Thursday 13 April 2023

நீயே முளைப்பாய்

      கவிதா ஜவகர் என்னும் பெண்மணி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பட்டிமன்ற மேடைகளில் பாங்குறப் பேசி வருகின்றார். வெண்கல மணி விட்டு விட்டு ஒலிப்பது போன்று தன் கணீர்க்குரலில் பேசிக் கேட்போரை நொடிப்பொழுதில் தன்பால் ஈர்க்கும் வல்லமை படைத்தவராய் விளங்குகின்றார். அதேபோல் தனிச்சொற்பொழிவிலும் தனி முத்திரை பதிக்கின்றார்.

   இவர் எழுதிய கவிதை நூலை வெளியிடவும், அந்நூலைத் திறனாய்வு செய்யவும் என் நூலக நண்பர் சிவக்குமார் என்னை அழைத்தார். கரும்பு தின்னக் கசக்குமா? உடனே அப் பணியை ஏற்றுக் கொண்டேன். 



 

 பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன் இட்ட புனைபெயருடன் தன் பெயரையும் சேர்த்து ‘கரிசல்காரி கவிதா ஜவகர்’ என்னும் பெயரில் தன் முதல் கவிதை நூலைப் படைத்துள்ளார். ‘கரிசல்காரி கவிதா ஜவகரின் முதல் நூல்’ என அவர் குறிப்பிட்டாலும் அப்படி  எண்ணத் தோன்றவில்லை! சொல்லவரும் செய்திகளைச் சொல்லும் விதத்தில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. 

இது மழையில் நனைந்த நூல் என்று சொல்லும் அளவுக்கு பல கவிதைகளில் மழை பொழிகின்றது. ஓரிரு எடுத்துக்காட்டுகள்:

 

 மழைகடவுளின் தழுவல்

 தேவதையின் முத்தம்

 அம்மாவின் அதட்டல்

 குழந்தையின் கருணை

 

மழை - பணக்காரர் வீட்டுத் தாழ்வாரத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும்

மத்திய வர்க்கத்தில் தங்கம்போல் சேமிக்கப்படும்

சேரியின் வீடுகளில் பிள்ளையெனச் செல்லம் கொஞ்சும்.

 

இவர் கவிதைகளில் கிண்டல் இருக்கிறது; கேலியும் இருக்கிறது. பின்வரும் கவிதையைப் படித்ததும் என்னை அறியாமல் உரக்கச் சிரித்தேன்.

 

  கோவிலுக்குள் நுழைந்தார் மந்திரி

  வெளிநடப்புச் செய்தார் கடவுள்!

 

 சங்க இலக்கியம் கற்ற புலவர்களில்

 பலர் அகம் பேசுவதை விடப்

 புறம் பேசுகிறார்கள்.

 

மனிதன் நாயினும் கீழானவன் எனக் கிண்டலடிக்கும் கவிதை இது:

 

நாய்கள் மனிதனைப் போலில்லை 

அவற்றிற்கு உள்ளொன்று வைத்துப்

புறமொன்று குரைக்கத் தெரியாது;

வாலாட்டி வாழுமேயன்றி

யாருக்கும் வால்பிடித்து வாழாது;

நாய் மனிதனின் தோழன்

ஆனால் மனிதன் யாருக்கும் தோழனில்லை.

 

மனித வாழ்க்கை முரண்பாடுகளுடன் பின்னிப் பிணைந்தது. இது குறித்த இந்தக் கவிதை என்னை வெகுவாய் ஈர்தத்து.

 

பள்ளியில் விட்டபோதும்

கல்லூரியில் சேர்த்தபோதும்

வேலை நிமித்தம் வெளிநாடு அனுப்பிய போதும்

திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே போன அம்மாவிற்குக்

கொள்ளிவைக்கும் தருணத்தில் வெட்டியார் சொன்னார்:

திரும்பிப் பார்க்காம போ என்று.

 

நீயே முளைப்பாய் எனும்  கவிதைத் தலைப்பே நூலுக்கும் தலைப்பாக அமைந்துள்ளது. சோகத்தின் உச்சம் தொட்ட கவிதை இது. ஈழப்போராளி பிரபாகரனின் குழந்தையைச் சிங்களர் சுட்டுக் கொன்றதை மூன்று பக்கக் கவிதையாய் வடித்துள்ளார். கண்ணீரை வரவழைக்கும் கவிதை!

 

 

மாறுபட்ட கோணத்தில் ஒரு காதல் கவிதையைக் கண்ணுற்றேன். அது இது:

 

கதவைத் தட்டினேன் நான் 

ஜன்னலைத் திறந்தாய் நீ.

 

கொஞ்சம் அரசியல் வாடையும் வீசுகிறது. பதச் சோறாக ஒன்று.

 

 தண்ணீர் வராத குழாயடியிலும்

 காத்திருக்கும் காலிக்குடங்களைப்போல

 வாக்குச் சாவடியில் வரிசையாய் மக்கள்.

