Monday 21 June 2021

அமெரிக்காவில் அப்பா நாள்

        1910 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தந்தையர் தினக் கொண்டாட்டம் இங்கே ஆண்டுக்காண்டு கூடுதல் சிறப்புடன் கொண்டாடப் படுகிறது. சேர்ந்து கொண்டாட வசதியாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையை அமெரிக்க நாட்டு அரசே தேர்வு செய்து அறிவித்தது.

    ஒரு வியப்புக்குரிய செய்தி என்ன தெரியுமா? தந்தையர் நாள் கொண்டாட்டம் என்னும் கருத்தை முன் வைத்ததே மகன் அல்லன்; மகள்தான்.  குழந்தைகளைப் பெற்றவள் ஒருநாள் திடீரென்று கண்ணை மூட, தனி ஒருவராய் ஆறு குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து ஆளாக்கிய தன் அப்பாவின் பிறந்தநாளைத் தந்தையார் நாளாக முதல் முதலில் கொண்டாடியவள் சொனோரா டாட் என்ற அமெரிக்கப் பெண்மணி.

     வேலைச் சுமையில் தந்தையர் தினம் என்னும் நினைவில்லாமல் காலையில் மெல்ல எழும் அப்பாவைக் கட்டிப்பிடித்துக் குழந்தைகள் தரும் முத்தம், முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த பரிசுப் பெட்டியை கண்ணை மூடச்சொல்லி அவருடைய கையில் கொடுத்து அசத்துதல், கூடவே ஒரு வாழ்த்து அட்டையில் அப்பாவைப் பாராட்டி ஒரு வரியைக் கிறுக்கிக் கொடுத்தல், அந்த ஒரு வரியை ஷெல்லியின் கவிதை வரியைப்போல் உணர்ந்து உரத்தக் குரலில் கத்துதல், பூங்காவிற்குச் செல்லல், விருந்து உண்ணல், மதுவை மாந்தி மகிழ்ச்சிக் கடலில் மிதத்தல் என பல நிகழ்வுகள் அமெரிக்கக் குடும்பங்களில் அரங்கேறும் நாள் இது.

     ஆனால் பத்து இந்தியக் குடும்பங்கள்  சரியாகச் சொல்வதாயின் தமிழர் குடும்பங்கள் பத்து இணைந்து ஒரு மாறுபட்ட முறையில் இந்த நாளைக் கொண்டாடினார்கள். என் மகள் மாப்பிள்ளை குடும்பமும் அவற்றுள் ஒன்று.  விழாவை ஏற்பாடு செய்தவர்கள் என்னையும் என் மனைவியையும் அன்புடன் அழைக்க நாங்களும் பங்கேற்றோம்.

     அப்பாக்கள் குழந்தைகளை மகிழ்விக்கவும், குழந்தைகள் அப்பாக்களை மகிழ்விக்கவும் செய்த ஏற்பாடுகள் எத்தனை எத்தனை! அந்த வீடு காலை முதலே களைகட்டத் தொடங்கிவிட்டது. அப்பாக்கள் சிலர் சேர்ந்து ஒரு பெரிய பலூனில் காற்றை அடைக்க, அது நெளிந்து வளைந்து ஓங்கி உயர்ந்தது. அடுத்த நொடியில் அதன் உச்சியிலிருந்து தண்ணீர் வழிந்து விழவும் செய்தனர். அப்புறம் என்ன? அதில் குழந்தைகள் ஏறிச் சறுக்கி விளையாடியது கண்கொள்ளாக் காட்சி!

    வெளியில் வீட்டின் பின்புறத்தில் அமைத்துக்கொண்ட துகில் பந்தலின் கீழ் அமைந்த சமையல் கூடத்தில், காலைச் சிற்றுண்டி, மதியம் பிரியாணி, மாலையில் கோழி வறுவல் குல்ஃபி ஐஸ்கிரீம், இரவில் பேப்பர் ரோஸ்ட், கொத்துப் பரோட்டா என அனைத்தும் அப்பாக்கள் தயாரித்து, அதுவும் அம்மாக்கள், குழந்தைகள் விரும்பும் வகையில் தயாரித்து வழங்கியது இந் நாளின் தனிச்சிறப்பாக அமைந்தது.

