Sunday, 24 January 2016

வள்ளுவரை இகழும் வைரமுத்து

  நேற்று மாலை  கட்செவி அஞ்சலில் நண்பர் ஒருவர் வைரமுத்துவின்  கவிதை ஒன்றை அனுப்பியிருந்தார். இரவு நெடுநேரம் வரையிலும் அது பற்றிய சிந்தனையில் உழன்று கொண்டிருந்தேன். அதன் விளைவுதான் இப் பதிவு.

   வாரும் வள்ளுவரே
   மக்கட் பண்பில்லாதவரை
   என்ன சொன்னீர்
   மரம் என்றீர்
   மரம் என்றால் அவ்வளவு
   மட்டமா?
   மரம் நமக்கண்ணன்
   அவனைப் பழிக்காதீர்


  இவை திரைப் பாடலாசிரியர் வைரமுத்துவின் வரிகள். மரங்களைப் பாடுகிறேன் என்னும் தலைப்பில் அமைந்த அவரது கவிதையின் சில வரிகள்.

    முதலில் வள்ளுவரை வம்புக்கு இழுப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வள்ளுவரின் குறட்பாவில் குற்றம் காணும் தகுதியும் தைரியமும் வைரமுத்துக்கு எங்கிருந்து வந்தது?

     ஓர் ஊரில் ஒரு பணக்காரன் உள்ளான்; யாருக்கும் உதவாத உதவாக்கரை அவன். யாரும் அவனை அணுகமுடியாது. அவனுடைய பெற்றோர் கூட தனிமையில் வருந்தி வாழ்கின்றனர்.
    
     அவன் வாழும் ஊரின் நடுவில் ஒரு விஷ மரம் வளர்ந்து கிளை பரப்பி காய்த்து, பழுத்து நிற்கிறது. அதன் தழை விஷம்; காய் விஷம்; கனி விஷம்; அது உதிர்க்கும் முள் விஷம். அதன் அருகில் யாரும் செல்ல முடியாது.

     மேலே குறிப்பிடப்பட்ட மக்கள் பண்பில்லாத பணக்காரனை நடு ஊரில் பழுத்து நிற்கும் நச்சு மரத்தோடு ஒப்பிடுகின்றார் திருவள்ளுவர்.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று

என்று மக்கள் பண்பு இல்லாதவனைச் சாடுகின்றார். இதில் என்ன தவறு இருக்கிறது?

தமிழர்களே! இப்போது சொல்லுங்கள்

   வாரும் வள்ளுவரே
   மக்கட் பண்பில்லாதவரை
   என்ன சொன்னீர்
   மரம் என்றீர்
   மரம் என்றால் அவ்வளவு
   மட்டமா?
   மரம் நமக்கண்ணன்
   அவனைப் பழிக்காதீர்

என்று வைரமுத்து வள்ளுவரை வம்புக்கு இழுப்பது  நியாயமா?

ஆழ்ந்து உணரும் அறிவிலார்தாம் இப்படி பிறழ உணர்வார்கள்; உணர்த்துவார்கள்.

  கவிப்பேரரசு என தனக்குத் தானே மகுடம் சூட்டிக்கொண்ட உலகமகா அறிவாளி  இப்படி எழுதலாமா?

இளைதாக முள்மரம் கொல்க என்று ஒரு குறளில் குறிப்பிடுவார் திருவள்ளுவர். இது வைரமுத்து கண்களில் படவில்லை போலும். தெரிந்திருந்தால் மரங்களை வெட்டச்சொன்ன மாபாவி வள்ளுவர் என்று வசைமழை பொழிந்திருப்பார்.

   உண்மையைச் சொன்னால் வள்ளுவர் போல மரங்களைப் புகழ்ந்து பாடியவர் யாருமில்லை எனலாம்.

பிறருக்குக் கொடுத்து உதவும் மக்கள் பண்பாளர்களை பயன்தரு மரத்தோடு ஒப்பிடுகிறார்.

   பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
   நயனுடை யான்கண் படின்

   மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
   பெருந்தகை யான்கண் படின்

நாட்டின் சமூகப் பாதுகாப்பைப் பற்றி சிந்தித்த திருவள்ளுவர் அரண் என்ற அதிகாரத்தில் மரங்கள் அடர்ந்த காடுகளைக் குறிப்பிட்டு, காடு என்பது நாட்டின் அரண்களில் ஒன்றாகும் எனப் பதிவு செய்கின்றார்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்

 என்பது அம் மணிக் குறள்.
 இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளாமல்
மரம் என்றால் அவ்வளவு
மட்டமா?

என்று வள்ளுவரைப் பார்த்துக் கேட்கிறார் வைரமுத்து.

ஊக்கத்தோடு ஓடி ஆடி உழைக்க வேண்டாமா? நின்ற இடத்தில் நிற்கும் மரத்தைப் போல் நீ இருக்கலாமா? இப் பொருள்பட ஒரு குறளை அமைக்கிறார்.

   உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார்
   மரம்மக்க ளாதலே வேறு.

இக் குறட்பாவிற்கு,“மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லைஎன்று உரை எழுதுகிறார் கலைஞர் கருணாநிதி.

  இப்படி மரங்களை மட்டம் தட்டி உரை எழுதியதாக  கலைஞரை எதிர்த்து மூச்சு விடுவாரா வைரமுத்து?

   அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்
   ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்

என்று பாரதி தன் சுயசரிதையில் குறிப்பிட்டதை வைரமுத்து பார்வைக்கு வைக்கிறேன்.

   வைரமுத்து அவர்களே வள்ளுவர் ஒரு மாகவி. பாரதி சொல்வதுபோல மேதாவியான நீங்கள் அவரது கவியுள்ளத்தைக் காணத் தவறிவிட்டீர்கள்.
உங்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் ஒன்று உண்டு.

    நீங்கள் கைதட்டலைப் பெறுவதற்காக வள்ளுவரைக் குறை சொல்லாதீர்கள்.

   நல்லது செய்தல் ஆற்றீராயினும்
   அல்லது செய்தல் ஓம்புமின்

என்னும் சங்கப் பாடல்வரிகள் உங்களுக்குத் தெரியாதா என்ன?

 நீங்கள் வள்ளுவரைப் புகழாவிட்டாலும் பரவாயில்லை; இகழாதீர்கள்.
வள்ளுவர் உங்களை மன்னிக்கலாம்.

நான் உங்களை மன்னிக்க முடியாது.

7 comments:

 1. கவிப் பேரரசு எனத் தனக்குத்தானே பட்டம் சூடிக்கொண்டவர் இப்படித்தான் பேசுவார்
  வேதனையாக இருக்கிறது ஐயா

  ReplyDelete
 2. Super sir. It should be sent to Vairamuthu to make him realize who is he?

  ReplyDelete
 3. வைரமுத்துவின் குரல் பதிவில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலுரையைத் திறனாய்வாகவே தெரிவித்து விட்டீர்கள். வள்ளுவரின் குறட்பாக்கள் அத்தனையும் வாழும் மனிதனுக்கு வாழ்க்கை நெறியைத் தெரிவிப்பன. எக்காலத்துக்கும், எம்மதத்தினருக்கும், எத்தேசத்தில் வாழ்பவர்களுக்கும் பொருத்தப்பாடுடையது அதனால் தான் அந்நூல் உலகப்பொதுமறை எனப் போற்றப்படுகிறது. ஆகவே, வள்ளுவரின் குறட்பாக்களின் கருத்துக்கள் வெளிப்படையான கருத்தை உரைப்பனவாகக் கருதமுடியாது. அதில் நுட்பமான செய்தி மறைந்திருக்கும். ஆகவே கற்றுணர்ந்த அறிஞர்களுக்கே அது கைகூடும். அந்நிலையில் நீங்களும் ஒரு உரையாசிரியராகத் திகழ்கிறீர்கள். வைரமுத்து அவர்கள் தெரிவித்த கருத்து ஏற்புடையது அல்ல என்பதை வெளிப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 4. வைரமுத்துவின் குரல் பதிவில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலுரையைத் திறனாய்வாகவே தெரிவித்து விட்டீர்கள். வள்ளுவரின் குறட்பாக்கள் அத்தனையும் வாழும் மனிதனுக்கு வாழ்க்கை நெறியைத் தெரிவிப்பன. எக்காலத்துக்கும், எம்மதத்தினருக்கும், எத்தேசத்தில் வாழ்பவர்களுக்கும் பொருத்தப்பாடுடையது அதனால் தான் அந்நூல் உலகப்பொதுமறை எனப் போற்றப்படுகிறது. ஆகவே, வள்ளுவரின் குறட்பாக்களின் கருத்துக்கள் வெளிப்படையான கருத்தை உரைப்பனவாகக் கருதமுடியாது. அதில் நுட்பமான செய்தி மறைந்திருக்கும். ஆகவே கற்றுணர்ந்த அறிஞர்களுக்கே அது கைகூடும். அந்நிலையில் நீங்களும் ஒரு உரையாசிரியராகத் திகழ்கிறீர்கள். வைரமுத்து அவர்கள் தெரிவித்த கருத்து ஏற்புடையது அல்ல என்பதை வெளிப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 5. ஆழ்ந்தப் புலமையின் அடையாளம் தங்கள் உணர்வில் கொப்பளிக்கின்றது. நீங்கள் ஒரு நக்கீரர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். பொங்கியது போதும்; பொறுமையைக் கொள்வீர்கள்.- நீதிபதி மூ.புகழேந்தி

  ReplyDelete
 6. ஆழ்ந்தப் புலமையின் அடையாளம் தங்கள் உணர்வில் கொப்பளிக்கின்றது. நீங்கள் ஒரு நக்கீரர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். பொங்கியது போதும்; பொறுமையைக் கொள்வீர்கள்.- நீதிபதி மூ.புகழேந்தி

  ReplyDelete