Tuesday 30 August 2022

கரூர் புத்தாக்கத் திருவிழா

   'முயற்சி திருவினை ஆக்கும்என்னும் வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப கரூரில் ஒரு புத்தகத் திருவிழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நூல் அங்காடிகள், பல நூறாயிரம் பேர்களின் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து, சற்றேறக்குறைய இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு நூல்கள் விற்பனை எனப் பல உச்சங்களைத் தொட்ட மாபெரும் நிகழ்வு என்றால் அது மிகையாகாது.

    எனக்கும் கரூருக்கும் உள்ள உறவு இருபது ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இந்த இருபது ஆண்டுகளில் இது போன்று பெரிய அளவில் பத்து நாள்களுக்கும் மேலாக நடந்த சமூக, கலாச்சாரத் திருவிழாவை நான் பார்த்ததில்லை.

   கரூர் புத்தகத் திருவிழாவுக்கான வளாகத் தேர்வு மிகவும் குறிப்பிடத் தகுந்தது. நூற்றுக் கணக்கில் நான்கு சக்கர வாகனங்களையும், ஆயிரக்கணக்கில் இருசக்கர வாகனங்களையும் வசதியாக நிறுத்த வாய்ப்பாக அமைந்தது இந்த வளாகம். இந்த வசதி இருந்ததால் நான் எல்லா நாள்களிலும் விழாவில் பங்கேற்றேன்.

     பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் குறிப்பிடத் தகுந்தவை. வளாகம் முழுவதும் இரவைப் பகலாக்கும் வண்ணம் மின்விளக்குகள் ஒளி உமிழ்ந்தன; கண்காணிப்புக் கேமராக்கள் இயங்கிய வண்ணம் இருந்தன; இரவில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சுற்றி வந்தார்கள்.

நடுவில் நிற்கும் இளைஞர் நாவலாசிரியர் இன்ப பிரபஞ்சன்

கரூர் மாவட்டப் படைப்பாளர்கள்

கரூர் மாவட்டப் படைப்பாளர்கள்



      விழாவின் வெற்றிக்கு அடிப்படையாய் அமைந்தது மாவட்ட ஆட்சியரின் திட்டமிடல் திறனே யாகும். இதனை இவர் செய்வார் என்பதை ஆராய்ந்து அதனை அவரிடம் ஒப்படைத்து, அதில் குறுக்கிடாமல் செயல்பட வைத்தவர் மாவட்ட ஆட்சியர்.

    ‘பெருந்தொழில் நாட்டுதும் வாரீர்என்று பாரதியார் பாணியில் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தபோது பலர் முன்வந்து, மனமுவந்து நிதி நல்கினார்கள்; மற்றும் பலர் உழைப்பினை நல்கினார்கள்; இன்னும் பலர் இன்சொல் தந்து பாராட்டினார்கள்; ஆனால் குறைகளை மட்டும் காணும் இயல்புடைய சிலர் வசை பாடினார்கள்!

     பெருமழை பெய்து பெருஞ்சிக்கலை ஏற்படுத்திய போதும் அதை எதிர்கொண்டு, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, விழாவைச் சற்றும் தொய்வில்லாமல் நடத்திய மாவட்ட ஆட்சியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    முதல் முறையாகப் பெரிய அளவில் ஒரு விழாவை நடத்தும்போது சிற்சில பின்னடைவுகள் ஏற்படுவது இயல்பே யாகும். இது குறித்த விமரிசனங்கள் குறித்து விழா ஏற்பாட்டாளர்கள் கவலையுறத் தேவையில்லை.

என் பார்வையில் இந்தப் புத்தகத் திருவிழா ஒரு புத்தாக்கத் திருவிழா ஆகும். இதை நடத்தியதில் நம் மாவட்ட ஆட்சியர் மரு..பிரபுசங்கர்,... அவர்கள் வெற்றி வாகை சூடியுள்ளார் என்றே கருதுகிறேன். ஒரு கோணத்தில் எவரேனும் தோல்வி எனச் சொன்னாலும், வள்ளுவர் சொல்வதுபோல் யானை வேட்டைக்குச் சென்று, குறிவைத்து வேல் விடுத்தும் யானை தப்பி விட்டது என்று கருதி, அது இனிய பெருமைக்குரிய தோல்வி என்றே அவர் கொள்வாராக.

    எது எப்படியோ, பல்லாயிரக்கணக்கான மாணாக்கர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் முன்னெடுப்பு இது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இம் முயற்சி வருகின்ற ஆண்டுகளிலும் தொடர வேண்டும்.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, தேசிய விருதாளர், கரூர்.

5 comments:

  1. தலைப்பில் குழம்பி தெளிவுற்றேன்
    வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  2. அருமையான நிகழ்வு. நீங்கள் சொல்லியிருப்பது போல், நல்ல நிகழ்விற்குத் திருஷ்டி சுத்தியதாகப் போகட்டும் அந்த வசைகள். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்...அதுவே நினைவுக்கு வந்தது.

    தலைப்பு அருமை அதன் பொருளும் பதிவில் விளங்கிற்று.

    கீதா

    ReplyDelete
  3. புத்தகத் திருவிழா புத்தாக்கத் திருவிழாவாக மலர்ந்ததில் மகிழ்ச்சி ஐயா

    ReplyDelete
  4. தி.முருகையன்3 November 2022 at 09:33

    சிறப்பான நிகழ்வு.
    நன்றி ஐயா .

    ReplyDelete