Monday, 1 December 2014

இன்று உலக எய்ட்ஸ் தினம்.(Dec 1)


    எய்ட்ஸ் நோயை வருமுன் காக்கலாம்., வந்தபின் பார்க்கலாம் என்பது மூடத்தனம்.
     பத்து ஆண்டுகளுக்கு முன் நான் இயற்றிய பத்துக் குறட்பாக்கள் எனது கோப்பில் தேடியபோது கிடைத்தன.
    விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவற்றை உரையுடன் பதிவு செய்கிறேன்.

ஏமக்குறை நோய்

பலவகை  நோய்கள்  தொகுப்பென  மாறி
டலை  அழிக்கும்  உறுதி.
பொருள்:பலவகை நோய்த் தொகுப்பே எய்ட்ஸ். அது உடலை                                                       உருக்குலைத்து       சாவில் கொண்டுவிடும்

ஏமக் குறைநோய்க் கிரையாகிச் சாதற்கு
காமத்  தொடர்பைக்  கருது.
பொருள்: இல்லற இன்பத்தைத் தருவது கணவன் மனைவி
         உறவு(Marital relationship) மட்டுமே.  பிற உறவுகள்(Extra marital relationship)
         எய்ட்ஸ் நோயைத் தரும்.

ஆய்வு  செயப்பட்ட  நற்குருதி  ஏற்றார்க்கு
மாய்தல்  இலஏப்பி  னால்.
பொருள்: சோதனை செய்யப்பட்ட இரத்தம் பெறுவதால் எய்ட்சால் வரும்
                    இறப்பினைத்    தவிர்க்கலாம்.

ஒருவர் பயன்படுத்தும் ஊசியை மற்றோர்
ஒருவுதல்  ஒன்றே  ஒழுங்கு.
பொருள்: மருந்தை ஏற்ற ஒருவர் பயன்படுத்திய ஊசியை மற்றவர்
         பயன்படுத்த கூடாது.

எள்ளிடும்  ஏமக்  குறைநோய்  உடையவர்
பிள்ளைப் பெறாஅமை  நன்று.
பொருள்: எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டவர் கருவுறுதலைத் தவிர்ப்பது                                   நன்று


ஏமக் குறைநோய்  எளிதில்  பெறக்கூடும்
காம  உறவைக்  களை
பொருள்:பரத்தன் பரத்தையர் தொடர்பால்(prostitution) எய்ட்ஸ் வந்து
        தொலைக்கும்.

மணத்தல்  நிகழ்வு  நிறைவுறா  முன்னர்
புணர்தல்  தவறே  உணர்
பொருள்: திருமணத்திற்கு முன் உடற்புணர்ச்சி(pre-marital sex) அறவே                கூடாது.         அது தவறு.

கணவன்  மனைவி  கருதிடின்  கற்பைக்
கனவிலும் இல்லையாம் ஏப்பு
பொருள்: கணவனும் மனைவியும் நேர்மையாக(nuptial loyalty) கற்புடன்
                    வாழ்ந்தால் கனவில்      கூட எய்ட்ஸ் நோய் வராது.

கொல்லுமோர் ஏமக் குறைநோய ராயினும்
ஒல்லும்  வகையெல்லாம்  ஓம்பு.
பொருள்: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரை நல்லமுறையில் காத்துப்
                     பராமரிக்க வேண்டும்., ஒதுக்கிவைத்தல் பாவம்.

முப்பாலைத் தப்பாது எப்போதும் கற்றார்க்கு
எப்போதும்  ஏப்பிலை  காண்.
பொருள்: திருக்குறளைக் கற்று அதன்படி வாழ்வார்க்கு எப்போதும் எய்ட்ஸ்
                   நோய் வராது.


Saturday, 29 November 2014

இதிலும் கூட ஆடம்பரமா?


   பழுத்த பழமாக இருந்த முதியவர் ஒருவர் சென்ற வாரம் காலமாகிவிட்டார். மகன் மகள் அனைவரும் நகரின் வேறு பகுதியில் வசித்து வந்த நிலையில் அம்முதியவர் தன் வீட்டில் இருந்தபடி தலைசாய்த்துவிட்டார். பெரிய மர அறுப்பு மில் வைத்திருந்தவர், கடைசி காலத்தில் சுடு தண்ணீர் வைத்துக் கொடுக்கக் கூட ஆளின்றி போய்சேர்ந்துவிட்டார். பக்கத்து வீட்டார் அவருடைய மகனுக்குச் செய்தி சொல்ல, அதன் பிறகு நடந்தவைதான் அட்டூழியமாக இருந்தன.

    அடுத்த பத்தாவது நிமிடத்தில் குளிர்சாதனப் பெட்டி வந்தது., வீட்டின்முன் பெரிய சாமியானா பந்தல் முளைத்தது., தாரை தப்பட்டைக்காரர்கள் வந்து கொட்டி முழக்கினார்கள்., கொஞ்சநேரத்தில் மைக்செட்டுடன் ஒரு வண்டி வந்தது. அந்த வீட்டின் இருபக்கத்திலும் இருந்த மின்கம்பங்களில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டிரண்டு கூம்பு வடிவ ஒலிப்பான்களை கட்டினார்கள். சிறிது நேரத்தில் காதை பிளக்கும் ஒலியளவில் ஒப்பாரிப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. மணிக்கு இவ்வளவு என வாங்கிக்கொண்டு ஒப்பாரி வைப்பதற்கு என்றே பெண்கள் இருக்கிறார்களாம்! அந்த வீட்டின் அருகில் இருந்த மேனிலைப்பள்ளியின் குழந்தைகள்  இந்த கர்ண கொடூர ஒப்பாரி ஓலங்களை எப்படிதான் சகித்துக் கொண்டார்களோ!

    சற்றுநேரத்தில் அமரர் ரதம் தயாராயிற்று. குறைந்த்து 100 கிலோ ரோஜா பூக்கள் அதற்காகப் பயன்பட்டிருக்கும். இறுதி ஊர்வலத்தின்போது இன்னொரு 100 கிலோ பூக்களை வழி நெடுகிலும் வாரி இறைத்துக்கொண்டே சென்றனர்.

     
அங்கங்கே சாலையில் நீண்ட சரவெடிகளைக் கொளுத்திப் போட்டனர். வாகனச் சக்கரங்களில் பூக்கள் அரைபட்டு அலங்கோலமாகக் காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் வெடித்துச் சிதறிய காகிதக்குப்பைகள் கிடந்தன.

அத்தனை நாளேடுகளிலும் வந்த முழுப்பக்க விளம்பரம் இறந்துபோன முதியவரின் மகன், மகள், பேரக்குழைந்தைகள், அவர்களுடைய கல்விதகுதி மற்றும் பதவி விவரம் அனைத்தையும் வெளிச்சம்போட்டுக் காட்டியது. விளம்பரத்திற்கு மட்டும் ஒரு லட்சம் செலவாகியிருக்கும்.

   மறுநாள் ஒரு நண்பரோடு இந்தக் கூத்தைப் பகிர்ந்து கொண்டபோது, அவர் சொன்ன செய்தி அதிர்ச்சியளித்த்து. கடைசிக் காலத்தில் அந்தப் பெரியவர் சரியாக சாப்பாடும் மருந்தும் கிடைக்காமல் மரணப்படுக்கையில் கிடந்தாராம். இருக்கும்போது இருபது ரூபாய் செலவு செய்யாதவர் தந்தை இறந்தபோது இரண்டு லட்சம் செலவு செய்கிறார்.

   போனமாதம் இரங்கலைத் தெரிவிக்க ஒரு நண்பர் வீட்டுக்குப் போனேன். 90 வயதைத் தாண்டிய பெண்மனி மூச்சடங்கிவிட்டார். ஒரு மர பெஞ்சின்மீது வெண்துகில் விரிக்கப்பட்டு அதில் கிடத்தப்பட்டிருந்தார் இயல்பாக உறங்குவது போல இருந்தது..உறங்குவது போலும் சாக்காடு என்று திருவள்ளுவர் கூறியது உண்மைதான்.

    அங்கே யரும் அழுது புலம்பவில்லை. மூத்தமகள் அருகில் அமர்ந்து திருவாசகத்தை மெல்லிய குரலில் படித்துக்கொண்டிருந்தார். பேரன்கள் மற்ற ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அழுது அரற்றியபடி வந்த கிராமத்துப் பெண்கள் சிலர் அங்கிருந்த சூழலைப் பார்த்ததும் அமைதியாயினர்.

    சற்று நேரத்தில் அங்கு வந்த வயதான தமிழாசிரியர் ஒருவர் பட்டினத்தார் பாடல்களை முகாரிப்பண்ணில் பாடியது அந்தச் சூழலுக்குப் பொருத்தமாக இருந்தது. கொஞ்சம் நேரம் கழித்து, அவரே முன்னின்று திருமந்திரம், திருக்குறள் செய்யுள் வரிகளை விளக்கியபடி சடங்குகளை செய்து முடித்தார். பின்னர் அங்கு வந்த அமரர் வாகனத்தில் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

    அந்த ஊருக்கு அப்பாலிருந்த மின்தகன மயானத்தில் எரியூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அந்த வளாகம் அவ்வளவு தூய்மையாக இருந்தது. திருக்குறள் நிலையாமை அதிகாரத்திலிருந்த குறள்பாக்கள் கிரானைட் பலகைகளில் செதுக்கப்பட்டிருந்தன.

    செவிகளுக்கும் இதயத்திற்கும் இதமாக வைரமுத்துவின் இரங்கல் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. நான் வீடு திரும்பியதும் நினைவில் நின்ற அப் பாடல் வரிகள் சிலவற்றை நாட்குறிப்பேட்டில் எழுதிவைத்தேன்.  அவற்றுள் சில வரிகள் இங்கே:

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை
இரண்டும் இல்லாவிடில் இயற்கையு மில்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

இறப்பு இல்லாமல் நாளொன்று மில்லை
மறதியைப் போலொரு மாமருந்தில்லை
கதைமுடிந் தாலும் கவலைகள் வேண்டா
விதைஒன்று வீழினும் செடிவந்து சேரும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோந்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மண்டவர் எம்முடன் வாழ்ந்திடக்கூடும்
  என்னைப் பொருத்தவரையில், மாறிவரும் காலச்சூழலில், பழைய ஒப்பாரியை ஓரங்கட்டிவிட்டு,கொட்டி முழக்கி, வெடி வெடித்து ஒலிமாசு ஏற்படுத்தாமல், வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த ஆன்மாவை திருவாசகத்தைப் பாடி வழியனுப்பிய விதம் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் போற்றும்படியாகவும் இருந்தது.

   எதிலும் ஆடம்பரம் வேண்டா. இறப்பில் அறவே வேண்டா.


   

Saturday, 22 November 2014

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்



    சிறியோரெல்லாம் சிறியரும் அல்லர் என்பது அதிவீரராம பாண்டியர் எழுதியுள்ள வெற்றிவேற்கை பாடல் வரியாகும். ஆனாலும் பல சமயங்களில் வளர்ந்த குழந்தைகளைக் குறைத்து மதிப்பிடுகிறோம். சின்னப்பிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது என்று ஒரு பழமொழி எங்கள் திருச்சி மாவட்டத்தில் உண்டு.

   குழந்தைகளை நம்பி ஒரு செயலை ஒப்படைக்கலாம் என்பதற்குச் சான்றாக சென்ற வாரம் குழந்தைகள் தினத்தன்று(நவம்பர் 14) நடந்தது. நினைத்தாலே இனிக்கும் நிகழ்வு அது.

   முதல் நாள் என் அறையில் சற்றே ஓய்வாக இந்து நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தேன். "மே வி கம் இன் சார்" என்று கூறியபடி ஒன்பதாம் வகுப்பு மாணவியர் இருவர் வந்து ஒரு திட்டத்தைக் கூறி அனுமதி கேட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் விதைத்த விதை முளைக்கத் தொடங்கிவிட்டது என்ற மகிழ்ச்சியில் அனுமதி கொடுத்தேன்.

 அவர்கள் கேட்டவுடன் அனுமதி தந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு.
     என் பள்ளிப் பருவ நிகழ்வுகளை இன்றும் என் மனைவி, மகள்களோடு பகிர்ந்துகொண்டு மகிழ்வேன். பாவம் இந்தக் காலத்துக் குழந்தைகள். எப்போது பார்த்தாலும் படிப்புதான். சொல்லிக்கொள்ளும் வகையில் பள்ளிப்பருவ நிகழ்வுகள் எதுவும் இருக்காது. என்னுடைய அணுகுமுறை சற்று வித்தியாசமானது. எனது மாணவர்களை கொஞ்சம் குறும்பு செய்யவும் அனுமதிப்பேன். வித்தியாசமாக ஏதேனும் செய்ய முன்வந்தால் அனுமதிப்பேன். பின்னாளில் அவர்கள் நினைத்து மகிழத்தக்கச் செயலாக அமையும் என்பதால் அனுமதித்தேன்.

    சென்ற ஆண்டு கொடுத்து மகிழ்வோம் என்ற திட்டத்தின்படி குழந்தைகள் ஒன்று சேர்ந்து ஆறாயிரம் ரூபாய் திரட்டிக்கொடுத்தனர். கரூர் வள்ளலார் கோட்டத்தினர் பள்ளிக்கு வந்து காலை வழிபாட்டுக்கூட்டத்தின்போது முதியோர் மதிய உணவுத்திட்டத்திற்காக அந்நிதியைப் பெற்றுச்சென்றனர். ஆண்டுதோறும் இது தொடர்கிறது.

   மறுநாள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் ஒன்பதாம் வகுப்பு மாணவியர் அனைவரும் உற்சாகமாக பணியைத் தொடங்கினார்கள். தம் பெற்றோர்களை அசத்தித் தேவையான எல்லாவற்றையும் கொண்டுவந்து குவித்துவிட்டார்கள். அடுப்புக் கூட்டுவது, காய்கறிகளைக் கழுவி நறுக்குவது, அரிசியைக் கழுவி உலையில் போடுவது, மிக்சியில் மசாலா அரைப்பது, தயிர்ப்பச்சடிக்கு பெரிய வெங்காயத்தை உரித்து நறுக்குவது என வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்தார்கள். அவர்கள் செய்து பழகட்டும் என்று எண்ணி நான் ஆசிரியைகள் எவரையும் அங்கே அனுப்பவில்லை. அவ்வப்போது சென்று உற்சாகப்படுத்திவந்தேன்.

     சற்று தூரத்தில் ஆசிரியர்களுக்காக மாணவர்களும், மாணவர்களுக்காக ஆசிரியர்களும் மேடையில் ஆட்டம் ஆடி பட்டையைக் கிளப்பிக்கொணடிருந்தார்கள். அவை எதுவும் இவர்களுடைய கவனத்தைக் கவரவில்லை. கருமமே கண்ணாக இருந்தார்கள். சரியாக 11.30 மணிக்கு வெஜிடபிள் பிரியாணி, தயிர்ப்பச்சடி, வடை,  மீல்மேக்கர் வருவல் எல்லாம் தயார். சுவைத்துப்பார்த்தேன்.,  படு சுவையாக இருந்தன. எல்லாவற்றையும் ஹாட்பேக்கில் போட்டு எடுத்துக்கொண்டு விரைந்தனர்.

    பள்ளியின் அருகில் உள்ள டிரினிட்டி ஹோம் எனப்படும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் இருபது பேர் கொண்ட காப்பகத்திற்குச் சென்று சூடாகப் பரிமாறினார்கள். அந்தக் குழந்தைகள் வயிறார உண்டதைக்கண்டு இந்தக் குழந்தைகள் மகிழ்ந்தார்கள். ஒரு மகத்தான செயலைச் செய்த மன நிறைவோடு தத்தம் வீட்டிலிருந்து கொண்டுவந்த தயிர் சாதத்தைப் சாப்பிட்டுவிட்டு  வழக்கம்போல் தம் பணிகளைத் தொடர்ந்தனர்.

     இரண்டாயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்து விளம்பரம் தேடும் பெரிய மனிதர்களைவிட இருபது பேர்களுக்கு ஆரவாரமின்றி உணவளித்த இந்தச் சிறியவர்கள் பத்து மடங்கு மேலானவர்கள். மனிதநேயம் மிகுந்த எனது மாணவியரை மனதில் எண்ணி மகிழ்ந்தபடி நானும் பிற்பகல் பணிகளில் ஈடுபடலானேன்.

  சிறியோர் எல்லாம் சிறியோர் அல்லர். உண்மைதானே?

 பெரியவர்கள் வழி காட்டினால், சிறு பிள்ளைகள் இட்ட வெள்ளாமையும் வீடு வந்து சேரும்.