Monday, 5 January 2015

பெண்கல்வி பேணிய பெருந்தகை திரு.பி.ஆர்.நடராஜன்

 “புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று மகாகவி பாரதியார் கூறுகிறார். இவ்வரியில் உள்ள ஏழை என்னும் சொல்லுக்கு நாம் சாதாரணமாக நினைக்கும் பொருள் இல்லை. அதாவது பொருளாதார நிலையில் பின்தங்கியோர்  என்று பொருள் கொள்ளல் கூடாது. படிப்பின் மகத்துவம் தெரியாமல் அறியாமல் உழல்வோர்  என்று பொருள்.

   அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் ஏழை எளிய கிராமத்துக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கடைத்தேற, சொந்தக்காலில் நிற்க ஏதாவது செய்ய வேண்டும் என்று எப்போதும் சிந்தித்தவர் திரு.பி.ஆர். நடராஜன் அவர்கள்.. நான் அவரை 1979 ஆம் ஆண்டிலிருந்து அறிவேன். ஒரு பெற்றோர் ஆசிரியர் என்ற முறையில் அறிமுகமானோம். அவர்  மறையும் வரையில் அந்த நட்பு அருகுபோல் வேரூன்றி வளர்ந்தது.

   1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் அவர் தொலைபேசியில் அழைத்தார். அவருடைய  பேருந்து அலுவலகத்திற்குச் சென்றேன். ஒரு கல்லூரி தொடங்க இருப்பதை விவரித்தார்.  அறவழியில் ஈட்டிய தன் பெருஞ்செல்வம் தக்க முறையில் பயனுற வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தார். பெண் கல்வியின் இன்றியமையாமையை எனக்குத் தெரிந்த வரையில் எடுத்துக் கூறினேன். வேகத்தோடும் விவேகத்தோடும் செயல்பட்டார். அடுத்த ஆண்டே பி.கே.ஆர். மகளிர் கல்லூரி செயல்படத் தொடங்கியது.

   இங்கே ஒரு செய்தியை நான் குறிப்பிட்டாக வேண்டும்.  ஒரு சிறந்த முதல்வரைத் தேடி பணி அமர்த்துவதற்கு அவர் எடுத்த முயற்சிதான் அது
 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
  அதனை அவன்கண் விடல்
என்னும் குறளுக்கேற்ப ஒரு சிறந்த நிர்வாகத் திறனும் கூர்த்த மதியும் கொண்ட ஒரு பெண்மணியை - நன் மணியைத் தேடிப் பிடித்து முதல்வர் பணியில் அமர்த்தினார். அவர்தான் முயற்சியின் முழு உருவமாக விளங்கும் முழுநேர முதல்வர்  திருமதி ஜெகதா இலட்சுமணன் அவர்கள்.  இந்த நன்மணியை இனங்காண் உறுதுணையாக இருந்தவர்; பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பேராசிரியர் பி.என். சிலம்பண்ணன் அவர்கள் என்பதையும் திரு.பி.ர்.நடராஜன் நன்றியோடு குறிப்பிட்டார்.

    1994 ஆம் ஆண்டு கல்லூரியின் விளையாட்டு விழாவைத் தொடங்கிவைக்க வேண்டும் என்று நேரில் வந்து அழைப்பு விடுத்தார். தொலைபேசியில் சொல்லியிருக்கலாமே என்றேன். எதையும் முறையாகச் செய்ய வேண்டும் என்பதில் பேரார்வம் உடையவர் என்பதை அறிந்து வியந்தேன். அன்றிலிருந்து இன்று வரை பி.கே.ஆர்.கல்லூரி விழாக்களில் பங்கேற்று வருகிறேன்

   ஒருமுறை தமிழ் விரிவுரையாளரைத் தேர்ந்தெடுக்க அமைத்திருந்த தேர்வுக்குழுவில் என்னையும் சேர்த்துக்கொண்டார். கல்லூரி விரிவுரையாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு பள்ளித் தலைமையாசிரியரா என பலரும் வியந்தனர்.  யாரிடத்தில் எல்லாம் - எவ்வளவு எளியவராக இருந்தாலும் - திறமை இருந்தால் அதைக் கல்லூரி வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பேரறிவாளராகத் திகழ்ந்தார் திரு.பி.ஆர்.நடராஜன் அவர்கள்.

   தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்குப் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் மாறிமாறி வருவது இயல்புதான்கருத்து வேறுபாடு கொண்ட ஒருவர் முதல்வரைப் பற்றி எதைஎதையோ புனைந்துரைத்தபோது, திரு.பி.ர்.நடராஜன் கூறினார். “இங்க பாருங்க - பிரின்ஸ்பாலம்மா நிர்வாகத்தில் நான் தலையிடறதில்லை. அவங்க ஒரு முடிவு எடுத்தா அது சரியாகத்தான் இருக்கும். இந்த அணுகுமுறைதான் அவருடைய வெற்றிக்குக் காரணம்.

   முதல்வரின் அன்றாட அலுவல்களில் கூட மூக்கை நுழைக்கும் கல்லூரித் தாளாளர்களிலிருந்து நம் பி.ஆர்.என். முற்றிலும் வேறுபட்டவர்தான். மற்றவர் படிப்பறிவுக்குப் பெற்றப் பட்டங்கள் அவருடைய பட்டறிவுக்கு நிகராகா. ஆரம்ப காலத்தில் கல்லூரிக் கூட்டங்களில் பேச முன்வராத அவர், பிறகு தன் அனுபவப் பேச்சால், கிராமிய மணம் வீசும் பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். பின்னாளில் பாரதியார் பல்கலைகழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகி தன் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தார்.

   நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்களை நடத்துவதில் திரு.பி.ர்.என்  பங்கு மிக அதிகமாக இருக்கும். முகாம் நடைபெறும் கிராமத்திற்குப் பயன்படும் வகையில் ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருப்பார். நான் அக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஆலோசகர் என்பதால் என்னிடம் முகாம் தொடர்பாக நிறையப் பேசுவார் ; கிராமத்தின் அடிப்படைத் தேவையான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் முனைப்புடன் செயல்பட்டார்
.
   மிகக்குறுகிய காலத்தில் கல்லூரிக்குத் தேவையான மிகச்சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினார். மிகுந்த வருவாய் தந்த பேருந்துத் தடங்களையும் பேருந்துகளையும் விற்று கல்லூரிக்குச் செலவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் இன்னும் என் காதில் ஒலிக்கிறது. “இங்க பாருங்க ஹெட்மாஸ்டர் சார்,  பெரிய ஊர்ல இருக்கிற கல்லூரிக்கு ணையா நம்ம ஊரு குழந்தைகளுக்குத் தேவையான வசதியைக் கொடுக்கணு, செஞ்சா சரியா செய்யணும் பாருங்க”.

  ஊழின் பெருவலி காரணமாக, என் வாழ்வியல் போக்கில் சிறு தடங்கல் வந்தபோது, என் மன உளைச்சலுக்கு மாமருந்தாய்த் திகழ்ந்தார். வைர விழாப் பள்ளி நிர்வாகத்திடம் பணித்துறப்புக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, ஆழ்ந்த சிந்தனையில் இருந்தபோது ஒரு நாள் காலையில் அழைத்தார். “இனியன் சார், எதற்கும் கவலைப்படாதீர்கள். மாதம் பத்தாயிரம் சம்பளம் தருகிறேன். பகுதிநேர தமிழ் விரிவுரையாளராக எங்கள் கல்லூரியில் சேருங்கள்என்றார். பிச்சைக்காரன் தட்டில் பொற்காசு விழுந்தால் அவனுக்கு எப்படி இருக்கும்? அப்படி உணர்ந்தேன். நெஞ்சம் நெகிழ்ந்து போனேன். என் மனைவியிடம் கூறினேன் ; கண்ணீர் பெருக வியந்து நின்றாள்.

    அடுத்த வாரமே தமிழகத்தின் புகழ்பெற்ற டி.என்.பி.எல் பள்ளியின் முதல்வர் என்ற நியமன ஆணையோடு சென்று சந்தித்தேன். திறமையாளருக்குச் செல்லும் இடம் எல்லாம் வாய்ப்பு. உள்ளூர்ப் பச்சிலையின் மதிப்பு வெளியூரில்தான் தெரியும் என்று கூறி வாழ்த்தினார்.


    அவர் கடைசி மூச்சு வரையில் எதையும் மிகச்சரியாக, மிகச் சரியான நேரத்தில் செய்தார். அவரும் உயர்ந்தார்; மற்றவர்களையும் உயர்த்தினார்; நிறைவாக வாழ்ந்தார்; மற்றவரையும் வாழச் செய்தார். அவர்  சிறியன சிந்தியாதார், செயற்கரிய செய்தவர்.

   வளர்க அவர் புகழ்! வளர்க அவர் உருவாக்கிய கல்லூரி
ஆம், ஒரு பல்கலைக் கழகமாக!

1 comment:

  1. திரு நடராசன் அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்
    போற்றுவோம்

    ReplyDelete