Wednesday 13 June 2018

நாடுவார் இல்லா நந்தனார் கோவில்

    சிதம்பரம் வந்து ஒரு வாரம் தங்க நேர்ந்தது. காலை நடைப் பயிற்சியின் போது அறிமுகமான ஒருவரிடம், “சிதம்பரத்தில் நந்தனார் கோவில் எங்கே உள்ளது?” என்று கேட்டேன். “தெருவுக்குப் பத்து கோவில்கள் உள்ளன. எந்த கோவிலுக்கும் பெயர்ப்பலகை இல்லை. அதனால் எது நந்தனார் கோவில் என்று எனக்குத் தெரியாதுஎன்றார். நான் கேட்டது அறியா வினா அன்று; அறிவினா.

     உள்ளூர்க்காரருக்கே தெரியாத அந்த நந்தனார் கோவிலுக்குக் காலை ஏழு மணிக்குச் சென்றேன். சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி செல்லும் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் ஓமக்குளம் என்னும் ஊரில் இக்கோவில் உள்ளது. இது ஒரு சிவன் கோவில். மூலவர் லிங்க வடிவத்தில் உள்ளார். ஸ்ரீ செளந்திர நாயகி உடனுறை தெய்வமாகும். நந்தனாரின் உருவச்சிலை கருவறைக்கு முன்புறம் வெளியில் உள்ளது.
நந்தனார்

    சிதம்பரத்தில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு இக் கோவிலுக்கு உண்டு. இத் திருக்கோவிலுக்கு மகாத்மா காந்தியடிகளால் அடிக்கல் நாட்டப்பெற்றது என்பதே அது. 16.2.1934 அன்று வருகை தந்து அடிக்கல் நாட்டியதைக் குறிக்கும் கல்வெட்டு ஒன்று கோவில் வளாகத்தில் உள்ளது.

      நான் கோவிலுக்குச் சென்ற போது ஒரு வயதான பெண்மணி பெருக்கிக் கொண்டிருந்தார். கோவில் திறந்திருந்தது. ஆனால் யாரும் என் கண்ணில் படவில்லை. ஒரு காக்கா கூட தென்படவில்லைஉண்மையில் காக்கா இல்லை. காரணம் அப் பெண்மணி அவ்வளவு சுத்தமாகப் பெருக்கி வைத்திருந்தார். அவரைப் பாராட்டிப் பத்து ரூபாய் கொடுத்தேன். அவர் பெயர் ராஜலட்சுமி. “இந்தக் கோவிலைக் கட்டியது யார்?” என அவரிடம் கேட்டுப் பேச்சுக் கொடுத்தேன். இதுவும் அறிவினாதான். “ஸகஜானந்தா சாமிங்க” -பட்டென்று சொன்னார். மேலும் அவரின் சிறப்புகளைச் சொன்னார். முன்னர் நான் குறிப்பிட்ட அந்தப் படித்த ஆசாமியைவிட இந்தப் படிக்காத பாட்டி பன்மடங்கு அறிவாளியாகத் தெரிந்தார்.

      அப்போது வணங்குதற்குரிய தோற்றத்தில் காவி வேட்டியுடன் ஒருவர் வந்தார். வணங்கினேன்.”அடியேன் பழனிவேல் சுவாமிகள். நந்தனார் மடத்தின் மடாதிபதி. இக் கோவிலில் பூசை செய்து வருகிறேன்என்றார். நீங்கள் வேறுவிதமாக கற்பனை செய்து விடாதீர்கள். அடுத்த வேளை சாப்பாட்டை யார் கொடுப்பாரோ என்னும் நிலையில் இருக்கும் மடாதிபதி இவர். அறவழியில் வாழும் எண்பத்து மூன்று வயதான இளைஞர். ஒரு போராளியும் ஆவார். நந்தனார் மடத்து நிலங்களை சில அரசியல்வாதிகள் அபகரிக்க எண்ணிய சூழ்ச்சியைப் போராடி முறியடித்தவர். அரசே முன்வந்து சிதம்பரத்தில் ஸகஜானந்தா மணிமண்டபம் அமைக்கக் காரணமாய் இருந்தவர் இவரே.

    முனுசாமி என்ற இயற்பெயருடைய சுவாமி ஸகஜானந்தாஅவர்களின் முயற்சியால்தான் சிதம்பரத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் கல்வி வாய்ப்புக்காக நந்தனார் கல்விக் கழகம் உருவானது. இன்றளவும் நந்தானார் ஆண்கள் பெண்கள் மேனிலைப் பள்ளிகள், விடுதிகள் ஆகியவை அரசின் நிதியாதரவில் சிறப்பாக இயங்குகின்றன. இவர் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். சைவத் துறவியான இவர் காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று ஒடுக்கப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்தார். அவருடைய சமாதி நந்தனார் கோவிலினுள் உள்ளது.

    ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு கதை கந்தலாகிப் போனது. இக் கோவிலுக்குரிய 110 ஏக்கர் நிலத்திலிருந்து வந்த குத்தகை நெல் வரவில்லை.“கோவில் சொத்து குல நாசம்” என்னும் பழமொழி 
பழங்கதையாய்ப்  போனது.

      இன்று திருவிளக்கு ஏற்றுவதற்குக் கூட திண்டாட வேண்டியிருக்கிறது

      வருமானம் இல்லாத கோவில் என்பதால் அரசும் கையகப்படுத்தவில்லை. பொதுமக்கள் நன்கொடையில் அத்தி பூத்தாற்போல் சில திருவிழாக்கள் நடைபெறுகின்றன. செல்வச் செழிப்பில் உள்ள நடராஜர் கோவிலும் ஒருவேளை பூசைக்கும் வழியில்லா நந்தனார் கோவிலும் ஒரே ஊரில் உள்ளன. என்னே முரண் சுவை!

       இக் கோவிலுக்கு வருவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. வரலாற்று முக்கியத்துவம் உடைய இக் கோவில் தமிழகச் சுற்றுலா வரைபடத்திலும் இடம்பெறவில்லை.


     உரிமைக்குப் போராடிய நந்தனார் பெயராலே அமைந்த இக் கோவிலுக்கு விடிவுக் காலம் பிறக்காதா என்ற ஏக்கத்தோடு பழனிவேல் அவர்களிடம் விடைபெற்று வெளியில் வந்து நடைப்பயிற்சியைத் தொடர்ந்தேன்.

1 comment:

  1. உங்களால் ஒரு புதிய கோயிலைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. எங்களது கோயில் உலாவின்போது பார்க்கவேண்டிய கோயில்களில் இதனைச் சேர்த்துவிட்டேன். சென்றுவந்தபின் விக்கிபீடியாவில் அக்கோயிலைப் பற்றி அவசியம் எழுதுவேன். நன்றி.

    ReplyDelete