Tuesday, 31 December 2019

இனிய திருப்பாவையும் எளிய உரையும் பாடல் 6-10


ஆறாம் பாடல்
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
    
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
    
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
    
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
    
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.

   அருமைப் பெண்ணே! இன்னுமா நீ உறங்குகிறாய்? இது பறவைகள் கீச் கீச் என ஒலி எழுப்பும் விடியற்காலை நேரம். கருடனுக்குத் தலைவனான திருமாலின் கோவிலில் வருக வருக என அழைப்பதுபோல் வெண்சங்கை ஊதுகிறார்களே- அந்தப் பேரொலி உன் செவிகளில் விழவில்லையா?

   பெண் பிள்ளாய் எழுந்திரு. கம்சனின் சூழ்ச்சியால், குட்டிக் கண்ணனுக்கு பூதனை என்ற பேய்மகள் நச்சுப்பால் கொடுத்தபோது, அவள் கொங்கையில் வாய்வைத்துக் குடிப்பதுபோல் நடித்து அவளைக் கொன்றவனும், சடகாசுரன் வண்டி வடிவில் வந்து குட்டிக் கண்ணனை மோதியபோது தன் பிஞ்சுக்காலால் உதைத்தே கொன்றவனும், பாற்கடலில் பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்பவனும் ஆகிய பரந்தாமனைக் கண்டு, முனிவர்களும் யோகியரும்  அரி அரி என்று  அழைக்கும் பேரொலி உன் உள்ளத்தில் புகுந்து, செவியில் நிறைந்து உன்னை எழுப்புகிறது  அல்லவா? எழுந்து வா, பனி நீராடிப் பாவை நோன்பு நோற்போம்.
      
ஏழாம் பாடல்
கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
    
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
    
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
    
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
    
தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.

  பேய்ப் பெண்ணே! ஆனைச்சாத்தன் என்னும் கீச்சாங்குருவிகள்  தம்முள் கலந்து பேசும் கீசு கீசு என்றெழும் பேச்சொலி உனக்குக் கேட்கவில்லையா?
  நறுமணம் மிக்க கூந்தலையுடைய ஆயர்பாடி பெண்கள் தம் கழுத்தில் அணிந்த தாலிக் காசுகளும் மணியும் கலகலப்ப, கைகளை மாற்றி மாற்றி மத்துக் கயிற்றை இழுத்துத் தயிர் கடையும் ஓசையைக் கேட்டபின்பும் உறங்கலாமா?
   எங்களுக்கெல்லாம் தலைவியாக இருக்கக்கூடிய நீயே இப்படிப் படுக்கையில் புரண்டபடிக் கிடக்கலாமா? அழகியப் பெண்ணே! பாவை நோன்பிருக்கும் இளம்பெண்கள் நாராயணமூர்த்தியாகிய கேசவனைப் பாடிப் போற்றும் பாட்டிசை கேட்டும் எழாமல் கிடப்பது சரியில்லை. உடனே எழுந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே வா. பனி நீராடப் போவோம். 
  
 எட்டாம் பாடல்
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
    
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
    
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
    
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
    
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்.

அருஞ்சொற்பொருள்:
சிறுவீடு- மேய்ச்சல் நிலம்; பரந்தன- சென்றன; கோதுகலம்- மகிழ்ச்சி; பறை- விரும்பிய பொருள்; மா- குதிரை; மாட்டிய- அழித்த;

விளக்கவுரை:
   பெண்ணே! இன்னுமா நீ உறங்குகிறாய்? கிழக்கு வானம் வெளுத்து விட்டது. எருமைகள் கூட பனிப்புல் மேய மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றுவிட்டன.

     நீராடச் செல்லும் மற்ற இளம்பெண்களையும் தடுத்து நிறுத்தி, அவர்களோடு உன்னையும் அழைத்துச் செல்ல வேண்டி உன் வீட்டு வாசலில் நின்று உன்னை அழைக்கின்றோம்.

   உள்ளத்தில் மகிழ்ச்சி நிறைந்த பெண்ணே! உடனே எழுந்திரு.  கம்சனின் சூழ்ச்சியால் குதிரை வடிவில் வந்த அசுரனைக் கொன்றவனும், கம்சன் அனுப்பிய மல்லர்களை வென்றவனும் ஆகிய கண்ணனுக்கு அவன் விரும்பியதைப் படைத்துப் பாடி வழிபட்டால், அவன் நம் குற்றம் குறைகளை ஆராய்ந்து நம் மீது இரங்கி அருள்புரிவான். 

