Tuesday 3 October 2023

எஸ்ராவிடம் அடைந்த ஏமாற்றம்

    தமிழில் வெளிவரும் மொழிபெயர்ப்பு நூல்களைப் அவ்வப்போது படிப்பதுண்டு. அண்மையில் படித்து முடித்த ஒரு நூல் 505 பக்கங்கள் கொண்ட தமிழ் மொழிபெயர்ப்பு நாவல். ‘வீரம் விளைந்ததுஎன்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர் நாடறிந்த நல்ல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்.

 


How The Steel Was Tempered என்பது ஆங்கில மொழிபெயர்ப்பு நூலின் தலைப்பு. மூல நூல் இரஷ்ய மொழியில் Как закалялась сталь என்னும் தலைப்பில் வெளியான ஆண்டு 1934. நூலின் ஆசிரியர் நிக்கொலாய் ஒஸ்ட்ரோவ்ஸ்கி (NIKOLAI OSTROVSKY) ஓர் இரஷ்ய எழுத்தாளர். முப்பத்திரண்டு வயதை முடிக்குமுன் மண்ணைவிட்டு மறைந்த மாமனிதர்.

    இந்நூல் உலகில் பல்வேறு மொழிகளில் வெளியாகி இதுவரை 36400000 படிகள் விற்றுள்ளதாக விக்கிப்பீடியா சொல்கிறது.

   இந்த நாவல் நிக்கொலாய் ஒஸ்ட்ரோவ்ஸ்கியின் தன் வரலாற்று நூல் என்றே கொள்ளத்தக்கது என்னும் கருத்து எஸ்ராவின் மொழிபெயர்ப்பு நூலின் முன்னுரையில் காணப்படுகிறது.

  நாவலின் கதைத்தலைவன் பாவெல் கர்ச்சாகின். தன் ஆசிரியர் தயார் செய்து வைத்திருந்த பணியார மாவில் புகையிலைத் தூளைக் கொட்டும் குறும்புக்கார சிறுவனாக அறிமுகமாகும் பாவெல் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட நேர்கிறது. லெனின் தொடங்கிய பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட இளைஞனாக மாறுகிறான். லெனின் மறைவும் இந்த நாவலின் கதைப்போக்கில் இடம்பெறுகிறது.

 ‘விரைவில் ஒரு குடியரசு மலரும். அதில் உலக மாந்தர் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வார்கள். உழைப்பாளர் உரிமை பெறுவார்கள். சகல முதலாளிகளுக்கும் முடிவுகட்டும் காலம் வரும்.’ என்று கனவு காண்கிறான் பாவெல். லெனின் கட்சியில் சேர்ந்து போரில் ஈடுபடுகிறான். கட்சி நலனுக்காகத் தன் காதலையும் தியாகம் செய்கிறான். முதுகுத் தண்டு சிதைவுற்றுப் பன்னிரண்டு ஆண்டுகள் உடலளவில் இயங்க முடியாத நிலையை அடைகிறான். ஆனால் உள்ளத்தில் ஒரு துளியும் சோர்வு இல்லாமல் லெனின் கோட்பாட்டைத் தன் பேச்சாகவும் மூச்சாகவும் கொள்கிறான். பார்வை இழந்த நிலையிலும் பிரெயில் முறையில் எழுதப்பழகித் தன் வாழ்வில் நிகழ்ந்த போராட்டங்களை, காதலை, காதல் முறிவை விவரித்து ஒரு நூலாக எழுதி முடிக்கிறான். அந்நூலை கையில் ஏந்திய சில நாள்களில் கொடும் நோய்க்கு இரையாகி மடிகிறான். இதுதான் கதை.

  இரண்டு பாகங்கள் கொண்ட ஆங்கிலப் படைப்பை எஸ்ரா அவர்கள் பெரிதும் முயன்று ஒரே நூலாக தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். அதைப் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

   வாசகன் தான் படிப்பது மொழிபெயர்ப்பு நூல் என்று தெரியாத வகையில் மொழிபெயர்ப்பு மிக இயல்பாக அமைய வேண்டும். நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது ஆகாஷ்வாணியின் செய்தி அறிக்கை என அடிக்கடி சொல்வதுபோல், ‘நீ படித்துக்கொண்டிருப்பது மொழிபெயர்ப்பு நூல்எனப் பல இடங்களில் நினைவு படுத்துவதாய் எஸ்ராவின் மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது.

