Sunday 6 November 2022

முருங்கையால் வந்திடும் முன்னேற்றம்

   கரூரில் நடந்த மூன்று நாள் முருங்கைத் திருவிழாவில் (International Moringa Fair 2022) சுமார் முப்பதாயிரம் பேர்கள் பங்கேற்றனர் என ஒரு நாளேடு தெரிவிக்கிறது. இது உண்மைச் செய்தி என்பதை என் இரு கண்களால் கண்டேன். ஒவ்வொரு அரங்கிலும் பெருங்கூட்டம் நிரம்பி வழிந்தது. மதியம் ஒரு மணி அளவிலும் கருத்தரங்கக் கூடத்தில் ஓர் இருக்கை கூட காலியாய் இல்லை.

     முருங்கை விவசாயிகள், வேளாண் ஆராய்ச்சியாளர்கள், தொழில் முனைவோர், வணிகர், நுகர்வோர் என முருங்கைத் தொழிலில் தொடர்புடைய அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு களமாக இம் முருங்கைத் திருவிழா அமைந்தது.

    முருங்கைக் கீரை, முருங்கைக் காய் இவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பெற்ற பொருள்கள் அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. முருங்கை விதை எண்ணெய், முருங்கைக் கீரை பொடி, முருங்கை சத்து மாத்திரை, முருங்கைக் கீரை கோதுமை நூடுல்ஸ், முருங்கைக் கீரை தேநீர், முருங்கைப்பூ தேன், முருங்கைக் கீரை சூப் என்று பட்டியல் நீண்டு செல்கிறது.

    முருங்கை எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம். தலைக்குத் தடவலாம். கை கால் மூட்டு வலிக்குச் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

   முருங்கையில் உள்ள பாரம்பரிய இரகங்களும், நம் வேளாண் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட நவீன இரகங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

   முருங்கைக் கீரையை உலர்த்திப் பொடியாக மாற்றும் இயந்திரங்கள், முருங்கைப் புண்ணாக்கைப் பொடியாக்கும் இயந்திரங்கள், முருங்கை விதையிலிருந்து எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் எல்லாம் செயல்விளக்க முறையில் காண்போரைக் கவரும் வண்ணம் இருந்தன.







 குறைந்த முதலீட்டில் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி, மதிப்புக் கூட்டப்பெற்ற பொருள்களைத் தயாரித்து, முருங்கை சார்ந்த தொழில் முனைவோர் நல்ல இலாபம் பார்க்கலாம் என்னும் நம்பிக்கையை இந்த முருங்கைத் திருவிழா தந்துள்ளது என்பது முற்றிலும் உண்மை.

     மூன்று நாள்களில் நடந்த கருத்தரங்கில் வெற்றுப் பேச்சாளர்கள் யாரும் உரையாற்றவில்லை. உலக அளவில் முருங்கைத் தொழிலை முன்னெடுத்துச் செல்லும் தொழில் வல்லுநர்கள் உரையாற்றினர். பலரும் அழகு தமிழில் அனைவர்க்கும் புரியும்படியாய் பேசியது கூடுதல் சிறப்பு.

    இக் கருத்தரங்கில் பேசிய அனைவரும் ஒருமித்தக் குரலில் சுட்டிக் காட்டியது ஒன்றே ஒன்று – அது தரக் கட்டுப்பாடு.

    நம் விவசாயிகள் முருங்கையை இயற்கை விவசாய முறையில் பயிர் செய்ய வேண்டும், தொழில் முனைவோர் தாம் தயாரிக்கும் பொருள்களில் தரம் முதன்மையானது என்பதைத் தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டும். இதில் உறுதியாக இருந்தால் முருங்கை ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடிக்கும்.

  கண்காட்சியைக் காணவந்த அனைவருக்கும் சுவையான, தரமான, போதுமான மதிய உணவு கட்டணமில்லாமல் வழங்கப்பட்டது என்பது வியப்புக்குரியதாகும். உணவுக் கூடத்தில் பணியாற்றிய  தொண்டர்கள் இன்முகத்துடன் விருந்தோம்பிய பாங்கு மிகவும் அருமை!

  வளாகத் தூய்மை, கழிப்பறைத் தூய்மை இவ்விரண்டும் பாராட்டும்படியாய் அமைந்தது குறிப்பிடத் தக்கது. தூய்மைப் பணியாளர்க்கு என் வணக்கமும் வாழ்த்தும் உரித்தாகுக.

     இந்திய தொழில் கூட்டமைப்பின்(CII- Confederation of Indian Industry) கரூர் கிளை இந்த முருங்கைத் திருவிழாவைக் கரூர் பிரேம் மகாலில் முதல் முறையாக மிகச் சிறப்பாக நடத்திக் காட்டியுள்ளது. கரூர் கிளையின் தலைவர் திரு.கே.வெங்கடேசன் அவர்களும் அவரது குழுவினரும் நன்கு திட்டமிட்டுச் செயற்கரிய செயலைச் செய்துள்ளனர். திரு.வெங்கடேசன் அவர்களைத் தேடிச் சென்று சந்தித்தேன்; பாராட்டுகளைத் தெரிவித்தேன்.

    தமிழ்நாடு அரசு கரூரில் அமைக்கவுள்ள முருங்கைத் தொழில் பூங்காவின் வருகைக்கு இக் கண்காட்சி கட்டியம் கூறும் வகையில் அமைந்தது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

……………………………………………………………………………………………………………………………………..

முனைவர் அ.கோவிந்தராஜூ, தேசிய விருதாளர்.

4 comments:

  1. தி.முருகையன்6 November 2022 at 18:37

    நன்றி ஐயா.
    அருமையான பதிவு.
    முருங்கை எண்ணெய் பற்றிய தகவல் ஆச்சரியமாக இருந்தது. ஐயா நன்றிகள் பல.

    ReplyDelete
  2. அருமை ஐயா மிகவும் பயனுள்ள பதிவு..!

    ReplyDelete
  3. Thank you so much for sharing this new information about mornings.

    ReplyDelete