Monday 7 October 2019

பெரியாருக்குப் பெருமை சேர்ப்போம்


    பெரியாரின் கோட்பாடுகளில் பல எனக்குப் பிடிக்கும்; சில பிடிக்காது. பெண்ணடிமையைப் போக்க பெரும்பாடு பட்டவர், மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தோரை விழிப்புணர்வு கொள்ளச் செய்தவர் என்ற முறையில் அவரைப் புகழ்ந்து மேடைகளில் பேசுவது எனது வழக்கமும் கூட.

   அதே சமயம் குறிப்பிட்ட இனத்தாரை, குறிப்பிட்ட மதக்கடவுள்களைக் கேலி செய்து அவரது தொண்டர்கள் பேசுவது எனக்கு ஏற்புடையதல்ல. பிற மதங்களிலும் அறிவுக்குப் புறம்பான, அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதைகள் உண்டு. ஆனால் அவை குறித்து ஏனோ அவர்கள் எதுவும் பேசுவதில்லை.

     பெரியார் பார்ப்பனரை வெறுப்பவராய் இருந்திருந்தால் இராஜாஜியிடம் நட்பு கொண்டிருப்பாரா? இந்து மதத்தை வெறுப்பவராய் இருந்திருந்தால் இந்துத் துறவி குன்றக்குடி அடிகளார் வழங்கிய திருநீற்றைத் தன் நெற்றியில் பலர் முன்னிலையில் பூசிக்கொண்டிருப்பாரா? பெரியார் பெரியார்தான்.

   பெரியார் தொண்டர்கள் கரூரில் நடத்திய ஒரு கூட்டத்திற்கு முதல் முறையாகச் சென்றேன். அது ஒரு கலை இலக்கியம் சார்ந்த நிகழ்வு. அறிவுப் பூர்வமாகச் சில சிந்தனைகளை முன் வைப்பார்கள் என்று நம்பிச் சென்றேன்.
எழுத்தாளர் பொன்னீலன்

 
பேராசிரியர் சுபவீரபாண்டியன்


புலவர் செந்தலை ந.கவுதமன்
   எழுத்தாளர் பொன்னீலன், புலவர் செந்தலை ந.கவுதமன், பேராசிரியர் சுபவீரபாண்டியன் ஆகியோர்  அவரவர்க்கு உரித்தான பாணியில் தம்  கருத்துகளை நிரல்பட எடுத்துரைத்தார்கள். ஆனால் தொடக்கத்தில் பேசிய சிலர் கூட்டப் பொருண்மைக்குத் தொடர்பில்லாமல் பார்ப்பனரை, பாரதிய ஜனதா கட்சியை, இந்து மதத்தை இழுத்துப் பேசியது அரங்கில் இருந்த பலரையும் முகம் சுளிக்க வைத்தது. நடந்தது முழுக்க முழுக்க கலை இலக்கியம் தொடர்பான கூட்டம். வரம்பு மீறாமல் பேசிய சுபவீரபாண்டியன் அவர்கள் பெரியாருக்கும் குன்றக்குடி அடிகளாருக்கும் இருந்த நட்பு குறித்து நுணுக்கமாக எடுத்துரைத்தார்.

    இன்றைக்கு உள்ள மோசமான சூழலில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டால்தான் தமிழ் மொழியை, தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற முடியும். இன்னும் பத்தாண்டுகளுக்குப்பின் தமிழர் இல்லத்துக் குழந்தைகளில் ஒன்றுகூட தமிழ்ப்பெயருடன் இருக்காது.

 தமிழர் அடையாளத்தை, செருக்கை இழந்துவரும் சூழலில், நாமே மதத்தால், சாதியால், பேசும் மொழியால் பிரிந்து நின்றால் நம் எதிரிக்குக் கொண்டாட்டமாகப் போய்விடாதா?

  பெரியாரின் தொண்டர்கள் பாரதிதாசனை மட்டும் புகழ்ந்து பேசுவது நியாயமா?  பாரதியார் ஒரு பார்ப்பனர், உ.வே.சா ஒரு பார்ப்பனர் என்று அவர்களை ஒதுக்குவது  நியாயமா?  பெரியாருக்கு முன்னமேயே பெண்ணடிமையைச் சாடியவன் பாரதிதானே?

   கருத்தைச் சொல்லும் சுதந்திரமும் பெரியார் குறிப்பிடும் சுயமரியாதைக் கோட்பாட்டின் ஒரு கூறு ஆகாதா? மாற்றுக் கருத்தைச் சொன்ன கி.வ.ஜ. அவர்களை ஒருவர் கேலி செய்து பேசியது சரியன்று. கி.வா.ஜ. ஒரு தமிழர் என்ற கோணத்தில் மட்டும் பார்க்க வேண்டும். வ.ரா எனப்படும் வ.ராமசாமி ஐயங்காரை அக்கிரகாரத்து அதிசய மனிதர் என அண்ணா போற்றினாரே! அண்ணா போற்றிய பெருமக்கள் என்னும் நூலில் உ.வே.சா. அவர்களை உயர்த்திப் பேசுவது இவர்களுக்குத் தெரியாதா?

    பெரியார் போட்ட சீர்திருத்த விதைகள் முளைத்து இன்று பெரு மரங்களாகி நடுவூரில் நின்று நல்ல பலன்களைத் தருகின்றன. சாதி மறுப்புத் திருமணங்கள் பெருகிவருகின்றன. நடக்கும் திருமணங்கள் தமிழ் நெறிப்படி, குறள் நெறிப்படி  நடக்கத் தொடங்கியுள்ளன. இத் தருணத்தில் பெரியார் சிந்தனையாளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய தமிழர்ப் படையைத் திரட்டவேண்டும். கடவுள் மறுப்பு அல்லது கடவுள் விருப்பு என்பது தனிமனித சுதந்திரம். அதைத் திணிப்பது கூடாது.  அதை ஊதிப் பெரிதுபடுத்தி, வன்சொல் பேசி  நம் நண்பர்களை இழக்க வேண்டாமே.

    சோழன் நெடுங்கிள்ளியும் சோழன் நலங்கிள்ளியும் சண்டையிட முனைந்தபோது கோவூர்கிழார் என்னும் மதியுரைஞர் சமாதானம் செய்துவைத்தார். ஆனால் இன்று திராவிடத் தமிழர், திராவிடர் அல்லாத் தமிழர் எனப் பிரித்துப் பார்த்தால் தமிழருக்குள்ளே பகை மூளும். எந்தக் கோவூர்க் கிழாரும் சமாதானம் செய்ய வரமாட்டார். பிரிந்துகிடக்கும் தமிழர்களைக் கண்டால் மாற்றார் நுழைந்து பிரித்து மேய்ந்துவிடுவார்கள்.

    நம் சிற்றறிவு காரணமாக, செய்தக்க அல்ல செய்து, கடிது ஓச்சிக் கடிது எறிந்து பெரியாருக்குப் பெருமை சேர்க்கத் தவறுகிறோமோ என அஞ்சுகிறேன்.
முனைவர் அ.கோவிந்தராஜூ,
தேசிய விருதாளர்.
    
     

3 comments:

  1. உண்மை தான் அண்ணா! நமக்குள்ளே தேவையற்ற பிரிவினைகள் நம் களப்பணியை பலவீனப்படுத்தும். இதனை இன்றைய பெரியாரியலாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
    திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கிய ஓலைச் சுவடிகளை மூட்டெடுத்த பெரும்பணிக்குச் சொந்தக்காரர் தமிழ்த் தாத்தா தான் என்பதை உணர்ந்து "மாற்றான் தோட்டத்து மல்லிகையின்" மணத்தை நுகர்ந்து மகிழ வேண்டும்!

    ReplyDelete
  2. உங்களின் அனுமானம் முற்றிலும் சரியே ஐயா....
    கி.வ.ஜ. என்றுள்ளது, கி.வா.ஜ. என்றிருக்கவேண்டும். தகவலுக்காக.

    ReplyDelete
  3. நீங்கள் முன் வைத்துள்ள கருத்துகள் அனைத்தும் மிகவும் சரியே. அருமையான பதிவு.

    துளசிதரன், கீதா

    கீதா: ஐயா நான் அடிக்கடி என் தனிப்பட்ட வட்டத்திற்குள் சொல்லும் கருத்துகளை மிக அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். //கடவுள் மறுப்பு அல்லது கடவுள் விருப்பு என்பது தனிமனித சுதந்திரம். அதைத் திணிப்பது கூடாது. அதை ஊதிப் பெரிதுபடுத்தி, வன்சொல் பேசி நம் நண்பர்களை இழக்க வேண்டாமே.//

    அப்படியே வழி மொழிகிறேன். அதே போன்று நான் சொல்லும் மற்றொரு கருத்து நமக்குள் பேதங்கள் இருந்ததால்தான் அன்று ஆங்கிலேயர் புகுந்து கொள்ள முடிந்தது. நமது பலவீனத்தைத் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டு அவர்களும் பிரித்தாண்டார்கள். அதே தான் இன்றைய சூழலும். //ஆனால் இன்று திராவிடத் தமிழர், திராவிடர் அல்லாத் தமிழர் எனப் பிரித்துப் பார்த்தால் தமிழருக்குள்ளே பகை மூளும். எந்தக் கோவூர்க் கிழாரும் சமாதானம் செய்ய வரமாட்டார். பிரிந்துகிடக்கும் தமிழர்களைக் கண்டால் மாற்றார் நுழைந்து பிரித்து மேய்ந்துவிடுவார்கள்.//

    அதே தான் ஐயா. மிக அருமையான கருத்துகள்.


    ReplyDelete