Tuesday 29 September 2020

போக நினைத்தால் போகலாம்

        அவர் ஒரு பணி நிறைவுபெற்ற ஆசிரியை. கணவர் காலமாகிப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. பேரன் பேத்திகளைப் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தார். எழுபது வயதை நெருங்கிய அவர் நோயுற்றுப் படுக்கையில் கிடந்தார் ஆறுமாத காலமாக.

   குடும்பத்தார் அவரை நன்றாகப் பார்த்துக் கொண்டனர். மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் கடந்த வாரம் அவர் குடும்பத்தார் அனைவரையும் அருகில் வந்து அமருமாறு சொன்னார். எல்லோரும் வந்து சுற்றி அமர்ந்தனர்.  அம்மையார் சொன்னதை அமைதியாகக் கேட்டனர்:    அவர் தன் முடிவில் உறுதியாக இருப்பதை அறிந்த அவரது மகன் வேறு வழியின்றி தன் கைப்பேசி மூலம் சிலரிடம் பேசினார். மாலையில் வழக்கறிஞர் வந்தார். அவர் முன்னிலையில் சில ஆவணங்களில் அம்மையாரும் மகனும் கையெழுத்திட்டனர். மறுநாள் அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவர் வந்தார். அம்மையாரிடம் பேசினார். கட்டிலில் தொங்க விடப்பட்டிருந்த மருத்துவ அறிக்கையை எடுத்துக் கூர்ந்து ஆராய்ந்தார். தன் கைப்பேசியை உசுப்பி எதையோ பார்த்தபின் கேட்டார். “வருகிற செப்டம்பர் 26ஆம் தேதி சரியாக இருக்குமா?” அம்மையார் கைகளை அசைத்துச் சம்மதம் சொன்னார்.

   தொடர்ந்து அந்தப் பத்து நாள்களிலும் தன் பேரக் குழந்தைகளை அழைத்து அதுவரை  சொல்லாத கதைகளை ஆர்வமுடன் சொன்னார்; பாடாத பாட்டுகளை எல்லாம் பரவசமாய்ப் பாடினார். மருமகளிடம் ஆசை ஆசையாய்ப் பேசினார். தாயும் மகனும் இரவில் நெடுநேரம் பேசிக்கொண்டே இருந்தார்கள். மகனை உச்சி மோந்து முத்தமழை பொழிந்தார். உறவுகள் சூழ, விரும்பிய உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தார்; வளர்ப்பு நாயை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார்.

  குறிப்பிட்ட நாளான செப்டம்பர் 26ஆம் தேதி நெருங்கிய உறவினர் பத்து பேர்கள் மட்டும் குளித்து முடித்து மெழுகு வர்த்திகள் ஏற்றி வழிபட்டனர். அம்மையாரைக் குளிப்பாட்டி அவர் விரும்பிய நீல வண்ண உடையை உடுத்திக் காலை உணவு தந்து தூய வெண்துகில் விரிப்பின்மேல் படுக்க வைத்தனர். சரியாக காலை ஒன்பது மணிக்கு மருத்துவர் வந்தார். அம்மையாரின் காதருகே குனிந்து சில கேள்விகளைக் கேட்டார். I am good to go. Please go ahead; God bless you என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டுக் கண்களை மூடிக்கொண்டார்.

 அம்மையாருக்கு ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தான் கொண்டுவந்திருந்த ஊசி மருந்தை ஊசிக்குழலால் உறிஞ்சித் தன் மார்பின்மேல் வைத்துச் சில விநாடிகள் கண்களை மூடித் தியானம் செய்தார்.பின்னர் நிதானமாக அம்மருந்தை ட்ரிப்ஸ் பாட்டிலில் செலுத்தினார். உறவினர் அனைவரும் அம்மையாரைச் சுற்றி நின்றனர்..   மருத்துவர் சைகை காட்ட எல்லோரும் அவ் அறையைவிட்டு  அடுத்த அறைக்குச் சென்றனர். சரியாக ஒருமணி நேரம் கழித்து மருத்துவர் வெளியே வந்து அம்மையாரின் மகனிடம் ஏதோ முணுமுணுத்தவாறு வெளியேறினார். அந்த அம்மையார் கர்த்தருள் ஒன்றிவிட்டார் என்பதை வாசகர்கள் ஊகித்திருக்க முடியும்.

