Wednesday 24 December 2014

மனிதநேயமற்ற மருத்துவமனைகள்

        நம் நாட்டில் தன்வந்திரி மருத்துவக் கடவுளாக வணங்கப்படுகிறார். ஆனால் ஆங்கில மருத்துவம் கற்றவர்களுக்கு  கிரேக்கக் கடவுளான அப்பலோ தான் மருத்துவக் கடவுள். அந்த அப்பலோவின் பெயராலே இயங்கும் மருத்துவ மனையில் மனிதநேயமற்ற நடைமுறை இருப்பதுதான் வியப்பாக உள்ளது.

    என்னுடன் பணியாற்றும் ஆசிரியருக்கு அண்மையில் பெண்குழந்தை பிறந்தது. அந்த மகிழ்ச்சியைக் கூட பகிர்த்து கொள்ள முடியாத வகையில் பிறந்த சில மணி நேரத்தில் குழந்தைக்குப் பிரச்சனை ஏற்பட்டது. பனிக்குட நீர் குழந்தையின் வயிற்றில் புகுந்து, தொற்று ஏற்பட்டதால் வந்த பிரச்சனையாம். தொற்று காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறல் குழந்தையைத் திக்குமுக்காடச் செய்தது. பிரசவம் பார்த்த மருத்துவர் அப்பலோவிற்கு கைகாட்டிவிட்டார். குழந்தை பிழைத்தால் போதும் என்று நினைத்த பெற்றோர் அவசர அவசரமாக அப்பலோவில் சேர்த்தனர்.

    தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மூக்கின் வழியாக ஆக்ஸிஜன் செலுத்தினர்.  அம்மாவைக் கூட பார்க்க அனுமதிக்கவில்லை. ஆட்டோ மீட்டர் போல முதலில் குறைவான செலவே ஆகும் என்றனர்., பிறகு இருபதாயிரம் ஆகும் என்றனர். குழந்தையின் உடல்நிலையிலும் குறிப்பிடும்படி முன்னேற்றம் இல்லை. அடுத்த இரு நாள்களில் கட்டணம் ஐம்பதாயிரத்தைத் தாண்டிவிட்டது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த ஆசிரியர் தடுமாறிப் போய்விட்டார். குழந்தையின் உடல்நிலையிலும் முன்னேற்றம் இல்லை. ஆறாம் நாளில் மருத்துவக் கட்டணம் எண்பதாயிரத்தைத் தொட்டது. மருந்து மாத்திரை செலவுகள் தனி. இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலையில் பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர். குழந்தையின் நிலை குறித்து மருத்துவரிடம் கேட்டனர். பத்துநாள் ஆகலாம்., சிலசமயம் ஒரு மாதமும் ஆகலாம் என்றபோது அதிர்ந்தனர். உறவு முறைகளுடன் கலந்து ஆலோசித்தபின் குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்தனர்.
     மருத்துவ மனை ஊழியர்கள் ரூபாய் எண்பத்து ஐந்து ஆயிரம் கட்டச் சொன்னார்கள். சில சிபாரிசுகளைப் பிடித்து, கெஞ்சிக் கூத்தாடி ரூபாய் அறுபத்து இரண்டாயிரம் கட்டி விட்டு, குழந்தையை அழைத்துச் சென்று திருச்சி அரசு பொது மருத்துவ மனையில் சேர்த்தனர். நோய்க்குறிப்பேட்டைப் பார்த்த அரசு மருத்துவர் அதைப் பொருட்படுத்தாமல்   சிகிச்சையைத் தொடங்கினார். மூன்று மணி நேரத்தில் குழந்தையின் உடல்நலம் சீரடையத் தொடங்கியது.

    இப்போது குழந்தை பூரண நலம்பெற்று தாய்ப்பால் அருந்தத் தொடங்கிவிட்டது.

    இந்தப் பெற்றோர் அப்பலோ மருத்துவர்களிடம் பணத்தைமட்டுமா இழந்தனர்., நம்பிக்கையையும் இழந்தனர்.

        ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மருத்துவர்களில் சிலர் திறமையும் இல்லாமல், தொழில் தர்மமும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரியது. என்ன செய்வது? எல்லாம் காலத்தின் கோலம்
.

 மருத்துவ மனைகள் கார்ப்பொரேட் நிறுவனங்களாக மாறும்போது குப்பனுக்கும் சுப்பனுக்கும் குறைந்த செலவில் மருத்துவ வசதி கிடைக்காது என்பது கசப்பான உண்மை.

2 comments:

  1. மருத்துவத் துறை வணிகமயமாகி வெகு காலம் ஆகிவிட்டது

    ReplyDelete
  2. Very sad to hear pa. Medical and teaching are the two professions that shouldn't work on the grounds of money. Unfortunately that is how precisely they are now

    ReplyDelete