Saturday 7 March 2020

கொவைட்19 என்னும் கொள்ளை நோய்


  இன்றைய(7.3.2020) நிலவரப்படி இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முப்பத்து நான்கு என நடுவண் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

  Corona Virus Disease என்னும் ஆங்கிலச் சொல் தொடர்களில் சில எழுத்துகளைப் பொறுக்கிப் போட்டு, அதனுடன் அது பிறந்த ஆண்டையும் சேர்த்து, இந்நோய்க்கு COVID19 என்னும் செல்லப்பெயரைச் சூட்டியுள்ளார்கள்! உருவாகும் புயலுக்கும் ஒரு பெயர்; பரவிவரும் கொள்ளை நோய்க்கும் ஒரு பெயர்! இனி பிறக்கும் குழந்தைகளுக்கு கரோனா என்றுகூட பெயர் சூட்டுவார்கள்!

  கரோனா நோயின் பாதிப்புக்குள்ளான எழுபது நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஆகிவிட்டது.    இந்தச் சூழலில் அந்த நோயின் படையெடுப்பை நாம் எப்படி எதிர்கொள்ளலாம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

 நோய்த் தொற்று உடையவர்கள் அடக்க ஒடுக்கமாக வீட்டில் ஓய்வெடுக்காமல் தும்மிக்கொண்டும் இருமிக்கொண்டும் வழக்கம்போல் இயங்குவார்கள். அவர்கள் மூலம்தான் இந்த நோய் பலருக்கும் பரவுவதாய் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

   கரோனா கிருமிகள் இரண்டு நாள்கள் வரை உயிர் வாழ வேண்டி வரம் வாங்கி வந்தவை. நோய்த் தொற்று உடைய பேருந்து நடத்துநர் தன் எச்சிலைத் தொட்டு எண்ணிக்கொடுக்கும் பணத்தாள்களில் நோய்க்கிருமி ஒட்டிக்கொண்டு வரும். மறுநாள் நம் கையால் அவற்றை எண்ணிக் கொடுத்துக் காய்கறி வாங்குவோம். நாமும் எச்சிலைத் தொட்டு எண்ணும்போது அப்படியே மூக்கைக் குடையும்போது அக் கிருமிகள் நம் உடலுக்குள் சென்று குடும்பம் நடத்த ஆரம்பித்துவிடும். மெய்நிகர் நாணயப் பரிமாற்றம் இச் சிக்கலுக்குத் தீர்வாக அமையுமா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

   பக்கத்துவீட்டுப் பரமசிவம் மூக்கை உறிஞ்சியபடி, கையால் மூக்கைச் சிந்தியபடி வந்து நம் கையைப்பிடித்துக் கைகுலுக்கி பிறந்த நாள் வாழ்த்து சொல்வார். அப்போது பார்த்து நம் முகத்தில் அரிப்பதுபோல் உணர்ந்தால் அப்படியே நம் கையால் சொறிந்து கொள்வோம். முகத்தில் சேர்ந்த நோய்க்கிருமிகள் நம் வாய் வழியாக, மூக்கின் வழியாகச் சென்று நம் உடலில் குடியேறிக் குட்டிகளைப் போடும்.

  இந்த முன்னுரையை இந்த அளவில் நிறுத்தி இனி செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை எவையெனப் பட்டியல் போடுவோம்.

செய்ய வேண்டியவை:
  சோப்பு போட்டு கை கழுவுவதை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக பணம் காசைத் தொட நேர்ந்தால் கட்டாயம் கைகழுவ வேண்டும்.கை சுத்தம் என்பது இரண்டு வகையிலும் வேண்டும். அதாவது கையூட்டு வாங்காமல் பணிசெய்வது ஒரு சுத்தம். அழுக்கு நீங்க கை கழுவுவது மறு சுத்தம்.

   தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் பயணம் செய்ய வேண்டும். சளிப்பிடித்தால் தானே சரியாகும் என்று இருக்காமல் தகுதி வாய்ந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறவேண்டும். மருத்துவ மனைக்குச் செல்லும்போது மூக்குக்கும் வாய்க்கும் திரையிட்டுச் செல்ல வேண்டும். நோய்த்தாக்கம் நீங்கும் வரை தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் அல்லது மருத்துவ மனையில் அமைதியாக ஓய்வெடுக்க வேண்டும். தும்மும்போதும் இருமும்போதும் கைக்குட்டையால் அல்லது டிஷ்யூ தாளால் வாயை, மூக்கை மூடிக்கொள்ள வேண்டும்.