   நடுநடுவே அப்பாக்களின் தனிக் கொண்டாட்டம், குழந்தைகளின் தனிக் கொண்டாட்டம் என முழுநாள் மூன்று மணியாய்க் கரைந்தது. மாலையில் அப்பா, அம்மா, குழந்தைகள் கூடி,  ஒவ்வொரு குழுவாக வந்து தமிழ்த்திரையில் வந்த குதியாட்டப் பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடிய காட்சி மிக அருமை. நடன அசைவுகள்  அப்படி ஓர் ஒத்திசைவுடன், காண்பதற்கு வியப்பாக இருந்தது. கல்லூரியில் படிக்கும் ஓர் இளம்பெண் ‘நான் ஆணையிட்டால்’ என்ற எம்.ஜி.ஆர் பாடலுக்கு அசல் எம்.ஜி.ஆர் போலவே கையை உயர்த்திக்காட்டி ஆடியதை நானும் என் மனைவியும் மிகவும் இரசித்து மகிழ்ந்தோம்.

   முன்னிரவுப் பொழுதில் அப்பாக்களை எல்லாம் ஒருவரையும் விடாமல் வரிசையாக அமரவைத்து, குழந்தைகள் தத்தம் அப்பாவின் முகத்தில் வெண்பஞ்சை ஒட்ட, அதனால் முகமெல்லாம் ஷேவிங் க்ரீம் அப்பிய கோலத்தில் அமைய ஒரே கூத்தும் கும்மாளமுமாக இருந்தது. வளர்ந்த பதின்பருவத்துக் குழந்தைகள் வடிவமைத்த பற்பல விளையாட்டுகள் தொடர்ந்தன.







  பிறகு எல்லோரும் கூடத்தில் அமர்ந்தபின் திரையில் ஒரு குறும்படத்தை ஒளிபரப்பினார்கள். அதுவும் குழந்தைகள் இயக்கத்தில் உருவானது. ஒரு வயது குழந்தை முதல் பதின்பருவக் குழந்தைகள் வரை தத்தம் அப்பாவின் சிறப்புகளைச் சுருக்கமாகச் சொல்லிய தொகுப்புக் காட்சி. பார்க்கவும் கேட்கவும் மகிழ்ச்சியாய் இருந்தது. எனக்குச் சிறு வருத்தம். பேசியவர் அனைவரும் தமிழர் குழந்தைகள்; ஆனால் அழகாய் ஆங்கிலத்தில் பேசினார்கள்!

    நிறைவாக, தந்தையர் தின நிறைவு நிகழ்ச்சியாக, கேக் வெட்ட ஏற்பாடு நடந்தது. அனவரும் ஓரிடத்தில் கூடியதும், பார்வையாளர்களில் ஒருவராக நின்ற என்னை ஒருமித்தக் குரலில் அழைத்து கேக் வெட்டச் சொன்னார்கள். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் பொங்க கேக்கை வெட்டி அருகில் நின்ற குழந்தைகளுக்கு ஊட்டியது ஓர் ஒப்பற்ற அனுபவம்.

ஆம். இனியனுக்கு இது ஓர் இனிய நாள்!

  கொண்டாட்டம் முடிந்து மகிழ்வுந்தில் இல்லம் திரும்பியபோது நினைத்துப் பார்த்தேன். தந்தையர் தினத்தை முதலில் கொண்டாடியவர் அமெரிக்கர் என்று விக்கிப்பீடியா சொல்வது சரியா? முதல் முதலில் கொண்டாடியது தமிழர்தானே?. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி குறித்துப் பேசியவர் திருவள்ளுவர்தானே? தாய் நாடு என்பதை மாற்றி “எங்கள் தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” என்று பாடி தந்தையர் தினக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தவர் பாரதியார்தானே?

    தமிழர்தம் பெருமையறியாத தமிழராய் இருக்கின்றோம் என்ற தன்னிலை இரக்கவுணர்வு என் உள்ளத்தில் எழுந்தது.

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

  

    

8 comments:

  1. தங்கள் கட்டுரை மிகவும் அருமை ஐயா

    ReplyDelete
  2. அருமை ஐயா.இறைவன் தான் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பர். நம் தமிழரும் அவ்வாறே என எண்ணத் தோன்றுகிறது.மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  3. அருமை ஐயா... தாத்தா வள்ளுவர் தான் அனைத்திற்கும் முன்னோடி...

    ReplyDelete
  4. தி. முருகையன்21 June 2021 at 12:35

    அருமை ஐயா. வள்ளுவர் கூற்றை மெய்ப்பிக்க அம்மாவும், பாரதியின் கூற்றை மெய்ப்பிக்க நீங்களும். மிக அருமை .

    ReplyDelete
  5. தி. முருகையன்21 June 2021 at 12:37

    அருமை ஐயா. வள்ளுவர் கூற்றை மெய்ப்பிக்க அம்மாவும், பாரதியின் கூற்றை மெய்ப்பிக்க நீங்களும். மிக அருமை .

    ReplyDelete
  6. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  7. மகிழ்ச்சி. தந்தையர் நாடெனும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்றார் பாரதி. அந்த வரிகளுக்கு ஏற்ப தந்தையர் தினத்தில் உங்கள் மகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete