Tuesday, 20 February 2018

சுட்டிக் குழந்தைகளைச் சுட்டுத் தள்ளினான்

   நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டு யோசிக்கிறேன். குளிரிலும் வியர்த்துக் கொட்டுகிறது. ஒரு கோணத்தில் அப்பாவாக, இன்னொரு கோணத்தில் ஆசிரியராக நின்று நினைத்துப் பார்க்கிறேன். இது இன்னொரு செய்திதானே என்று ஒதுக்கிவிட்டு என் வேலையைப் பார்க்க முடியவில்லை. சென்ற வாரத்தில் நடந்த இந்தச் சோக நிகழ்வு பற்றி தொலைக்காட்சியில் பார்க்கும் போதெல்லாம் யாரோ ஒருவர் என் உடலுள் புகுந்து என் இதயத்தை இரு கைகளாலும் பிசைவதாக உணர்கிறேன்.

    அமெரிக்க நாட்டின் அந்தக் கருப்பு நாள் 14.2.18 உலக அன்பர் தினம். பிற்பகலில் பள்ளி விடுவதற்குப் பத்து நிமிடம் முன்பாக அந்த மனிதக் கொல்லி மிருகம் பள்ளிக்குள் நுழைகிறது. அடுத்த இரு நிமிடங்களில் வந்த சுவடு தெரியாமல் வெளியேறுகிறது.

   அன்று பள்ளிக்குக் கற்க வந்தவர்களில் பதினான்கு பேர், கற்பிக்க வந்தவர்களில் மூன்று பேர், ஆக மொத்தம்  பதினேழு பேர்கள் வீடு திரும்பவில்லை. துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட அவர்களுடைய உடல்கள் மருத்துவ மனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, நேரே மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பொது நல்லடக்கம் செய்யப்பட்டன.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் உலகு

    அன்பர் தினத்தில் அரங்கேறிய  தேசிய அவலம். அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாநிலத்தில் நிகழ்ந்த சோகம். அங்கு பார்க்லேண்ட் நகரில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளியில் நடந்த படுகொலை.

   ஒழுங்கீனம் காரணமாக, அப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட நிக்கோலஸ் குரூஸ் என்ற பத்தொன்பது வயது முன்னாள் மாணவன் AR-15 இயந்திரத் துப்பாக்கியுடன் நுழைந்து வகுப்பறை ஜன்னல் வழியாக சுட்டுத் தள்ளியுள்ளான். அடுத்த அரைமணி நேரத்திற்குள் போலீசார் அவனை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    பதின்மவயது குழந்தைகளை இழந்து பெற்றோரும் உற்றாரும் உறவினரும் கதறி அழுவதைப் பார்க்க முடியவில்லை. மீண்டும் பள்ளிக்குச் செல்லும்போது, “என் நண்பன் அமர்ந்திருந்த இருக்கை காலியாக இருக்குமே. அதை எப்படித் தாங்கிக்கொள்வேன்?” என்று ஒரு மாணவன் தேம்பித் தேம்பி அழுகிறான். “எங்கள் புவியியல் ஆசிரியை புவிக்குள் புதைக்கப்பட்டதைப் பார்த்துக்கொண்டு நின்ற பாவிகளாகி விட்டோமே” என்று மாணவியர் கூக்குரலிட்டு அழுத காட்சி இன்னும் என் கண்முன்னே விரிகிறது.

    அமெரிக்க நாடே அமளிதுமளிப் படுகிறது. March for our lives என்னும் கோட்பாட்டை முன்வைத்து பொதுமக்கள் தாமாக முன்வந்து வாஷிங்டனில் மிகப்பெரிய நடைப்பேரணியை நடத்தியுள்ளார்கள். இலட்சக்கணக்கில் மாணவர்களும் ஆசிரியர்களும் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக சமூக வலைத் தளங்களில் தம் கண்டனக் குரலைப் பதிவு செய்துள்ளார்கள்.

   அமெரிக்க நாட்டின் உளவு நிறுவனத்தின் மெத்தனப்போக்கே இப் படுகொலைக்குக் காரணம் என பல தரப்பினரும் குற்றம் சாட்டுகிறார்கள். ட்ரம்பும் கூட. அந்தக் கொலைகாரப் பாவி ஓர் ஆண்டுக்கு முன்னரே, Soon I am going to be a professional school shooter என்று பகிரங்கமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளான்.

