Wednesday 24 February 2021

வானொலி வந்த வரலாறு

      “வானொலியைக் கண்டு பிடித்தவர் யார்?” என்று ஓர் ஆசிரியர் ஒரு பத்தாம் வகுப்பு மாணவனைக் கேட்டால் அவன் சொல்லும் விடை என்னவாக இருக்கும்?

    நீங்கள் நினைப்பது சரிதான். மார்க்கோனி என்றே சொல்வான். ஆசிரியரும் அருமை” எனப் பாராட்டுவார்.  தப்பான விடை சொன்ன மாணவனை  ஆசிரியர் பாராட்டுகிறாரே என்பது எனது வருத்தம்.

   ஆம். அவன் சொன்னது தவறான விடை என்பது இன்றளவும் பலருக்கும் தெரியாது.

   உண்மையில் வானொலியைக் கண்டுபிடித்தவர் சென்ற நூற்றாண்டில் கொல்கத்தாவில் வாழ்ந்த புகழ் பெற்ற அறிவியலாளர் ஜகதீஸ் சந்திர போஸ்.

   ஒலி அலைகளை மின் காந்த நுண் அலைகளுடன் சேர்த்து அனுப்பலாம் என்பதை 1873ஆம் ஆண்டு ஜகதீஸ் சந்திர போஸ்.கண்டுபிடித்தார். மின் காந்த நுண் அலைகள் சுவர்களின் வழியே புகுந்து செல்லக் கூடியது என்பதையும் சோதனைகள் மூலம் காட்டினார். ஒலி அலைகளை மின்காந்த அலையிலிருந்து பிரித்து மீண்டும் ஒலியாக மாற்றும் தொழில் நுட்பத்தையும் ஆராய்ந்து கண்டுபிடித்தார். கண்ணுக்குத் தெரியாத ஒளி என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி வெளியிட்டார். தொடர்ந்து ஆய்வு நடத்தி, அப்போதைய கல்கத்தாவின் ஆங்கிலேய ஆளுநர் முன்னிலையில், பொதுமக்கள் கூடியிருந்த அரங்கில் தான் கண்டுபிடித்த ரேடியோ தொழில் நுட்பம் குறித்து உரையாற்றினார் போஸ். நிறைவாக அவர் சொன்ன ஒரு வரிச் செய்திதான் தீராத குழப்பத்திற்குக் காரணம் ஆனது.

   “இந்த அளவில் நான் கண்டுபிடித்த இந்த ரேடியோ தொழில் நுட்பத்தை இனி யார் வேண்டுமானாலும் தொடர்ந்து ஆய்வு செய்து மெருகேற்றலாம்.” எனச் சொல்லித் தன் ஆய்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    அதே காலக்கட்டத்தில், ஜெர்மனியைச் சேர்ந்த ஹென்றிச் ருடால்ஃப் ஹெர்ட்ஸ் என்பவர் மின் காந்த அலையை விரிவாக ஆராய்ந்து தன் கட்டுரையை 1887ஆம் ஆண்டு வெளியிட்டார். பிற்காலத்தில் வானொலி ஒலிபரப்பு வீச்சைக் குறிக்கும் hertz என்னும் அலகு இவர் பெயரால்தான் நடைமுறைக்கு வந்தது; இன்றும் தொடர்கிறது.

  அப்புறம் நடந்தது என்ன? போஸ் வைத்த புள்ளிகளில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்க்கோனி என்ற  அறிவியலாளர் கோலம் போட்டார்! புரியவில்லையா? போஸ் வானொலியைக் கண்டுபிடித்தார்; மார்க்கோனி மின்காந்த அலையின் மூலம் தொலைவில் உள்ள ஓர் இடத்திற்குச் செய்தி அனுப்ப முடியும் என்று கண்டறிந்தார். இது நடந்தது 1890 வாக்கில். பிறகு மார்கோனியைத் தொடர்ந்து அறிவியலாளர் பலரும் மேலும் மெருகூட்ட wireless radio சந்தைக்கு வந்தது.

    இப்படி பலரது உழைப்பில் உருவான ரேடியோவை மார்க்கோனி கண்டுபிடித்தார்  எனச்சொல்வது சரியன்று என்பது எனது கருத்து.  என் கருத்துக்கு வலு சேர்ப்பது போல விக்கிப்பீடியா வெளியிட்டுள்ள ஆங்கிலக் கட்டுரையில், வானொலியைக் கண்டுபிடித்ததாகக் கருதப்படுவார் என்னும் பொருள்பட Marconi, who is usually credited as the inventor of Radio என்னும் வரி இருப்பதை வாசகர்கள் இன்றும் பார்க்கலாம். usually credited என்ற தொடரை வாசகர்கள் கவனிக்க வேண்டும்.

  மார்க்கோனி ஓர் ஏமாற்றுப் பேர்வழி என்ற செய்தியும் அறிவியல் வரலாற்றில் உண்டு. டெஸ்லா என்னும் அறிவியலாளர் கண்டுபிடித்த ‘டெஸ்லா காயில்’ என்னும் தொழில்நுட்பத்தைத் தன் ரேடியோ கருவியில் பயன்படுத்தியதோடு, அதைத் தன்னுடையது போலக் காட்டி காப்புரிமையும் பெற்றாராம் மார்க்கோனி. பிறகு மார்க்கோனிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோது அதை எதிர்த்து டெஸ்லா வழக்குத் தொடர்ந்தார். ஆனாலும் தன் செல்வாக்கைப் பயன்படுத்தித் தனக்கு ஆதரவாகத் தீர்ப்பைப் பெற்றார் மார்க்கோனி என்று சொல்லப்படுகிறது.

    நான் மார்க்கோனியின் உழைப்பைக் குறைத்து மதிப்பிடவில்லை. அதற்காக அவர்தான் ரேடியோவைக் கண்டுபிடித்தார் எனக் கூறுவதை மறுக்கிறேன். உண்மையில் பாடலைப் பாடியவர் டி.எம்.செளந்திரராஜன் என்றாலும்  எம்.ஜி.ஆர் பாடுகிறார் என்று விவரம் தெரியாத பலரும் வியந்து பேசுவதைப் போல வானொலியைக் கண்டுபிடித்தவர் மார்க்கோனி எனப் பலரும் நம்புவதை என்னால் ஏற்க முடியவில்லை.

  நம்முடைய நாட்டின் அறிவியல் பாடத்திட்டத்தில் வானொலி குறித்து அன்றைய ஆங்கிலேயர் புகுத்திய ஒரு தவறான செய்தி இன்றளவும் தொடர்வது வேடிக்கையாக உள்ளது.

  போஸ் அவர்கள் தன் கண்டுபிடிப்புக்கு அப்போதே காப்புரிமையைப் பெற்றிருந்தால் இந்தக் குழப்பம் வந்திருக்காது.

முனைவர் அ.கோவிந்தராஜூ, தேசிய விருதாளர், அமெரிக்காவிலிருந்து.

 

 

 

 

6 comments:

  1. இது போல் இட்டுக் கட்டி பொய்யுரைத்த பலவற்றும் திருக்குறளிலும் உண்டு...

    திருக்குறள் கணக்கியல் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்... விரைவில்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் திருக்குறள் ஆய்வில் ஒரு புதிய விடியல் பிறக்கட்டும்.

      Delete
  2. இன்றைக்கு உண்மை என நம்ப வைக்கப்படும் பல விஷயங்கள் பொய்யாக இருக்கக் கூடும்!

    ரேடியோ குறித்த உங்கள் பதிவு நன்று.

    ReplyDelete
  3. அருமையான செய்தி சார்.
    நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
    எடிசனுக்கும் டெஸ்லாவுக்கும் ிடையிலும் இப்படிப்பட்ட பஞ்சாயத்துக்கள் உண்டு.
    யார் எப்போதும் உழைப்பு மட்டும் பத்தாது.
    அதை விளம்பரம் செய்யவும் தெரியனும், அப்போதுதான் ஹிட் ஆக முடியும்.
    அது இப்போதும் அணைத்து வேலையிடங்களிலும் பொருந்துகிறது.

    ReplyDelete
  4. நம்முடைய நாட்டின் அறிவியல் பாடத்திட்டத்தில் வானொலி குறித்து அன்றைய ஆங்கிலேயர் புகுத்திய ஒரு தவறான செய்தி இன்றளவும் தொடர்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

    ReplyDelete
  5. இவ்வாறான பல தவறான செய்திகளை தொடர்ந்து வாசித்தும், கேட்டும் வருவது வேதனையே. வரலாறு எப்போது திருத்தப்படுமோ?

    ReplyDelete