ஒன்பதாம் பாடல்
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
  தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்!
  மாமீர்! அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
  ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
  நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
விளக்கவுரை:
   “தூய மணிகளால் இழைக்கப்பட்ட மாட மாளிகையில், சுற்றிலும் இரவு விளக்கெரிய, அகில் புகை மணம் கமழ, பஞ்சணையில் உறங்கும் மாமான் மகளே! எழுந்து மணிகள் பதிக்கப்பட்ட கதவினைத் திறந்துகொண்டு வெளியே வா. பனி நீராடச் செல்வோம்.” என்று தோழியர் துயில் எழுப்புகின்றனர். ஆனால் அவள் படுக்கையைவிட்டு எழவில்லை.

   அவளது தாயைக் கண்ட தோழியர், “மாமீ! உங்கள் மகளை எழுப்புங்கள்” என்று சொல்கின்றனர். தாயின் முயற்சியும் பலிக்கவில்லை. தொடர்ந்து மறுமொழி சொல்லாமல் படுக்கையில் கிடக்கிறாள்.    பொறுமையிழந்த தோழியர், “மாமீ! உங்கள் மகள் ஊமையோ அல்லது செவிடோ அல்லது தூக்கத்தின் மொத்த உருவமோ? பெருந்தூக்கம் காவல் காக்க எழாமல் கிடக்கிறாளோ? நித்திராதேவி ஒரு மந்திரத்தால் அவளைக் கட்டிப் போட்டாளோ?” என்று கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றனர்.

   “மாமான் மகளே! இப்போது நாங்கள் சொல்லும் மந்திரம் நித்திராதேவியின் மந்திரத்தை வலிமை இழக்கச் செய்யும் பார்.” எனக் கூறிவிட்டு, அனைவரும் சேர்ந்து ‘மாயன், மாதவன், வைகுந்தன்’ என்று கண்ணனின் ஆயிரமாயிரம் திருப்பெயர்களை உரத்த குரலில் உச்சரித்த மாத்திரத்தில் துள்ளியெழுந்து வெளியே வந்தாள்.

பத்தாம் பாடல்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
    
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
    
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
    
தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே
    
தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்!
அருஞ்சொற்பொருள்: நோற்று- நோன்பிருந்து; நாற்றம்- நறுமணம்; துழாய்- துளசி; பறை- விரும்பிய பொருள்[ பண்டு- பழங்காலத்தில்; கூற்றம்- யமன்; ஆற்ற- மிக; அனந்தல்- தூக்கம்; தேற்றம்- தெளிவு.
விளக்கவுரை:
   அருமைத் தோழியே! அழகான அணிகலன்களை அணிந்தவளே! நோன்பு நோற்றுக் கண்ணனின் திருவடியாகிய சுவர்க்கத்தை அடைவதைக் குறிக்கோளாய்க் கொண்டவளே! இன்னுமா நீ உறங்குகிறாய்? நீ எழுந்து வாசல் கதவைத்தான் திறக்கவில்லை; ஒரு வாய் வார்த்தை பேசக்கூடாதா?

   நல்ல வாசனை மிகுந்த துளசி இலையைத் தம் முடியில் அணிந்தவனாகிய நாராயணனைப் போற்றிப் பாடினால் நாம் விரும்பியதை அருள்வான். பனி நீராடி அந்தப் பரந்தாமனைப் பணியும் அதிகாலை நேரத்தில் இப்படி நீ உறங்கலாமா?

   முன்னொரு காலத்தில், கண்ணனின் மறு அவதாரமான இராமன் எய்த அம்பினால் யமன் வாயில் விழுந்தான் கும்பகர்ணன். அவன் உன்னிடம் தோற்றுப்போய்த் தன் பெருந்தூக்கத்தை  கொடுத்துச் சென்றானோ?

   மிகுதியான தூக்க வெறி கொண்டவளே! எழுந்திரு! தூக்கக் கலக்கத்தில் தடுமாறிக் கீழே விழுந்துவிடாமல் விழிப்புணர்வுடன் வந்து கதவைத் திற!


2 comments:

  1. பாடல் அடிகளைப் பொருளோடு ரசித்தேன். சிறப்பு ஐயா.
    இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete