‘கரூர் சதி வழக்கு’ என்பது இன்றுவரை பலருக்கும் புரியாத ஒரு புதிராகவே இருந்தது. இப்போது கரூரில் வாழும் மிக மூத்த குடிமக்களுக்கும் இது குறித்து ஒன்றும் தெரியவில்லை.
முத்துக்குமார் என்பார் எழுதி, சந்தியா
பதிப்பகம் வெளியிட்டுள்ள ஒரு நூல்* வழியாக இந்தக் கரூர்
சதிவழக்குப் பற்றிய செய்திகளை ஓரளவுக்கு அறிய முடிகிறது.
‘ஆங்கிலேயரின் படையில் பணியாற்றிய இந்திய வீர்ர்களை ஆங்கிலேயருக்கு எதிராகப்
போராடும்படித் தூண்டினார்; அதற்கான சதித்திட்டத்தின்
ஒரு பகுதியே அவர் கரூரில் நிகழ்த்திய
மேடைப் பேச்சாகும்’ என்று கரூர் போலீசார்
முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டு ஒரு வழக்கைப் பதிவு செய்தனர். இதுதான்
கரூர் சதிவழக்கு.
யார் அந்தச் சதிகாரர்? அவர் காஞ்சிபுரம்
கிருஷ்ணசாமி சர்மா என்பவர்.
காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே
வ.உ.சி. மற்றும் சுப்ரமணிய சிவா, விபின்
சந்திர பாலர் போன்றோரால் ஈர்க்கப்பட்டு, மிகத் தீவிரமாக
விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். பதினாறாம்
வயதிலேயே நாடறிந்த பேச்சாளராக வலம் வந்தார். வெள்ளைக்
கதராடையுடன் தலையில் சிவப்புவண்ணத் துண்டால் முண்டாசு கட்டிக்கொண்டு மேடைகளில் முழங்குவார்.
1908ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திருநெல்வேலியில்
வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டபோது
அங்கு ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டது; வணிகர்கள் கடையடைப்பு
செய்து நடுத்தெருவில் நின்று வந்தேமாதரம் என முழக்கமிட்டனர். தமிழ்நாடு
முழுதும் கொந்தளித்துக் கிடந்த நிலையில் கரூர் மக்கள் மட்டும் ஏதும் நிகழாதது போல அமைதியாக
இருந்தனர்.
அப்போது கரூரில் வாழ்ந்த காங்கிரசார்
சிலர் ஒன்றுகூடி விவாதித்தனர். கரூர் மக்களைத் தட்டி எழுப்பும் பேச்சாளர் ஒருவரை உடனே அழைக்க
வேண்டும் என முடிவு செய்து நேரில் சென்று கிருஷ்ணசாமி சர்மாவை அழைக்க, அவரும்
உடனே ஒப்புதல் தந்தார்.
கரூர் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு எதிரில்
இருந்த திடலில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இது நடந்தது
1908ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள்.
பொதுமக்கள் வெள்ளமெனத் திரண்டு வந்து
சர்மாவின் பேச்சைக் கேட்டனர்.
“வெள்ளையர் தரும் காசுக்காக
நம்மவர் இராணுவத்திலும், காவல் துறையிலும் பணிபுரிவது கேவலமாக இல்லையா? இனியாவது
அவர்களுடைய துப்பாக்கிகள் வெள்ளையரை நோக்கித் திரும்புமா?” என்னும்
பொருள்பட அனல் தெறிக்கப் பேசினார். கூட்டத்தில் இருந்த
ஒருவர் எழுந்து, “இப்படி நீங்கள் பேசுவது இராஜ துரோகம் இல்லையா?” எனக் கேட்டார். “தெரிந்துதான்
பேசுகிறேன்; நான் இதற்காகச் சிறை செல்லவும் தயார்” எனக் கூறி, தன் ஆவேசப்
பேச்சைத் தொடர்ந்தார். பொதுக்கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்து சர்மா ஊர் திரும்பிவிட்டார்.
ஆனால் விதி வேறு
விதமாக விளையாடியது.
இரண்டு மாதங்கள் கழிந்து
கரூர் போலீசார் ஒரு வழக்கைப் பதிவு செய்து அதன் அடிப்படையில் சர்மாவை சென்னையில்
கைதுசெய்து, கரூர் அன்றைய கோவை மாவட்டத்தின் ஒரு பகுதி என்பதால், கோவை நீதி
மன்றத்தில் நிறுத்தினர். சர்மா கோவை கொடுஞ்சிறையில் தள்ளப்பட்டார்.
இரண்டு மாதம் கழித்து கிருஷ்ணசாமி சர்மா
ஏன் கைது செய்யப்பட்டார் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
அது ஒரு கதை. கிருஷ்ணசாமி என்னும் பெயருடைய கரூர்காரர் ஒருவர் காவல்துறைக்குப் பல்வேறு வேலைகளைச் செய்துதரும் ஒப்பந்ததாரர். அவர் சென்னையிலிருந்த ஒரு பெரிய போலீஸ் அதிகாரி வீட்டில் மராமத்துப் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, பேச்சு வாக்கில் தான் கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணசாமி சர்மாவை எதிர்த்துக் கேள்வி கேட்டதைப் பெருமையாகச் சொல்ல, அதைக்கேட்ட அந்த அதிகாரி சுதாரித்துக்கொண்டு கரூர் போலீசாரிடம் அதுகுறித்த அறிக்கையைக் கேட்டார். வேண்டுமென்றே கரூர் போலீசார் ஒரு பொய்வழக்கைப் போட சர்மா கைது செய்யப்பட்டார்.
முதலில் ஆங்கிலேய நீதிமன்றம் சர்மா
நாடுகடத்தப்பட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது. சர்மா மேல்முறையீடு
செய்தார். வாலேஸ் என்னும் நல்லமனம் கொண்ட நீதிபதி அதை மூன்றாண்டுகள்
சிறைத்தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பு வழங்கினார். சிறை வாழ்க்கை
முடிந்து வெளியில் வருவதும், மீண்டும் வெள்ளையருக்கு எதிராக மேடையில் முழங்கிச் சிறைக்குச்
செல்வதும் சர்மாவுக்கு வாடிக்கை ஆகிவிட்டது.
1921ஆம் ஆண்டு பாரதியார் மறைந்தபோது அவரது
இறுதி நிகழ்வில் பங்கேற்றோர் வெறும் பதினொரு பேர்! பாடையைச்
சுமந்த நால்வருள் ஒருவர் நம் கிருஷ்ணசாமி சர்மா.
பாரதியாருக்காவது பதினொரு
பேர்கள் வந்தனர். கொடுமையிலும் கொடுமை – வாழ்வின் பெரும்பகுதியை சிறைகளில் கழித்த தியாகி கிருஷ்ணசாமி
சர்மா, தன் முப்பத்து எட்டாம் வயதில், 24/6/1925 அன்று காஞ்சிபுரத்தில்
இறந்தபோது பாடையைச் சுமக்க ஒருவரும் வராத நிலையில், சர்மாவின்
நண்பர் பார்த்தசாரதி என்பவர் ஒரு மாட்டு வண்டியில் உடலைக் கிடத்தி, சர்மாவின்
மனைவி பட்டம்மாள் மட்டும்
உடன் வர, இடுகாடு சென்று இறுதிக் கடனை இருவரும் முடித்தனர் என்று படிக்கும்போது
கண்களில் கண்ணீர் பெருகி வழிகிறது.
முனைவர்
அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.
*நூலின் பெயர்: கரூர் சதி வழக்கு. நூலாசிரியர்: முத்துக்குமார். பதிப்பகம்: சந்தியா பதிப்பகம், சென்னை.(கைப்பேசி எண்
9444715315) விலை ரூ.190.
"தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்"
ReplyDeleteஎன்பது மகாகவி பாரதியாரின் ஒரு பாடலின் வரிகள், இதில் அவர் விடுதலை வேட்கையை தண்ணீரில் வளர்க்கவில்லை, தியாகிகளின் கண்ணீரில் வளர்த்தோம் என்று கூறுகிறார்.
எவ்வளவு உண்மை....