   தூதுளை, முருங்கை கீரை, புஞ்சை தானியம் முதலியவை நம் சமையலில் இடம்பெறட்டும். ஆடாதொடை, நில வேம்புக் கொதிநீர் மிகவும் நல்லது. சுருங்கச் சொன்னால் நம் பாரம்பரிய உணவுகள் கரோனாவை காத தூரத்தில் நிறுத்தும்.

  இந்த நோய்த்தாக்கம் தொடர்பாக நமது அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பைக் கொடுப்பது நமக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.

செய்யக் கூடாதவை:
  மற்றவருடன் கை குலுக்குவது அறவே கூடாது. நமக்கே உரிய பாரம்பரிய  முறையில் கைகூப்பி வணங்குவோம்; வாழ்த்து சொல்வோம். இன்னும் கொஞ்ச நாள்களுக்குக் கட்டிப்பிடி வைத்தியமும் வேண்டாம்.முத்தமிடலும் வேண்டாம்.

   பேருந்துகளில் நெருக்கமாக நின்றவாறு பயணிக்கக் கூடாது. இரு சக்கர வாகனங்களில் இருவருக்குமேல் நெருக்கமாக அமர்ந்து செல்லல் கூடாது. வரிசையில் நிற்கும்போது மற்றவருடன் ஒட்டி உரசிக்கொண்டு நிற்கக் கூடாது. ஒருவர் உடையை மற்றவர் அணிதல் கூடாது.

  பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். சமூக ஊடகங்களில் உலா வரும் பொய்த்தகவல்களை நம்ப வேண்டாம்.     https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/advice-for-public என்னும் உலக சுகாதார நிறுவனத்தின் இணைய தளத்திற்குச் சென்று சரியான தகவல்களை அறிக.

 மது அருந்துவோரையும் புகை பிடிப்போரையும் இந்த கரோனா நோய் எளிதில் தாக்குமாம். எனவே புகையும் மதுவும் பகையென அறிந்து வெறுத்து ஒதுக்குக.

  தன் கையே தனக்குதவி என்னும் பழமொழி கரோனா புண்ணியத்தில் தன் கையே தனக்கெதிரி என்னும் புதுமொழியாக மாறிவிட்டது. ஆம். இனிமேல் நாம் நம் கைகளைக் கழுவாமல் ரஜினி பாணியில் குறுந்தாடியைத் தடவுதல் கூடாது. கன்னம், கண், காது, வாய், மூக்கு, முகம் ஆகியவற்றைத் தொடுதல் கூடாது. ஆனால் இதற்கு மிகுந்த விழிப்புணர்வு வேண்டும். உயிர்மேல் ஆசை இருப்பவர்க்கு விழிப்புணர்வு தானாக வரும்.

       இன்னும் இரண்டு மாதங்களில் கரோனா கிருமியின் வீரியம் குறைந்து வந்த சுவடு தெரியாமல் சென்றுவிடும். அதுவரை நம் வாழ்வியல் முறைகளைச் சற்றே மாற்றிக் கொள்வோம்; .தன் சுத்தத்தைப் பேணுவோம். கொஞ்சம் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கரோனா நோய்த்தொற்று வருமுன் காக்கலாம் வந்தபின்னும் வெல்லலாம்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்        குறள் 435

Dr.A.Govindaraju, Karur Mob: 9443019884

  




10 comments:

  1. நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. வருமுன் காப்போம்
    அருமையான விழிப்புணர்வுப் பதிவு
    நன்றி ஐயா

    ReplyDelete
  3. கைசுத்தம் என்பதின் விளக்கம் அருமை ஐயா, உங்கள் பதிவில் அவசியமும் ஆழமும் ஒருங்கே காண முடிகிறது, வணக்கம்

    ReplyDelete
  4. மிகவும் அவசியமான விழிப்புணர்வும் பொது அறிவும் ஏற்படுத்தக்கூடிய தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. இதை நான் உடனடியாக மற்றவர்கள் நலன் கருதி அனுப்பிவிட்டேன்.
    தங்கள் முன்னாள் மாணவன்
    க.சரவணக்குமார்

    ReplyDelete
  5. உங்கள் பாணியில் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.தகவலுக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  6. காலத்திற்குத் தக்கவாறான, தேவையான பதிவு ஐயா.

    ReplyDelete
  7. விளக்கம் நன்று ஐயா

    ReplyDelete
  8. நன்றி ஐயா....

    ReplyDelete
  9. முக்கியமான தகவல். ஆனால் சில விடயங்களை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதனால் கூட்டம் நிறைந்து சபைக்கும் போக வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. என்ன செய்வது என்னை மீறி சில சக்திகள் தொழிற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

    ReplyDelete
  10. முக்கியமான தகவல்.

    ReplyDelete