Saturday, 29 November 2014

இதிலும் கூட ஆடம்பரமா?


   பழுத்த பழமாக இருந்த முதியவர் ஒருவர் சென்ற வாரம் காலமாகிவிட்டார். மகன் மகள் அனைவரும் நகரின் வேறு பகுதியில் வசித்து வந்த நிலையில் அம்முதியவர் தன் வீட்டில் இருந்தபடி தலைசாய்த்துவிட்டார். பெரிய மர அறுப்பு மில் வைத்திருந்தவர், கடைசி காலத்தில் சுடு தண்ணீர் வைத்துக் கொடுக்கக் கூட ஆளின்றி போய்சேர்ந்துவிட்டார். பக்கத்து வீட்டார் அவருடைய மகனுக்குச் செய்தி சொல்ல, அதன் பிறகு நடந்தவைதான் அட்டூழியமாக இருந்தன.

    அடுத்த பத்தாவது நிமிடத்தில் குளிர்சாதனப் பெட்டி வந்தது., வீட்டின்முன் பெரிய சாமியானா பந்தல் முளைத்தது., தாரை தப்பட்டைக்காரர்கள் வந்து கொட்டி முழக்கினார்கள்., கொஞ்சநேரத்தில் மைக்செட்டுடன் ஒரு வண்டி வந்தது. அந்த வீட்டின் இருபக்கத்திலும் இருந்த மின்கம்பங்களில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டிரண்டு கூம்பு வடிவ ஒலிப்பான்களை கட்டினார்கள். சிறிது நேரத்தில் காதை பிளக்கும் ஒலியளவில் ஒப்பாரிப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. மணிக்கு இவ்வளவு என வாங்கிக்கொண்டு ஒப்பாரி வைப்பதற்கு என்றே பெண்கள் இருக்கிறார்களாம்! அந்த வீட்டின் அருகில் இருந்த மேனிலைப்பள்ளியின் குழந்தைகள்  இந்த கர்ண கொடூர ஒப்பாரி ஓலங்களை எப்படிதான் சகித்துக் கொண்டார்களோ!

    சற்றுநேரத்தில் அமரர் ரதம் தயாராயிற்று. குறைந்த்து 100 கிலோ ரோஜா பூக்கள் அதற்காகப் பயன்பட்டிருக்கும். இறுதி ஊர்வலத்தின்போது இன்னொரு 100 கிலோ பூக்களை வழி நெடுகிலும் வாரி இறைத்துக்கொண்டே சென்றனர்.

     
அங்கங்கே சாலையில் நீண்ட சரவெடிகளைக் கொளுத்திப் போட்டனர். வாகனச் சக்கரங்களில் பூக்கள் அரைபட்டு அலங்கோலமாகக் காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் வெடித்துச் சிதறிய காகிதக்குப்பைகள் கிடந்தன.

அத்தனை நாளேடுகளிலும் வந்த முழுப்பக்க விளம்பரம் இறந்துபோன முதியவரின் மகன், மகள், பேரக்குழைந்தைகள், அவர்களுடைய கல்விதகுதி மற்றும் பதவி விவரம் அனைத்தையும் வெளிச்சம்போட்டுக் காட்டியது. விளம்பரத்திற்கு மட்டும் ஒரு லட்சம் செலவாகியிருக்கும்.

   மறுநாள் ஒரு நண்பரோடு இந்தக் கூத்தைப் பகிர்ந்து கொண்டபோது, அவர் சொன்ன செய்தி அதிர்ச்சியளித்த்து. கடைசிக் காலத்தில் அந்தப் பெரியவர் சரியாக சாப்பாடும் மருந்தும் கிடைக்காமல் மரணப்படுக்கையில் கிடந்தாராம். இருக்கும்போது இருபது ரூபாய் செலவு செய்யாதவர் தந்தை இறந்தபோது இரண்டு லட்சம் செலவு செய்கிறார்.

   போனமாதம் இரங்கலைத் தெரிவிக்க ஒரு நண்பர் வீட்டுக்குப் போனேன். 90 வயதைத் தாண்டிய பெண்மனி மூச்சடங்கிவிட்டார். ஒரு மர பெஞ்சின்மீது வெண்துகில் விரிக்கப்பட்டு அதில் கிடத்தப்பட்டிருந்தார் இயல்பாக உறங்குவது போல இருந்தது..உறங்குவது போலும் சாக்காடு என்று திருவள்ளுவர் கூறியது உண்மைதான்.

    அங்கே யரும் அழுது புலம்பவில்லை. மூத்தமகள் அருகில் அமர்ந்து திருவாசகத்தை மெல்லிய குரலில் படித்துக்கொண்டிருந்தார். பேரன்கள் மற்ற ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அழுது அரற்றியபடி வந்த கிராமத்துப் பெண்கள் சிலர் அங்கிருந்த சூழலைப் பார்த்ததும் அமைதியாயினர்.

    சற்று நேரத்தில் அங்கு வந்த வயதான தமிழாசிரியர் ஒருவர் பட்டினத்தார் பாடல்களை முகாரிப்பண்ணில் பாடியது அந்தச் சூழலுக்குப் பொருத்தமாக இருந்தது. கொஞ்சம் நேரம் கழித்து, அவரே முன்னின்று திருமந்திரம், திருக்குறள் செய்யுள் வரிகளை விளக்கியபடி சடங்குகளை செய்து முடித்தார். பின்னர் அங்கு வந்த அமரர் வாகனத்தில் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

    அந்த ஊருக்கு அப்பாலிருந்த மின்தகன மயானத்தில் எரியூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அந்த வளாகம் அவ்வளவு தூய்மையாக இருந்தது. திருக்குறள் நிலையாமை அதிகாரத்திலிருந்த குறள்பாக்கள் கிரானைட் பலகைகளில் செதுக்கப்பட்டிருந்தன.

    செவிகளுக்கும் இதயத்திற்கும் இதமாக வைரமுத்துவின் இரங்கல் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. நான் வீடு திரும்பியதும் நினைவில் நின்ற அப் பாடல் வரிகள் சிலவற்றை நாட்குறிப்பேட்டில் எழுதிவைத்தேன்.  அவற்றுள் சில வரிகள் இங்கே:

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை
இரண்டும் இல்லாவிடில் இயற்கையு மில்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

இறப்பு இல்லாமல் நாளொன்று மில்லை
மறதியைப் போலொரு மாமருந்தில்லை
கதைமுடிந் தாலும் கவலைகள் வேண்டா
விதைஒன்று வீழினும் செடிவந்து சேரும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோந்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மண்டவர் எம்முடன் வாழ்ந்திடக்கூடும்
  என்னைப் பொருத்தவரையில், மாறிவரும் காலச்சூழலில், பழைய ஒப்பாரியை ஓரங்கட்டிவிட்டு,கொட்டி முழக்கி, வெடி வெடித்து ஒலிமாசு ஏற்படுத்தாமல், வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த ஆன்மாவை திருவாசகத்தைப் பாடி வழியனுப்பிய விதம் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் போற்றும்படியாகவும் இருந்தது.

   எதிலும் ஆடம்பரம் வேண்டா. இறப்பில் அறவே வேண்டா.


   

1 comment:

  1. உயிரோடு இருக்கும்போது கவனிக்காமல்
    இறந்தபின் மாலை எதற்கு மரியாதை எதற்கு
    ஆடம்பரம்தான் எதற்கு

    ReplyDelete