    ட்ரம்ப் அவர்கள் நம்முடைய மோடியிடம் அஞ்சல் வழியில் பாடம் கற்றிருப்பார் என எண்ணுகிறேன். “அமெரிக்க நாட்டில் இனி எந்த ஒரு பள்ளியிலும் உள்ள ஒரு குழந்தையோ, ஒரு ஆசிரியரோ அல்லது எந்த ஒருவரோ  தான் பாதுகாப்பு அற்றவர் என்று நினைப்பதைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன்” என்று உருக்கமாக ஒரு செய்தியைச் சுட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

   அமெரிக்காவில் இப்படி பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் துப்பாக்கிச் சூடு நடப்பது அத்திப் பூத்தாற் போன்றது அல்ல; அடிக்கடி நிகழ்வது.

   காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தை மாலையில்  வீடு திரும்புமா திரும்பாதா என்னும் அச்சத்தோடும் ஐயத்தோடும் பெற்றோர்கள் இருப்பது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல எந்த நாட்டுக்கும் நல்லதல்ல.

   இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் இங்கு வந்திருந்த போது எழுதிய துப்பாக்கி கலாச்சாரம் என்னும் கட்டுரையை வாசகர்கள் படிப்பது இந்தச் சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும்.
photo courtesy: Google

முனைவர் அ.கோவிந்தராஜூ,
அமெரிக்காவிலிருந்து.

8 comments:

 1. Only way is to ban gun culture.That will never happen in America like Country.

  ReplyDelete
 2. ஐயா, இந்த நிகழ்வு மிகவும் வருத்தமானது. இன்றைய கல்வி, கல்விச்சூழல், பெற்றோர், சமூகம், ஆசிரியர், அரசு என அனைத்துமே இதற்கு காரணம். எல்லாமே வணிகம். எல்லாமே பணம். குழந்தைகள் பணம் பண்ணும் இயந்திரத்தை போல் அல்லவா வளர்க்கப்படுகிறார்கள். நல்லதை போதிக்க எதுவுமே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இன்று தமிழகத்தில் பல பள்ளி ஆசிரியர்கள் சமீபத்தில் மாணவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மிக முக்கியமான காரணம் திரைப்படங்கள், மற்றும் சமூக வலைதளங்கள். 10000ஆயிரம் ஆண்டு பாரப்பரிய பாரததேசம் என்பது இன்று அந்நியர்களால் சிதைவுண்டு போனது. இவை தடுக்க முடியாதவை. இவை மாற பெரிய மாற்றம் வேண்டும். அதற்கு வாய்பே இல்லை ஐயா.

  ReplyDelete
 3. Heart breaking!Tender saplings falling prey to fire ! Can't be relished !

  ReplyDelete
 4. அமெரிக்க மண்ணில் மனநிலை பிறழ்ந்த மனிதர்களிடம் மட்டுமே துப்பாக்கி மனிதநேயத்திற்கு எதிராக செயல்படுகிறது. அமெரிக்க அரசு இதற்கு எப்படி முடிவு கட்டும்? இதற்கு முடிவு கட்டிய பின்னர் மட்டுமே முஸ்லிம் பயங்கரவததைப் பற்றிப் பேச அமெரிக்கர்களுக்கு அருகதையுள்ளது.

  ReplyDelete
 5. துப்பாக்கி பயன்பாடு சட்டம் இறுக்கப்பட்டால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும்.

  ReplyDelete
 6. அமெரிக்காவில் எத்தனைக்கு எத்தனை நல்ல பள்ளிகள் இருக்கின்றனவோ அத்தனைக்கு அத்தனைக்கு இப்படியான நிகழ்வுகளும் நடக்கின்றன....ஆனால் இதற்குப் பல காரணங்கள் சொல்லலாம்...இல்லையா ஐயா. மனதிற்கு மிகவும் வேதனை...அதில் இந்திய ஆசிரியை ஒரு வகுப்பு குழந்தைகள் முழுவதையும் காப்பற்றியதாகவும் செய்தி வந்துள்ளதே...

  கீதா

  ReplyDelete