Sunday 23 January 2022

இதய கீதம்

  

இந்தப் பாடல்களைப் படிக்கும் போதெல்லாம் என் கண்கள் கண்ணீர் சிந்தும். நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் மறைந்த தாயை எண்ணி மனம் உருகும். 

   பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த  ஒரு துறவி தன் தாயின் சிதைக்குத் தீ மூட்டிய போது அவர் இதயத்தில் எழுந்த இதய கீதம்!  

   பத்து மாதங்களாய் உடம்பெல்லாம் தோன்றிய வலிகளைப் பொறுத்துக்கொண்டு, பிறந்த சின்னஞ்சிறு தளிரைக் கைகளில் வாரி எடுத்து, பொன் போன்ற மார்பில் அன்புடன் அணைத்துப் பாலமுதம் தந்த அவளை இனி எந்தப் பிறப்பில் காண முடியும்? 

  தவமாய்த் தவமிருந்து முந்நூறு நாள் சுமந்து, அந்தி பகலாய்ப் பார்த்துப் பார்த்து வளர்த்த அவளது சிதைக்கு தீ மூட்டுவதா? 

  கூடையில், தொட்டிலில், மார்பினில், தோள்களில், கட்டிலில் வைத்துத் தன் சேலை முந்தானை என்னும் சிறகினில் மூடிப் பாங்குடன் வளர்த்த தாயின் உடலுக்குத் தீ மூட்டுவதா? 

  தாங்க முடியாத வலியோடு  பெற்றெடுத்து இரவு பகலாய்க் கைகளில் ஏந்தி பால் அமுதம் ஊட்டிய அந்தத் தாயின் உடலுக்குத் தீ மூட்டுவதா? 

  இனிய தேனே, அமுதே, செல்வமே, பூமானே என அழைத்து மகிழ்ந்த அவளுக்கு வாழும்போது எந்தப் பரிசையும் வழங்காத கைகளால் அவள் மாண்டபின் அவளது வாயிலே அரிசியை இடுவதா? 

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச்- செய்யஇரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி

 

முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள்அளவும்

அந்திபக லாச்சிவனை ஆதரித்துத் - தொந்தி

சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ

எரியத் தழல்மூட்டு வேன்

 

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து- முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ

விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

 

நொந்து சுமந்து பெற்று நோவாம லேந்திமுலை

தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே- அந்திபகல்

கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ

மெய்யிலே தீமூட்டு வேன்

 

அரிசியோ நான்இடுவேன் ஆத்தாள் தனக்கு

வரிசையிட்டுப் பார்த்துமகி ழாமல் - உருசியுள்ள

தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ

மானே எனஅழைத்த வாய்க்கு

 

பட்டினத்தடிகள் இயற்றிய இந்தப் பாடல்களைப் பாட நூலில் வைத்து நம் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். 

 தாயின் அருமை தெரியாத ஒரு தலைமுறை மெல்ல உருவாகி வருவதை எண்ணி இந்தப் பதிவை இடுகிறேன். 

முனைவர் .கோவிந்தராஜூ,

துச்சில்: கனடா.

 

 

 

4 comments:

  1. அருமை ஐயா...

    தன்னுடைய அருமை முதலில் தெரிய வேண்டும்... (தெரிய வைக்க வேண்டும்...)

    ReplyDelete
  2. இன்றைய தலைமுறையினர் இதுபோன்ற பல பெருமைகளைத் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

    ReplyDelete
  3. வாசித்ததும் மனம் என்னவோ செய்துவிட்டது.

    //இனிய தேனாய், அமுதாய், செல்வமாய்த் திகழ்ந்த அவள் வாழும்போது எந்தப் பரிசையும் வழங்காத கைகளால் அவள் மாண்டபின் அவளது வாயிலே அரிசியை இடுவதா? //

    கண்ணில் நீர் துளிர்த்ததைத் தவிர்க்க இயலவில்லை.

    இளையதலைமுறைக்குக் கண்டிப்பாகத் தெரியவைக்க வேண்டும் ஐயா. இதய கீதம் இதயத்தை அழுத்திவிட்டது.

    கீதா

    ReplyDelete
  4. எப்பவும் போல சிறப்பான பதிவு.

    ReplyDelete