Wednesday 11 February 2015

நாம் எங்கே போகிறோம்?

    பள்ளியில் படிக்கும்போதே இந்தியாவைக் காணவேண்டும் என்று கனவு கணடவள் அவள். அதற்கு விலையாக தன் கற்பைப் பறிகொடுக்க வேண்டியதாயிற்று.

   ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இருபது வயது இளம்பெண் சென்ற சனிக்கிழமை(7.2.15) இரவு புதுதில்லி வந்து இறங்கியதும் ஜெய்ப்பூர் செல்ல திட்டமிட்டாள். மறு நாள் நண்பகலில் ஜெய்ப்பூரை அடைந்து, ஒரு டாக்சியை பிடித்து ஜல்மஹால் சென்றாள். சுற்றிலும் தண்ணீர்; நடுவில் அழகான அரண்மனை. அதனால்தான் ஜல்மஹால் எனப் பெயர் வந்தது. அதன் அழகைக் கண்டு வியந்தபடி நின்ற அவளிடம் மோட்டார் பைக்கில் வந்த ஓர் இளைஞன் தன்னை டூரிஸ்டு கைடு என அறிமுகப்படுத்திகொண்டான். அவளும் அவனை நம்பி பல்வேறு இடங்களுக்கும் சென்றாள். சற்று தூரத்தில் இருந்த மொஜாமா பாத் என்ற ஊருக்குச் சென்று, அங்கிருந்த குளிர்பானக் கடையிலிருந்து குளிர்பானம் வாங்கிக் கொடுத்தான். அவள் கழிவறைக்குச் சென்று வருவதற்குள் மயக்க மருந்தைக்  கலந்து விட்டான் பாவி. மயங்கிய நிலையில் அவளை ஒரு மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று கெடுத்து விட்டது அந்த மிருகம். நினைவு திரும்பியபோது தன்னுடைய கற்பு பறிபோனதை எண்ணி கலங்கினாள்; கண்ணீர் விட்டாள். ஐ ஃபோன், பணம் ஆகியவற்றையும் களவாடிச் சென்றுவிட்டான் அந்தக் கயவன். சுதாரித்துக் கொண்டு அருகிலிருந்த சாலைக்கருகில் வந்தபோது, காரில் வந்த ஒருவர்  நிறுத்தி, அழைத்துச்சென்று மருத்துவரிடம் காட்டினார். அவர் ஒரு வழக்கறிஞர். எனவே அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணை தொடர்கிறது.

   அந்த இளம்பெண் பைத்தியம் பிடித்தவள்போல் உள்ளாள். வந்த இடத்தில் தன் கற்பை இழந்து நாடு திரும்புகிறாள்.

அந்தக் கயவனிடம் எப்படி ஏமாந்தாய் என்று போலீஸ் கேட்டபோது அவள் சொன்னாள்:

  “எனக்கு சரிவர ஆங்கிலம் வராது. அவன் நன்றாக ஆங்கிலம் பேசினான்.  இடங்களைச் சுற்றிப்பார்க்க அவனுடைய ஆங்கிலம் உதவுமே என்று அவன் பின்னாலே சென்றேன்.

   கண்ணதாசன் சொல்வதுபோல் அவன் பேசத்தெரிந்த மிருகம்- அதுவும் ஆங்கிலம் பேசத்தெரிந்த மிருகம்.

     “படித்தவன் பாவம் பண்ணினால் ஐயோ என்று போவான் என்று கூறுவான் பாரதி. படித்தோர் செய்யக்கூடிய குற்றங்களை  white collar crimes  என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது நாளுக்கு நாள் நம் நாட்டில் பெருகி வருகின்றது.

  ‘அதிதி தேவோ பவ என்று நம் நாட்டு வேதங்கள் கூறும். வரும் விருந்தினரைத் தெய்வமாக மதிக்கிறேன் என்று அதற்குப் பொருள். இப்படிப்பட்ட நாட்டில்தான் வெளிநாட்டுப் பெண்கள் கற்பை இழந்து கண்ணீர்  விடும் அவலநிலை நாடெங்கிலும் அவ்வப்போது அரங்கேறுகிறது
.
    அந்தக் கயவனுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்த பள்ளிக்கூடம் திருடுவது கற்பழிப்பது முதலியவை பழிச்செயல் என சொல்லிக்கொடுக்கவில்லை.

   “கணக்கையும் அறிவியலையும் சொல்லிக்கொடுப்பதை நிறுத்திவிட்டு, ஓராண்டுக்கு நீதி நெறிக்கல்வியை மட்டும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று தீபம் நா.பார்த்தசாரதி ஒரு நாவலில் குறிப்பிடுவார். இப்படி சொல்வோரும் எழுதுவோரும் பைத்தியக்காரர்ப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

நாம் எங்கே போகிறோம்?


1 comment:

  1. What an atrocious act. When we don't take actions history will repeat itself.

    ReplyDelete