மகனே நீ உன் தாத்தா மாதிரியே உள்ளாய். அவர் ஒரு மாலுமியாக வேலை பார்த்தார்; அவர் மனதிலும் நவநவமான கருத்துக்கள் ஊறிக்கொண்டே இருந்தன. ஒரு வழிப்பறிக்காரன்போல் வாழ்ந்தார். ஆண்டவன் அவரை மன்னிப்பாராக! ” என மொழிபெயர்க்கிறார். ஒன்றும் புரியவில்லை. முட்டி மோதி மூல நூலைத் தரவிறக்கம் செய்து படித்துப் பார்த்தேன்.

You are just like your granddad, the sailor, always full of ideas he was. A regular brig, and, God forgive him. இதுதான் ஆங்கில நூலில் காணப்படும் வரிகள். இவ்வரியில் வழிப்பறிக்காரன் எங்கே உள்ளார்? இப்படி மொழிபெயர்த்த எஸ்ராவிடம் நான் ஏமாற்றம் அடைந்தேன் என்றே சொல்லலாம்.

நான் மொழிபெயர்த்திருந்தால் இப்படி எழுதுவேன்: “மகனே! நீ உன் தாத்தா மாதிரியே உள்ளாய். அவர் ஒரு கப்பல் மாலுமியாக வேலை பார்த்தார்; அவர் மனதில் எப்போதும் கருத்துக்கள் நிறைய இருந்தன. அவருக்கு எப்போதும் கப்பல்தான், வீட்டு நினைவே இல்லாமல் வாழ்ந்தார், ஆண்டவர் அவரை மன்னிப்பாராக!”

  Victor was arrested .Several people were now clustered on the road.இதை எஸ்ரா அவர்கள்விக்டர் கைது செய்யப்பட்டான்; சிலர் சாலையில் சேகரிக்கப்பட்டார்கள்என மொழிபெயர்க்கிறார். குப்பைதான் சேகரிக்கப்படும். மனிதர்கள் சேகரிக்கப்படுவார்களா?  walked on whistling La donna e mobile.  இந்த வரியை .அவன் ஒரு பாட்டை ஊதிக்கொண்டே சென்றான்என எழுதுகிறார். பாட்டை உதடுகளைக் குவித்து விசிலடிக்கலாம் அல்லது சீழ்க்கையடிக்கலாம். பாட்டை ஊத முடியுமா?

  சில ஆங்கிலச் சொல்களை அப்படியே எடுத்தாள்கிறார். .கா: hall ஹால் workshop வொர்க்க்ஷாப். கூடம், பணிமனை என்னும் சொல்கள் அன்றாடப் பயன்பாட்டில் உள்ளனவே.

என்ன காரணமோ தெரியவில்லை ஏராளமாக வடமொழிச் சொல்களைப் பயன்படுத்தியுள்ளார்.

   எழுத்துப் பிழைகளும் கண்ணில் படுகின்றன. எடுத்துக் காட்டாக, நகரம் நரகம் ஆகி உள்ளது. விண்ணப்பம் விண்ணம் என்று உள்ளது.

  இதுபோன்ற சில குறைபாடுகள் தென்பட்டாலும் கதைப்போக்கைப் புரிந்து கொள்ளும் அளவில் மொழிபெயர்ப்பு நன்றாகவே உள்ளது.

  இருந்தாலும் எழுத்துலகில் மிகப்பெரிய ஆளுமையாக வலம்வரும்  எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இன்னும் கொஞ்சம் கவனமாக மொழி பெயர்த்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

  அடுத்தப் பதிப்பு குறை களைந்த செம்பதிப்பாக வெளிவர பதிப்பகத்தார் ஆவன செய்ய வேண்டும் என்பதே இந்த எளிய வாசகனின் வேண்டுகோள்.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ.

 

 

 

 

 

5 comments:

  1. இன்னமும் நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டு, தவறின்றி செய்திருக்கலாம்...

    ReplyDelete
  2. தங்களது எடுத்துக் காட்டும் விவரிப்பு சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  3. தங்களின் கருத்துகள் மறுக்க முடியாதவை சார்.

    ReplyDelete
  4. தங்கள் மொழிவள திறமை மிக நன்று. மொழி பெயர்ப்பில் மிகவும்
    கவனம் தேவை.அதை அதில் தவறியுள்ளது ஏனோ?

    ReplyDelete
  5. தாங்கள் கூறுவதைப் பார்த்தால் Google Translater-ல் மொழிமாற்றம் செய்தது போல் அல்லவா தோன்றுகிறது

    ReplyDelete