    இப்படி ஒருவரை உலகத்தைவிட்டே செல்லும்படியாகச் செய்யும் இந்த நடைமுறைக்கு MAID என்ற செல்லப்பெயர் உண்டு. Medical Assistance In Dying என்பது இதன் விரிவாகும். இத்தகைய விரும்பி ஏற்கும் முடிவுகள் இங்கே மிகவும் சாதாரணம் என ஓர் ஆய்வறிக்கை சொல்கிறது. இதுவரை சுமார் ஏழாயிரம் கனடியர்கள் இத்தகைய முடிவை ஏற்றுக் கொண்டிருப்பதாக அந்த அறிக்கை மேலும் சொல்கிறது. இந்த நடைமுறைக்கு கனடா நாட்டரசின் சட்ட அங்கீகாரம் உண்டு. இச் சட்டத்தில் சில ஆக்கப்பூர்வமான திருத்தங்களைக் கொண்டுவர அரசு இப்போது இணையவழியில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பை நடத்திக் கொண்டிருக்கிறது.

  வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் எனப் பாடினான் கண்ணதாசன். ஆனால் கனடா நாட்டில் கடுமையான குணப்படுத்த இயலாத நோய்வாய்ப்பட்ட எவரும் இவ்வுலகைவிட்டுப் போக நினைத்தால் போகலாம்.

   நல்ல வேளையாக இதுபோன்ற சட்டம் நம்நாட்டில் இல்லை. பிறப்பும் இறப்பும் இயற்கையாக நிகழ வேண்டும். ஆனால் பிறப்புக்கு நாள் நேரம் குறிக்கும் போக்கு இப்போது பரவலாகி வருகிறது. இறப்புக்கும் நாள் குறிக்கும் நாள் வந்துவிடுமோ என அஞ்சுகிறேன்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

 

 

 


 

 

 

10 comments:

  1. மிகவும் அதிர்ச்சியான, புதுமையான வெளிநாட்டுச் செய்தி ஐயா.

    ReplyDelete
  2. மிக்க நன்றிங்க ஐயா

    ReplyDelete
  3. பிறப்பைக் கொடுத்தவனே இறப்புக்கும் சொந்தக்காரன். நாம் கையில் எடுப்பது
    தற்கொலைக்கு சமமே.

    ReplyDelete
  4. வரவேற்கிறேன் அய்யா. Birth right போல் Death right இருக்க வேண்டும். மரணம் வாழ்வின் ஒரு பகுதி. குணமாக்க இயலாத நோயில் நொந்து துன்பத்தில் சாவதைவிட இவ்வாறு ஏற்பாடு செய்து சாவது மரியாதையாக இருக்கும். ஆனால் நம்நாட்டில் சாத்தியமில்லை. அதற்கான பக்குவமோ புரிதலோ நம் மக்களிடம் இல்லை.

    ReplyDelete
  5. Prof.R.Pandiaraj
    Shed tears to read this.

    ReplyDelete
  6. தாங்கள் அஞ்சுவது போல் டிஜிட்டல் உலகில் இறப்புக்கும் நாள் குறிக்கும் நாள் வந்துவிடும் அய்யா..

    ReplyDelete
  7. படித்ததும் மனம் கனத்தது. என்ன செய்வது அதுவும் விரைவில் வந்துவிடும் ஐயா.

    ReplyDelete
  8. பிறப்புக்கு நாள் குறிக்கும் மனிதன் இறப்பிற்கும் நாள் குறிக்க ஆரம்பித்துவிட்டான்..

    ReplyDelete