 

நூலைப் படித்து முடித்தவுடன் எடுத்துச் செல்ல வேண்டிய செய்தியாக நான் பார்த்த நல்ல கவிதை இது:

 

 தன்னை வெளிக்காட்டும் அறிவைவிட

 பிறருக்காய் வெளிப்படும் அன்பு புனிதமானது.

 

சமுதாயத்தைக் கூர்ந்து காணும் திறமையும், அவ்வாறு காண்பதைக் கவிதையாக்கும் கைவண்ணமும் வாய்க்கப்பெற்ற கவிதா ஜவகர் இன்னும் பல கவிதை நூல்களைப் படைக்க வேண்டும் என விழைகிறேன்.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ

தேசிய விருதாளர்.

 

நூல் குறித்த விவரம்: நீயே முளைப்பாய்/ 108 பக்கம்/ 100 ரூபாய்/ படைப்பு பதிப்பகம்- 94893 75575

 

13 comments:

  1. குறிப்பிட்ட கவிதை வரிகள் சிறப்பு.

    ஆசிரியருக்கும், முனைவர் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துகள். - கில்லர்ஜி

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா..

    ReplyDelete
  3. இங்கு நீங்கள் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் எடுத்துக் காட்டியிருக்கும் கவிதைகள் அனைத்தும் அருமை என்றால் அருமை. மிகவும் ரசித்து வாசித்தேன்...மாறுபட்ட சிந்தனைகளின் வெளிப்பாடாய்க் காண்கிறேன்.

    கீதா

    ReplyDelete
  4. ஆசிரியருக்கு வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
  5. கவிதா ஜவகர் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. எளிய நடையில் இனிய கவிதை. ரசித்து படித்து மகிழ்ந்தேன். ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
    தேசிய விருதாளர் ஐயா அவர்கள் நூலை திறனாய்வு செய்ததுடன் நூலையும் வெளியிட்டது நூலாசிரியருக்கு கிடைத்த தேசிய விருது.
    மேலும் பல நூல்களை படைக வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்
    தி.முருகையன்

    ReplyDelete
  7. அருமை அய்யா

    ReplyDelete
  8. அரிய அழகிய அணிந்துரை நூலுக்கு மகுடம்... நீதிபதி மூ.புகழேந்தி.

    ReplyDelete
  9. நீயே முளைப்பாய் என்ற தலைப்பிலான கவிதை நூல் வெளியீடு குறித்த தங்கள் கட்டுரையை வாசித்தேன் மிகவும் அருமை திருமதி.கவிதா ஜவகர் அவர்களைப் பற்றி சில வரிகள். கரிசல் காரி கவிதா ஜவகர் அவர்கள் எழுதிய கவிதை நூலான நீயே முளைப்பாய் என்ற தலைப்பிலான கவிதை நூல் குறித்த தங்களின் கருத்துக் கோவையை ரசித்து ருசித்தேன் என்றே சொல்லலாம். ஏனென்றால் திருமதி. கவிதா ஜவகர் அவர்கள் வளர்ந்து வரும் பட்டிமன்றப் பேச்சாளராக அவர் ஆற்றிய பல உரைகளை நான் கேட்டிருக்கிறேன். அந்த பட்டிமன்றப் பேச்சில் அனல் தெறிக்கும் பேச்சு வெளிப்படும் பிறரிடம் இருந்து கைத்தட்டளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து இந்த சமுதாயத்திற்கு எதையாவது நாம் செய்ய முடியுமா? என்ற எண்ணமே அவரது பேச்சில் வெளிப்படும். இந்த நூலில் உள்ள கவிதை வரிகளைத் தாங்கள் சுட்டிக்காட்டும் பொழுது கூட சற்று அரசியல் வாடை இருப்பதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். அரசியலும் சமுதாயத்தில் தான் இருக்கிறது. ஆகவே சமுதாயத்தைப் பற்றிக் கண்டிப்பாக பேசியே ஆக வேண்டும், அதன் வெளிப்பாடு தான் அந்த கவிதை வரிகள். புதுக்கவிதைகளில் காணப்படக்கூடிய படிமம், தொன்மம், குறியீடு மற்றும் இருண்மைப் பண்பு முதலான உத்திகளை எல்லாம் இந்த கவிதையில் இடம் பெற்றிருக்கும் என நான் எண்ணுகின்றேன். ஏனென்றால் கவிதா ஜவகர் அவர்களது கவிதை நூலின் தலைப்பு நீயே முளைப்பாய் என இருக்கிறது. எதற்கும் யாரும் துணைக்கு வர மாட்டார்கள் உன்னை நீ தயார் படுத்திக் கொள் என்ற கருத்தின் வெளிப்பாடாக நான் பார்க்கிறேன் கருத்தின் வெளிப்பாடாக நான் பார்க்கிறேன் கருத்தின் வெளிப்பாடாக நான் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்
    அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி)
    கரூர்-5

    ReplyDelete
  10. அணிந்துரை அருமை.

    ReplyDelete
  11. அணிந்துரை அருமை. நீதிபதி மூ.புகழேந்தி.

    ReplyDelete