு வரலாற்றுக் கதை. பதினாறாம் நூற்றாண்டில் எழுந்த ஒரு காவியத்தின் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட திரைக் கதை. டெல்லியை ஆண்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கு அழகான மனைவி இருந்தும் சித்தூர் குறுநில மன்னனான ரட்டன் சிங் மனைவி பேரழகி இராணி பத்மாவதியை அடைய விரும்புகிறான். போர் தொடுத்தும் அவளை அடையமுடியாத நிலையில், சூழ்ச்சியால் ரட்டன் சிங்கை சிறையில் அடைத்து, இராணி பத்மாவதி வந்து கேட்டால் விடுவிக்கப்படுவான் என செய்தி அனுப்புகிறான். எதிர்ப்புக்கிடையில் அவள் டெல்லி சென்று, அவனைச் சந்திக்காமலேயே சாதுர்யமாக கணவனை மீட்டு வருகிறாள். ஏமாந்த அலாவுதீன் படைமேற் சென்று, வெறிகொண்டு ரட்டன் சிங்கை சூழ்ச்சியால் கொன்றுவிடுகிறான். அந்தப் புரத்தை நோக்கி அசுர வேகத்தில் ஓடுகிறான். இராணி பத்மாவதி கயவனிடம் சிக்கிக் கற்பை இழத்தல் கூடாது, அவன் பார்வையில்கூட படக்கூடாது என்னும் முடிவுடன் தீக்குளித்து  உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.

   இருநூறு கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட பிரமாண்டப் படம் என்பதில் ஐயமில்லை. அரண்மனை, கோட்டைக் கொத்தளங்கள் எல்லாம் படு அசத்தலாக உள்ளன. கதை நடந்த பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறார்கள். 164 நிமிடங்கள் ஓடும் படத்தை இருக்கையின் விளிம்பில் அமர்ந்து பார்க்கச் செய்துவிட்டார்கள்.

   டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியாக நடித்துள்ள ரன்வீர்சிங் நடிக்கவில்லை; மாறாக படம் எடுத்து முடிகிறவரைக்கும் கில்ஜியாகவே (கில்ட்டியாகவே) வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். உண்மையில் படத்தயாரிப்பு முடிந்ததும் ஒரு மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றார் என்னும் செய்தியும் இணையத்தில் வந்தது.
இராணி பத்மாவதியாக தீபிகா படுகோனே

  தீபிகா படுகோனே நூறு விழுக்காடு ஈடுபாட்டுடன் நடித்துள்ளார். ரட்டன் சிங்காக நடித்துள்ள ஷாகித் கபூரும் அப்படித்தான்.

    படத்தைத் தடை செய்வதற்கான காரணங்கள் எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. மாற்றான் மனைவி எனத் தெரிந்தும் காதலிப்பதும் கல்யாணம் செய்துகொள்வதுமாய் படங்கள் வரும் இந்தக் காலக்கட்டத்தில். மாற்றான் மனைவியை அடைய நினைப்பவனின் சூழ்ச்சிப் பலிக்காது என்னும் செய்தியை இப் படம் தருவதாகவே நான் நினைக்கிறேன்.

   வாய்ப்பு நேருமாயின் படத்தைப் பாருங்கள். பார்த்தபின் என்னைப் பாராட்டாவிட்டாலும் திட்டமாட்டீர்கள் என உறுதியாகச் சொல்வேன்.

முனைவர் .கோவிந்தராஜூ,

அமெரிக்காவிலிருந்து.
photo courtesy: India Today and Google

5 comments:

  1. அவசியம் பார்ப்பேன் ஐயா
    அருமையாக விமர்சனம்
    நன்றி

    ReplyDelete
  2. இந்தப் போராட்டங்களுக்குப் பின்னணியிலிருந்த தீய சக்திகளை நாட்டுமக்கள் புரிந்து கொண்டார்கள்!

    ReplyDelete
  3. என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். சென்னை பயணத்தின்போது இப்படத்தினைப் பார்த்தேன். பிரம்மாண்டத்தை ரசித்தேன். பார்க்கவேண்டிய படம். ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாமல் செல்கிறது. அதுவே படத்தின் வெற்றி. நம்மவர் இதனை வைத்து செய்த அரசியலை விட்டுவிடுவோம்.

    ReplyDelete
  4. விமர்சனத்தை அன்றே படித்துவிட்டோம் ஐயா. கருத்து இட முடியாமல் போனது

    நல்லதொரு விமர்சனம். எல்லாருமே நன்றாக இருக்கிறது என்றுதான் சொல்கின்றார்கள்.

    பார்க்கிறோம்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete